கரகாட்டம்!! (மகளிர் பக்கம்)
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அரிதாரத்தைப் பூசி, காலில் சலங்கை கட்டி, கரகத்தை தலையில் ஏற்றிவிட்டால் நான் என்னையே மறந்துவிடுவேன் என்கிறார் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்ற தஞ்சாவூர் கரகாட்டக் கலைஞர் தேன்மொழி ராஜேந்திரன்.அரிதாரத்தைக் கலைத்தால்தான் எனக்கு வருத்தமாய் இருக்கும் என்றவர், ஒரு நாள் முழுவதும் என்னை ஆடச் சொன்னாலும் ஆடிக்கொண்டே இருப்பேன் என்கிறார். மற்றவர்கள் பார்வைக்கு இந்தக் கலை எப்படி வேண்டுமானாலும் தெரியலாம்.
எனக்கு இந்தக் கலைதான் என் வாழ்க்கை. என்னைப் பொறுத்தவரை இது தெய்வீகக் கலை. இந்தக் கலைக்கு உணர்வு உண்டு என்றவர், கரகத்தில் அம்மன் கரகம், சக்தி கரகம், பூங் கரகம், கிளி கரகம், செடி கரகம், ஆட்டக் கரகம், அடுக்குக் கரகம், அக்னிக் கரகம், தீ பந்தக் கரகம் என பல உண்டு. அதேபோல், மதுரை கரகத்திற்கும், திருநெல்வேலி கரகத்திற்குமே ஆட்டத்தில் வித்தியாசம் உண்டு.
அடவு மற்றும் தாளத்திற்கு ஏற்ப கரகம் ஆடும் முறைகள் எனக்கு கை வந்த கலை. நளினம், நவரசம், ஜதி ஏற்றுவதில் தொடங்கி, சம நடை, துரித நடை, தாம்பூலத்தில் ஆடுவது, படிமேல் நின்று ஆடுவது, உருளைமேல் ஆடுவது, கரகத்தோடு கைகளில் பாட்டில் சுழற்றுவது, சிலம்பம் சுற்றுவது, வளையம் சுற்றுவது, பூ பந்து ஆடுவது, பெஞ்சின் மேல் நின்று தாம்பூலத்தில் ஆடுவது, கரகத்தில் தீச்சட்டி, கைகளில் தீ பந்தம் சுற்றுவது, எலுமிச்சை கோர்ப்பது, கண்களால் ஊசி எடுப்பது, தேங்காய் உடைப்பது, வாயில் பணம் எடுப்பது, கரகத்துடன் சைக்கிளை பேலன்ஸ் செய்வது, சோடா பாட்டில்களின் மேல் நின்று ஆடுவதென கரகத்தில் நிறைய இருக்கிறது. இன்று பாரம்பரிய முறையில் கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் தமிழகத்தில் சிலர் மட்டுமே இருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி.
வறுமையில் கரகம் ஆட வந்த நான், ஆட்டக்காரி என எல்லோரும் கேலி செய்வதைப் பார்த்து, முதலில் வேண்டாமென்று ஒதுங்கினேன். ஆனால் நான் சிறப்பாக ஆடுவதாய் பலரும் என்னிடத்தில் சொல்ல, கரகாட்டக் கலைஞரான என் அக்காவிடத்தில் முறையாய் கற்று அரங்கேற்றம் செய்தேன். ஆட்டத்தில் நான் பிஸியாக இருந்தபோது, திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களில் மட்டுமே வருடத்திற்கு 200 முதல் 500 வரை நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாய் செய்திருக்கிறேன்.
மதுரை புகழ் கரகாட்டக் கலைஞரான லெட்சுமியும் நானும் ஜோடியாக இணைந்து பல கோயில் விழாக்களில் ஆடியிருக்கிறோம். அதெல்லாம் ஒரு காலம் என புன்முறுவல் பூத்தவர், முன்பு எவ்வளவு நேரம் ஆடினாலும் விரசமின்றி கலைஞர்கள் ஆடுவார்கள். இன்று சினிமா மற்றும் சின்னத் திரையின் தாக்கத்தால் கரகாட்டத்திற்கான உடை குறைந்து விட்டது. இதனால் உண்மையான பாரம்பரிய கலைஞர்கள் பலர் முற்றிலுமாக ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார்கள்.
கரகாட்டக் கலைக்கென மதிப்பும் மரியாதையும் அப்போது இருந்தது. சினிமாவிற்காக இப்போது ஆடுவதெல்லாம் கரகாட்டமே கிடையாது. இதன் விளைவு, பாரம்பரியத்தை விடாமல் ஆடும் எங்களைப்போன்ற கரகாட்டக் கலைஞர்களின் மரியாதை குறையத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் கரகம் ஆடுபவர்கள் கண்டாங்கி சேலையினை கெரண்டை கால்வரை கட்டி, நுனிவிரல் மட்டும் தெரிய கரகம் ஆடினோம். சினிமா வந்த பிறகு கரகாட்டத்திற்கான ஆடை குறைக்கப்பட்டது.
கலையின் உண்மையான வடிவம் அழிவை நோக்கி நகர்ந்தது. உண்மையான கரகாட்டக் கலையும், அதன் கலைஞர்களும் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் நிலையில், இந்த கலை அழியக் கூடாது என்பதே எங்களின் ஆதங்கமாக இருக்கிறது என்கிறார் இவர்.தேன்மொழியைத் தொடர்ந்து பேசியவர் கலைமாமணி விருதுபெற்ற கரகாட்டக் கலைஞர் அலங்காநல்லூர் புகழ் பழனியம்மாள்.
இராமநாதபுரம் சுப்ரமணியம் பிள்ளையிடம் முறையாகக் கரகம் கற்று, 15 வயதில் ஆட ஆரம்பித்தவள் நான். இப்ப எனக்கு வயது 65. முன்பெல்லாம் கோயிலில் இருந்து சாமி நகர்வலம் வரும்போது சாமியுடன் வருகிற தெய்வீகக் கலையாக கரகம் இருந்தது. கரகம் ஆடும் கலைஞர்களும் மதிப்போடு மரியாதையாகப் பார்க்கப்பட்டார்கள்.
குறிப்பாய் என் திறமைகளில் ஒன்றான பாவைக்கரகத்தை பார்வையாளர்கள் மிகவும் ரசனையோடு பார்ப்பார்கள். இதில் பாவை ஒன்றைத் தலையில் வைத்து ஆடுவதே பாவைக் கரகம். என் கைகளையும், கால்களையும் அசைத்து ஆடும்போது, என் தலையில் இருக்கும் பாவையும் என்னோடு சேர்ந்து கைகளை வீசிவீசி ஆடும். இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்றவர், கரகத்தில் தீ பந்தம் ஏந்துவது, ஏணியில் ஏறுவது, காவடி சுமப்பது, சைக்கிளில் ஏறி நின்று பேலன்ஸ் செய்வது, தாம்பூலத்தில் நின்று ஆடுவது, கண்களால் ஊசி எடுப்பது, பணம் எடுப்பது என எல்லாமும் இந்த வயதிலும் என்னால் செய்ய முடியும் என்கிறார் தன்னம்பிக்கையோடு.
அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசியவர் பரதத்தையும் கரகத்தையும் இணைத்து ஆடும் சேலத்தைச் சேர்ந்த கரகம் துர்கா.சமூக வலைத்தளங்களில் கரகம் துர்கான்னு என் பெயர் போட்டாலே என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியவரும் என்றவர், எனக்கு ஊர் சேலம் என்றாலும் இப்ப கரூரில் குழந்தைகளோடு வசிக்கிறேன். முதலில் பரத நாட்டியக் கலைஞராகத்தான் மேடைகளில் ஏறிக்கொண்டிருந்தேன். அப்போது கோயில் திருவிழாக்களில் பரத நாட்டியத்திற்கு மட்டும் மதிப்புக் கொடுத்து மேடை ஏற்றிக் கொண்டிருக்க, கரகாட்டக் கலைஞர்கள் கீழே வீதிகளில் ஆடுவதைக் கவனித்தேன். நிகழ்ச்சி முடிந்ததுமே கரகம் அனைத்தும் ஒரு ஓரமாகக் கிடக்க, வறுமையில் உழலும் கலைஞர்கள், ஆபாசங்களுக்குள் வற்புறுத்தி தள்ளப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பாரம்பரியக் கரகக் கலை மீது எனக்கிருந்த ஈர்ப்பில், கரகம் மட்டும் ஏன் தெருவில் ஆடும் கலையாக இருக்கிறது என எனக்குள் கேள்வி கேட்டு யோசித்து, நானும் கரகக் கலையை கற்று, அதற்குள்ளும் பயணிக்க ஆரம்பித்தேன். கரகக் கலைக்கு மரியாதை கொடுக்கும் விதமாக பல மேடைகளில் பரதத்துடன் கரகத்தையும் மேடை ஏற்றினேன். பரதத்தையும், கரகத்தையும் இணைத்ததால், என் குடும்பத்திற்குள்ளேயே நான் பல போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது என்கிறார் துர்கா.
கரகக் கலைக்கு உயிரையே கொடுத்த தொழில்முறைக் கலைஞர்கள் பலர் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை நான் என் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் என்ற துர்கா, இந்தக் கரகக் கலையை பலரும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தே, நெருப்புக் கரகம், அடுக்கு கரகம், விளக்கு கரகம், சுழல் கரகம் என கரகத்தை வித்தியாசப்படுத்தி மேடை ஏற்றினேன் என்கிறார் தன்னம்பிக்கையோடு.
குஜராத்தி, ராஜஸ்தானி முறை கரகங்களையும் பார்வையாளர்களுக்கு காட்சியாக்கி, மேடை ஏற்றி வரும் துர்கா, 26 நிமிடத்தில் அடுத்தடுத்து 28 பொருட்களை சுமந்து கரகம் ஆடுவதற்காக ‘ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்’டில் (Jetlee Book of Records) இடம்பிடித்திருக்கிறார். தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களுக்கும், குவைத், துபாய் போன்ற அரபு நாடுகளுக்கும் பயணித்து நமது பாரம்பரிய கரகக் கலையை பிற நாட்டவர் பார்வைக்கும் கொண்டு சேர்க்கிறார்.
மிகச் சமீபத்தில் தமிழக முதல்வர் பங்கேற்று 192 நாடுகள் கலந்து கொண்ட ‘துபாய் எக்ஸ்போ 2022’ நிகழ்வில், இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட 8 மாநிலங்களில், தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்பட்டு, கரகம் ஆடச் சென்றது நான் மட்டுமே என்ற கரகம் துர்கா, அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த கலையை என்னைப் போன்ற கலைஞர்கள் கண்டிப்பாக தூக்கிப் பிடித்து நிறுத்துவோம் என்கிறார் மிகவும் உறுதியாக.
தலைச் சுமையாக உணவு தானியங்களை எடுத்துக்கொண்டு, கால்நடையாகவே தேசம் விட்டு தேசம் கடந்த நமது மூதாதையர்கள், அழுப்பும் களைப்பும் தெரியாமல் இருப்பதற்காகவே ஆடல் பாடல் முறைகளை உருவாக்கி ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் நகர்ந்து எல்லைகளை கடந்தனர். அப்படி உருவான பாரம்பரியம் மிக்க ஆட்டக் கலையான இந்த கரகாட்டக்கலை, இன்று அதன் இயல்பில் இருந்து தடம் மாறி அழிவில் நிற்கிறது.
அதை உயிர்ப்புடன் மீட்டெடுக்கும் முயற்சியாய், பாரம்பரியக் கலைகளுக்கான பயிற்சி பட்டறைகளைத் தொடங்கி, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலைகளில் தொடர்ந்து இயங்கிவரும் கோடங்கி கலைக்குழு உமாவிடம் பேசியபோது, எங்கள் கலைக்குழு வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அடுக்குக் கரகம், அக்னிக் கரகம், தோண்டி கரகம், பூங்கரகம், பிள்ளைக் கரகம் என கரகாட்டத்தில் உள்ள பல பிரிவுகளிலும் பயிற்சிகளை வழங்கி வருகிறேன் என்கிறார் இவர். பாரம்பரியக் கலைகளை அழியாமல் காப்பாற்றும் முனைப்பில் தொய்வின்றி தொடர்ந்து இயங்கும் இந்த பெண் கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.