கருகரு கூந்தலுக்கு கரிசலாங்கண்ணி!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 35 Second

கரிசலாங்கண்ணிக் கீரையில் நான்கு வகைகள் உள்ளன, நீலம், மஞ்சள் (பொற்றலைக்கையான்), சிவப்பு, வெள்ளை. இவற்றில் வெள்ளைக் கரிசலாங்கண்ணி எளிதாகக் கிடைக்கக்கூடியது. மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று ஒரு தாவரத்தை அழகிற்காக வளர்க்கின்றனர், உண்மையான மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை பிளவுபடாமல் நீளமாக இருக்கும். ஆனால், அழகுக்காக வளர்க்கப்படும் தாவரத்தில் இலைகள் பிளவுபட்டு காணப்படும்.

இது மருந்துக்குப் பயன்படாது, கரிசாலை படர்ந்து வளரும் தாவர வகையைச் சார்ந்தது. சித்தர்கள் இதை மிகச்சிறந்த காயகற்ப மூலிகையாகக் குறிப்பிட்டுள்ளனர். இக்கீரையைத் தொடர்ந்து 90 நாட்கள் சாப்பிட்டுவந்தால், தலைமுடி செழித்து வளரும், இளநரை மாறும், உடல், உயிர் நோயின்றி நீடித்த நாள் வாழும். இக்கீரையின் சுவையென்னவோ கசப்புதான், ஆனால் இது உடலுக்கு நிச்சயம் தரும் நல்ல வனப்பு, தலைமுடிக்கு தரும் பளபளப்பு.

100 கிராம் கரிசலாங்கண்ணியில், 65 கலோரி ஆற்றல், 17 கிராம் நார்ச்சத்து, 7 கிராம் கார்போஹைட்ரேட், 5 கிராம் புரதச்சத்து, இரும்புச்சத்து-300 மி.கி, துத்தநாகம்-70 மி.கி, சிறிதளவு தங்கச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி இவை இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது, கீரைகளிலேயே நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்தது கரிசலாங்கண்ணி கீரை ஆகும்.

கரிசாலையின் பொதுக்குணத்தை பற்றி கூறும்,சித்தர்களில் முதன்மை சித்தர் அகத்தியர், இதனால் குரற்கம்மல், காமாலை, வெண்புள்ளி, இரத்த சோகையை நீக்கி உடலுக்கு கடல் போன்ற பலத்தை தரும் என்கிறார்.

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை
யுரற் பாண்டு பன்னோ யொழிய-நிரற்சொன்ன
மெய்யாத் தகரையொத்த மீளியண்ணு நற்புலத்துக்
கையாந் தகரையொத்தக் கால்
(அகத்தியர் குணவாகடம்)

*கரிசாலை இலைகளை நிழலில் காயவைத்து பொடித்த சூரணத்தை இளநீரில் ஒரு மாதமும், தேனில் ஒரு மாதமும் சாப்பிட இளநரை, திரை (தோல் சுருக்கம்), நீங்கும்.

*மஞ்சள் கரிசாலை கீரையை பொரியலாக செய்து உண்ண பொற்சாயல், கண்ணுக்கு நல்ல ஒளி,புத்தி தெளிவு,அறிவு இவை உண்டாகும்.இதைக் கீழ்க்காணும் தேரன் வெண்பா பாடல் மூலம் அறியலாம்.

திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங்-குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை
யாந்தகரைத் தன்னாகத் தின்னாகத் தான்
(தேரையர் வெண்பா)

* கரிசாலைச் சாறு 50 மி.லி, நல்லெண்ணெய் 50 மி.லி, இவற்றை நன்றாகக் காய்த்து வடிகட்டி காலை, இரவு 5மி.லி வீதம் சாப்பிட்டு வர நாட்பட்ட இருமல் தீரும்.

* கரிசாலைச்சாறு 2 துளி எடுத்து,8 துளி தேனில் கலந்து கொடுத்து வர கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, ஜலதோஷம் நீங்கும்.

* தலைமுடி கறுத்து, செழித்து வளர கரிசலாங்கண்ணி தைலம்:-

கரிசலாங்கண்ணிச் சாறு-100 மி.லி
நெல்லிக்காய் சாறு-100 மி.லி
கறிவேப்பிலைச் சாறு-100 மி.லி
அதிமதுரப்பொடி- 5 கிராம்
நல்லெண்ணெய்-500 மி.லி

இவைகளை நன்றாகக் காய்ச்சி தலையில் தேய்த்து வர,தலைமுடி கருமை நிறத்துடன் அடர்த்தியாக செழித்து வளரும்,கண் நோய்கள்,காது நோய்களும் குணமாகும்.

*கரிசலாங்கண்ணி இலை, வேர் இவைகளை பொடித்து வெந்நீரில் இருவேளை குடித்துவந்தால், கல்லீரல், மண்ணீரல் நோய்கள், நீங்கும்.

*தேள்கடி நஞ்சுக்கு கரிசலாங்கண்ணி இலையை அரைத்து கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு நீங்கும்.

*மஞ்சள் காமாலைநோய் தீர கரிசலாங்கண்ணி இலை, கீழாநெல்லி இலை, இவைகளை சுத்தம் செய்து அரைத்து நெல்லிக்காய் அளவு ஒரு டம்ளர் மோரில் கலந்து ஒரு வாரம் கொடுத்து வர காமாலை நோய் நீங்கி கல்லீரல் பலப்படும்.

*கரிசலாங்கண்ணிக் கீரை, கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது, வள்ளலார் இக்கீரையை தெய்வீக மூலிகை என்றும், ஞானப்பச்சிலை என்றும் கூறியுள்ளார்.

*இயற்கையான கண் மை தயாரிக்க, உலர்ந்த கரிசாலை இலைகளை எரித்து, இச்சாம்பலை விளக்கெண்ணெயுடன் கலந்து மையாக போட்டுவர கண் ஒளி பெறும்.

*கரிசாலை இலைச் சாறு-15 மி.லி வீதம், தினம் இருவேளை குடித்து வந்தால், சிறுநீரகத் தொற்று, நீர்ச் சுருக்கு,இவை நீங்கி சிறுநீர் நன்றாக பிரியும், சிறுநீரில் ரத்தக்கசிவு இருந்தால் அது நீங்கும்.

*கரிசலாங்கண்ணி உலர்ந்த பொடியுடன், சிறிதளவு திப்பிலிப் பொடி, தேனில் கலந்து சாப்பிட்டுவர, ஆஸ்துமா, அலர்ஜி நீங்கி நுரையீரல் வலுவடையும்.

*வாரம் ஒருமுறை கரிசலாங்கண்ணி சாப்பிட்டு, நோயின்றி நெடுநாள் வாழுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திராட்சைப்பழம் சாப்பிடுங்கள்!! (மருத்துவம்)
Next post சென்னைக்கு வந்துவிட்டது லிப்பான் கலை! (மகளிர் பக்கம்)