திருநங்கைகளின் தூரிகைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 27 Second

சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில் ஓவியங்களை வரைய திருநங்கைகளை அழைத்தார். இவர்களா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்புகள் எல்லாம் அவர்களின் ஓவியங்களைப் பார்த்த அடுத்த நிமிடமே அடங்கியது. வாழ்ந்து பார்த்தாதான் எங்களோட வாழ்க்கை புரியும் என்பார்கள்… அதெல்லாம் ஒன்னுமில்ல என்பது போல் நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை அவர்கள் வாழும் வீடுகளிலேயே தத்ரூபமாக வரைந்தார்கள் திருநங்கை கலைஞர்கள்.

“உங்களோட வாழ்க்கையை ஓவியமாக தத்ரூபமாக கொண்டு வந்த எங்களைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?’’ என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரவாணி ஆர்ட் புராஜெக்ட், இந்தியா முழுதும் சுவரில் ஓவியங்களை வரைந்து வருகிறார்கள். அவர்கள் திருநங்கைகளுக்கு வரைய கற்றுக்கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், தெரு ஓரம் இருக்கும் சுவர்கள் என அனைத்திலும் தங்களின் தூரிகைகளால் வண்ணம் தீட்டியுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கான சுய தொழிலையும் ஏற்படுத்தி யாருடைய தயவு இல்லாமல் வாழ சொல்லிக் கொடுக்கிறது அரவாணி ஆர்ட்.

இந்த திட்டத்தினை ஆரம்பித்த பூர்ணிமாவிடம் பேசிய போது, ‘‘அரவாணி ஆர்ட் 2016ம் ஆண்டு பெங்களூரில் ஆரம்பிக்கப்பட்டது. நான் ஆர்ட் சம்பந்தமாக படித்திருந்ததால் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க நினைச்சேன். அப்போது திருநங்கைகளுடன் வேலை பார்த்து வந்தேன். அவர்களை ஏன் ஒதுக்குகிறார்கள் என யோசித்து அதனை மாற்ற வேண்டும்னு நினைச்சேன். அப்படித்தான் அவர்களுக்கு வரைய சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் வரைவதில் அவர்கள் சில சிரமங்கள் சந்தித்தாலும், அவர்களுக்குள் ஏற்பட்ட ஆர்வத்தினால் சீக்கிரமே வரைய கற்றுக் கொண்டார்கள்.

மற்ற ஓவியங்களை போல் அல்லாமல் எங்களுடைய ஓவியங்கள் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக ஜியோ மெட்ரிக் முறையிலான ஓவியங்களை வரையலாம் என முடிவெடுத்தோம். முதல் ஆர்டர் பெங்களூரில் உள்ள ஒரு சுவற்றை அலங்கரிக்க கிடைச்சது. அதில் திருநங்கைகள் மீதான வன்முறைகள் குறித்த ஓவியங்களை வரைந்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

தொடர்ச்சியாக வரைய ஆரம்பித்தோம். இப்போது சென்னை, மும்பை, பெங்களூரு என மூன்று முக்கிய நகரங்களில் திருநங்கைகளை ஒருங்கிணைத்து அணிகளாக உருவாக்கி ஓவியங்கள் வரையும் வேலைகளை செய்து வருகிறோம். அடுக்குமாடி குடியிருப்புகள், சாலையோர சுவர்கள், ஐ.டி கம்பெனிகளில் உள்ள சுவர்களில் ஓவியங்கள் வரைவது என எங்களுடைய ஓவியங்
களின் எல்லைகள் விரிவடைந்தது.

கடந்த திருநங்கைகள் தினத்தன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து நாங்கள் செய்யும் வேலைகளை பற்றி கூறினோம். அவருக்கு எங்களுடைய வேலைகள் பிடித்து போகவே தூத்துக்குடியில் நடந்த நெய்தல் திருவிழாவில் எங்களுக்காகவே அடுக்குமாடி குடியிருப்பில் வரைய சொல்லி ஒரு ஆர்டர் கொடுத்தார். அங்கு வரைந்த ஓவியங்களை பார்த்த மக்களுக்கு திருநங்கைகள் மீது பெரும் மதிப்பை உண்டாக்கியது. நாங்களும் இதைத்தான் மக்களிடமும் எதிர்பார்க்கிறோம்’’ என்றார் பூர்ணிமா.

“பஸ்ல என் பக்கத்துல உட்காரவே கூச்சப்படுவாங்க. இப்ப நான் வரைந்த ஓவியங்கள பாத்து என் கூட செல்ஃபி எடுத்துக்கிறாங்க. இந்த நிலைக்கு நாங்க முன்னேறி வந்திருக்கிறோம். எங்களின் ஒவ்வொரு முன்னேற்றமும் பெரிய மாற்றத்தையும், சமூகத்தில் எங்களுக்கான ஒரு அந்தஸ்தையும் கொடுத்துள்ளது’’ என பேச ஆரம்பிக்கிறார் திருநங்கையான ஸ்மிதா அவிமுக்தா. ‘‘எனக்கு ஓவியங்கள் மேல பிரியம் அதிகம். நான் வரஞ்ச ஓவியங்களையெல்லாம் பாத்துதான் அரவாணி ஆர்ட் புராஜெக்ட் குழுவினர் எனக்கு துவக்கம் ஃபவுண்டேஷனை அறிமுகப்படுத்தி வைச்சாங்க.

பெங்களூருல ஆரம்பிச்சது தான் அரவாணி ஆர்ட் புராஜெக்ட். திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக ஆரம்பிச்ச இந்த ஃபவுண்டேஷன் இந்தியாவின் பல பகுதிகளில் சுவர் ஓவியங்களை வரைந்து வராங்க. திருநங்கைகளான நாங்க எல்லாரும் தன்மானத்தோடதான் வாழ நினைக்கிறோம். ஆனா, இந்த சமூகத்தின் புறக்கணிப்புதான் எங்களை கைத்தட்டி பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் செய்துள்ளது. வீட்டில் இருந்து துரத்தியடிக்கப்படும் எங்களை சக திருநங்கைகள்தான் அடைக்கலம் கொடுத்து தங்க இடம் கொடுக்கிறார்கள்.

அவர் செய்யும் வேலையைதான் நாங்களும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படியான நிலையில் வாழும் எங்களுக்கு சுயமாக வேலை செய்ய கிடைக்கும் வாய்ப்பு எவ்வளவு பெரிய விஷயம். எங்களை போல் தன்மானத்தோடு வாழ விரும்புபவர்களை அரவாணி ஆர்ட் புராஜெக்டில் இணைத்துள்ளோம். இப்போ நான், காஞ்சனா, வர்ஷா பிரதீப், நந்தினி, பூஜா, புதேஷ்
ஆகியோர் சென்னையில் சுவர் ஓவியங்களை வரைகிறோம். இந்த ஓவியங்கள் எல்லாம் நாங்க தான் வரைந்தோம்னு மக்களுக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கு. எங்களை ஏளனமா பார்த்த அவங்களின் பார்வை இப்ப மரியாதையா மாறி இருக்கு. இதெல்லாம் கலையாலதான் நிகழ்ந்திருக்கு.

பெயிண்டிங் பொறுத்தவரை எங்களால என்ன வரைய முடியுமோ அதைத்தான் கொடுப்பாங்க. ஐந்தினையை மையப்படுத்தி அம்பத்தூரில் வரைந்தோம். சென்னை மெட்ரோவில் இயற்கை சார்ந்த ஓவியங்கள் வரைந்தாங்க. சிலர் ஆர்டரின் பெயரில் வரைந்து தரச் சொல்வாங்க. இது போக வீட்டில் இண்டீரியர் டிசைன்கள், இறந்தவர்களின் படங்களை சுவரில் வரைவது, கோவில்
களில் உள்ள சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டுவது என கலை நுட்பம் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். அடிபட அடிபடதான் கல் சிற்பம் ஆகும் என்பது போல் நாங்கள் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வளர்கிறோம்.

ஆண், பெண் போல இவர்களும் திறமைசாலிகள்தான். இவர்களின் திறமைக்கு வழி கொடுத்தால் கண்டிப்பாக அவர்கள் அதில் தங்களின் முழு உழைப்பை கொடுப்பார்கள். அதன் மூலம் தங்களுக்கு என ஒரு வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி சுயமரியாதை உள்ள நிலைக்கு செல்வார்கள். இதற்கு அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் போதும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பெரிய பெரிய நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார்கள். இதனால் அடுத்த தலைமுறை திருநங்கைளின் நிலை மாறும்.

திருநங்கைகளுக்கு என வங்கிக் கடன் தருவதில்லை. கல்வியில் இடஒதுக்கீடு கிடையாது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது இவர்களை பார்க்கும் பார்வை வேறு. இதனாலேயே பலர் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். இந்த நிலை இப்போது மாறிவந்தாலும்… முழுமையாக மாறணும்… மாறும்’’ என்ற நம்பிக்கையோடு அடுத்த சுவற்றில் சித்திரம் தீட்ட தயாரானார் ஸ்மிதா அவிமுக்தா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை கலை மூலம் மீட்டெடுக்கும் சேலத்து பெண்! (மகளிர் பக்கம்)
Next post உடலுறவு சார்ந்த சில உண்மைகள்: எல்லாரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளவேண்டியது..!! (அவ்வப்போது கிளாமர்)