பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 59 Second

காலத்திற்கேற்றாற் போல் மாற்றமடையாத எந்த ஒன்றும் அழிந்து போகும். காலத்திற்கு தகுந்தாற்போல தகவமைக்கும் எதுவுமே நிலைத்து நிற்கும். இந்த கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக தங்கள் முன்னோர்கள் வரைந்து வைத்த பாறை ஓவியங்களை காலத்திற்கேற்றாற் போல் வார்லி பெயிண்டிங் முறையில் சுவரில் மாட்டும்சித்திரங்களாக மாற்றியுள்ளார் கோப்பனேரியை சேர்ந்த பழங்குடி பெண் சிவகாமி.

47 வயதான சிவகாமி கேரளா- தமிழ்நாடு எல்லையின் இடையே உள்ள கோப்பனேரி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். மலையில் விளையும் உணவுப் பொருட்களை மட்டுமே நம்பி வாழும் பழங்குடி மக்களின் கிராமம் இது. சிவகாமி பகல் நேரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் மாடுகளை மேய்க்க சென்றுவிட்டு மாலையில் சமைப்பதற்கான விறகுகளை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவார். இதற்கிடையில் தான் வார்லி பெயிண்டிங் முறையை கற்றுக்கொண்டவர், பழங்குடி மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையினை ஓவியங்கள் வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

பெரும் உற்சாகத்தோடு பேசிய சிவகாமி, “எங்க முன்னோர்கள் காடுகளுக்குள் செல்லும் போது விலங்குகள் தங்களை தாக்காமல் இருக்கவும், இயற்கையை வழிபடவும், அந்த கால வாழ்க்கை முறையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வதற்காகவும் மலைகளில் உள்ள பாறைகளில் உளியைக் கொண்டு வரைந்து வைத்தார்கள். அவர்களின் ஒரே நோக்கம் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

இந்த ஓவியங்களில் திருவிழா கொண்டாட்டம், சடங்குகள், திருமணங்கள் செய்யும் முறை, அப்போதிருந்த விலங்குகளின் உருவங்கள், நெல்லு குத்துதல், மகிழ்ச்சி நடனம், நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் காட்சிகள் என அவர்களின் ஒவ்வொரு வாழ்க்கை முறைகளையும் பாறைகளில் ஓவியங்களாக வரைந்து வைத்தார்கள். அந்த ஓவியங்களை நீங்க பார்த்தாலுமே, எங்க முன்னோர்கள் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்று சொல்வீர்கள். அப்படித்தான் ஆனைக்கட்டி காடுகளில் நான் பார்த்த அந்த ஓவியங்கள் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. சின்ன வயசில் என் பாட்டி கதை சொல்லும் போது எல்லாம் அந்த ஓவியங்கள் எல்லாம் காட்சிகளாக என் கண் முன் வந்து செல்லும். அதுதான் எனக்குள் ஒரு ஆசையையும் வளர்த்தது.

எப்போது காடுகளுக்குள் சென்றாலும், ஓவியங்கள் பார்த்து மலைத்து நின்றிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் இப்போது அழிந்து போகும் நிலையில் உள்ளதை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும். அந்த ஓவியங்களை மீண்டும் வரைய வேண்டும் என்று எனக்குள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை இப்போது பாறைகளில் மீண்டும் வரைய முடியாது, ஆனால் அதை வேறு வடிவத்தில் மறுபிரதிபலிப்பு செய்ய முடியும் என்று மட்டும் தோன்றியது.

ஆனால் அதை எப்படி செய்வதுன்னு எனக்கு தெரியல. அந்த சமயத்தில் தான் எங்க ஊருக்கு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று எங்க கிராமத்து பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், எங்களிடம் இருக்கும் திறமைகளை கண்டறிந்து அதற்கேற்ப சில பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். அந்த பயிற்சியில் பொம்மை செய்தல், எம்பிராய்டிங், டெய்லரிங் போன்ற பல்வேறு விதமான கைவினை வேலைகளுக்கான பயிற்சி அளித்தனர்.

நானும் அந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டேன். அதில் நாம் வீட்டின் தேவைக்காக பயன்படுத்தும் எம்சீல் பசை மற்றும் பரீட்சைக்கு எழுதும் அட்டை கொண்டு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட வார்லி பெயிண்டிங்கைப் பார்த்தேன். அந்த ஓவியங்களைப் பார்த்தவுடனே அதை எப்படி செய்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வம் தூண்டவே அந்த பயிற்சியில் நானும் என்னை இணைத்துக் கொண்டேன். ஆறு மாத கால பயிற்சி.

கிட்டத்தட்ட 100 பெண்கள் இதில் கலந்து கொண்டார்கள். ஆனால் பலரால் பயிற்சியினை முழுமையாக தொடர முடியவில்லை. நானும் எங்க கிராமத்தை சேர்ந்த சுலோச்சனா என்ற பெண் மட்டும் தான் பல குடும்ப பிரச்னைகளுக்கு நடுவில் ஆறு மாத கால பயிற்சியை முழுமையாக நிறைவு செய்தோம். பயிற்சி முடித்த பிறகு பல வகையில் வார்லி பெயிண்டிங்கை வரைந்து பார்த்தேன். அப்போது தான் நான் சிறு வயதில் பார்த்த பாறை ஓவியங்களை அதில் வரைந்து பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றியது.

என் மகள் ஓவியங்கள் வரைய எனக்கு உதவி செய்ய, நான் எம்சீலை கொண்டு அந்த ஓவியங்களுக்கு ஒரு உருவ அமைப்பை ஏற்படுத்தினேன். பிறகு அதற்கு வண்ணங்கள் கொடுத்து அழகுப்படுத்தி தெரிந்தவர்களிடம் காட்டிய போது பலரும் பாராட்டினர். முதலில் ஒரு அட்டையில் மட்டுமே எம்சீல் ஓவியங்களை செய்து வந்தேன். அதை வாங்கியவர்கள், இதை பிரேம் செய்து கொடுத்தால் வீட்டில் மாட்டுவதற்கு அழகாக இருக்கும் என்று தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து நான் வரைந்த ஓவியங்களை போட்டோ பிரேம் செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. பலர் இதனை பரிசுப் பொருட்களாகவும் வாங்கி செல்கிறார்கள்.

ஒரு வார்லி பெயிண்டிங் செய்ய இரண்டு நாட்களாகும். எங்க கிராமத்தில் ஓவியம் தீட்டுவதற்கான பொருட்கள் கிடைக்காது. இங்கிருந்து கோவைக்கு சென்று தான் வாங்கி வரவேண்டும். ஒவ்வொரு முறையும் 48 கிலோ மீட்டர் பயணம் செய்து தான் இந்த ஓவியங்களை உருவாக்கி வருகிறேன். வீட்டு வேலைகளை முடித்து இரவு 7 மணிக்கு என்னுடைய பெயின்டிங் வேலையை ஆரம்பிப்பேன். இரவு ஒரு மணியாயிடும் அதை முடிக்க. உழைப்புக்கு ஏற்ற வருமானமும் கிடைக்கிறது.

ஒரு முறை எனக்கு பயிற்சி அளித்த தொண்டு நிறுவனம் டெல்லியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் என்னை கலந்து கொள்ள அழைத்து சென்றார்கள். அங்கும் நம்மூர் பாரம்பரிய உணவு வகைகளை நானும் சுலோச்சனாவும் தயார் செய்து கொடுத்தோம். இந்தியாவில் இருந்து அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு வந்திருந்தனர். உணவு மட்டுமில்லாமல் என்னுடைய ஓவியங்களையும் அங்கு விற்பனைக்காக எடுத்து சென்றிருந்தேன். நான் கொண்டு சென்றிருந்த 25 ஓவியங்களும் விற்று தீர்ந்தன. அது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.

பாறைகளிலும் குகைகளிலும் அடைபட்டு கிடந்த எங்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் இந்த வார்லி பெயிண்டிங் மூலம் ஒவ்வொரு வீட்டின் சுவர்களை யும் அலங்கரித்துக் கொண்டிருப்பதை நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு. இப்போது கற்றுக் கொண்ட இந்த ஓவியங்களை அடுத்த தலை முறையினருக்கும் சொல்லித் தருகிறேன்’’ என்றார்
சிவகாமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மருதாணியில் ஓவியம்… அசத்தும் அகமதாபாத் கலைஞர்!! (மகளிர் பக்கம்)
Next post ஐரோப்பிய கலையும் சுவையும் சேர்ந்த டிசைனர் கேக்குகள்! (மகளிர் பக்கம்)