ஆசியப் போட்டியில் தங்கம் வெல்வேன்!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 35 Second

பொதுவெளிக்கு தெரியாமல் பல சாதனைகளை செய்து ஜொலிக்கும் நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான் ரோஷி மீனா. ஒரே மாதத்தில் இரண்டு முறை ஃபோல் விளையாட்டில் தேசிய சாதனையை முறியடித்தவர். அரசின் உதவிக்கரம் மற்றும் ஊடகங்களின் வெளிச்சம் இவர் மேல் படவில்லை என்றாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடைய சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஆசிய அளவிலான போட்டியினை வெல்லும் முனைப்போடு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ரோஷி மீனாவிடம் பேசிய போது…

‘‘என் சொந்த ஊர் தஞ்சாவூர். சின்ன வயசில் இருந்தே ஜாவ்லின் துரோ, ஓட்டப்பந்தயம்னு ஒரு சில போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பெற்றிருக்கேன். அதனால் எனக்கு படிப்பை தாண்டி விளையாட்டு மேல் தனிப்பட்ட ஆர்வம் அதிகமாக இருந்தது. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று வந்தேன். நான் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில்தான் படிச்சேன் மேலும் நான் விளையாட்டு போட்டிகளில் ஜெயிச்சதால் விளையாட்டுத் துறையில் எனக்கு இட ஒதுக்கீடு கிடைச்சது. அதன் மூலம் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் கிடைச்சது.

அப்படித்தான் நான் என்னுடைய படிப்பினை படிச்சு முடிச்சேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் நிறைய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டதால், காமராஜர் பல்கலைக்கழகத்தின் மாணவரான ஒரு அண்ணாவின் அறிமுகம் கிடைச்சது. அவர் தான் எனக்கு ஃபோல் வால்ட் விளையாட்டினை அறிமுகம் செய்தார். எனக்கு அந்த விளையாட்டை பார்த்த உடனே ரொம்பவே பிடித்துப் போனது. அந்த விளையாட்டு சாகசம் நிறைந்தது மட்டுமில்லாமல், ரொம்பவே த்ரிலிங்காவும் இருந்தது.

ஒரு நீளமான குச்சியினை கையில் கொண்டு வேகமாக ஓடி, அந்த குச்சியின் உதவியோடு தடையினை தாண்டி குதிக்கணும். எனக்கு அந்த விளயைாட்டு மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டதால், அதைப் பற்றி அந்த அண்ணாவிடமே கேட்டபோது அவர், ‘இந்த ஃபோல் வால்ட் விளையாட்டு தமிழ்நாடு முழுக்க அதிகமா யாரும் விளையாடுவதில்லை. சென்னையில் மட்டும்தான் இந்த விளையாட்டு இருக்கு.

அதனால நீ சென்னைக்கு போனாதான் அந்த விளையாட்டை கத்துக்க முடியும்’ன்னு சொன்னார். என் ஆர்வத்தை வீட்டில் சொன்ன போது, அவர்களுக்கு அது என்ன விளையாட்டு, அதற்கு ஏன் சென்னைக்கு போகணும்னு யோசிச்சாங்க. காரணம், அவங்களுக்கு அது என்ன விளையாட்டுன்னு புரியல. அதனால் அது குறித்து நான் அவர்களுக்கு எளிதில் புரியும்படி விவரித்தேன். அதன் பிறகு தான் அவர்கள் சம்மதமே தெரிவித்தார்கள்’’ என்றவர் விளையாட்டில் கலந்து கொண்ட அனுபவங்களைப் பற்றி விவரித்தார்.

‘‘நான் ஆரம்பத்துல இந்த விளையாட்டிற்கான பயிற்சி எடுத்து போட்டியில் கலந்துக்க இருப்பதாக என் கோச்சிடம் சொன்னபோது, அவர் சொன்ன ஒரே வார்த்தை ‘உன்னால் இந்தப் போட்டியில் அதிக தூரம் தாண்டுவது கஷ்டம், காரணம், உன்னுடைய உயரம். ஆனால் நீ இதில் மிகவும் தன்னம்பிக்கையோடு இருந்தால் அதுவும் சாத்தியம்’ என்றார். அவர் சொன்ன டிப்ஸ் வேறொன்றும் இல்லை. அதிக தூரத்தில் இருந்து ஓடி வந்து தாண்டினால் கண்டிப்பாக நான் நினைக்கும் இலக்கை அடையமுடியும். நான் ஏற்கனவே ஓட்டப்பந்தயத்தில் இருந்ததால், என்னால் அதிக தொலைவில் இருந்து ஓடி வரமுடியும். அதிகமான தூரத்தையும் தாண்ட முடியும்னு நம்பிக்கை ஏற்பட்டது.

நான் விளையாட்டுப் போட்டி என்றிருந்ததால், மேலும் இந்த விளையாட்டு புதுசு என்பதால், என் வீட்டில் இரண்டு வருஷம் டைம் கொடுத்தாங்க. அதற்கான செலவுகளையும் அவங்க பார்ப்பதாக சொன்னாங்க. இருந்தாலும் கடன் வாங்கித்தான் என் பயிற்சிக்கான செலவினை எதிர்கொண்டாங்க. பயிற்சியாளர் மெல்பர் ரஷல் அவர்களின் தலைமையில்தான் நான் பயிற்சி எடுத்தேன். இந்த விளையாட்டு கொஞ்சம் காஸ்ட்லிதான். ஒரு ஃபோல் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் ஆகும். மற்ற விளையாட்டு மாதிரி இல்லாமல் இந்த போட்டிகள் நீண்ட நேரம் நடைபெறும். பயிற்சி மட்டுமே நான்கு மணி நேரம் இருக்கும்.

போட்டிகள் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் நடக்கும். மேலும் இந்த போட்டிகளுக்கான பயிற்சியாளர்களும் அதிகம் கிடையாது. தமிழ்நாட்டிலேயே நான்கு பேர்தான் இந்த விளையாட்டிற்கு பயிற்சி அளித்து வராங்க. அதில் மூன்று பேர் சென்னையில் இருக்காங்க. இதன் காரணமாகத்தான் சென்னைவாசிகளைத் தவிர மற்ற ஊர்களில் இருந்து இந்த விளையாட்டில் பயிற்சி பெற யாரும் வருவதில்லை. அதனால் நான் சென்னையில் வந்து தங்கி இருந்து முழு நேர பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்’’ என்றவர் அவர் கலந்து கொள்ளும் போட்டிகளில் தன் பயிற்சியாளரின் ஃபோலினை தான் பயன்படுத்தி வருகிறாராம்.

‘‘இந்த ஃபோலின் விலை அதிகம் என்பதால், என்னால் அதை வாங்க முடியவில்லை. வெளிநாட்டில் 40 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஃபோல்கள் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கு விற்பனையாகிறது. என்னுடைய பயிற்சிக்கே என் பெற்றோர் கடன் பெற்றுதான் ெசலவு செய்யும் போது, அவர்களுக்கு மேலும் நான் பாரத்தை ஏற்ற விரும்பவில்லை. அதனால் அவர்களின் ஃபோல்களைக் கொண்டே பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். திருச்சியில் மாநில அளவிலான போட்டியில்தான் முதல் முறையாக பங்கு பெற்றேன். போட்டிக்கான பயிற்சி எடுக்கும் போது, எனக்கு டைபாய்டு ஜுரம் வந்தது. அதனால் கடைசி பத்து நாட்கள் தான் பயிற்சி எடுக்க முடிந்தது. அதில் வெண்கலம் வென்றேன்.

அதன் பிறகு இந்தியா முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பாக நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். அப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டு வருடம் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. மீண்டும் அனைத்தும் பழைய நிலைக்கு வந்தவுடன் என்னுடைய பயிற்சியினை துவங்கினேன். தற்போது இந்திய அளவிலான போட்டியில் என்னோடு சேர்ந்து 3 பெண்கள் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டாங்க. அதில் முதல் இடத்தைப் பிடிச்சேன். நான் இதுவரைக்கும் கலந்துகொண்ட போட்டி அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறேன் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை.

அடுத்து சீனாவில் நடக்கும் ஆசிய அளவிலான ஃபோல் விளையாட்டு போட்டிக்கு தயாராகி வருகிறேன். இன்னும் ஆறு மாதங்களில் அதற்கான தகுதி போட்டி நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு ரெண்டு வருஷம் தான் எங்க வீட்டில் அனுமதி கொடுத்தாங்க. இப்ப அதைத் தாண்டி நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனக்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன். ஃபிட்னஸ் பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வருகிறேன். இந்த விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்தால் இன்னும் பல பெண்கள் இந்தப் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள். இந்த விளையாட்டு விளையாடுபவர்களுக்கு அரசு வேலையும் கிடைத்துள்ளது. எனக்கு அரசு வேலை கிடைத்தால் இன்னும் சிறப்பாக விளையாடுவேன்’’ என்றார் ரோஷி மீனா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பூஜையறையை அழகாக்கும் இறை ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post மரபு மருத்துவத்தில் மலச்சிக்கலை நெறிப்படுத்தும் முறை!! (மருத்துவம்)