பல வித டிசைன்களில் பத்தமடை பாய்கள் ! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 35 Second

திண்டுக்கல் என்றால், தலப்பாகட்டி பிரியாணி, தூத்துக்குடிக்கு மக்ரூன், மணப்பாறை என்றால் முறுக்கு… இவ்வாறு ஒவ்ெவாரு ஊருக்கும் தனிப்பட்ட சிறப்புண்டு, அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை என்னும் ஊரின் சிறப்பு அங்குள்ள பாய்கள். பத்தமடை என்றாலே சின்னக்குழந்தை கூட பாய் என்று தான் சொல்லும். திருநெல்வேலியில் பாயும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வளரும் கோரைப் புற்களை வெட்டி தயாரிக்கப்படும் பாய்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. பத்தமடை பாயை ரஷ்ய ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும், விக்டோரியா மகாராணியும் கூட பாராட்டியிருக்கிறார்கள். இதனால் இந்த பாய்களுக்கு 2012ம் ஆண்டு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டது.

இந்த பாய்கள் பெண்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இவர்கள் அங்குள்ள சொசைட்டி மூலமாகவோ அல்லது தனியாகவோ பாய்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் முழுவதும் அமர்ந்தவாறு பொறுமையாக செய்யக் கூடிய வேலை என்பதால் ஆண்கள் இந்த வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஆரம்பத்தில் தனியாக பாய்களை செய்து வந்தவர்கள் பாய்களை பற்றி தெரிந்த மக்கள் இதனை வாங்க ஆரம்பித்ததால் இதற்கான உற்பத்தியும் அதிகரிக்க வேண்டியதாயிற்று.

அதனால் எல்லோருக்கும் வேலை வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ‘லெப்பை உயர்ரக பாய் நெசவாளர் தொழில் கூட்டுறவு சங்கம்’. இந்த சங்கத்தில் கிட்டத்தட்ட 350 பேர் வரை உறுப்பினர்களாக இருந்து பாய்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சொசைட்டி பாய் செய்வதற்கான புல், சாயங்கள், நூல் கண்டு என எல்லாவற்றையும் கொடுத்துவிடும். இன்று வரை இந்த சங்கம் செயல்பட்டு வரும் நிலையில் அதில் வேலை செய்யும் நாகூர் மீரா இந்த பாய்களைப் பற்றி விவரித்தார்.

‘‘மூன்று தலைமுறைகளாக இந்த வேலைகளில் நாங்க ஈடுபட்டு வருகிறோம். நான் படிக்கல. சின்ன வயசுல என்னோட அம்மாவும் அப்பாவும் பாய் நெய்யும் போது அவங்க கூட இங்கு வருவேன். அப்படித்தான் நானும் பாய் நெய்ய கற்றுக் கொண்டேன். கல்யாணமான பிறகு முழுமையாக இந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். இந்த வேலைக்கு நேரம் காலம் எல்லாம்
கிடையாது. காலை வீட்டு வேலைகளை முடிச்சிட்டு இங்கு வருவோம்.

ஒரு பாய் நெய்ய மூன்று நாட்கள் ஆகும். ஒருநாளைக்கு 200 ரூபாய் சம்பளம். நான் எவ்வளவு நாள் வேலை செய்கிறேனோ அதற்கு ஏற்ப சம்பளம் கொடுப்பாங்க. வருமானத்திற்காகத்தான் இந்த வேலைக்கு வந்தேன். இந்த ஊரின் பெருமையே பாய் என்பதால், இந்த வேலையினை அடுத்தடுத்த தலைமுறையினர் எடுத்து ெசல்ல வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதற்காகத்தான் நான் இன்னும் இந்த வேலையை செய்து கொண்டு இருக்கேன்’’ என்கிறார்.

பட்டுத் துணிகளை தரியில் நெய்வது போல் தான் பத்தமடை பாய்களும் நெய்யப்படுகின்றன. 7 அடி நீளமும் 3 அடி அகலத்திலும் நீளமான நூல்கண்டினை பாயின் டிசைனிற்கேற்ப இரண்டு மூன்று வரிசையாக மேலும் கீழும் என இரண்டு அடுக்குகளாக கட்டி  ராட்டை போன்ற நீளமான குச்சியில் கோரையை கட்டி இடதும் வலதுமாக மாற்றி மாற்றி துணி நெய்வதை போன்றே நெய்கின்றனர். பத்தமடை பாயின் சிறப்பே கையினால் நெய்வது தான்.

ஒரு பாய் நெய்ய மூன்று நாட்களாகும். அதனால் அதிக  கால விரயம் ஏற்படுவதால், அதைப் போக்க சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் பாய் செய்வதற்கெனவே புதிதாக ஒரு இயந்திரத்தை வடிவமைத்து கொடுத்துள்ளனர். கையினால் பாய்களை நெய்தாலும், தற்போது இயந்திரத்தின் மூலம் எளிதாக பாய்களை உற்பத்தி செய்து வருகிறார் அனிஸ் பீமா. அவர் இந்த இயந்திரத்தின் பயன்பாட்டினை பற்றி விவரித்தார்.

‘‘நான் பத்தாவது வரை படித்திருக்கிறேன். கல்யாணத்திற்கு பிறகு வெளியே எங்கேயும் சென்று வேலை செய்ய முடியாது என்பதால் இந்த வேலைக்கு வந்து விட்டேன். என்னுடைய குடும்பமே இந்த தொழில்தான் செய்தது. ஆரம்பத்தில் கைகளினால் தான் பாய்களை நெய்து வந்தேன். முழு நாளும் கீழே உட்கார்ந்த நிலையில் வேலை பார்க்க வேண்டும். அதனால் இங்கு வேலை செய்யும் எல்லா பெண்களும் முதுகு வலி, கால் வலியால் அவதிப்பட்டோம். இந்த இயந்திரம் மூலம் கீழே அமர்ந்து வேலை செய்ய வேண்டாம்.

மேலும் அதிக கால விரயம் ஏற்படுவதையும் தடுக்க முடிகிறது. தற்போது இயந்திரம் மூலம் நான்கு பேர் மட்டுமே பாய்களை தயாரித்து வருகிறோம். முதலில் நாம் செய்ய இருக்கும் பாயின் டிசைனை கணினியில் பதிவு செய்ய வேண்டும். அதை இயந்திரத்தில் இணைத்து விட்டால் போதும் அதுவே அழகாக நெய்ந்துவிடும். டிசைன்களுக்கு ஏற்ப கோரைப் புற்களை மட்டும் இயந்திரத்தில் பொருத்திடணும். கைகளினால் பாய்களை நெய்யும் போது ஏதேனும் ஒரு சிறு தவறு நடந்தாலும் எல்லாவற்றையும் பிரிக்க வேண்டும். ஆனால் இயந்திரத்தில் அந்த பிரச்னை கிடையாது. தவறு ஏதும் நடந்தால் உடனே இயந்திரம் தன் செயல்பாட்டினை நிறுத்திவிடும்.

என்ன கைகளினால் செய்யும் கிடைக்கும் பாயின் தரம் இயந்திரங்கள் மூலம் கொடுக்க முடிவதில்லை. இன்று வரை எவ்வளவு இயந்திரங்கள் வந்தாலும் பத்தமடை பாய் என்றாலே அது கைகளினால் நெய்யப்பட்டது மட்டும் தான். இந்த பாய்களில் பல வித டிசைன்கள் இருக்கிறது கோரைப் புற்களில் பல வண்ணங்கள் கொடுத்து கைவினை பொருட்கள் தயாரிப்பது, பூஜை பாய், யோகா பாய், திருமணத்திற்கு உபயோகப்படுத்தும் பாய்கள் என பல வகைகளில் இருக்கின்றன.

அதேபோல் குத்து விளக்கு டிசைன்கள், திருமணம் செய்வோரின் பெயர்கள் மற்றும்  அவர்களுடைய படங்களை டிசைன் செய்வது, கடவுள் உருவங்கள், தலைவர்களின்  உருவங்கள், கோலங்கள் என  பல டிசைன்களிலும் பாய்களை உற்பத்தி செய்து வருகிறோம்’’ என்றார்.பத்தமடை பாய்கள் சுதந்திரத்திற்கு பின்னர் தான் ஒரு வடிவம் கொடுக்கப்பட்டு மக்களிடையே பிரபலமானது.

இந்த பாய்கள் பல கட்டங்களில் வெவ்வேறு வகைகளில் மாறி இந்த நிலைக்கு வந்துள்ளது. நான்கு தலைமுறைகளாக பத்தமடை பாய்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார் முகமது சுல்தான். ‘‘என்னோட தாத்தாக்கள் சொல்ல கேட்டிருக்கேன். ஆறுகளில் மீன் பிடிக்கவோ, குளிக்கவோ போகும் போது அந்த கரையோரத்தில் கோரைப் புற்கள் அதிகமா வளர்ந்து இருக்கும். இதைக் கொண்டு ஏதாவது செய்யலாம்ன்னு யோசிச்சு பனை ஓலை முடைதல் செய்தவர்கள் நாளடைவில் அந்த புற்களைக் கொண்டு பாய்களை நெய்ய ஆரம்பித்தார்கள்.

1940க்குப் பிறகு தான் இதை தொழிலாக மாற்றியுள்ளனர். பத்தமடையில் தான் 85% பாய்கள் உற்பத்தியாகின்றன. கரூர், திருசெந்தூர், சீர்காழி, வந்தவாசி, கயத்தாறு, முசிறி, கொள்ளிடம், முதலியார் பட்டியில் மீதி 15% உற்பத்தி செய்யப்படுகின்றன. அருவம் புல், கொக்கரபுல், நாணல் புல், ஆத்து கோரை, சண்ண கோரை, காட்டு கோரை, கட்டு கோரை, கரூர் கோரை, செண்டு கோரை என பல வகை கோரைப் புற்களில் பாய்கள் நெய்யப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றில் விளையும் காட்டு கோரைப் புற்கள் கொண்டு தான் பத்தமடை பாய்கள் செய்கிறோம். இந்த புற்கள் மூன்று அடி வளர்ந்தவுடன் பூ பூக்கும். அதன் பிறகு அறுத்து பாய்களை தயாரிப்போம். வருடம் முழுவதும் பாய்கள் தேவைப்படுவதால் சீர்காழி, கரூர் பகுதிகளில் கோரை புற்களை பாய்களுக்காக வளர்க்கிறார்கள்.

மற்ற ஊர்களில் பாய்கள் தயாரித்தாலும், பத்தமடை பாய்களுக்கு தனிச்சிறப்புண்டு. காரணம் இங்கு 52, 100, 140 இன்ச் என மூன்று அளவுகளில் செய்கிறோம். இதில் முதலாவது கரடுமுரடான பாய்கள். இந்த பாய்கள் அமைப்பில் கடினமானவையாக இருக்கும். ஆனால் நெசவு செய்வதற்கு சுலபமானதாகவும், விரைவானதாகவும் இருக்கும். இதனை ஒரு கைத்தறி அல்லது பவர்லூமைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். இரண்டாவது உயர்தர கைத்தறி பாய்கள். தரமான பாய்கள். மூன்றாவது பட்டு பாய்கள். உயர்ந்த தரம் பட்டுத் துணிகளுக்கு ஈடான அமைப்பைக் கொண்டுள்ளதால் பட்டு பாய்கள் என அழைக்கப்படுகின்றன’’ என்றவர் பாய்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘கோரைப் புற்களை அறுத்து தண்ணீரில் நனைத்து காயப்போடுவோம். பச்சை நிறத்திலிருந்த புற்கள் காய்ந்ததும் மஞ்சள் நிறமாக மாறும். அதன் பிறகு தரம் பிரித்து மறுபடியும்  தண்ணீரில் ஊற போடுவோம். நான்கு நாட்கள் வரை ஊற வைத்தால் 52 இன்ச் கடினமான தன்மை கொண்ட பாய்களை தயாரிக்கலாம். இந்த வகை பாய்கள் தான் திருமணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏழு நாட்கள் ஊற வைத்து ஒரே புல்லினை 8 துண்டுகளாக பிரித்து முடி அளவிற்கு சீவி வைத்து அதனை ஒன்றோடு ஒன்றாக கோர்த்து செய்வதுதான் 120 மற்றும் 140 இன்ச் பாய்கள். இந்த வகை பட்டு பாய்களை செய்வதற்கு 15 நாட்கள் ஆகும். இந்த பட்டு ரக பாய்கள்தான் பத்தமடையின் அடையாளம். கைகளுக்குள் சுற்றி வைக்கும் அளவிற்கு மிக மெல்லியதாக இருக்கும்.

இது நீடித்து உழைக்கும். சாதாரணமாக ஒரு பாய் செய்ய 10க்கு 8 அடியிலான இடம் தேவை. ஆனால் அதற்கு போதிய இட வசதி இல்லை என்பதால், கூலி வேலையாக தான் இந்த தொழிலினை பெண்கள் செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இயற்கை சாயங்கள் தான் பயன்படுத்தி வந்தோம். பாய்களுக்கான சாயங்கள் முதலில் இயற்கை தாவரங்களிலிருந்தும் பூக்களிலிருந்தும் எடுத்து பயன்படுத்தி வந்தோம். அந்த தாவரங்கள் அழியும் நிலைக்கு சென்று விட்டன. இதனால் செயற்கையான சாயங்களை பயன்படுத்தி வருகிறோம். டையிங் முறையில் சாயங்களில் கோரைப் புற்களை ஊற வைத்து பாய்களை நெய்ய ஆரம்பிப்போம்.

கோரை புல்லில் செண்டு கோரை என்ற ஒரு வகை உண்டு. அதிக கனமில்லாத கோரை. இதிலிருந்து தான் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பாய்களை தயாரிக்கிறார்கள். பத்த மடை பாய் குளிர்ச்சி தன்மை கொண்டது. பொதுவாகவே தாமிரபரணி தண்ணீருக்கு சில மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் இந்தத் தண்ணீர் பாயும் கோரையில் செய்யப்படும் பாய்களில் படுத்தால் நோய் தீருவதாக சொல்கிறார்கள். பல பெருமைகளை கொண்ட இந்த பத்தமடை பாய்களை இப்போது நெய்வதற்கு புது நபர்கள் யாரும் இந்த வேலைக்கு வருவதில்லை.

அதே போல இந்த தொழிலை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தான் செய்து வருகிறார்கள். பாயினை விற்றால் தான் எங்களுக்கு வருமானமே கிடைக்கும். மற்ற தொழில்களை போல இந்த தொழிலுக்கும் இட வசதி ஏற்படுத்தி கொடுத்து பரவலான முறையில் இந்த தொழிலை கொண்டு சென்றால் இந்த தொழில் அடுத்த தலைமுறையினரின் கைகளுக்கு செல்லும்’’ என்கிறார் முகமது சுல்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்கள் உடலுறவை விட அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தேங்காய் ஓட்டில் அலங்கார பொருட்கள்… கைநிறைய வருமானம்! (மகளிர் பக்கம்)