மர கொலு பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)
‘‘என்னோடது முழுக்க முழுக்க ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் கான்செப்ட்தான்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ஆன்லைன் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் தொழிலில் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்தி.‘‘முதலில் நான் தாம்பூல பைக்கான குட்டி குட்டி கலர்ஃபுல் ஜுட் பேக் தயாரிப்பில்தான் இருந்தேன். ஜுட் பேக்குகளை மொத்தமாக என்னிடத்தில் வாங்க வரும் வாடிக்கை யாளர்கள், அந்த பைகளுக்குள் போட்டுக் கொடுக்கிற மாதிரியான சின்னச் சின்ன ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் இருக்கா எனக் கேட்கத் தொடங்கினார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்காக, வடமாநிலங்களில் கிஃப்ட் தயாரிப்பவர்களை தேடத் தொடங்கி, மொத்தமாக கொள்முதல் செய்து, அவற்றை கிஃப்ட்டுக்கு ஏற்ற மாதிரியான ஜுட் பேக்குகளுடன் விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
இந்த ஆண்டில் இருந்து, வுட்டன் கொலு பொம்மைகள் விற்பனையையும் ஆரம்பித்துள்ளேன் என்ற ஆனந்தி, கொலு பொம்மைகளில் என்னோட ஸ்பெஷல் வுட்டன் டால்ஸ் (wooden dolls) மட்டுமே. அதுவும் கொலு பொம்மைக்கான கான்செப்ட்டுகளோடு வுட்டன் டால்ஸ்களை வாங்கிச் சேகரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். அவை பார்க்க மிகவும் அழகாக, கலர்ஃபுல்லாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
எல்லா வருடமும் கொலு வைப்பவர்களிடம் நிறைய பொம்மைகள் இருக்கும். எதாவது ஒன்றை இந்த ஆண்டுக்கென புதிதாக கொலுப்படியில் வைக்க நினைப்பார்கள். அப்படி பார்த்தபோது பலரும் கிராமத்து பின்னணி கான்செப்ட்டோடு எதையாவது ஒன்றை கொலுவில் இடம்பெறச் செய்யவே விருப்பம் காட்டி, அதற்கேற்ற பொம்மைகளைத் தேடி என்னிடம் வருகிறார்கள். குறிப்பாக என் குழந்தைக்கு ‘‘தாயம் விளையாட்டுன்னா என்னன்னு தெரியாது. பல்லாங்குழி விளையாட்டுன்னா என்னன்னே தெரியாது. கூட்டு மாட்டுவண்டி இருக்கா? பம்பு செட்டு வச்சு இருக்கீங்களா’’? என்று கிராமத்து பின்னணி கான்செப்ட்டுடன் எதையாவது கேட்டு வருவார்கள். நாங்கள் இவற்றைக் கொலுவில் வைத்தால் அதைப் பார்த்தாவது குழந்தைகள் என்னவெனத் தெரிந்துகொள்வார்கள் என்றும் சிலர் என்னிடம் தெரிவித்தார்கள்.
வாடிக்கையாளர்களின் தேடல் அறிந்ததுமே, கர்நாடக மாநிலம் கொண்டப் பள்ளி மற்றும் சென்னபட்டணத்தில் இருந்து வுட்டன் டால்களை, கான்செஃப்ட் பேஸில் (concept base) தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கி வர ஆரம்பித்தேன். பெண்கள் சேர்ந்து உரலில் மாவு இடிப்பது. திருகைக் கல்லில் தானியங்களை அரைப்பது. மாடியில் பெண்கள் வடகமிடுவது, டீக்கடையில் ஒருவர் உட்கார்ந்து பேப்பர் படிப்பது, மரச் செக்கு, காய்கறி கடை, குடும்பத்தில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள், குழந்தைகளை கவரும் பானிபூரிக் கடை, கோலி விளையாட்டு, தாயம் விளையாட்டு, மாட்டு வண்டி, ஆட்டோ ரிக் ஷா, லாரி, பூம்பூம் மாட்டுக் காரன், கூட்டமாக படகில் பயணிப்பது, பெண் குறி சொல்லுவது என வுட்டன் பொம்மைகளை தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்து சேர்த்தோம். வாடிக்கையாளர்கள் கேட்கும் சில வில்வேஜ் கான்செப்ட்டுகளையும் ஆர்டர் கொடுத்தும் வாங்கித் தருகிறோம்.
ராமர் பட்டாபிஷேக காட்சிகள், கிருஷ்ணலீலை காட்சிகள், பஞ்ச முக விநாயகர் என எட்டு நாள் நவராத்திரி தொடர்பான புராணக் கதைகளை தீமாகக் கேட்டும் சில வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். அவற்றையும் மர பொம்மைகளாகத்தான் வாங்கிக் கொடுக்கிறோம்.கொலு பொம்மைன்னா மண்ணில்தான் பெரும்பாலும் இருக்கும். ஆனால் நான் வுட்டன் டால்ஸ் விற்பனையில் கவனம் செலுத்துகிறேன். காரணம் பொம்மை உடையாமல் பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஆன்லைன் விற்பனைக்கு வசதியாகவும் இருக்கும். விற்பனை நிலையத்திற்கு நேரடியாக வந்து டால்களை வாங்குபவர்கள் 10 சதவிகிதம் மட்டுமே. ஆனால் பிற மாநிலங்களில் இருந்து ஆன்லைன் வழியாக வாங்குபவர்கள் 80 சதவிகிதம் இருக்கிறார்கள். என் தொழிலைப் பொறுத்தவரை ஆன்லைன் பர்ச்சேஸ் வாடிக்கையார்கள்தான் எனக்கு அதிகம். பொருட்கள் உடையாமல் வாடிக்கையாளர்களை அடைய வுட்டன் டால்ஸ்கள்தான் சிறந்தது என நாங்கள் முடிவு செய்து களத்தில் இறங்கினோம் என்றவர், பி.ஓ.பி. (Plaster of Paris) பொம்மை விற்பனையில் எனக்கு விருப்பம் இல்லை என்கிறார்.
வுட்டன் டால்களை The Modern Collection என்கிற பெயரில் டிஎம்சி கிஃப்ட் அண்ட்கிராஃப்ட்என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறேன். நான் வெளியிடும் படங்களைப் பார்த்து வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவே வாங்கிக் கொள்கிறார்கள். நவராத்திரி பண்டிகை களைகட்டும் இந்த நேரத்தில், தீம் கான்செப்டில் டால்களைத் தேடும் பலரையும், என்னுடைய வுட்டன் டால்ஸ் சென்றடைகிறது.
இது தவிர்த்து, நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, குழந்தையை தொட்டிலில் போடும் நிகழ்ச்சி, குழந்தைக்கு பெயர் வைத்தல், பிறந்தநாள் என எந்தமாதிரியான குடும்ப நிகழ்ச்சிகள் என்றாலும், அந்தந்த வயதினருக்கு ஏற்ற பரிசுகளை ரிட்டர்ன் கிஃப்டாக, அவற்றையும் தீமாக (theme based) குட்டிகுட்டி க்யூட் ஜுட் பேக்குகள் அல்லது க்ராப்ட் பேக்குகளில் போட்டு கஸ்டமைஸ்டாகவும் கொடுத்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் கேட்கும் பட்ஜெட்டிற்கு ஏற்பவும் எங்களிடம் கிடைக்கும்.
சின்னச் சின்ன ஜுட் பேக்குகளில் போட்டுக் கொடுக்கும் க்யூட்டான ரிட்டர்ன் கிஃப்டுகளை நாங்கள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறோம். பெரும்பாலும் அவுரங்காபாத், டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் போன்ற மாநிலங்களில் இருந்து கிஃப்ட்டுகளை வரவழைக்கிறோம். இந்த மாநிலங்களுக்கு முதலில் நான் நேரடியாகச் விசிட் செய்து, அவர்களின் தயாரிப்புகளை பார்வையிட்ட பிறகே, கஸ்டமர்கள் கேட்கும் தரத்தில், கிஃப்ட்டுகளை ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பிப்பேன். அடுத்தடுத்த ஆர்டர்களுக்கு தயாரிப்பாளர்களே என் தொடர்புக்கு வந்துவிடுவார்கள்.
பெரும்பாலும் இயற்கை முறையில் உருவான ரிட்டர்ன் கிஃப்டுகளே எங்களின் தேர்வு. பனை ஓலையில் தயாரான சின்னச் சின்ன பெட்டிகளை வரவழைத்து அதன் மேல் கலர் கலரான ஜரிகை, ஜிகினா ரிப்பன் போன்றவற்றை ஒட்டி மிக அழகான கிஃப்ட் பாக்ஸ்களாகவும் மாற்றித் தருகிறோம்.கஸ்டமர்கள் கிஃப்டுகளைப் பார்க்கும்போது, கூடுதல் அழகாக, மிகவும் கலர்ஃபுல்லாக அவர்களைக் கவரும் விதத்தில் மாற்றுவதுதான் எங்களின் வேலை.
இதற்கென பணியாளர்கள் வேலைக்கு இருக்கிறார்கள் என்ற ஆனந்தி தன்னைப் பற்றியும் அறிமுகம் செய்து கொண்டார்.எனக்கு ஊர் கோயம்புத்தூர். எம்.பி.ஏ பினான்சியல் மேனேஜ்மென்ட் முடித்து, சென்னை ஒலிம்பியா டெக்பார்க்கில் பினான்சியல் அனலிஸ்டாக நான்கு ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்தேன். எனக்கு திருமணமாகி இப்போது ஒன்பது வருடங்கள் ஆகிறது. ஒரு மகன் இருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு நாங்கள் கோவையில் செட்டில் ஆக வேண்டிய சூழல். காரணம் என் கணவர் டெக்ஸ்டைல் பிஸினஸில் இருக்கிறார். திருப்பூரில் அவர் குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரிப்பு யூனிட்களை இயக்கி வருகிறார். அதில் ஒரு யூனிட்டை கோவைக்கு மாற்றிக் கொண்டோம். அந்த யூனிட் மூலமாகவே ஜுட் பேக் தயாரிப்பில் நான் இறங்கினேன். நான் தொழில் செய்ய இறங்கி எட்டு வருடங்கள் ஓடிவிட்டது. படித்து முடித்து நான் வேலை தேடும்போது கோவையில் வேலைக்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். கோவையிலும் வேலைக்கான வாய்ப்புகளும், தொழில் செய்வதற்கான வாய்ப்புகளும் நிறைய இருக்கிறது என்றவாறு விடைபெற்றார்.