உடைகளை ஆர்டர் செய்வது போல் கேக்குகளையும் ஆர்டர் செய்யலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 1 Second

‘‘பொழுதுபோக்காக நாம் செய்யும் தொழில் காலப்போக்கில் நம் முடைய முதன்மையான தொழிலாக மாறிவிடும். எனக்கும் அப்படித்தான்’’ என்கிறார் சென்னை, அண்ணாநகரில் வசிக்கும் மிருதுளா. அடிப்படையில் இவர் டெக்ஸ்டைல் டிசைனர். ஆனால் இவருக்கு பேக்கர், கேலிகிராபர் என பல முகங்கள் உள்ளன. இவரின் ஒவ்வொரு முகத்திற்குமான அடிப்படையான கரு கிரியேட்டிவிட்டி…

‘‘எனக்கு கேக் செய்ய ரொம்ப பிடிக்கும். கல்லூரி நாட்களில் இருந்தே, நான் கேக் பேக் செய்வேன். என்.ஐ.எஃப்.டியில் நான் டெக்ஸ்டைல் டிசைனர் குறித்து படிச்சேன். படிப்பு போக வார இறுதி நாட்களில் வீட்டில் சின்ன சின்னதா கேக் செய்வேன். அதுவும் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட மட்டும் தான் செய்வேன். இதற்காக நான் பெரிய அளவில் பயிற்சி எல்லாம் எடுக்கல. யுடியூப் பார்த்து நானே கற்றுக் கொண்டேன். ஒரு சில விஷயங்கள் குறித்து மட்டும் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஒரு முறை கல்லூரியில் ஃபுட் ஸ்டால் போட்டாங்க. அதில் நான் வீட்டில் கேக் செய்து கொண்டு போயிருந்தேன். ஒரு மணி நேரத்தில் எல்லா கேக்கும் காலியானது. அதுதான் என்னோட ஸ்டார்டிங் பாயின்டுன்னு சொல்லணும். அன்று என் கேக் சாப்பிட்ட என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னிடம் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க.

நானும் ஆர்டரின் பேரில் செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். இதற்கிடையில் என்னுடைய படிப்பும் முடிஞ்சது. நானும் டெக்ஸ்டைல் துறை சார்ந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு பக்கம் வேலை மறுபக்கம் கேக் ஆர்டர் என காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓட ஆரம்பிச்சேன். மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் கேக் செய்ய ஆரம்பிச்சிடுவேன். இதனால் ஒரு பக்கம் ஸ்ட்ெரஸ் மற்றும் தூக்கமின்மைன்னு என் உடல் நிலை பாதிச்சது. பல முறை என்னால் செய்ய முடியாத காரணத்தால் ஆர்டர்களை கேன்சல் செய்திருக்கேன். ஒரு கட்டத்தில் இரண்டையும் என்னால் சமாளிக்க முடியல. அதனால் வேலையை ராஜினாமா செய்திட்டு முழு நேரம் பேக்கிங் தொழிலில் இறங்க ஆரம்பிச்சேன்’’ என்றவர் கடந்த ஆறு வருடமாக முழுமையாக பேக்கிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘பேக்கிங் பொறுத்தவரை நான் மட்டும் தனியாளாக செய்து வருகிறேன். இதற்கான பொருட்கள் வாங்குவது முதல் அதை செய்வது மற்றும் டெலிவரி வரை எல்லாமே தனி ஒருத்தியாக கவனித்து வருகிறேன். வீட்டில் எனக்கு முழுமையான ஒத்துழைப்பு இருந்தாலும், இது தனிப்பட்ட தொழில் என்பதால், நான் மட்டுமே அதில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் கேக் கடைகள் இப்போது தெருவெங்கிலும் இருக்கிறது. அதில் நான் தனிப்பட்டு இருக்க வேண்டும் என்று விரும்பினேன். என் மனசில் தோன்றும் வடிவத்தை கேக்காக மாற்றுவேன். அதேபோல் குறிப்பிட்ட சில ஃபிளேவர்களை எல்லாம் சேர்த்து ஒரு புதிய ஃபிளேவரை உருவாக்குவேன்.

சிலர் புது வடிவ கேக் மற்றும் ஃபிளேவர் வேண்டும்ன்னு எனக்கு போட்டோ எடுத்து அனுப்புவாங்க. அதை அப்படியே செய்யாமல் அதில் புதிய டிசைன்களை சேர்த்து தருவேன். உதாரணத்திற்கு ஒரு வெட்டிங் கேக் செய்யும் போது… அதில் அவங்க உடையின் டிசைன்களை இன்கார்பரேட் செய்திருப்பேன். அதுவே காதல் திருமணமாக இருந்தால், அவர்களின் காதல் கதையினை அழகாக வடிவமைச்சு கொடுப்பேன். இப்படி என்னுடைய கேக் ஒவ்வொன்றும் அவர்களின் மனசுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது போல் அமைத்து தருவேன். என்னைப் பொறுத்தவரை நான் ெசய்வது கேக்காகவே இருந்தாலும், அது தனிப்பட்டு தெரியவேண்டும்னு நினைப்பேன்.

என்னுடைய கேக் எல்லாமே கஸ்டமைஸ்டு மேக்கிங். அதாவது எதுவுமே பேக்கரியில் இருப்பது போல் நான் செய்து வைத்திருக்க மாட்டேன். அவர்கள் ஆர்டர் கொடுத்த பிறகுதான் செய்யவே ஆரம்பிப்பேன். அதனால் தான் என்னால் ஒவ்வொரு கேக்கினையும் பர்சனலாக வடிவமைச்சு தர முடிகிறது. பிறந்த நாள், திருமண நாள் எதுவாக இருந்தாலும் அதற்கேற்ப கேக் தயாரித்து தருவேன்’’ என்றவர் ஒவ்வொரு கேக் ஃபிளேவர்களையும் செய்து அது வாடிக்கையாளர்களுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே மெனுவில் சேர்ப்பாராம்.

‘‘நான் ஓட்டல் மேனேஜ்மென்ட் எல்லாம் படிக்கல. ஒவ்வொரு ரெசிபியும் நானே தான் டிரை செய்வேன். அது நல்லா இருந்தா என்னுடைய மெனுவில் சேர்ப்பேன். சிலர் குறிப்பிட்ட ஃபிளேவர் வேணும்ன்னு கேட்பாங்க. அது நான் செய்யாமல் இருந்திருந்தால், முதலில் செய்து பார்த்து சரியாக வந்த பிறகு தான் அதை வாடிக்கையாளர்களுக்கு செய்து தருவேன். கேக் செய்ய யுடியூப் பார்த்து கத்துக் கொண்டாலும், அதில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் டிசைன்கள் எல்லாம் என்னுடைய கிரியேட்டிவிட்டின்னு தான் சொல்லணும்’’ என்றவர் டெக்ஸ்டைல் டிசைனிங்கும் பகுதி நேர வேலையாக செய்து வருகிறார்.

‘‘டெக்ஸ்டைல் டிசைனிங் பொறுத்தவரை ஜவுளி அமைச்சகத்தின் ஒரு சில பிராஜக்ட்களை செய்திருக்கேன். இது போன்ற அரசு சார்ந்த பிராஜக்ட்களை அவ்வப்போது செய்து தருவேன். பொதுவாக அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஃபேஷன் கல்லூரி நிர்வாகத்திற்கு பிரித்து தருவார்கள். அவ்வாறு தரும் போது, அதில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் படிப்பை முடித்தவர்கள் என ஒரு குழுவாக அமைத்து அந்த திட்டத்தினை செயல்படுத்துவார்கள். இது சம்பந்தமாக மதுரை மற்றும் விருதுநகரில் உள்ள நெசவாளர்களுடன் சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். தனிப்பட்ட முறையிலும் நான் டிசைனிங் செய்து தருகிறேன்.

அடுத்து கேலிகிராஃபியும் செய்கிறேன். கேலிகிராஃபி என்பது விதவிதமான டிசைன்களில் எழுத்துக்களை எழுதி தருவது. இதற்காக தனிப்பட்ட பேனா உள்ளது. அதன் முனை மற்ற பேனாக்களைப் போல் இருக்காது. சற்று மாறுபட்டு இருக்கும். பேனாவை அழுத்தி பிடித்து எழுதினால் கோடு திக்காக வரும். அதையே லைட்டா பிடித்தால் மெல்லிய கோடு வரும். இதைக் கொண்டு அழகான கல்யாண பத்திரிகைகள், ஸ்கிரிபிலிங் புத்தகங்கள் மற்றும் கிஃப்ட்டுகளை உருவாக்கலாம்’’ என்றவர் பண்டிகை தினங்களில் பலர் கேக்கினை கிஃப்ட்டாக ெகாடுக்க விரும்புவதால், அதை அழகான கிஃப்ட்பாக்சில் அமைத்து கொடுத்து வருகிறார்.

‘‘தீபாவளி என்றால் விளக்கு, பொங்கல் என்றால் கரும்பு போன்றவை தான் நம் மனதில் தோன்றும். ஆனால் நான் ெகாஞ்சம் மாறுபட்டு அதை கேக்காக கொடுக்க விரும்பினேன். அதில் நம்முடைய பாரம்பரிய காஞ்சிபுர புடவை டிசைன்களை வடிவமைச்சேன். இந்த தீபாவளி பண்டிகைக்கு எங்களின் கேக்கினை ஒரு பாக்சில் லேயராக அமைத்தேன். அதாவது முதல் லேயர் சாக்லெட் சிப் குக்கீஸ், அடுத்த பிரவுனி, சீஸ் கேக், கேரமெல் எல்லாம் சேர்த்து ஒரு பாக்சில் வைத்தேன்.

லேயர்கள் நன்றாக இருந்தாலும் பார்க்க அட்ராக்டிவ்வா இருக்கணும்ன்னு யோசிச்சேன். அப்போது தான் நம்முடைய பாரம்பரிய காஞ்சிபுர பட்டு நினைவிற்கு வந்தது. எந்த பண்டிகை என்றாலும் பட்டாடை கண்டிப்பா இருக்கும் என்பதால், அதன் டிசைன்களை கேக்கின் மேல் வடிவமைச்சேன். கேக் லேயர் அடங்கிய கண்ணாடி ஜாரினை ஒரு பனை ஓலைப் பெட்டிக்குள் ஒரு போஸ்ட் கார்ட்டையும் வைத்துக் கொடுத்தேன்.

பலருக்கும் அந்த கிஃப்ட் பாக்ஸ் பிடிச்சிருந்தது. ஒன்று பண்டிகையை நினைவுபடுத்தும் இனிப்பு. அடுத்து அழகான பனை ஓலைப் பெட்டி. கடைசியாக நாம் இப்போது யாரும் எழுதுவதில்லை. வாட்ஸப்பில் ஒரு வாழ்த்து தெரிவித்து விடுகிறோம். மீண்டும் எழுத வேண்டும் என்பதற்காகத்தான் போஸ்ட்கார்டினை நினைவுபடுத்தினேன்’’ என்ற மிருதுளாவிற்கு கேக் ஸ்டுடியோ ஒன்றை அமைக்க வேண்டும் என்பதுதான் விருப்பமாம்.

‘‘நான் இன்ஸ்டாவில் தான் என்னுடைய கேக்குகளை பதிவு செய்தேன். அதன் மூலம் ஆர்டர்கள் வரத் துவங்கின. தனிப்பட்ட முறையில் எந்த விளம்பரமும் செய்யவில்லை. எனக்கு பேக்கரி ஒன்றை திறக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேக்கரி என்றால், அங்கு நாம் கேக்கினை செய்து வைக்கணும். அதனால் ஃபுட் வேஸ்டாகும் வாய்ப்புள்ளது.

அடுத்து அதற்கான பெரிய அளவில் இயந்திரங்கள் வேண்டும். அதனால் என்னைப் பொறுத்தவரை எப்படி ஒரு உடையினை பார்த்து ஆர்டர் செய்கிறீர்களோ அதேபோல் கேக்கையும் பார்த்து ஆர்டர் செய்ய வேண்டும். அதாவது என்னுடைய யூனிட்டிற்கு வந்து என்ன கேக் வேண்டுமோ அதை டிஜிட்டல் முறையில் பார்த்து ஆர்டர் செய்து, குறிப்பிட்ட தேதியில் பெற்றுக் கொள்ளலாம். இது போன்ற ஒரு கேக் ஸ்டுடியோ அமைக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறேன்’’ என்றார் மிருதுளா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களின் பாதங்களில் உணர்ச்சியை கணிக்கலாம்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post காமக் கலைகளுக்கு என்னென்ன செய்யலாம்..!! (அவ்வப்போது கிளாமர்)