ஆட்டக்காரி கரகாட்டக் கலைஞர் துர்கா!! (மகளிர் பக்கம்)
கலையை ஏன் சாதிக்குள்ள அடைக்குறீங்க? கலைக்கு எதுக்கு சாதி? என்கிற கேள்விகளோடு நம்மிடம் பேச ஆரம்பித்தவர் கரகம் துர்கா. சைக்கிள் சக்கரத்தில் நெருப்பை பற்றவைத்து பற்றி எரியும் வளையத்தை விரல் இடுக்கில் சுற்றி சுழற்றி, சட்டென உச்சந்தலைக்கு மாற்றும் லாவகமும், இரண்டு கரங்களிலும் நெருப்புடன் பரத அசைவுகளையும் கரகத்தையும் கலந்துகட்டி துர்கா போடும் அதிரடி ஆட்டங்களும் சினிமாவில் பார்க்கும் கிராஃபிக்ஸ் காட்சிகளை மிஞ்சுகிறது. அடுத்ததாக இரண்டு கைகளிலும் அரைவட்ட வடிவில் நெருப்பு வளையத்தை வைத்து சுற்றி சுழற்றி ஆடுகிறார். தலையில் வரிசையாய் அடுக்கப்பட்டிருக்கும் அடுக்குக் கரகத்திலும் நெருப்பு பற்றி எரிகிறது. நெருப்புடன் அவர் போடும் ஆட்டத்தைப் பார்க்கும் நமக்குத்தான் மனசெல்லாம் பதறுகிறது. துர்காவிடம் பேசியதில்…
ஒரு பரத நாட்டியக் கலைஞராய் 7 வயதில் இருந்தே சபா மேடைகளில் ஏறிக்கொண்டிருந்தேன். அப்போது கரகாட்டக் கலைஞர்கள் வீதிகளில் நின்று ஆடுவதை பார்க்க நேர்ந்தது. நிகழ்ச்சி முடிந்ததுமே அவர்களின் தலைகளில் இருந்த கரகம் ஒரு ஓரமாகக் கிடக்கும். கலைஞர்களோ ஆபாசங்களுக்குள் வலிந்து திணிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வீதிகளில் ஆபாசமாக ஆடுவதுதான் கரகக் கலையென முத்திரையும் குத்தப்பட்டது. இதில் கலைக்காக மட்டுமே வாழ்வை அர்ப்பணித்த கலைஞர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்களில் பலர் கரகக் கலையை விட்டே ஒதுங்க ஆரம்பித்தனர்.
பரதத்திற்கு மதிப்பளித்து மேடைகளில் மட்டும் ஏற்ற, கரகம் ஏன் தெருவில் ஆடும் கலையாகவே இருக்கிறது என்கிற கேள்வி எனக்குள் தொடர்ந்து இருந்தது. எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். பரதத்தோடு கரகத்தையும் மேடை ஏற்றும் முயற்சிகளில் இறங்கினேன். இதனால் எனது குடும்பத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது. நான் சார்ந்த சமூகத்திலும் வலுவான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. தெருவில் ஆடும் கரகத்தை நீ ஆடுறதா என்ற கேள்விகளும், இது தாழ்த்தப்பட்ட மக்களோட நடனம்.
இதை உயர் சாதிப் பெண்ணான நீ ஆடக்கூடாதுன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்க. ஆனால் நான் அதைக் கேட்கலை. கலைக்கு ஏது உயர்வு, தாழ்வு என்றே என் மனது யோசித்தது. கரகக் கலையை கௌரவப்படுத்த முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினேன். என்னையும் என் குடும்பத்தையும் நான் சார்ந்த எனது சமூகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி வைக்கத் தொடங்கினர். என் அப்பாவே முதலில் என்னை ஏற்கவில்லை. போகபோகத்தான் என்னை புரிந்து ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார்.
இப்போதுவரையும் என் உறவினர்கள் யாருமே என்னிடத்தில் பேசுவதில்லை என்கிற துர்கா, கலையினை யார் கையிலெடுத்தால் என்ன என்ற கேள்வியை மிகவும் அழுத்தமாகவே முன் வைக்கிறார். ஆனால் கரகத்தை தெருவில் ஆடாமல் அதையும் கௌரவமாய் மேடை ஏற்ற நினைத்தேன் என்றவர், நான் நினைத்தது போலவே கரகத்திற்கும் மேடைகள் அமைந்தது என்கிறார்.
பலரை கரகத்தை திரும்பி பாரக்க வைக்க முடிவெடுத்து நெருப்புக் கரகம், அடுக்கு கரகம், விளக்கு கரகம், சுழல் கரகம் என வித்தியாசப்படுத்தி புதுப்புது விஷயங்களை தொடர்ந்து முயற்சித்து மேடை ஏற்றினேன். பிறகு பானையின் மீது ஏறி நின்று ஆடுவது.. தாம்பாளத்தில் ஆடுவது..
பாட்டில்கள் மீது ஏறி ஆடுவது.. உருளை மீது பலகை வைத்து அதில் ஏறி நின்று ஆடுவதென கரகத்தையும் பரத வடிவத்தையும் இணைக்க ஆரம்பித்தேன். பத்தடுக்கு கரகத்தை நானே உருவாக்கி அதையும் தலையில் வைத்து ஆட ஆரம்பித்து, அப்படியே ராஜஸ்தானி, குஜராத்தி முறை கரகங்களையும் பார்வையாளர்களுக்கு காட்சியாக்கினேன். முதலில் அரை மணி நேர நிகழ்ச்சியாக ஆரம்பித்து, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் நேரத்தை அதிகப்படுத்தி ஒரு மணி நேரம் செய்ய ஆரம்பித்தேன். எனது உடை அலங்காரம் பரத நாட்டியக் கலைஞர் அணிந்திருப்பது போலவே இருக்கும். பரதம் ஆடியபடியே எனது நடனம் கொஞ்சம் கொஞ்சமாய் கரகத்திற்குள் டிரான்ஸ்ஃபராகும்.
நான் கரகம் ஆட ஆரம்பித்த பிறகு எனக்கு பெயரே கரகம் துர்கா என்றானது. ஒரு ஆட்டக்காரியாக கரகத்தை இருபத்தியேழு ஆண்டுகள் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு வயது 37. எனது திறமையை பார்த்து கரகம் ஆடச் சொல்லித்தான் எல்லோருமே என்னை ஆவலாகக் கேட்கிறார்கள். மாணவர்கள் பலரும் என்னிடம் கரகம் ஆடுவதற்கு பயிற்சியும் எடுக்கிறார்கள் என்ற துர்கா, 26 நிமிடத்தில் அடுத்தடுத்து 28 பொருட்களை சுமந்து கரகம் ஆடுவதற்காக ‘ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்’டில் (Jetlee Book of Records) இடம்பிடித்திருப்பதையும் நம்மிடம் தெரிவித்தார். தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களுக்கும், குவைத், துபாய் போன்ற அரபு நாடுகளுக்கும் பயணித்து, கரகக் கலையின் பெருமையை காட்சியாக்கி வருவதை பெருமையோடு குறிப்பிடுகிறார்.
மிகச் சமீபத்தில் தமிழக முதல்வர் பங்கேற்ற 192 நாடுகள் கலந்துகொண்ட ‘துபாய் எக்ஸ்போ 2022’ நிகழ்வில், இந்தியாவில் இருந்து கலந்து கொண்டு 8 மாநிலங்களில், தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்பட்டு கரகம் ஆடச் சென்றது நான் மட்டுமே என்ற கரகம் துர்கா, தமிழ்நாட்டில் இப்போது இரண்டு லட்சம் கரகாட்டக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஜனவரியில் தொடங்கி ஜூன் மாதம் வரை 6 மாதங்களுக்கு மட்டுமே எங்களுக்கு பொழப்பு ஓடும்.
வருமானம் கிடைக்கும் என்கிறார். சின்ன வயதிலிருந்தே எனக்கு அப்பா மட்டும்தான். நினைவு தெரிந்து அம்மா எனக்கு கிடையாது. எனக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துவிட்டேன். ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். எனது இரண்டு குழந்தைகளையும், என் அப்பாவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது என்றவாறு விடைபெற்றார் கரகம் துர்கா.