ரத்த தானம் செய்வோம்… மனிதம் போற்றுவோம்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 21 Second

நீரின்றி அமையாது உலகு எனும் மொழி போல் ரத்தமின்றி சிறக்காது நம் உடல் என்பது மருத்துவ மொழி. ரத்த தானம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானது என்பதை அனைவரும் அறிவோம். உலகெங்கும் பல்வேறு விதங்களில் உடல்நலன் பாதிக்கப்படுவோரின் உயிரை காக்கும் ரத்தத்தின் அத்தியாவசியத்தை உணர்ந்த கொடையாளிகள் கடந்த சில வருடங்களாக ரத்த தானத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகின்றனர்.

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு முந்தைய காலங்களை விடத் தற்போது அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது என்றாலும் இன்னும் கூட அதிக சதவிகிதத்தினர் ரத்ததானம் வழங்க முன்வந்தால் நிறைய உயிர் இழப்புகளை தடுக்க முடியும். ஆனால் எங்கே  ரத்தம் தந்தால் தங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுமோ, இல்லை ஏதேனும் பக்க விளைவுகள் வருமோ போன்ற சந்தேகங்களினால் பலர் ரத்ததானம் தரத் தயங்கி பின்வாங்கும் நிலையை காண்கிறோம்.

அவர்களின் சந்தேகத்தைப் போக்கி ரத்த தானம் குறித்த பல தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் சேலத்தைச் சேர்ந்த குருதிக் கொடையாளர் மணிபிரகாஷ்  இவர் பல்லாயிரம் முறை ரத்த தான முகாமினை ஒருங்கிணைத்து பல உயிர்களை காக்க உதவி செய்துள்ளார். ரத்த தான முகாம்களையும் நடத்தியுள்ளார். தனிப்பட்ட முறையில் இதுவரை தட்டணுக்கள் தானம் உள்பட 113 முறை  ரத்த தானம் அளித்துள்ளார். அரிய ரத்த வகையை சேர்ந்த தமிழக கொடையாளர்களை ஒருங்கிணைத்துள்ளார். அதில் மிகவும் முக்கியமானது தலசீமியா. புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தி உதவி வருகிறார். மேலும் இவர் ஆற்றும் ரத்த தான சேவைக்கு மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார்.

உங்களைப் பற்றி?

ஊர் சேலம். வயது 39. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னுடைய பதினெட்டு வயசுல இருந்தே ரத்த தானம் செய்து வருகிறேன். தனிப்பட்ட விருப்பம் காரணமாகத்தான் நான் செய்து வந்தேன். அதன் பிறகு சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் மக்கள் பாதை இயக்கத்தில் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன். பிறகு ‘மனிதம் போற்றுவோம்’ எனும் அறக்கட்டளையைத் துவக்கி அதன் மூலமும் ரத்த தானம் செய்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

ஒருவருக்கு தரும் ரத்த தானம் என்பது பல பேரின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும். ரத்தம் தேவைப்படுவோரையும் தானம் அளிப்பவரையும் ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே நான் செய்கிறேன். நான் அழைத்ததும் எந்த வேலையாக இருந்தாலும் அதை விட்டு விட்டு ரத்த தானம் தந்து உயிரைக் காப்பாற்றும் சக கொடையாளிகளே போற்றுதலுக்குரியவர்கள்.

ரத்த தானம் வழங்குவதில் உள்ள விதிகள் என்ன? யாரெல்லாம் ரத்த தானம் செய்யக்கூடாது?

ரத்த தானம் என்பது மனிதரின் சுய அனுமதியுடன் தனது ரத்தத்தை தேவைப்படுபவருக்கு தானமாகத் தந்து உதவுவதே. இதற்குத் தேவையான விதிகள் என்று பார்த்தால் ரத்த தானம் செய்பவர் எவ்வித நோய் பாதிப்புமின்றியும் மது அருந்தாமலும் இருப்பதே முக்கியம். மேலும் டைபாய்டு, மலேரியா, டெங்கு போன்ற நோய் தாக்கம் உள்ளவர்கள் சிகிச்சைக்குப் பின் ஒரு வருடம் கழித்து தான் தர முடியும். பெண்கள் மாதவிடாய் முடிந்து ஒரு வாரம் கழித்து தரலாம். பாலூட்டும் தாய்மார்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. நீண்ட நாட்கள் உடல்நல பாதிப்புகளுக்காக மருந்துகளை எடுப்பவர்களும் ரத்த தானம் செய்ய முடியாது. ஹெச்.ஐ.வி, புற்றுநோய், இதய பாதிப்புள்ளவர்கள், வலிப்பு நோய், காச நோய், தைராய்டு, மஞ்சள்காமாலை, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் எப்போதும் ரத்த தானம் தரக்கூடாது.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து மது அருந்தியிருந்தால் அவர் கொடையாளராக இருந்தாலும் அவசரத்திற்கு அவரால் ரத்தம் தந்து உதவ முடியாது. அவர்கள் குறைந்தபட்சம்
24 மணி நேரம் கழித்து தான் தர முடியும். அதுவும் டாக்டர் அனுமதித்தால். ரத்த தானம் அளிப்பவர்களின் உடலில் ஹீமோகுளோபின் தேவையான அளவு இருக்க வேண்டும். சிலருக்கு ரத்ததானம் தர அதிக ஆர்வம் இருக்கும், ஆனால் அதற்கான உடல் தகுதி இருக்காது. அவர்கள் தகுந்த டயட் ஆலோசனைப் பெற்று அதை பின்பற்ற வேண்டும்.

மற்றபடி குறைந்தபட்சம் 50  கிலோ எடை கொண்ட 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான ஆண் / பெண் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ரத்ததானம் செய்யலாம். ஆரோக்கியமான மனிதரின் உடலில் சராசரியாக 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கும். ஒருவர் ஒரு முறை 200 முதல் 300 மி.லி வரை தானம் செய்யலாம். இது போன்று அவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். இதனால் அவரின் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புகளும் அவருக்கு வருவது தவிர்க்கப்படுகிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் 144 முறை ரத்த தானம் செய்யலாம். நீங்கள் ரத்த தானம் செய்ய செலவழிக்கும் பத்து நிமிடங்கள் மூன்று நபர்கள் வரை வாழ்நாள் முழுக்க உயிர்வாழ உதவும்.

தொடர்ந்து ரத்த தானம் தருவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

நிச்சயம் இல்லை. ரத்த அணுக்களின் வேலையே தங்களை புதுப்பித்துக் கொள்வதுதான். நாம் தரும் ரத்தத்தின் அளவு இரண்டே நாட்களில் நாம் உண்ணும் உணவின் மூலமாகவே மீண்டும் உற்பத்தியாகிவிடும். ஆனால் அணுக்கள் முழுமையான வளர்ச்சி பெற மூன்று மாதங்கள் தேவைப்படும். ரத்த அணுக்கள் அழிந்து புதுப்பிக்கும் செயல் அல்லது உற்பத்தியாவது உடலில் எப்போதும் நிகழும் பணி. எனவே ரத்த தானம் செய்தால் நம் சத்துகள் குறைந்து உடல் பலகீனமாகும் என்ற சந்தேகம் தேவையற்றது. ரத்த தானம் செய்வதால், இயற்கையான முறையில் புதிய ரத்தத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதுதான் உண்மை.

இதில் முக்கியமானது, நம்முடைய ரத்தம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் ரத்தத்தைப் பெறுபவர்களும் நோயின் பாதிப்பிலிருந்து விரைவாக குணமடைய முடியும். அதனால் ரத்த தானம் செய்பவர்கள் அவர்களின் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளி உணவுகளை தவிர்த்து, தினமும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ள பழைய சாதமும் புரோட்டின் நிறைந்த முளைகட்டிய பயிறு போன்ற சரிவிகித சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு பழக்கமும் ரத்தம் தூய்மையடைய உதவும்.

பிரிக்கப்படும் அணுக்களின் தேவை என்ன?

ரெட் செல்ஸ் எனப்படும் சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா எனப்படும் ரத்த வெள்ளையணுக்கள், பிளேட்லெட்ஸ் எனப்படும் தட்டணுக்கள் இப்படி ரத்தத்தில் உள்ள அணுக்கள் ரத்ததானம் மூலம் பிரிக்கப்பட்டு தேவையுள்ளோருக்கு செலுத்தப் படுகிறது. சாதாரணமாக விபத்துகள், தீக்காயம் போன்ற ரத்த இழப்புகளுக்கு முதல் இரண்டு வகைகளே பெரும்பாலும் தேவைப்படும். ஆனால் தட்டணுக்கள் எனப்படும் பிளேட்லெட்ஸ் டெங்கு காய்ச்சல், புற்றுநோய், அதிக ரத்தப்போக்கு போன்ற நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கட்டாயம் அவசியம்.

சாதாரண ரத்த தானம் தர பத்து நிமிடங்கள் போதும். ஆனால் தட்டணுக்கள் தானம் தர குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாகும். இந்த தட்டணுக்கள் தானத்தை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும், வருடத்திற்கு 24 முறையும் தரலாம். இப்போதுதான் தட்டணுக்களின் தேவை தற்போது அதிகமாகி உள்ளது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு உருவாக்குவது?

எங்களைப் போன்ற அமைப்புகளும் அரசும் எவ்வளவுதான் முயன்றாலும் பெருமளவில் விழிப்புணர்வு என்பது சாத்தியமில்லை. இதற்கு பள்ளிகளில் இருந்தே ரத்ததானம் குறித்து
பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு வரும்போது ரத்த தானம் வழங்க வேண்டிய வயதை எட்டி விடும் இளைஞர்கள். அதைப் பற்றி முழுமையாக அறிந்து தானம் செய்யத் துணிவார்கள். இதனால் அவர்கள் எண்ணத்தில் சேவை உணர்வுடன் தவறான பாதைக்கு போவது தடுக்கப்படுவதுடன் தேவையான ரத்தம் கிடைத்து பலர் காப்பாற்றப்படும் சூழல் ஏற்படும். மேலும் அரிய வகை ரத்தப்பிரிவு சார்ந்தவர்களையும் கண்டறிய முடியும்.

நாம் அனைவரும் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும்போது அல்லது உடல் நலம் பாதிக்கப்படும்போது மட்டுமே நம் ரத்தப்பிரிவை அறிந்துகொள்கிறோம். அதன் பிறகு அதை மறந்தும் போகிறோம். ஆனால் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்கள் ரத்த வகைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம். ஒவ்வொருவரும் தங்களுக்கு பாதிப்பு வரும் போது தான் ரத்ததானம் பற்றி ேபசுகிறார்கள். அப்படி இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்தில் இருப்பவர்கள் அதை செயல்படுத்த முன்வரவேண்டும்.

ரத்தத்திற்கு பதில் வேறு திரவத்தை செலுத்த முடியாது. நீங்கள் தரும் ரத்தம் ஒரு உயிரைக் காப்பாற்ற பயன்படுகிறது எனும் ஆத்ம திருப்தியை விட மேலானது எதுவும் இல்லை. பிறந்தோம் மறைந்தோம் என்றில்லாமல், ரத்த தானம் செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றி வாழ்ந்தோம் எனும் திருப்தியே நாம் பிறந்ததற்கான அர்த்தமாக இருக்கட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூக்கடைப்பு (Nasal Block) (மருத்துவம்)
Next post தினசரி வாழ்வாதாரத்தால் ஏற்படும் பாதிப்பு! (மகளிர் பக்கம்)