காற்றைக் கிழித்துப்போடும் சிலம்பம்!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 45 Second

வீழ்த்தும்  ஆயுத மாய்…  எதிரியின் கம்பைத் தடுத்து… நமது கம்பு எதிரியை பதம் பார்த்து…

சிலம்பக் கலையை கையாளும் முறை, சாதாரண விஷயம் இல்லைதான்.உணவுக்கும், உயிருக்கும் இயற்கையோடு போராட வேண்டிய நிலையில்  ஆதி மனிதன் கையில் எடுத்த ஆயுதமே கம்பு. இயற்கையிடம் கிடைத்த வலுவான மரத்தடிகளை, கூரிய முனை கொண்ட மரக் கொம்புகளை விலங்குகளின் மீது வீசி வேட்டையாடியவன், அதையே தற்காப்புக் கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தான். கற்காலம் முடிவுற்று உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்தபோது, கூர்முனை கொண்ட கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களை வேட்டைக்கு பயன்படுத்தினர். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஆதி மனிதனின் தொன்மங்கள் இதற்கு சான்று.

கடுமையான இயற்கை சூழலை எதிர்கொள்ள பயன்படுத்திய ஆயுதங்களே தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பத்திற்கு அடிநாதம். 5000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி, எதிரியை தாக்க பயன்படுத்திய இந்த ஆயுதம், பிற்பாடு கலையாக மாறி, சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் சிலம்பக் கலையாக கற்பிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் சவால்களை எதிர்கொள்ள உருவான இந்தக் கலையின் அடிப்படைகள் பலவும் அதே கலையின் சாரமாக உருவானவையே. கடற்கரையில் ஓடும் நண்டுகளிடமிருந்து திசைகளையும், யானையின் துதிக்கை வழியாக சிலம்பத்தின் வீச்சு வகைகளையும், கழுகிடமிருந்து பிடி முறைகளையும், கரடியிடமிருந்து தொடு முறைகளையும், குதிரையிடமிருந்து உந்திப் பாயும் பாய்ச்சல் முறைகளையும், பாம்புகளிடம் இருந்து வேகத்தையும் தேர்ந்தெடுத்தே சிலம்பத்தின் திறன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சிலம்ப ஆசான்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால்தான் சிலம்பக் கலையை வடிவமைத்த குறுமுனி அகத்தியர் ஆயக்கலைகள் 64ல் ஒன்றாக இதனை வரிசைப்படுத்தியுள்ளார். கம்பு வீசும் திறன், காலடி அசைவு, வேகம் இவை மூன்றும் சிலம்பத்தின் அடிப்படைத் திறனாகப் பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய தென்னாட்டவரின் கரங்களில் சிலம்பம் விளையாடியது வரலாறு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போர்க்களம் புகுந்த வீரபாண்டிய கட்டபொம்மன் போரில் சிலம்பாட்டம் ஆடியது கட்டபொம்மன் கும்மிப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.

சிலம்பம் மட்டுமின்றி குறுவால்களும், குத்துமுனைகளும் பயன்படுத்தப்பட்டு, பிற்காலத்தில் அந்தந்த மண்ணுக்கே உரிய இன ரீதியான சில பிரத்யேக தனித்துவங்களையும் சிலம்பத்தில் புகுத்தி கலையாக வளர்த்துள்ளனர். சிலம்பாட்டத்திற்கான பொருட்களை விற்பனை செய்த கடைகள் இருந்ததும், அதில் மக்கள் போர்க்கருவிகளை வாங்கிய குறிப்புகளும் சிலம்பதிகாரத்தில் உள்ளது. மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்ததுமே, சிலம்பக் கலையின் சிறப்பும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஆங்கிலேய அரசுக்கு எதிராய் பயன்படுத்திய சிலம்பத்தை தடுக்க நினைத்த பிரிட்டிஷ் அரசு, சிலம்பம் பயில்வதற்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்தது. இதனால் இந்தக் கலை மீதிருந்த அறிவுத் திறன் மங்கி,  கோயில் விழாக்களில் கூத்துப் பொருளாக மட்டுமே மாறியது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகே, தமிழகத்தில் இந்தக் கலை மீண்டும் புத்துயிர் பெற்றது.

சிலம்பு வீசும்போது எழும் வீச்சொலியோடு, தனது கம்பு வீச்சினால் காற்றையே தடுமாற வைக்கும் சிலம்பக் கலைஞர் சூரியாவை சந்தித்தபோது.. இது கம்பல்ல தெம்பு என நம்மிடம் பேச ஆரம்பித்தார்.எம்.ஏ. எம்ஃபில் முடித்து, சிலம்பக் கலையில் பி.எச்.டி ஆராய்ச்சியில் இருப்பதைக் குறிப்பிட்டவர், காலடி வரிசைகளும், கை முறை பயிற்சியும் இணைந்ததே சிலம்பம். தன் 3 வயதில் தொடங்கிய இந்த சிலம்ப பயிற்சியில் 25 ஆண்டுகளைக் கடந்தவர். மாவட்டம் மற்றும் மாநில அளவில் 35க்கும் மேற்பட்ட விருதுகளையும், தேசிய அளவில் 10 விருதுகளையும், சர்வதேச போட்டிகளில் 2 விருதுகளையும், 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சிகளையும் வழங்கியுள்ளதை தெரிவித்தார்.

தான் ஒரு பெண் பயிற்சியாளராக இருப்பதால், பெண் குழந்தைகள் பலரும் நம்பிக்கையோடு சிலம்பப் பயிற்சிக்கு வருவதாகக் குறிப்பிட்டவர், ஆன்லைன் வழியாகவும் சிலம்பம் வகுப்புகளை எடுப்பதை பகிர்ந்தார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் தன்னுடைய மாணவர்களாக இருக்கிறார்கள் என்றவர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சுப்ரமணிய ஆசான் சிலம்பக் கூடத்தில் பயிற்சியாளராகவும் உள்ளார். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி வழங்கும் சூரியா மேலும் நம்மிடம் பேசியபோது…

பிறந்தபோதே அப்பாவை இழந்தேன். வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியமும், தன்னம்பிக்கையும் வரவேண்டும் என்பதற்காகவே, என் அக்கா சந்தியாவையும், என்னையும் இந்த சிலம்பக்கலை பயிற்சிக்குள் கொண்டு வந்தார் எனது தாய் மாமா. இன்று எனக்கு சிலம்பமே வாழ்க்கையாகிப்போனது, சுப்ரமணிய ஆசானிடம் துவக்கத்தில் சிலம்பக் கலையை கற்றவர், அவருக்குப்பின் தனது மாமா ஹரிதாஸை ஆசானாக ஏற்றிருக்கிறார்.

மெய்பாடம், உடற்கட்டு, மூச்சுப் பயிற்சி, குத்து வரிசை, தட்டு வரிசை, அதி வரிசை, பிடி வரிசை, சிலம்பாட்டம், வர்மம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதே சிலம்பாட்ட கலை. சிலம்ப வீச்சிலும் நேர் வீச்சு, படை வீச்சு, இடுப்பு வீச்சு, அருப்பு வீச்சு, குத்து, நடுக்கம்பு வரிசைகள், அலங்கார வரிசைகள், போர் வரிசைகள், வெட்டு, பாவ்லா என பிரிவுகள் உண்டு. சிலம்பம் போர்க்கலையாய் மட்டுமின்றி, உடற் பயிற்சியாகவும், ஒழுக்க முறையாகவும் பயிலப்படுகிறது. இதில் நரம்பு சீராட்டம், தசை இயக்கம், மூச்சுக் கட்டுப்பாடு, கை கால்களின் ஒன்றிணைந்த செயல்பாடு, சிந்தனையை ஒருங்கிணைக்கும் திறன் என நன்மைகள் உள்ளது. சிலம்பப் பயிற்சியில் வாதம், பித்தம், கபம் போன்றவை சீராக இயங்கும் என்கிறார்.

சிலம்பத்தை கற்கத் தொடங்குவதற்கு முன் தலை முதல் பாதம் வரை உடல் பயிற்சிகள் கற்றுத்தரப்படும். அதன் பிறகே சலாம் வரிசை, காலடி வரிசைகள் சொல்லித்தரப்படும். காலடி வரிசையிலும் ஒற்றைக் காலடி, கிறுக்கி காலடி என உண்டு. சிலம்பத்திலும் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, செடிக் குச்சி, வேள் கம்பு வீச்சு, மான் கொம்பு, வாள் வீச்சு, சுருள் வாள் வீச்சு, கத்தி, நெருப்பு பந்தம், புலிவேசம் என வகைகள் இருக்கிறது.

ஒற்றை கம்பு என்ன செய்யும் எனக் கேட்பவர்களுக்கு? போகுமிடமெல்லாம் கம்பை தூக்கிச் செல்ல முடியாதுதான். சிலம்பத்தில் முதலில் சொல்லித்தரப்படும், காலடி வரிசையும், கைமுறைகளுமே தற்காப்புதான். அதன் பிறகே கம்பு வழங்கப்படும். குடும்பங்களிலும், பொதுவெளியிலும் பாதிப்புகளை சந்திப்பதும் பெண்களே. எதிராளியின் சீண்டல்களில் இருந்தும் ஒவ்வொரு பெண்ணும் தன்னை தற்காக்க, கம்பு இல்லாமலே கை மூலம் அட்டாக் செய்வது, கால்களை நகர்த்தி அட்டாக் செய்வது, கையில் அணியும் வளையல்கள், கை பை இவற்றால் தாக்குவது, அணிந்துள்ள துப்பட்டா வழியாக எதிரில் இருப்பவரைத் தாக்குவது எனவும் சொல்லித் தரப்படும். மேலும் சிலம்பத்தில் மட்டுமே தமிழ் வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளது. தமிழக அரசும் பள்ளி விளையாட்டுக்களில் ஒன்றாக சிலம்பக் கலையை அறிவித்து, மாநில அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகளை நடத்தி சான்றிதழ் வழங்குகின்றனர்.

சிலம்பக் கலையின் தற்போதைய நிலை குறித்து சூரியாவிடம் கேட்டபோது, ரயில்வே மற்றும் ஊர்காவல் படை சீருடைப் பணிக்காக 3 சதவிகிதம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இருந்த சிலம்பக் கலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இன்மையால் இந்தக் கலையை கற்க பெரிதாக மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு கலர்ஃபுல் பெல்ட், உடை, கிரேடு இதெல்லாம் கொடுத்து வாய்க்குள் நுழையாத பெயரைச் சொல்லி, ஒரு விளையாட்டைச் சொன்னால், காஸ்ட்லியான அந்த விளையாட்டை கற்க தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். தவிர, சிலம்பம் கற்க வைக்கும் ஆர்வம் இல்லை என்கிறார்.

சிலம்ப ஆசானாக இருப்பவர்களும், இந்தக் கலை அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். மாணவர்களை வித்தியாசப்படுத்தி சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் கலையைச் சொல்லிக் கொடுத்திருந்தால், ஆசான்களின் இறப்புக்குப் பின்னும் இந்த கலை அழியாமல் இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும் என கலை அழிவிற்கான காரணங்களை அடுக்குகிறார் சூரியா.

மேலும், அழிவின் விளிம்பில் இருக்கும் சிலம்பக் கலையை  தாங்கிப் பிடிக்கும் எங்களைப் போன்ற பயிற்சியாளர்களை அரசு, பள்ளி, கல்லூரிகளில் பயிற்சியாளர்களாக நியமிக்க வேண்டும். சில கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களில் சிலம்பத்திற்கென தனி பிரிவு இருக்கிறது. அதில் எங்களுக்கு ஆசிரியர் பணி அல்லது சிலம்பப் பயிற்சியாளர் பணி வழங்கினால், நாங்கள் இந்தக் கலை அழியாமல் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்போம்.

போர்க்களத்தில் அந்நியர்களை மிரள வைத்து, நமது நாட்டை காத்த வீரக் கலை இன்று கோயில் திருவிழாக்களில் மட்டுமே கண்டுகளிக்கும் கண்காட்சியாக மாறிவிட்டது. மக்களும் சிலம்பத்தை தற்காப்புக் கலையாகவும், வீரவிளையாட்டாகவும் பார்க்காமல், இந்தக் கலையை வாழ வைக்கும் எங்களையும் ஆட்டக் கலைஞராகவும், தெருக்கூத்து கலைஞராகவும் அலட்சியத்தோடு பார்க்கிறார்கள் என வருத்தத்துடன் விடைபெற்றார்.

இந்தக் கலை தலைமுறை கடந்தும் எல்லோரையும் போய் சேர வேண்டும் என சிலம்பத்தை கையில் சுழற்றியபடியே பேச ஆரம்பித்தார், திரைத்துறையில் ஸ்டென்ட் மாஸ்டராகப் பணியாற்றிக் கொண்டே, மாணவர்களுக்கும் சிலம்பம் கற்றுத் தரும் பயிற்சியாளர் பி.கே. ராஜா. சிலம்பம் செய்வதால் கை கால்கள் வலுப்பெறுவதோடு, உடல் சுறுசுறுப்படைகிறது. தன்னம்பிக்கையும், தைரியத்தையும் சிலம்பம் தருகிறது. சிலம்பம் என்பது போர் மற்றும் தற்காப்புக் கலை என்ற நிலையைத் தாண்டி, இன்று தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளிலும் இடம் பெற்றுள்ளது. பொட்டு வைப்பது மற்றும் தொட்டுப் பார் என்பதுபோல், ஒவ்வொரு இடத்தையும் தொடுவதற்கு தொடுமுறையில் மதிப்பெண்கள் உண்டு.

துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்காரச் சிலம்பம், போர்ச் சிலம்பம், பனையேறி மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு, நாகம் பதினாறு என்ற பிரிவுகளும் சிலம்பத்தில் உண்டு என்றவாறு மீண்டும் கம்பை சுழற்ற ஆரம்பித்தார்.

“கொட்டுக்கொட்டென்று மேல்
பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்
கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப
வரிசைகள்
தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை”
என்ற கும்மிப் பாடலோடு…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் சாதனையை நானே முறியடிப்பேன்! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸிற்கு மட்டுமல்ல, இந்த விஷயங்களிலும் சிறக்க காமசூத்ரா உதவுமாம்..!! (அவ்வப்போது கிளாமர்)