யோகாவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழகம்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 33 Second

அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 10 பேர் வெற்றி பெற்று தேசிய அளவில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். 6 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்களுக்காக நடைபெற்ற போட்டியில் தமிழக அணி சார்பில் பிரதீக்‌ஷாஸ்ரீ , பூஜா ஸ்ரீ , இனியா, ராகவி, நிரஞ்சன், காளிமுத்து, சதீஷ்குமார், கோவிந்தராஜ் மற்றும் யோக பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த முதல் வகுப்பு படிக்கும் பூஜாஸ்ரீயும் , இரண்டாம் வகுப்பு படிக்கும் பிரதீக்‌ஷாஸ்ரீ மற்றும் இவர்கள் இருவரின் அப்பா காளிமுத்துவும் இந்த போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளனர். தாங்கள் வெற்றிப் பெற்ற களிப்பைக் குறித்து காளிமுத்து பகிர்ந்து கொண்டார்.‘‘நான் கோவையில் உள்ள காந்தி மாநகர் பகுதியில் வசித்து வருகிறேன். சொந்தமாக ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளேன். எனக்கு பிரதீக்‌ஷாஸ்ரீ , பூஜாஸ்ரீ என 2 பெண் குழந்தைகள்.

ஹார்டுவேர்ஸ் கடை என்பதால் எப்போதும் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இதனால் நான் எப்போதும் பரபரப்பாகவே ஒரு வித சிந்தனையில் இயங்கிக் கொண்டிருப்பேன். அதிகாலையில் சீக்கிரம் எழும் வழக்கம் எனக்கு இருப்பதால், காலை அருகில் உள்ள பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு செல்வது என்னுடைய அன்றாட வழக்கத்தில் ஒன்று. அப்படித் தான் ஒரு நாள் பாலகிருஷ்ணாவை பூங்காவில் சந்தித்தேன்.

வரும் அவர் அம்மா நானம்மாள் இருவரும் யோகா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பூங்காவிற்கு வந்திருந்தனர். அவரின் அம்மாவின் வயது 90க்கு மேல் இருக்கும். அந்த வயதிலும் அவர் ரப்பர் போல தன் உடலை வளைத்து பல யோகாசனங்களை செய்து காட்டினார். ஆசனங்களை செய்து முடித்து விட்டு அவர் பேசிய போது இந்த வயதிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இதுவரை எந்த நோயும் தனக்கு வந்ததில்லை மருத்துவமனைக்கே சென்றதில்லை இதுவெல்லாம் சாத்தியமாக்கியது யோகா என்று தெரிவித்தார்.

அவருடைய இந்த வாழ்க்கை குறித்து எனக்கு பிரமிப்பாக இருந்தது. இந்தக் காலத்தில் 60 வயதைக் கடப்பதே கஷ்டம். அப்படி இருக்கும் போது, 90 வயதிற்கு மேல் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது, மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பது எனக்கு ஒரு வித உத்வேகத்தை ஏற்படுத்தியது. அப்போது முடிவு செய்தேன். யோகா கற்க வேண்டும்னு. பாலகிருஷ்ணனின் யோகா பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். முதலில் மூச்சு பயிற்சியும், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியும் சொல்லி கொடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக யோகாவிற்குள் செல்ல செல்ல என் வேலை சம்பந்தமான பரபரப்புகள் சிந்தனைகள் எல்லாம் மறந்து என் மனம் ஒருவித அமைதியினை அடைய ஆரம்பித்ததை உணர்ந்தேன். கடையிலும் வேலை அமைதியாக நடந்தது. எப்பவும் பரபரப்பாவே என்னைப் பார்த்த வாடிக்கையாளர்கள், என்னிடம் ஏற்பட்ட இந்த அமைதியை பார்த்து அவர்களின் மனநிலையும் மாறியது. வியாபாரத்தில் இருந்த அழுத்தம் குறைந்தது.

யோகாவினைத் தொடர்ந்து என்னுடைய உணவுப் பழக்கங்களையும் மாற்றி அமைத்தேன். என்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தை நான் கண்கூடாக உணர்ந்ததால், என் குழந்தைகளுக்கும் யோகா பயிற்சி அளிக்க விரும்பினேன். இருவரும் சின்ன குழந்தைகள் என்பதால், என்னைப் போல் அதிகாலையில் எழுந்திருக்க மாட்டார்கள். அந்த பழக்கத்தை கொண்டு வர அவர்களுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து காலையில் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்க பூங்காவிற்கு அழைத்து சென்று பழக்கப்படுத்தினேன். கொஞ்ச நாளில் அவர்களும் அதிகாலையில் எழ ஆரம்பித்தார்கள்.

சைக்கிள் ஓட்டுவதற்கு அவர்கள் பழகியதும், அடுத்த கட்டமாக யோகா வகுப்புகளுக்கு அழைத்து செல்ல ஆரம்பித்தேன். போகப் போக அவர்களுக்கு யோகா மீது ஆர்வம் ஏற்பட்டது. யோகா போட்டிகளில் பங்கு பெற ஆரம்பித்தனர். அவர்களைத் தொடர்ந்து நானும் யோகா போட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் வெற்றி பெறவில்லை என்றாலும், போட்டியில் பங்கு பெறுவதை மட்டும் நாங்க மூவரும் நிறுத்தவில்லை. ஒவ்ெவாரு போட்டியும் ஒரு அனுபவத்தை கொடுத்தது. அதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டோம்.

அதன் பிறகு வெற்றி படிக்கட்டுகள் தானாக உயர ஆரம்பித்தது. அந்தமானில் கடந்த மாதம் நடைபெற்ற 6வது தேசிய அளவிலான யோகா போட்டிகளில் கலந்து கொள்ள நாங்க மூவரும் தேர்வானோம். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 30 பேர் அந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் சார்பாக நாங்க முப்பது பேர் கலந்து கொண்டோம். இதில் போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழக அணி சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றது. அதில் கோவையில் இருந்து எங்களையும் சேர்த்து 10 பேரும் வெற்றி பெற்றதை நினைக்கும் போது ெராம்பவே சந்தோஷமா இருக்கு’’ என்றார் காளிமுத்து.

தமிழகத்தை யோகாவில் சாம்பியன்ஷிப் பெற வைத்த பயிற்சியாளர் பாலகிருஷ்ணனின் குடும்பமே யோகா குடும்பமாம். ‘‘எனக்கு இப்போ 64 வயசு ஆகுது. என்னோட அம்மாவை எல்லாரும் யோகா பாட்டினு கூப்புடுவாங்க. இந்த வயசுலயும் எல்லாருக்கும் யோகா பயிற்சிகளை சொல்லி கொடுத்து வருகிறார். எங்க குடும்பத்தில் மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளு
பேரன், கொள்ளு பேத்திகள் என மொத்தம் 63 பேர் யோகா பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். அனைவருக்கும் அம்மா தான் குரு. இதுவரைக்கும் ஜனாதிபதியிடம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். என்னிடம் பயிற்சி பெற்றவர்களில் 350 பேர் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்’’ என்றவர் யோகா போட்டிக்கான விதிமுறைகளைப் பற்றி விவரித்தார்.

‘‘யோகா போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் ஐந்து ஆசனங்கள் தெரிந்திருக்க வேண்டும். போட்டியின் போது 30 ஆசனங்கள் கொண்ட சீட்டுகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு வரும் ஆசனங்களை செய்து காட்ட வேண்டும். அது போக நம்முடைய சாய்சாகவும் ஆசனங்களை செய்து காட்டணும். நாம் செய்யும் முறைக்கு ஏற்ப மதிப்பெண்கள் அளிக்கப்படும். யார் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்’’ என்றவர் அடுத்து சர்வதேச யோகா போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புத்துணர்ச்சி தரும் புதினா!! (மருத்துவம்)
Next post செஸ் போட்டியாளர்களின் மனச்சோர்வை நீக்கிய யோகாசனம்! (மகளிர் பக்கம்)