அர்ஜுனா விருதை வென்ற பாராலிம்பிக் பேட்மின்டன் வீராங்கனை!! (மகளிர் பக்கம்)
2022-ம் ஆண்டுக்கான மத்தியஅரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நவம்பர் 30 அன்று விருதுகளை வழங்கி விளையாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்தினார்.அர்ஜுனா விருது 25 பேருக்கும், துரோணாச்சாரியா விருது 4 பேருக்கும், தயாசந்த் கேல் ரத்னா விருது 4 பேருக்கும் வழங்கப்பட்டது. இதில் அர்ஜுனா விருதுக்கு தேர்வானவர்களில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவும் ஒருவர். காதுகேளாதோர் பிரிவில் அர்ஜுனா விருது பெறும் முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் இவர் தட்டிச் சென்றுள்ளார்.
மதுரை மாநகராட்சி அவ்வை மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த ஜெர்லின் அனிகா தற்போது மதுரை லேடி டோக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி. பள்ளியில் படித்தபோதே பேட்மின்டன் விளையாட பயிற்சி எடுத்தவர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மின்டன்
போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
2017 துருக்கியில் நடந்த DURF ஒலிம்பிக்கில் 5-வது இடமும், 2018 மலேசியாவில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் 2 வெள்ளிப் பதக்கங்களும் 1 வெண்கலப் பதக்கமும் வென்றவர், 2019 சீனாவின் தைபேயில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கப் பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கங்களும், 1 வெண்கலப் பதக்கமும் வென்று வெற்றிகளை தக்கவைத்தார். பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான பாராலிம்பிக் பேட்மின்டன் பிரிவுப் போட்டியிலும் பெண்கள் பிரிவு, கலப்பு இரட்டையர், பெண்கள் இரட்டையர் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 தங்கப் பதக்கம், 21 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவிலும் போட்டியிலும் 3 தங்கப் பதக்கம் என 6 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை செய்து தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
அர்ஜுனா விருதுக்கு தேர்வானது குறித்து ஜெர்லின் அனிகாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, செய்கை மொழியில் ‘‘ஹேப்பி ரொம்ப சந்தோஷம்” என தனது மகிழ்ச்சியினை
வெளிப்படுத்தினார்.ஜெர்லின் அனிகாவின் பயிற்சியாளர் சரவணனிடம் பேசியபோது, அவர் விருது பெற்ற நிகழ்வு, மற்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் சாதிக்கும் எண்ணத்தை தூண்டும் என நம்பிக்கை தெரிவித்தார். ஜெர்லின் அனிகாவின் தந்தையிடம் பேசிய போது, “மதிப்பு மிக்க மிகப் பெரிய விருதான அர்ஜுனா விருது கிடைக்கும் என்பதை நாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், கேல் ரத்னா விருது பெற்றுள்ள சரத் கமல் ஆகியோருக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விருதுகள்…
*பாராலிம்பிக் இறகுப் பந்தாட்ட வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜுனா விருது
*துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது
*சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது
*டேபிள்டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது