நீரின்றி அமையாது நம் உடல்!! (மருத்துவம்)
நீர்தான் மனித வாழ்வின் கண்கண்ட அமிர்தம். நல்ல தாகத்தின்போது நீரின் சுவை அமுதத்தை மிஞ்சுவது. தற்போது பலருக்கும் சரியான அளவில் நீர் பருகும் பழக்கமே இருப்பது இல்லை. இந்தப் பழக்கம் மிக ஆபத்தானது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடலுக்குத் தேவையான அளவு நீரைப் பருகாமல் இருப்பதைப் போலவே அளவுக்கு அதிகமாகப் பருகுவதும் ரிஸ்க்தான்.
நம் உடல் ஆரோக்கியமாக இயங்க நீர் மிகவும் அவசியம். ஏனெனில் நம் உடல் கட்டுமானத்தின் பெரும்பகுதி நீர்ச்சத்தால் ஆனது. ஸ்ட்ரெஸ் அதிகமாக இருப்பவர்களுக்குகூட நீரைத்தான் அதிகம் பருகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது நல்லதுதான். ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்காதீர்கள்.
எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பதில் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வார்கள். இதற்குக் காரணம் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள் என்பதுதான். பொதுவாக, தினசரி ஒன்பது முதல் பன்னிரண்டு டம்ளர் நீர் பருகுவது நல்லது. அதாவது இரண்டரை முதல் மூன்று லிட்டர் நீர் பருக வேண்டும்.
நீர் பருகுவதற்கு முக்கியமான விதி தாகம் எடுத்தால் நீர் பருக வேண்டும் என்பதுதானே தவிரவும் வயிற்றை நிரப்ப நீர் பருக வேண்டும் என்பது அல்ல. எனவே, தாகமின்றி நீரைப் பருகாதீர்கள். தீவிரமான நோய்கள் இருந்து மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே அதிகமான நீரைப் பருக வேண்டும். நம் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா, குறைவாக இருக்கிறதா என்பதை வெளியேறும் சிறுநீரின் நிறத்தைக்கொண்டே கணக்கிடலாம்.
பொதுவாக, சிறுநீரின் நிறம் என்பது சற்று வெளிறிய மஞ்சள் வண்ணம்தான். வெள்ளை வெளேர் என சிறுநீர் வெளியேறினால் உங்கள் உடலில் நீர்ச்சத்து கொஞ்சம் அதிகரித்துவிட்டது என்று பொருள். அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்று பொருள். எனவே, உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற அளவுக்கான நீரைப் பருக வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். புத்தகங்களில் சொல்லப்பட்டதை மட்டுமே நம்பாதீர்கள்.
நீர்ச்சத்துக் குறைவதைப் போலவே அதிகமாக இருப்பதும் நம் காலத்தின் பிரச்னைகளில் ஒன்று. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு இந்தப் பிரச்னை கணிசமாக இருக்கிறது. அதே போல் வொர்க் அவுட் செய்பவர்களும் அளவுக்கு அதிமாக நீரைப் பருகிவிடுகிறார்கள். இப்படி அளவுக்கு அதிமாக நீரைப் பருகினால் ரத்தத்தில் சேர வேண்டிய சத்துக்களை அது அடித்துக்கொண்டு போய்விடும். மேலும் இதனால் சிறுநீரகமும் பாதிக்கும். நம் உடல் செல்லில் சோடியம் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கும். அளவுக்கு அதிகமான நீர்வரத்து இந்த சோடியத்தைக் கரைத்துவிட்டால் ஹைப்போநட்ரீமியா போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, உங்கள் உடலின் தேவையை அறிந்து அளவாக நீர் பருகுங்கள்.