ஓவியங்கள்தான் என்னுடைய அடையாளம்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 35 Second

ஓவியர், கதை சொல்லி, நாடக கலைஞர், விளையாட்டு வீராங்கனை என பலவற்றிலும் தனது கால் தடங்களை பதித்து வருகிறார் ஹாரிதா. மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கும் ஹாரிதா நகரும் மேகங்களை போல ஓரிடத்தில் தேங்காமல் தன் வாழ்க்கையில் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்கிறார். பல துறை
களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரிடம் பேசிய போது…

‘‘நான் சென்னை பொண்ணு. விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கூடத்தில் நிறைய விளையாட்டு போட்டி நடக்கும். அதில் எல்லாவற்றிலும் நான் பங்கு பெறுவேன். அதனாலேயே நான் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை எடுத்ததில்லை. நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றேன். +2வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், என்னுடைய ஸ்போர்ட்ஸ் திறமையை பார்த்து எனக்கு பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அங்கு படிக்கும் காலத்தில் நான் கல்லூரிக்கு சென்றேனோ இல்லையோ அங்கு படித்த நான்கு ஆண்டு காலமும் அனைத்து விளையாட்டு போட்டி களிலும் கலந்து கொண்டேன் என்று சொல்லலாம். தினமும் காலை 5 மணிக்கு என் பயிற்சி துவங்கும்.

10 கிலோ மீட்டர் வரை ஓடிவிட்டு, கல்லூரிக்கு சென்று விடுவேன். அதே போல மாலையில் 5 கிலோ மீட்டர் ஓட்டம் என கடுமையான பயிற்சிகளுக்கு இடையேதான் படிச்சேன். அதனால் பாடங்களை சரியாக கவனிக்க முடியவில்லை. இருந்தாலும் போல்ட் வால்ட் விளையாட்டை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வேன். குறிப்பாக 5000 மற்றும் 10000 மீட்டர் ரேஸ் வாக் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன். கல்லூரி காலத்தில் நடைபெற்ற சீனியர், ஜூனியர் என ஒரு போட்டியையும் விட்டு வைக்க மாட்டேன். அனைத்திலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்.

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால், எல்லா பாடங்களிலும் அரியர் வைத்திருந்தேன். எல்லா பாடங்களில் தேர்ச்சி பெற்றாலும் கணக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற ரொம்பவே சிரமப்பட்டேன். கல்லூரி வளாகமும் அதன் மைதானமும் எனக்கு இரு வேறு உலகங்களாக தெரிந்தன. ஆனால் தேர்ச்சி பெற்றால் தான் பட்டம் என்பதால், கஷ்டப்பட்டு படிச்சு தேர்ச்சி பெற்றேன். விளையாட்டு என்று இருந்த நான் ஒரு கட்டத்தில் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது’’ என்றவர் எப்படி ஓவியங்கள் வரைய கற்றுக் கொண்டார் என்பது குறித்து விவரித்தார்.

‘‘எனக்கு சின்ன வயசுலயே ஓவியங்கள் வரைவது மேல் ஆர்வம் உண்டு. என் அம்மா நல்லா வரைவாங்க. அவங்க நான் சின்ன பெண்ணாக இருக்கும் போது சின்ன சின்ன ஓவியங்களை வரைய கற்றுக் கொடுத்தாங்க. எனக்கு இன்றும் அவங்க வரைய கற்றுக் கொடுத்த ஓவியம் ஒன்று நினைவில் உள்ளது. அடர் பச்சை மற்றும் நீல நிறத்தில் இருக்கும் ஸ்கெட்ச்சில் எனக்கு பட்டாம்பூச்சி வரைய கற்றுக் கொடுத்தார். இதுதான் நான் வரைந்த முதல் ஓவியம்.

அந்த ஓவியத்தை இன்னமும் என் அம்மா பத்திரமாக வைத்திருக்கிறார். விளையாட்டு துறையில் என்னுடைய கவனம் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது ஓவியங்களை வரைவேன். அதில் பெரும்பாலான ஓவியங்கள் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நான் பார்த்த அல்லது என் எண்ணங்களில் தோன்றியதை வரைவேன். அவை உண்மையானவையா அல்லது என் கற்பனையா என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனக்கு தோன்றியவற்றை என் தூரிகையால் வண்ணமயமாக்குவேன். விளையாட்டுகளுக்கு அடுத்து அதிக நேரம் நான் செலவிட்டது ஓவியங்களில் தான். என்னை பொறுத்தவரை ஓவியங்கள் அர்த்தமுள்ளதாகவோ அல்லது அர்த்தமற்றதாகவோ எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

அது ஒரு சிலருக்கு புரியும் படியாக இருக்கும், சிலரால் புரிந்து கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை ஓவியங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளினைதான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. அதனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நான் அடைக்க விரும்பவில்லை. அதற்கான எல்லைகளை தீர்மானிக்கக் கூடாது. ஒரு எழுத்து, எண்களில் இருந்தும் ஓவியங்களை உருவாக்கலாம். அதனை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம். இதுதான் என்னுடைய ஓவியங்கள். நான் வரைவதைப் பார்த்த என் நண்பர்கள் என் ஓவியங்களில் உள்ள வண்ணங்கள் வித்தியாசமாக இருப்பதாக சொல்லி அவர்களுக்கான ஓவியங்களை வரைந்து தர சொல்ல ஆரம்பித்தார்கள்’’ என்றவர் அடிப்படையான ஐந்து நிறங்கள் கொண்டே பல வண்ணங்களை கொண்டு வந்திடுவாராம்.

‘‘ஒவ்வொரு மனிதரும் வேறு வேறு குணாதிசயங்கள் மற்றும் தனித்தன்மை கொண்டவர்கள். அவர்களின் எண்ணத்தை என் ஓவியங்களில் கொண்டு வர வேண்டும் என நினைப்பேன். மனிதர்களின் எண்ணம் போல் வண்ணங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட உணர்வுகளை கொடுக்கக் கூடியது. நான் வரையும் ஓவியங்களில் வண்ணங்கள் கொண்டு அதன் உணர்வுகளை வெளிப்படுத்துவேன். உதாரணத்திற்கு நான் வரைந்த கண் ஓவியத்தை பார்த்த பலரின் கண்கள் அதை விட்டு விலகாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அவர்கள் அந்த ஓவியத்தை பார்த்து சொன்ன ஒரே விஷயம், ‘இந்த கண் எதையோ சொல்ல வருகிறது’ என்பார்கள். என்னுடைய பெரும்பாலான ஓவியங்களை பார்ப்பவர்களை அப்படியே கடந்துவிடமாட்டார்கள். சில நொடிகள் அதை உற்றுப் பார்ப்பார்கள். அது அவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன். அது ஒருவருக்கு நம்பிக்கையை கொடுக்கலாம் அல்லது அவர்கள் மனதில் மறைந்திருக்கும் சோகத்தை வெளிக்கொண்டு வரலாம். அது காண்போரின் உணர்வை பொருத்து மாறுபடும்.

அதுதான் ஓவியத்தின் சிறப்பு. ஓவியத்தை தாண்டி வேறு ஏதாவது செய்ய விரும்பினேன். என்னுடைய ஓவியத்தை பற்றி விளக்க ஆரம்பித்தேன். நாளடைவில் கதைசொல்லியாகவே மாறி போனேன். இதனால் அதிகமான கதைகள் படிக்க தொடங்கினேன். அதில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வு களால் ஈர்க்கப்பட்டு திரைத்துறைக்குள் செல்ல வேண்டும் என ஆசை ஏற்பட்டது’’ என்றவர் அதன் முதல் படியாக டப்பிங் துறையில் கால்பதிக்க ஆரம்பித்தார்.

‘‘விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டதால் மக்கள் கூட்டத்தை அதிகம் பார்த்து வளர்ந்தவள் என்று சொல்லலாம். மேடை பயமும் எனக்கு ஏற்பட்டதில்லை. காரணம் கல்லூரிகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளை நான் தான் தொகுத்து வழங்குவேன். அதன் அடிப்படையில் தான் டப்பிங் செய்யலாமேன்னு எண்ணம் ஏற்பட்டது. தனியார் சேவை வழங்கும் நிறுவனம் மூலமாக தினகரன் அண்ணா அவர்களின் அறிமுகம் கிடைச்சது. அவர் எனக்கு எப்படி டப்பிங் பேச வேண்டும்னு சொல்லிக் கொடுத்தார். அவரின் பயிற்சியால் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றிற்கு டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைச்சது. அதனைத் தொடர்ந்து அவர் மூலமாகவே நடிக்கவும் வாய்ப்பு வந்தது.

ஏ.வி.எம் ஸ்டுடியோ தயாரிப்பில் பிரபு சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஜிப்ஸி, ஒரு கிடாயின் கருணை மனு, சூரரை போற்று, விக்ரம் என முக்கியமான படங்களில் நடிச்சிருக்கேன். சினிமா துறைக்குள் நுழைந்த இந்த ஐந்து வருடங்களில் 27 படங்களில் நடித்திருக்கேன். தற்போது எனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தினை தேர்ந்து எடுத்து நடிக்கிறேன். இதில் வெற்றிக் கனியினை அவ்வளவு எளிதில் சுவைக்க முடியாது என்றாலும், சரியான பாதையினை தேர்வு செய்து அதை கடுமையாக பின்பற்றினால் கண்டிப்பாக அந்த வெற்றியினை சுவைக்க முடியும் என்பதை இந்த ஐந்து வருட சினிமா அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிப்படங்களில் நடிக்க விரும்புவதால், பல மொழிகளை கற்று வருகிறேன். என்னதான் நான் பல துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் எனக்கான அடையாளம் என் ஓவியங்கள்’’ என்றார் ஹாரிதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூலிகைகளும் அதன் மருத்துவக் குணங்களும்!! (மருத்துவம்)
Next post நடனக் கலையில் நான் இன்றும் மாணவிதான்!! (மகளிர் பக்கம்)