தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை கலை மூலம் மீட்டெடுக்கும் சேலத்து பெண்! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 32 Second

சில ஆண்டுகளுக்கு முன் வரை, வீடுகளின் வாசலை பல வகையான அழகான கோலங்கள் அலங்கரித்து வந்தன. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் பெருக ஆரம்பித்து வேலையின் பளுவும் அதிகரிக்க ஆரம்பித்ததால், அந்த கோலங்கள் ஸ்டிக்கர் கோலங்களாக சுருங்கியது. ஆனால் சமீக காலமாக மீண்டும் மக்கள் கோலங்களை விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதை ஆன்மீகம் சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்காமல் பலரும் கலை சார்ந்த விஷயமாக பார்த்து தங்கள் வீடுகளில் அழகான கோலங்களை நிரப்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மரப்பலகை மற்றும் மனைகளில் விழாக்களின் போது மாவுக் கோலம் போடுவது வழக்கம். அந்த அழகிய கோலங்களை நிரந்தரமாக முதல் முறையாக மனையில் பெயிண்டிங் செய்து தருகிறார் சேலத்தைச் சேர்ந்த பபிதா பிரகாஷ். ஏழு ஆண்டுகளுக்கு முன்பே மரத்தாலான பொருட்களில் அழகான கண்களைக் கவரும் வண்ணக் கோலங்களையும் ஓவியங்களையும் வரைந்து சமூக வலைத்தளத்தில் சுமார் எழுபதாயிரம் ஃபாலோவர்ஸை பெற்றிருக்கிறார். ‘‘நானும் என் கணவரும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளோம். நான் ஆரம்பத்தில் விளம்பரத்துறையில் வேலை செய்து வந்தேன். என்னுடைய கணவரும் லண்டனில் வேலை செய்து வந்தார். நான் இங்கும் அவர் லண்டனிலும் எவ்வளவு காலம் இருப்பது.

எங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து வசிக்க தான் விருப்பம். எங்க குழந்தைகளையும் அந்த சூழலில் வளர்க்க விரும்பினோம். அதனால் என் கணவர் லண்டன் வேலையை விட்டு இங்கே சேலத்திற்கு வந்து எங்க குடும்ப தொழிலைப் பார்த்துக் கொண்டார்.எனக்கும் அப்போது குழந்தை பிறந்திருந்ததால், மூன்று ஆண்டுகள் ப்ரேக்கில் இருந்தேன். விஷுவல் கம்யூனிகேஷன் படித்த எனக்கு எப்போதுமே க்ரியேட்டிவாக ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும்.

சாதாரணமான ஒரு பொருளைப் பார்த்ததும், இதை எப்படி அழகாக்கலாம் என யோசிப்ேபன். அப்படித்தான் முதல் முறையாக எங்கள் வீட்டில் இருக்கும் பல்லாங்குழியில் பெயிண்ட் மூலம் அழகான ஓவியம் வரைந்தேன். வீட்டில் உள்ளவர்கள் அதைப் பார்த்து இதை விளையாடவும் பயன்படுத்தலாம், அலங்கரிக்கவும் பயன்படுத்தலாம் என்றார்கள். அப்போது தான் வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களை ஏன் அலங்கார பொருட்களாகவும் மாற்றக் கூடாது என ஸ்பூன், தட்டுகள், கரண்டிகள், மரப்பெட்டிகள், மனைகள் என வீட்டில் மரத்தினால் ஆன பொருட்கள் அனைத்திலும் வரைய ஆரம்பித்தேன். நண்பர்கள் உறவினர்களைத் தொடர்ந்து அவர்கள் மூலமாகவும் மற்றவர்களும் வாங்க முன்வந்தனர்.

பொதுவாக வீட்டில் ஏதாவது விழாக்காலம் என்றால் பூஜை செய்யும் போது வீட்டில் இருக்கும் மனையில் கோலம் போடுவார்கள். ஒவ்வொரு முறையும் பூஜைக்கு முன் இந்த கோலத்தை போட்டு வந்தார்கள். அப்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர்தான், மனையில் கோலத்தை பெயிண்டிங்கால் வரைந்து கொடுக்கச் சொன்னார். அப்படி ஆரம்பமானதுதான் இந்த மனைக் கோலம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முறையாக மனை முழுவதும் பெயிண்ட் அடித்து அதில் அழகான கோலங்கள் போட்டு விற்பனை செய்தது நான் தான். அப்போது இதற்கு மிகக் குறைவான வாடிக்கையாளர்களே இருந்தார்கள்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தங்கள் வீடுகளிலும் இது போல வித்தியாசமான அழகான அதே சமயம் தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய கலைநயமான பொருட்களை வைக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கவே அவர்களுக்கான கலைஞர்களும் அதிகரித்து இப்போது பலரும் கோலமனைகளை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் நான் உருவாக்கும் பொருட்கள் எல்லாமே என்னுடைய கற்பனையில் இருந்து தோன்றுவதால், அந்த அலங்காரப் பொருட்களுக்கு எல்லாம் நான் பதிப்புரிமை பெற்றுள்ளேன். ஆன்லைனில் பல டிசைன்கள் கொட்டிக்கிடந்தாலும், நான் உருவாக்கும் பொருட்கள் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும்’’ என்றவர் வாடிக்கையாளர்கள் அதிகமானதால், ‘க்ரிட்டி ஹாண்ட்மேட்’ என்ற பெயரில் தன் வீட்டின் ஒரு பகுதியை கலை ஸ்டுடியோவாக மாற்றி அமைத்துள்ளார்.

‘‘மனை, பல்லாங்குழி என வாடிக்கையாளர்கள் விரும்பும் கைவினைப் பொருட்களை தச்சர்கள் கொண்டு அமைத்து அதன் பிறகு நான் அதில் அழகான பெயின்டிங் செய்து தருவேன். அதற்காகவே கடந்த ஏழு வருடமாக நான் கேட்கும் பொருட்களை தயாரித்து தருகிறார்கள். சமீப காலமாக தச்சர்கள் சரியான வேலையும் வருமானமும் இல்லாமல் அவதிப்பட்டு வந்த போது இது போல காலத்திற்கேற்ப வாடிக்கையாளர்களின் விருப்பப்படி ட்ரெண்டிங் பொருட்களை மட்டும் உருவாக்கி கொடுப்பதால் அவர்களுக்கு நிலையான ஒரு வருமானத்தை
என்னால் ஏற்பாடு செய்து கொடுக்க முடிகிறது.

கோல மனைகளின் வரவேற்பு அதிகரித்ததும் மெல்ல கோலம் பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கினேன். அப்போது தான் ஒவ்வொரு கோலத்திற்கும் பல அர்த்தங்கள் இருப்பது தெரிய வந்தது. அதே போல அதில் பல வகைகள் இருப்பதும் புரிந்தது. படி கோலம், பிரம்மமுடி கோலம், இன்ஃபினிட்டி கோலம் என கோலங்களின் வகைகள், அர்த்தங்களை கற்று வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப கோலங்களை பல பொருட்களில் வரைந்து கொடுக்க ஆரம்பித்தோம்.

மனைகளை அடுத்து தட்டுகளில் வரையும் ஓவியங்களையும் சுவர் அலங்காரத்திற்கு வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்க ஆரம்பித்தனர். அதனால் சாதாரண வட்ட தட்டுகளை தாண்டி முக்கோண தட்டுகள், சதுர தட்டுகள் என பல வடிவ தட்டுகளிலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் ஓவியத்தை வரைந்து கொடுத்தேன். நான் இதுவரை பல நூறு தட்டுகளில் ஓவியம் வரைந்திருப்பேன்.

ஆனால் ஒருமுறை வரைந்த ஓவியத்தை மீண்டும் வரைய மாட்டேன். அதே வண்ணம் அதே வகையான ஓவியமாக இருந்தாலும், அதில் நிச்சயம் ஏதாவது வேறுபாடு இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்கள் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றுதான் கஸ்டமைஸ்டு பொருட்களை வாங்குகிறார்கள். அதனால் ஒரே ஓவியத்தை மீண்டும் ரிப்பீட் செய்யக் கூடாது என்பதை ஒரு விதியாகவே நாங்கள் பின்பற்றுகிறோம்.

அடுத்ததாக பல்லாங்குழி, தாயம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளையும் இளைய தலைமுறையினர் விரும்பி வாங்குகின்றனர். மனையில் தாயம் விளையாட்டு, பல்லாங்குழி விளையாட்டு செய்து கொடுத்துள்ளோம். பல்லாங்குழியை சுவர் அலங்காரமாக வீட்டில் மாட்டுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காக பல்லாங்குழியில் இருக்கும் ஒவ்வொரு குழியிலும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பழமையான கோவில்களை வரைந்து அதற்கு கீழே அழகான மணிகளை தொங்கவிட்டு அந்த பல்லாங்குழியை அலங்காரப் பொருளாக அனுப்புகிறோம்.

ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் அவர் வீட்டு திருமணத்திற்கு ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க வேண்டும். அதற்கு 45 சிறிய அளவு மனைகளை கேட்டார். அதிலிருந்து ரிட்டர்ன் கிஃப்ட்களுக்காகவும், கார்ப்ரேட் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் செய்து வருகிறோம். ஆனால் இந்த பொருட்களை எல்லாம் கையிலேயே தயாரித்து கையிலேயே உருவாக்குவதால், அதை செய்ய போதுமான கால அவகாசம் தேவைப்படும்.

கலைநயத்துடன் கைகளால் செதுக்கப்பட்டு கைகளால் வரையப்பட்ட சிற்பங்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது கோவில் கட்டிடங்களில் இருக்கும் தெய்வ சிலைகள் போலவே இருப்பதால் மக்கள் இதை பூஜை அறைக்கும், வீட்டு அலங்காரத்திற்கும் விரும்பி வாங்குகிறார்கள். இந்த புதிய யோசனையை கொடுத்தது என் கணவர் பிரகாஷ்தான். க்ரிட்டி ஹாண்ட்மேட் ஆரம்பித்ததில் இருந்து தச்சர்களை தேர்ந்தெடுப்பது, எனக்கு தேவையான மரச் சாமான்களை வாங்குவது என இதற்கு எல்லா விஷயத்திலும் அவர் உறுதுணையாக இருக்கிறார். ஓவியங்கள் வரைந்து வாடிக்கையாளர்களை கையாள்வதுடன் என் பங்கு முடிந்துவிடும். மற்ற வேலைகளை எல்லாம் பிரகாஷ் கவனித்துக்கொள்வார்” என்கிறார் பபிதா.

க்ரிட்டி ஹாண்மேட்டில் மர திருவாச்சி, குஷன் கவர்கள், தோரணை உருளிகள், கோலப்படிகள், டைனிங் டேபிள், ஃப்ரேம்ஸ், எழுத்துப் பலகைகள் மற்றும் சில பித்தளை பூ தொட்டிகள், பித்தளை மனைகளையும் செய்து வருகிறார்கள். எட்டு பேர் அமரக் கூடிய டைனிங் டேபிள் அளவு மனையில் தொடங்கி, மூன்று அங்குலம் வரை கஸ்டமைஸ்டு பொருட்களை பபிதா தயாரிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்!!! (மருத்துவம்)
Next post திருநங்கைகளின் தூரிகைகள்! (மகளிர் பக்கம்)