தாத்தா தோளில் அமர்ந்து சுவற்றில் படங்கள் வரைந்தேன்! (மகளிர் பக்கம்)
சுவர்கள் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்ற சொல் எல்லா குழந்தைகளையும் குறிக்கும். காரணம், நடை பழகும் குழந்தை இருக்கும் வீட்டில் உள்ள சுவர்களில் அவர்களின் கைவண்ணத்தில் உள்ள சித்திரங்களை நாம் பார்க்க முடியும். ஹஸ்மிதாவும் இதற்கு விதிவிலக்கில்லை. ஏழு வயது நிரம்பிய ஹஸ்மிதா தற்போது தன் மென்மையான விரல்களால் அழகான ஓவியங்களை தீட்டி வருகிறார். கனடாவில் வசித்து வரும் ஹஸ்மிதாவிற்கு ஓவியம் வரைவதில் ஏற்பட்ட ஆர்வம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
‘‘நான் மதுரையில்தான் பிறந்தேன். அப்பாவின் வேலைக் காரணமாக நாங்க கனடாவிற்கு வந்துட்டோம். அப்ப எனக்கு மூணு வயசு இருக்கும். எனக்கு வண்ணங்கள் என்றால் கொள்ளை பிரியம். அதைப் பார்த்து தாத்தா, பாட்டி எனக்கு கிரேயான் கலர் பென்சில்களை வாங்கி தருவாங்க. கூடவே ஒரு புத்தகமும் கொடுப்பாங்க. ஆனால் எனக்கு அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் என்னுடைய கிறுக்கல்களுக்கு பத்தாதது போல் இருந்தது. அதனால் வீட்டில் உள்ள சுவர்களை என் ஓவியங்களுக்கான கேன்வாசாக மாற்றிக் கொண்ேடன்.
என் மனசுக்கு தோன்றுவதை வரைவேன். பிறகு தாத்தா நாய், எலி, யானை போன்ற எளிதாக வரையக்கூடிய வகையில் சின்னச் சின்ன ஓவியங்கள் வரைய சொல்லித்தர அதை எல்லாம் சுவற்றில் வரைய ஆரம்பித்தேன். நான் வரைவதைப் பார்த்து வீட்டின் சுவர் எல்லாம் இப்படி கிறுக்கி வச்சிருக்கியேன்னு யாரும் திட்டல, அடிக்கல, நான் சின்ன பெண் என்பதால் என் உயரத்திற்கு ஏற்ப சுவர்களில் ஓவியங்களை வரைவேன். மற்ற இடங்களில் வரைய என் கை எட்டாது.
அந்த வெண்மையான சுவர் என் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். தாத்தாவிடம் அந்த இடத்தைக் காண்பித்து வரையணும்னு சொல்வேன். அவர் என்னை அவர் தோளில் உட்கார வைத்துக் கொள்வார். நானும் அங்கு வரைவேன். அதன் பிறகு அவருக்கு ‘தாங்க்யூ’ சொல்வேன். என்னுடைய மழலை குரலில் அந்த ஒற்றை வார்த்தை கேட்பதற்காகவே தாத்தாவின் தோள் எனக்கு பலமுறை ஏணியாக மாறியிருக்கிறது. எவ்வளவு நேரம் ஆனாலும் கால் வலியை பொறுத்துக் கொண்டு தாத்தா என்னை தோளில் சுமந்து கொண்டு நிற்பார்.
அந்த காட்சி எனக்கு இப்பவும் நினைவில் இருக்கு. பாட்டியும் எனக்கு நிறைய ஓவியங்கள் மற்றும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள் வாங்கி தருவாங்க. வண்ண நிறங்களை பார்த்தவுடன் என் மனதில் உற்சாகம் கிளம்பிடும்’’ என்றவர் தற்போது மிருகங்கள், இயற்கை காட்சிகள், பறவைகள், செடி, கொடி, மரங்கள், பழங்கள் என வரைய ஆரம்பித்துள்ளார்.
‘‘நான் எல்.கே.ஜி மற்றும் யு.கேஜி மதுரையில் தான் படிச்சேன். கனடா வந்த போது கொரோனா வந்ததால எல்லாமே ஆன்லைன் கல்வி என்றாகிவிட்டது. படிப்பு போக நிறைய நேரம் இருந்ததால், என்னுடைய வரையும் திறனை வளர்த்துக் கொள்ள ஆரம்பிச்சேன். இதற்காக நான் பயிற்சி எல்லாம் எடுக்கல. புத்தகத்தைப் பார்த்து தான் வரைவேன். அப்படி நான் வரைந்த ஒரு இயற்கை காட்சி ஓவியத்தை என் அப்பாவின் நண்பர் விலைக்கு கேட்டார்.
அப்பாவிற்கு அதில் விருப்பமில்லை என்பதால், முடியாதுன்னு சொல்லிட்டார். என்னுடைய ஓவியங்களை நான் யாருக்கும் விலைக்காக கொடுப்பதில்லை. காரணம், ஓவியம் வரைவதால் எனக்கு ஒருவித சந்தோஷம் கிடைக்கிறது. அதை நான் கமர்ஷியலாக பார்க்க விரும்பவில்லை. நான் வரையும் ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒரு பின்னணி இருக்கும். என் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, பெரியப்பா இவர்களின் பிறந்த நாளுக்கு என்னுடைய ஓவியங்களை தான் பரிசாக கொடுப்பேன்.
அதனால் நான் வரையும் ஒவ்வொரு ஓவியமும் என் மனசுக்கு ெராம்பவே நெருக்கமானது. அதை அவர்கள் பார்க்கும் போது அவர்கள் முகத்தில் தென்படும் அந்த சந்தோஷத்திற்கு விலையே கிடையாது. ஒரு முறை ஆடு ஒன்றை வரைந்து கொண்டிருந்தேன். இரவு பகல்னு நேரம் கிடைக்கும் போது எல்லாம் கஷ்டப்பட்டு அந்த ஓவியத்தை வரைந்தேன். அதன் மேல் கை தவறி காபியை கொட்டிவிட்டேன். நான் கஷ்டப்பட்டு வரைந்த ஓவியம் அப்படியே அழிந்து போனது.
ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருந்தது. அழுது கொண்டே இருந்தேன். அப்பா, அம்மா தான் என்னை சமாதானம் செய்தாங்க. எனக்கு இப்ப ஏழு வயசு ஆகிறது. ஓவியக்கலை என்பது ஒரு கடல். இதில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பல நுணுக்கங்களை தெரிந்துகொள்ளணும். அப்புறம் என் ஓவியங்களைக் கொண்டு ஒரு கண்காட்சி நடத்தணும்’’ என்றார் மழலை மாறாமல் ஹஸ்மிதா.