பட்ஜெட் உடைகள்தான் என் ஸ்பெஷாலிட்டி! லட்சுமி நம்பி!! (மகளிர் பக்கம்)
மதுரை விஸ்வநாதபுரத்தில் வாழ்ந்து வருபவர் லட்சுமி நம்பி. இவர் ஒரு தையற்கலை நிபுணர். அதே சமயம் மாற்றுத்திறனாளியும் கூட. தன்னுடைய ஐந்து வயதில் போலியோ நோயின் பாதிப்பால் இரண்டு கால்களை இழந்தவர். அதுமட்டுமில்லாமல் இவரின் இரண்டு கைகளில் உள்ள இரண்டு விரல்களும் செயலிழந்து போனது. தன் நிலையை பற்றி அவர் நினைத்து மனம் தளராமல் தையற்கலையினை முறைப்படி கற்றுக்கொண்டு வீட்டில் இருந்தபடியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அழகான ஆடைகளை தைத்து வருகிறார்.
‘‘நான் தையற்கலையை என்னுடைய 16 வயதில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே கலை சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு உண்டு. அதன் முதல் அடியாக எம்பிராய்டரி போட கற்றுக் கொண்டேன். அப்ப எனக்கு 10 வயசு இருக்கும். எங்க பக்கத்து வீட்டில் உள்ள அக்கா, எம்பிராய்டரி எல்லாம் போடுவாங்க. அவங்க போடுவதை நான் பார்த்திருக்கேன். அதைப் பார்த்த நானே சுயமாக தலையணை உறை முதலியவற்றை செய்யும் முறையைக் கற்றுக்கொண்டேன்.
அது மேலும் தையல் குறித்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. என் பெரியம்மாவிற்கு மூன்று மகன்கள். என் மேல் அவர்கள் மூவருமே பிரியமாக இருப்பார்கள். நான் தலையணை மற்றும் எம்பிராய்டரி போடுவதைப் பார்த்து என் பெரிய அண்ணன் எனக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கித் தருவதாக கூறினார். ஆனால் அவரின் வேலைப்பளு அதிகமான காரணத்தால், அவரால் எனக்கு வாங்கித்தர முடியவில்லை. அவருக்கு பதிலாக என் சின்ன அண்ணன் எனக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்தார்.
தையல் இயந்திரம் வாங்கியாச்சு. அதை சும்மா வைத்துக் கொண்டு இருக்க முடியுமா? அதனால் இதை முறையாக கற்றுக் கொள்ள நினைச்சேன். என் வீட்டின் அருகில் இருந்த தையற்காரரிடம் தையல் கலையை கற்றுக் கொள்வதற்காக அவரிடம் பயிற்சி எடுத்தேன். ஆனால் அவரின் அவசர வேலைபளுவில் ஒருநாளும் எடுத்த செயலை அவர் எனக்கு முழுமையாக கற்றுத்தர சூழ்நிலை அமையவே இல்லை. ஒரு வருடம் அவரிடம் பயிற்சி எடுத்தும் ஒரு மாதம் கூட அவர் எனக்கு முழுமையாக சொல்லிக் கொடுத்ததில்லை.
எந்த பயிற்சியும் இல்லாமல் என் நாட்கள் வீணாவதை உணர்ந்து என் அம்மா அவரிடம் வந்து பேசினார். ‘நீங்கள் எதுவுமே சொல்லிக் கொடுக்காமல் என் மகள் நிறைய செய்யத் தொடங்கி விட்டாள். நீங்கள் முறையாக தினமும் கற்றுக் கொடுத்தால் அவள் இன்னும் சிறப்பாக செய்வாள்’ என்று கூறிப் பார்த்தார். அவரோ ‘எனக்கும் எனக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று தான் விருப்பம். ஆனால் எனக்கு இருக்கும் வேலை பளுவால் என்னால் உங்கள் மகளுக்கு முறையாக சொல்லிக் கொடுக்க முடியவில்லை. எனக்கு குழந்தைகள் இல்லை. அதனால் உங்கள் மகளை என்னுடைய தையல் கலையின் வாரிசாக தான் நான் பார்த்தேன்’’ என்றவர் தையல் பயிற்சிக்கான கட்டணத்தையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
அதன் பிறகு அவரே என்னை வேறு ஒரு சிலோன் நாட்டைச் சேர்ந்த தையற்கலைஞரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர். ‘அவர் தையல் கலையில் என்னை விட திறமைசாலி. நீ அவரிடம் பயிற்சி எடுத்துக் கொள்’ என்று சொல்லி அவரிடம் என்னை அனுப்பி வைத்துவிட்டார். அவர்தான் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். 48 நாட்கள், தினமும் ஒரு மணி நேர பயிற்சி. ஒவ்வொரு ஆடையையும் படமாக வரைந்து காண்பித்து கற்றுக் கொடுப்பார். அதன் மூலம் ஒரு உடையை எப்படி அமைக்க வேண்டும் என்று விரிவாக தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நானே ஒரு உடையை முழுமையாக டிசைன் செய்து தைக்க தொடங்கி விட்டேன்’’ என்றவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உடைகளை தைக்க பழகினார்.
‘‘ஒருவர் விருப்பத்திற்கு ஏற்ப என்னால் உடையினை டிசைன் செய்து அதை தைத்து கொடுப்பேன். அந்த அளவிற்கு அவர் என்னை டிரயின் செய்திருந்தார். ஒரு கலையின் அடித்தளம் நன்றாக இருந்தால்தான் அடுத்தடுத்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். எனக்கும் அப்படித்தான். ஆர்வம் அதிகமாக, நானாகவே புதிதாக உடைகளை டிசைன் செய்து தைக்க ஆரம்பித்தேன். அது அனைவருக்கும் பிடித்துப் போயிற்று. பிறந்த குழந்தைகளுக்குத் தேவையான காலுறை (சாக்ஸ்), பனிகாலத்தில் தலையில் அணியும் குல்லா, தினமும் அணிந்து கொள்ளும் உடைகளை முழுமையாக தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன்.
அந்த சமயத்தில் தான் என் பக்கத்து வீட்டில் உள்ளவர் ஒரு பெண்மணியை என்னிடம் அழைத்து வந்தார். அவருக்கு மூன்று மாத குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு உடைகள் வடிவமைக்க வேண்டும் என்றார் அந்த பெண்மணி. அவர் பலரிடம் சென்றும் திருப்தியாக இல்லை என்றார். அவர்கள் அந்த ஊரில் இருந்த காலம் வரை அந்த குட்டி பாப்பாவிற்கு நான் தான் ஃபேஷன் டிசைனர். ஒவ்வொரு முறை நான் தைத்த உடையினை அந்த குழந்தை போடும் போது அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும்.
மனதுக்கு நிறைவா இருக்கும். அந்த சந்தோஷம் என் உடலால் ஏற்படும் கஷ்டத்தை முற்றிலும் மறக்க செய்தது. அது என் தொழில் மேல் மேலும் ஆர்வத்தை தூண்டியது’’ என்றவர் குழந்தைகளின் உடைகளுக்கு என சில வரைமுறைகள் கையாண்டு வருகிறார்.‘‘பெரியவர்களை விட குழந்தைகளுக்காக தைக்கும்போது மட்டும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களை கஷ்டப்படுத்தாமல், உடலை மிருதுவாக வருடும் படி தைக்க வேண்டும். அதற்கு ஏற்ப தான் உடைகளை தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக நம் ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவை பருத்தி ஆடைகள் மட்டுமே. அதை தவிர்த்து பிற ஆடைகள் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இருக்க முடியாது. அதேபோல், குழந்தைகள் என்று வரும்போது உடைகள் மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல் சுவாசிக்க ஏற்ற அளவில் காற்றோட்டமாகவும் இருத்தல் வேண்டும். பார்ப்பதற்கு அழகாகவும், அதேநேரம் குழந்தைகள் ஆசையாக உடை உடுத்த விரும்பும் வகையில் தைக்க வேண்டும்.
நான் இந்தத் தொழிலுக்காக தனியாக விளம்பரம் எதுவும் செய்யவில்லை. என்னுடைய ஆடைகளின் டிசைன்களால் ஈர்க்கப்பட்டோர், என்னிடம் முறையாக தையற்கலையை கற்றுக் கொள்ளவும் வருவர். அவர்களுக்கும் என்னால் முடிந்தவரை அந்த வடிவங்களை எல்லாம் சொல்லித் தருவேன். சில வாடிக்கையாளர்கள் வெளியே கடைகளில் உள்ள டிசைன்களை என்னிடம் காட்டி அதைபோல தைப்பது குறித்து கேட்பார்கள். அதை நான் தைத்து கொடுக்கும் போது அவர்களின் சந்தோஷத்திற்கு ஈடே கிடையாது.
காரணம், அந்த ஆடைகளை நேரடியாக கடைகளில் வாங்கும் போது அதன் விலை அதிகமாக இருக்கும். அதை நான் அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப தைத்து தருவேன். மேலும் என்னுடைய டிசைனும் அவர்களுக்கு பிடித்துப் போக எனக்கான வாடிக்கையாளர்களின் வட்டம் அதிகமானது. சிலருக்கு நானாகவே வடிவமைக்கும் டிசைன் பிடிச்சு போகும். அதைபோன்று அவர்களுக்கும் வேண்டும் என்று கேட்பார்கள். அவ்வாறு அவர்கள் கேட்கும் போது, எனக்கு பெரிய ஊக்கத்தை தரும். அது மேலும் நன்றாக தைக்க வேண்டும், புதுப்புது டிசைன்களை உருவாக்க வேண்டுமென்ற என் ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
எந்தக் கலையாக இருந்தாலும் அதன் மேல் ஒரு ஆசை, ஆர்வம், கவனம், பொறுமை என எல்லாம் இருந்தால் அனைத்தும் சரியாகவே நடக்கும். என்னை பொறுத்தவரை, தையற்கலை அவ்வளவு கடினமான காரியமல்ல. அதில் நமக்கு ஆர்வமிருந்தால் அதிகம் சாதிக்கலாம்’’ என்றவருக்கு முறையாக ஒரு யுடியூப் சேனலை துவங்கி அதன் மூலம் பலருக்கு தையல் கலையினை டிஜிட்டல் முறையில் கொண்டு செல்ல வேண்டுமாம்.