நயன்தாரா முதல் மைக்கேல் ஜாக்சன் வரை! (மகளிர் பக்கம்)
ஓவியராக இருந்து பின் மனித வளத் துறையில் வேலைப் பார்த்து இப்போது பாடி பெயின் டிங் மற்றும் மேக்கப் கலைஞராக சாதித்து வருகிறார் சிருங்கா ஷியாம். இவர் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் – நயன்தாராவில் தொடங்கி, மைக்கேல் ஜாக்சன், பிரபல ஜோக்கர் கதாபாத்திரம் என தனக்கு தானே பாடி பெயின்டிங் செய்து அந்த கதாபாத்திரங்களாகவே மாறி இன்ஸ்டா கிராமில் லைக்சை அள்ளி வருகிறார்.
சிருங்காவின் சொந்த ஊர் கோயம்புத்தூர். கேரளாவைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும், பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் தான். கார்ப்ரேட் நிறுவனத்தில் மனித வளத் துறையில் பணிபுரிந்து வந்தார். ஆனால் அந்த 9-5 வேலையில் சிருங்காவிற்கு பெரிய அளவில் ஈடுபாடு கிடைக்கவில்லை. அதைப் பற்றி சிருங்காவே கூறுகிறார். ‘‘கார்ப்ரேட் துறையில் வேலை செய்து கொண்டே எப்படியாவது வேறு துறையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தேன். சிறு வயதில் இருந்தே ஜுவல்லரி மேக்கிங், டெரக்கோட்டா பொருட்கள் செய்வது, மேக்கப் போன்ற பொழுதுபோக்குகளை கற்றுக்கொண்டு வீட்டில் அவ்வப்போது செய்து வருவேன்.
எனக்கு ரொம்ப பிடித்தது பெயின்டிங். நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, பெயின்டிங் செய்வதற்கு எனக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாள் திடீரென பெயின்டிங் செய்யலாம் என உட்கார்ந்த போது, என்னால் எதுவுமே வரைய முடியவில்லை. ஒரு கார்ப்ரேட் வேலை இப்படி எனக்குள் இருந்த க்ரியேட்டிவிட்டியை கொன்றுவிட்டதே என மிகவும் வருத்தமாக இருந்தது. முழு நேரம் ஓவியராக வேண்டுமென்றால் அப்போது அதில் சரியான வாய்ப்புகளும் வருமானமும் இருக்கவில்லை. சரி வேற என்ன செய்யலாம் என யோசித்த போது தான் என் திருமணத்தின் போது எனக்கு மேக்கப் போட்ட கலைஞரின் நியாபகம் வந்தது. அன்று நான் ரொம்ப அழகாக உணர்ந்தேன். அந்த இரண்டு மணி நேர மேக்கப் எனக்கு கொடுத்த எனர்ஜியை நினைத்து பார்த்தேன். உடனே எனக்கான துறை மேக்கப் தான் என முடிவு செய்தேன்.
ஆனால் இவ்வளவு படித்து மேக்கப் துறையில் முழுமையாக இறங்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே, ஒப்பனைக் கலையில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்னு முடிவு செய்தேன். வார வாரம் என் நண்பர்களில் யாரையாவது அழைத்து அவர்களை என் மாடலாக்கி மேக்கப் செய்து பார்ப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் அவர்களுடைய நிச்சயதார்த்தம், நலங்கு, மெஹந்தி போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை புக் செய்தனர்.
பொதுவாக நான் கார்ப்ரேட் கம்பெனியில் வேலை செய்த போது காலை ஐந்து மணிக்கே கம்பெனி பேருந்து வீட்டு வாசலுக்கு வந்துவிடும். அவ்வளவு சீக்கிரம் எழுந்து வேலைக்குப் போவது ரொம்பவே சலிப்பாக இருக்கும். நாள் முழுவதும் சுறுசுறுப்பே இல்லாமல் சோர்வாக இருப்பேன். ஆனால் மேக்கப் செய்வதற்காக இரவு முழுக்க தூங்காமல், காலை இரண்டு மணிக்கு மேக்கப் செய்யும் போது அவ்வளவு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் உணர்ந்தேன்.
இப்பதான் இந்த துறை பலவித பரிணாமங்கள் அடைந்திருக்கு. ஐந்தாண்டுகளுக்கு முன் மேக்கப் துறைக்கு பெரிய அளவில் மரியாதை கிடையாது. எங்க வீட்டிலும், உன் படிப்பிற்கேற்ற வேலையை செய்னு சொல்வார்கள். ஆனால் எனக்கு சமூகம் கட்டமைத்துள்ள மரியாதைக்குரிய வேலையைச் செய்வதை விட, எனக்கு பிடித்த வேலையில் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் ஈடுபடவே விரும்பினேன். என் கணவரும் இதற்கு முழு ஆதரவாய் இருந்தார். ஆரம்பத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருக்கவில்லை.
ஆனால் மேக்கப் சாதனங்களின் விலையும் அதற்காக நாம் முதலீடு செய்யும் தொகையும் ரொம்ப அதிகம். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என் வேலையில் லாபத்தையும் பெருக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான கடின உழைப்பில் ஈடுபட்டேன். இன்ஸ்டாகிராமில் கபூகி (Kabooki MUA) எனும் பக்கத்தை உருவாக்கி அதில் என்னுடைய அனைத்து வேலைகளையும் போஸ்ட் செய்து வருகிறேன்.
நான் ஐந்து வருடங்களுக்கு முன் மேக்கப் செய்ய ஆரம்பித்த போது, சென்னையில் 25 மேக்கப் கலைஞர்கள் தான் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது சுமார் ஆயிரக்கணக்கான அழகுக் கலை நிபுணர்கள் எங்கு திரும்பினாலும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் பிரத்யேகமான திறமையால் அடையாளம் காணப்படுகிறார்கள்.
பொதுவாக மணப்பெண்கள் பலர், அவர்களுடைய திருமணத்தின் போதுதான் முதல் முறையாக மேக்கப்பே அணிவார்கள். அதனால் அவர்களுக்கு நான் சாதாரணமான, அவர்களை அவர்களாக காட்டக்கூடிய மேக்கப்பை தான் போட முடியும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான மேக்கப், அதே கலர் என்று தான் இருந்தது. ஆனால் நான் ரொம்ப க்ரியேட்டிவ்வான பொண்ணு. எனக்கு மேக்கப்பில் இன்னும் பல ஸ்டைல்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.
அதனால் நான் தேர்ந்தெடுத்த பாதை தான், பாடி பெயின்டிங். NYX FACE award என்ற போட்டியில் கலந்து கொண்டேன். அப்போது நான் நினைத்தே பார்க்க முடியாத மாதிரி டாப் 5 போட்டியாளராக முன்னேறினேன். அந்த சமயம் என்னிடம் பாடி பெயின்டிங் செய்ய பொருட்கள் கூட சரியாக இல்லை. மொத்தமாகவே லிப்ஸ்டிக், ஐ ஷேடோ, ஐ லைனர் வைத்துதான் பாடி பெயின்டிங் செய்திருப்பேன்.
அதற்கு பின்தான் பாடி பெயின்டிங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கினேன். நான் செய்த பாடிபெயின்டிங்கை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. பாடி பெயின்டிங்கை என் மீது நானே முயற்சி செய்து பார்ப்பேன். அது செய்ய பல மணி நேரம் ஆகும். ஓய்வு இல்லாமல், தூங்காமல், சாப்பிடாமல் 17 மணி நேரம் தொடர்ந்து செய்திருக்கேன். முழுக்க முழுக்க க்ரியேட்டிவிட்டியும் ஃபேஷனும்தான் இந்த பாடி பெயின்டிங்’’ என்றவர் செல்ஃப்-மேக்கப் குறித்த வகுப்புகள் எடுத்து வருகிறார்.
‘‘தினமும் வெளியே போகும் போது அல்லது அலுவலகம் செல்லும் பெண்கள், அம்மாக்கள், கல்லூரி பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்கள் தினமும் பார்லருக்கு சென்று மேக்கப் போட்டுக் கொள்ள முடியாது. அதனால் நமக்கு நாமே மேக்கப் போடுவது குறித்து பயிற்சி எடுத்து வருகிறேன். இதுவரை நான் முழுமையாக எந்த மேக்கப் வகுப்புகளுக்கும் சென்றதில்லை. வர்க் ஷாப்கள் மூலம் புதிய நுணுக்கங்களை கற்றுள்ளேன். மேக்கப் துறையை பொறுத்தவரை நாம் எப்போதுமே அப்டேட்டாக இருக்கணும்” என்றவர் ஃபேஷன் ஷோ மற்றும் செலிப்ரேட்டி மேக்கப் கலைஞராகவும் இருக்கிறார்.
அவசியம் செய்ய வேண்டியவை
*மேக்கப் போடுவதற்கு முன் நம் சருமத்தை எப்படி தயார்படுத்துகிறோமோ, அதே போல மேக்கப் போட்டப் பின் இரவு தூங்குவதற்கு முன் நிச்சயமாக மேக்கப்பை முறையாக நீக்க வேண்டும்.
*பொதுவாகவே மேக்கப் அணிந்திருந்தாலும், அணியாவிட்டாலும் கண்டிப்பாக டவுள் க்ளென்சிங் எனும் சரும பாதுகாப்பு முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். எண்ணெய் பதத்தில் இருக்கும் ஏதாவது ஒரு க்ளென்சரை முகம் முழுக்க தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு சின்ன மிருதுவான துணியை லேசான சூட்டில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு முகத்திலிருக்கும் எண்ணெயை துடைத்து எடுக்க வேண்டும். இதற்குப் பின் முகத்தை கழுவும் போது, முகத்தில் தேங்கியிருக்கும் மாசு, அழுக்குடன் மேக்கப்பையும் அது நீக்கி விடும்.
*மேக்கப் ரிமூவர் இல்லாத போது, சாதாரண வர்ஜின் தேங்காய் எண்ணெயை தேய்த்தாலே போதும். ஆனால் எண்ணெய் அல்லது ஆயில் பேஸ்ட் க்ளென்சர் பயன்படுத்தியதும், முகத்தை நிச்சயமாக கழுவ வேண்டும். முகத்தை கழுவி முடித்ததும், மாய்ஸ்சரைசர் உபயோகிப்பதும் மிகவும் நல்லது.
*வீட்டிலிருந்தாலும், வெளியே சென்றாலும், சன் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்.
*சரும பாதுகாப்பிற்கு மார்க்கெட்டில் உள்ள க்ரீம்களை தாண்டி, ஆரோக்கியத்திற்காக சில விஷயங்களை கடைப்பிடிக்கணும். சத்தான உணவுகள், இயற்கையான காய்கறி மற்றும் பழங்கள், போதுமான உடற்பயிற்சி, நிறைய தண்ணீர் அருந்துதல் போன்ற ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.