குண்டு உடம்பு, வட்ட முகம், மெல்லிய கோடு இதழ்..! (மகளிர் பக்கம்)
‘‘நான் வரையும் ஓவியங்கள் எல்லாம் விற்பனையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. என்னோட விருப்பம் எல்லாம் என் ஓவியங்களை பார்க்கும் போது மற்றவர்களின் மனதில் ஒரு வித சந்தோஷம் ஏற்படணும். அவ்வளவுதான்!’’ என கலகலவென பேசுகிறார் இந்திரா. வீடுதான் உலகம் என இருக்கும் இந்திரா, திருமணத்திற்கு பிறகு தனக்கான இலக்குகளை நோக்கிப் பறக்க ஆரம்பித்திருக்கிறார்.
‘‘எனக்கு இப்ப 65 வயசு. சொந்த ஊர் நாகப்பட்டினம். ஒரு அக்கா, 3 தம்பி என அழகான குடும்பத்தில் பிறந்தேன். வீட்டு சூழல் காரணமாக என்னால் +2விற்கு மேல் படிக்க முடியவில்லை. என் தம்பிகள் என் குடும்பம் தான் என் உலகமா இருந்தது. என் சித்தப்பா தஞ்சாவூர் ஓவியங்கள வரைஞ்சு பூம்புகார் நிறுவனத்திற்குக் கொடுத்து கொண்டு இருந்தார். அந்த ஓவியங்களைப் பார்த்த போது எனக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. சித்தப்பாவிடம் எனக்கும் இதை சொல்லித் தரச்சொல்லிக் கேட்டேன்.
ஆனால் அவரோ… உனக்கெல்லாம் ஓவியம் சரியா வரைய வராதுன்னு சொல்லிட்டார். என்னால் ஏன் ஓவியங்கள் வரைய முடியாதுன்னு எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அதை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் வந்துச்சு. வீட்டுல சும்மா இருக்கும் நேரத்தில் நானே ஓவியங்களை வரைந்து பார்க்க ஆரம்பிச்சேன். ஓரளவு வரையவும் கத்துக்கிட்டேன். அடுத்து தஞ்சாவூர் ஓவியங்கள் வரைய கற்றுக் கொள்ள விரும்பினேன். வீட்டில் அதற்கான சூழல் இல்லை. அதனால் நானும் என் விருப்பத்தை என் மனதில் அப்படியே புதைச்சிட்டேன்’’ என்றவரின் கனவு திருமணத்திற்கு பிறகு தான் நிறைவேறியுள்ளது.
‘‘32 வயசுல எனக்கு கல்யாணம் ஆச்சு. என் கணவர் பெயர் சிவபாலன்.அரசு துறையில் வேலைப் பார்த்து வந்தார். இப்ப அவருக்கு வயசு 70, ஓய்வும் பெற்றுவிட்டார். எங்களுக்கு கல்யாணம் ஆகும் போது அவருக்கு சென்னையில வேலை என்பதால் நாங்க சென்னைக்கு வந்துட்டோம். நான் எனக்கான வாழ்க்கையை திருமணத்திற்கு பிறகு தான் ஆரம்பிச்சேன். எனக்கு வீடு தான் உலகம். வீட்டை விட்டு வெளிய போகவே மாட்டேன். ஏன் இப்படி இருக்கே ஏதாவது படின்னு இவரும் சொல்லிட்டு இருப்பார்.
ஒரு நாள் எனக்கே தெரியாம B.A பட்டப்படிப்பினை போஸ்டல்ல நான் படிக்க இவரே விண்ணப்பித்து என்னை படிக்கவும் வச்சார். நானும் படிச்சு டிகிரியும் வாங்கினேன். இதற்கிடையில் நான் அப்போது விட்ட ஓவியம் வரைவதை மீண்டும் கையில் எடுத்தேன். நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்த இவர் மேலும் வரையச் சொல்லி ஊக்கப்படுத்தினார். அப்பதான் எனக்குத் தஞ்சாவூர் பெயிண்டிங் கத்துக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னேன். அவரும் சம்மதிக்க கலாசித்ரா ஆர்ட் அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். அங்கு லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் தான் கற்றுக் கொண்டேன். வாரத்தில 2 நாட்கள் காலை மற்றும் மாலை வகுப்புகள் இருக்கும். மீதி நாட்கள் அவங்க சொல்லித் தந்த மாதிரி வீட்டில் வரையணும். மூன்று வருஷமாச்சு நான் முழுமையா தஞ்சாவூர் பெயிண்டிங்கை கற்றுக் கொள்ள.
நான் வரைந்த முதல் ஓவியத்தைத் தஞ்சாவூர் சொசைட்டிக்கு பரிசளித்தேன். அதன் பிறகு வீட்டில் இருந்தபடியே வரைய ஆரம்பித்தேன். முதலில் என் நண்பர்களுக்கு பரிசளித்தேன். எல்லாரும் இதையே ஏன் நீ பிசினசா செய்யக்கூடாதுன்னு கேட்டாங்க. முதலில் நான் வரையும் ஓவியங்களை விற்கக் கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனால் இதற்காக நாம் போடும் உழைப்பு மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஒரு விலை கண்டிப்பா இருக்கணும்ன்னு எல்லாரும் எனக்கு அட்வைஸ் செய்தாங்க.
என் கணவரும் அதற்கு சம்மதிக்க அதன் பிறகு தான் இதை பிசினசாக செய்ய ஆரம்பிச்சேன். முதலில் இதற்கான உரிமம் வாங்க வேண்டும் என்பதால், அதற்கு என் கணவர் தான் மிகவும் உதவியா இருந்தார். நான் வீட்டை விட்டு அதிகம் வெளியே சென்றதில்லை அதனால் எப்படி விற்பதுன்னு தெரியல. அப்போது தான் என் சித்தப்பா பூம்புகார் கடைகளுக்கு விற்பனை செய்தது நினைவிற்கு வந்தது. சென்னையில இருக்கும் பூம்புகார் கடையில் என்னோட தஞ்சாவூர் பெயிண்டிங்கை கொண்டு சென்று காட்டினேன். அவர்களுக்கு பிடித்து போக அவர்கள் ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இது வரைக்கும் 500 வகையான தஞ்சாவூர் ஓவியங்களை வரைந்து கொடுத்திருக்கிறேன்’’ என்றவர் தஞ்சாவூர் பெயிண்டிங்கை எவ்வாறு வரைய வேண்டும் என்பது பற்றி விவரித்தார்.
‘‘முதல்ல ஒரு அட்டையில பென்சிலால ஓவியத்தை வரைஞ்சு அதன் மேல் சாக் பவுடர், கோபி பவுடர் போட்டு சுமூத் செய்து கற்களை மேல ஒட்டுவோம். அதன் பிறகு ஓவியங்கள் மேல் தங்க நிறம் கொண்ட பேப்பர் ஒட்டி ப்ரேம் போட்டு கடைகளுக்குக் கொடுப்போம். பொதுவா தஞ்சாவூர் பெயிண்டிங்கில் ராமர், பிள்ளையார், நடராஜர், அன்னபூரணி, கஜலட்சுமி போன்ற படங்கள் தான் அதிகம் இருக்கும். நான் மேரி மாதா, சாய்பாபா உருவங்களும் வரைய ஆரம்பிச்சேன்.
இதில் மற்ற ஓவியங்கள் போல் இல்லாமல், உடம்பு கொஞ்சம் குண்டாகவும், முகம் வட்ட வடிவில் இருக்கும். கை, கால்கள் வட்டுருவாக இருக்கும். மூக்கு, உதடுகள் எல்லாம் கோடுகளால் வரையப்படும். உருவத்தின் முகம் சாந்தமாகவும், புன்னகை பூத்தபடியும் ஆபரணங்கள், மாலைகள் அணிந்திருக்கும். தஞ்சாவூர் பெயிண்டிங்கை தொடர்ந்து தேசிய விருது பெற்ற ஈஸ்வர்லால் அவர்களிடம் கத்துக்கிட்டேன்.
அதையும் நான் ஆர்டரின் பேரில் செய்து தருகிறேன். இப்ப எல்லாமே டிஜிட்டல் மயம் என்று வந்துவிட்டது. எனக்கு அந்த டிஜிட்டல் உலகிற்குள் செல்ல தெரியவில்லை. அதனால் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதில்லை. இப்போதைக்கு பூம்புகார் விற்பனை நிலையம் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக ஆர்டரின் பேரில் செய்து தருகிறேன். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறேன்’’ என்றார் இந்திரா.