ங போல் வளை-யோகம் அறிவோம்! (மருத்துவம்)

Read Time:13 Minute, 6 Second

ஒரு நோய்க்கூறு உண்டாகும்போது மருந்து எடுத்துக்கொள்ளுதல் என்பதை, நம்மில் பலர் மாபெரும் பிழை என்றோ, ஒரு பாவச்செயல் என்றோ நினைத்துக் கொள்கிறோம். இந்த எண்ணத்தைத் தொடர்ந்து மாற்று மருத்துவம் எனும்  வேறு எளிமையான முறையையோ, திடீரென எல்லாம் மாறிவிட வேண்டும் எனும் எதிர்பார்ப்பையோ அடைகிறோம்.  இங்குதான் அடுத்த சிக்கல் தொடங்குகிறது.

நாம் அப்படித் தேடுவது தெரிந்தால், நம்மைச் சுற்றி குறைந்தது நாற்பது ஐம்பது பேராவது, அறிவுரை மற்றும் அறவுரைகளால் நம்மைக் குளிப்பாட்டி, இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த ஞானத்துக்கும் தான் மட்டுமே உரிமையுள்ளவர் போல பேசி நம்மை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்குவார்கள்.

அவர்களில் முக்கியமானவர்கள் ‘ஹீலர்கள்’ எனப்படும் மோசடிப் பேர்வழிகள், சமீபத்தில்கூட சில ஹீலர்களை அரசு கைதுசெய்தது. அதற்கு முக்கியக் காரணம், கொரோனா தொற்று காலகட்டத்தில் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடனும், சுகாதாரத் துறையின் மீதும் மருத்துவத்துறையின் மீதும் நம்பிக்கையின்மையை விதைக்கும் நோக்குடனும் தொடர்ந்து பேசிவந்தனர். அதில் முக்கியமானது கொரோனா என்பது நோயே கிடையாது.  அது வெறும் காய்ச்சல்தான்.

அதற்கு வெறும் பப்பாளி இலைகளைத் தின்பதும், படுத்துத் தூங்குவதும்தான் தீர்வு எனப் பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்பினர். மேலும் மேலும் பொய்களைச் சொல்லி அனைத்து நோய்களுமே தானாகச் சரியாகிவிடும் அல்லது வெறும் மூலிகைகள் மூலம் குணமாகிவிடும் எனக் கூறினர்.

அதில் உச்சகட்ட துயரம் என்பது, ஒரு ஹீலரின் காணொளியைப் பார்த்து, அவருடைய அறிவுறுத்தலின் பேரில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க கணவன் நினைத்ததால், அந்தக் கர்பிணிப்பெண் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து ஹீலர் கைது செய்யப்பட்டார்.

இப்படி மாற்று மருத்துவத்துறையில் ஏகப்பட்ட போலிகளும், அவர்களின் ‘சர்வரோக நிவாரணி’ எனும் பித்தலாட்டமும், ஆயுர்வேதத்தில் சரகர் காலத்திலேயே இருந்திருப்பதைக் காண முடிகிறது. இன்று இணையத்தின் மூலமும் காணொளிகளின் மூலமும் இது பெருகி வளர்ந்துள்ளது. முக்கியமாக யோகத்துறையிலும் இப்படியான போலிகள் மலிந்துகிடப்பதை நாம் காணலாம்.

தொலைக்காட்சியில் தோன்றி, ஆசனங்களை அதன் பெயர்களைச் சொல்லி கேன்சர் கட்டிகளைக் கரைக்கும் என்றும், குறிப்பிட்ட முத்திரைகளைச் செய்து காண்பித்து, முடி உதிர்வதைக் குறைத்து நல்ல வளமான முடி வளர்ச்சிக்கு உதவும் என்றும், பிராணாயாம முறைகளைச் சொல்லி, முப்பது விதமான நோய்களைக் குணப்படுத்தும் என்றும் தொடர்ந்து சொல்லி வருபவர்களை நாம் போலிகள் என்று அடையாளம் கண்டுவிடலாம். ஏனெனில், யோகத்துறையில் மிகச் சிறந்த ஆராய்ச்சிகளும் தேடல்களும் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதில் திட்டவட்டமாகவே, முடி வளர்தல் சார்ந்தோ, கேன்சர் கட்டிகள் கரைந்துவிட்டது என்றோ இன்னும் தீர்மானமாக நிரூபிக்கப்படவில்லை. மிக அரிதாக சிலருக்கு யோகப் பயிற்சிகள் பலனளித்து நோய் முற்றிலும் நீங்கியுள்ளது என்பதும் உண்மைதான். அதை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது.  நூறு கற்களை மொத்தமாக மாமரத்தின் மீது வீசி ஒரே ஒரு மாம்பழம் விழுந்தால், எந்த கல்லால் இந்த மாம்பழம் விழுந்தது என்பது தெரியாதோ? அப்படித்தான்  யோக பயிற்சியின் மூலம் ஒருவருக்கு   குணமான கேன்சர்கட்டி, அனைத்து கேன்சர் நோயாளிகளுக்கும் ஒரே போல பலனைத் தரும் என உறுதியாகச் சொல்ல முடியாது.

அந்த ஒரே ஒரு குணமான நபரை எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு, அதை விளம்பரமாகப் பயன்படுத்திக்கொள்ளும் யோக நிறுவனங்களும் இங்கே உண்டு.  பெரும்பாலான மருந்துகளுக்கு எப்படி பக்க விளைவுகள் உள்ளனவோ அதேபோன்று யோகத்திலும் சில பக்க விளைவுகள் உள்ளன.  உதாரணமாக, 2016 மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் அதி விரைவாக அல்லது முறையாக கற்றுக்கொள்ளாத பல்வேறு விதமான யோகப் பயிற்சி செய்பவர்களில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு குறிப்பட்ட வலி அல்லது வேதனை உருவாவதையும், பத்து பேரில் ஒருவருக்கு நீண்ட நாள் வேதனையாகவும் மாறியுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

மேலும், மனம் ஏற்கெனவே கொந்தளிப்பான ஒருவர் நேரடியாக தியான வகுப்புகளுக்குச் சென்று மேலும் மனநோய் தாக்கப்பட்ட நபராகத்தான் திரும்பியுள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உதாரணமாக, பத்து நாட்கள் நடத்தப்படும் யோக முகாம்களில் முதல் நாளே ‘மெளன விரதம், உணவை குறைத்தல், ஒருநாளைக்கு ஐந்து மணிநேரம் உட்கார்ந்து கண்களை மூடி தியான முயற்சி செய்தல், மூச்சைக் கவனித்தல்  (முன் அனுபவமும், சாத்தியமும் இல்லாத ஒன்று) போன்ற முறைமைகளில் பாதிக்கப்பட்ட நபர்கள், இரண்டாம், மூன்றாம் நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுவதையும் காணமுடிகிறது.

முத்திரைகளைப் பயன்படுத்தி அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விட முடியும் எனும் அபாயகரமான கருத்தும் இங்கே உள்ளது. ‘மாத்திரைகள் இன்றி நூறு வயது வரை வாழ முத்திரைகள்’  போன்ற தலைப்புகளில் வரும்  புத்தகங்களை படித்துவிட்டு, அதை முயன்று பார்த்து, சர்க்கரைநோயையும், இதய நோயையும் மேலும் பெருக்கிக்கொண்ட முதியவர்கள் ஏராளம்.

ஒவ்வொரு  துறையிலும் அத்துறையின் வல்லுநர்கள் சொல்வதைத்தான் நாம் கணக்கில்கொள்ள வேண்டுமே தவிர, காணொளி மூலம் விஞ்ஞானியானவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. அதிலும் தங்களை ஹீலர்கள் என்றும், தங்கள் மருத்துவம் சர்வரோக நிவாரணம் அளிக்கும் என்றும் கூறுபவர்களை நாம் நிச்சயமாக தவிர்த்துவிடலாம்.  ஒரு ஹீலர் என்பவர் எந்தத் துறையில் எதை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தார்? ஒரு மருத்துவத்தையோ, மருந்தையோ பரிந்துரை செய்வதற்கும் சொல்வதற்கும்  அவருக்கு என்ன முன் தகுதி இருக்கிறது? அதில் எவ்விதம் ஆராய்ச்சி செய்துள்ளார்? போன்ற காரணிகள் மிகவும் முக்கியமானவை.

நமது பாட்டி வைத்தியம் போன்ற முறைகளைச் சான்றாகக் காட்ட வேண்டாம். பாட்டி வைத்தியம் என்பதே, முன்னர்  நமது பாட்டிமார்கள் நம்மோடு நேரடித் தொடர்பில் இருந்தார்கள், கரிசனமும், பக்குவமும், இறை மீதான நம்பிக்கையும் ஒருங்கிணைந்து, மருத்துவம் செய்தனர். இன்று அப்படியான ஒருவர் எங்கிருக்கிறார்?

‘இயற்கை மருத்துவம்’ வகுப்புக்கு ஒரு ஹீலர் ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். இதில் எங்கே பக்குவமும், கரிசனமும் இருக்கிறது? யோக வகுப்புகளுக்கும் இங்கே ஆயிரக்கணக்கில் வசூல் செய்யப்படுகிறது. முழுமையான கல்வியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக வழங்கலாம். ஆனால், நம்மை எலிகளைப் போல   வைத்து  ஆய்வு செய்து பார்க்க அவர்களை அனுமதிக்கக்கூடாது.

ஆக, யோகக் கல்வியிலும் இப்படியான குளறுபடிகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, இந்தத் துறையின் வல்லுநர்களைக் கண்டறிதலும், அவர்களோடு உரையாடி நமக்கான ஒன்றைத் தேர்ந்தெடுத்தலும் மிகவும் முக்கியமான கடமை.  யோகப் பாடத்திட்டம் என்பது ஒரு மனிதனின் ஒட்டுமொத்த ஆளுமைக்கானதாகவே, இதை இன்றுவரை கொண்டு வந்து சேர்த்த மரபுகள் முன்னிறுத்துகின்றன. அதில் நோய்களை குணமாக்குதல் என்பதும் மிக முக்கியமான பகுதிதான். முக்கியமாக மனம் சார்ந்த பெரும்பாலான நோய்களுக்கு யோகம் நேரடித் தீர்வாக அமைந்துள்ளது. பிராணாயாமம் நோய்க்காரணிகளை தடுக்க உதவியிருக்கிறது என்கிற மிகப்பெரிய சாதனைகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நவீன அறிவியலையும், யோகத்தின் பலன்களையும், மருத்துவத்தையும் அறிந்த நல்ல மருத்துவர்கள் இதை ஒப்புக்கொண்டு தங்கள் நோயாளிகளுக்கு யோகத்தைப் பரிந்துரைப்பதும் உலகமெங்கும் அன்றாடம் நிகழ்கிறது தங்கள் துறையின் எல்லைகளைத் தெரிந்தவர்கள், சாதக பாதகங்களை நேரடியாக ஒப்புக்கொண்டு செயல்படுபவர்களைத்தான் நாம் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள்தான் நம் நல்வாழ்வின் மீது அக்கறை‘கொண்டவர்கள். வழிகாட்டும் ஆசான்கள்.

த்விகோணாசனம்

இந்தப் பகுதியில் நாம் ‘த்விகோணாசனம்’ எனும் பயிற்சியைத் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் அமர்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் மற்றும்   வாகனங்களை ஓட்டுபவர்கள் தோள்பட்டை கழுத்துப்பகுதிகளைத்தான் இறுக்கமாக்கிவைத்திருப்பர். அது நாற்பது வயதுக்கு மேல் பெரும்வலியை உண்டாக்கும். இந்த ஆசனம் அவர்களுக்கானது. கால்கள் இரண்டையும்  இரண்டடி விலக்கிவைத்து நிமிர்ந்து நின்று, மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும், கைகள் இரண்டும் விரல்கள் கோர்த்து பின்புறமாக வைத்துக்கொள்ளவும்.

மூச்சை வெளியே விடும்போது முன்புறமாகக் குனியவும், கோர்த்த கைகள் மேல்நோக்கி எழ வேண்டும். பின், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே நேர்நிலைக்கு வந்துவிடவும். பத்து முறை இதை செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பவுண்டரிகளை குழந்தைகள் உருவாக்குவதில்லை! (மருத்துவம்)
Next post குடும்பமா சந்தோஷமா வாழணும்! (மகளிர் பக்கம்)