உழைக்கும் பெண்களின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் மொபைல் கேர்ள்ஸ்!! (மகளிர் பக்கம்)
பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள், வீட்டு வேலையும் பார்க்கிறார்கள், குழந்தைகளை பராமரிக்கிறார்கள். இவ்வாறு அவர்களுக்கான வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக கடந்த மாதம் சென்னை பெசன்ட் நகரில் ஒரு நாடகம் அரங்கேறியது. உழைக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் இயல்பாக இந்த நாடகம் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் மொபைல் கேர்ள்ஸ் நாடகக் குழுவினர். தங்களின் யதார்த்த நடிப்பினாலும் பொது இடங்களில் பெண்கள் கண்காணிக்கப்படும் விதங்களையும் வசனங்களால் மக்கள் முன் எடுத்து வைத்திருந்தனர். இந்த நாடகத்தினை இயக்கி இருக்கும் சம்யுக்தா அது குறித்து விவரித்தார்.
‘‘எனக்கு நாடகம் மேல் ஈர்ப்பு வரக் காரணம் மதுமிதா. இவங்க சினிமா மற்றும் நாடகத்துறையில் வேலை பார்த்து வந்தாங்க. ஒரு முறை செல்போன் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, அவர்களுக்கு உதவியாக நானும் அவர்களுடன் சென்றேன். அந்த துறையில் வேலை செய்யும் பெண்களுடன் தங்கி இருந்து அவர்களின் வாழ்க்கை முறையினைப் பற்றி தெரிந்து கொண்டோம். இதற்காக காஞ்சிபுரத்தில் ஒரே வீட்டில் ஆறு பெண்கள் தங்கி இருந்தாங்க.
அவர்களிடம் பேசிய போது தான் அவர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து ஏராளமான விஷயங்கள் தெரிய வந்தது. வீட்டுச் சூழல், வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் பிரச்னைகள், பொருளாதார சிக்கல்கள் என அவர்களின் பிரச்னைக்கான பட்டியல் குறித்து விவாதித்தோம். இதில் சில சமயம் அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் மூட வேண்டிய சூழல். வீட்டுச் சூழலை சமாளிக்க அவர்கள் வேறு வேலையினை தேட வேண்டும். அந்த நிலையில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. பிறகு எங்களின் ஆராய்ச்சி குறித்து மதுமிதாவும் நானும் ‘த மொபைல் கேர்ள்ஸ் கூட்டம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டோம்’’ என்றவர் அதுவே நாடகமாக மாறியது குறித்து பகிர்ந்தார்.
‘‘புத்தகம் மூலம் இந்த பெண்கள் படும் கஷ்டத்தை எத்தனை பேருக்கு கொண்டு செல்ல முடியும். அதையே நாடகமாக மாற்றினால் பலருக்கும் புரிய வைக்க முடியும்ன்னு தோன்றியது. நாங்க பேசின, விவாதிச்ச விஷயங்களைக் கொண்டு தொகுத்து அதை ஒரு நாடக வடிவமாக உருவாக்கினேன். நான் சந்தித்த பெண்களை கதையின் கதாபாத்திரமாக மாற்றி அவர்களுக்கு ஒரு உருவம் கொடுத்தேன்.
நாடகத்திற்கு ஒரு முழு முகம் கிடைத்தவுடன் இதனை தயாரிக்க இந்தியா ஃபவுண்டேஷன் ஆர்ட் நிறுவனத்தை அணுகினோம். பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனமும் எங்களின் நாடகத்திற்கான நிதியுதவி செய்ய சம்மதிச்சாங்க. இவர்களைத் தொடர்ந்து சோனி பிக்சர்ஸ் மற்றும் இந்தியா ஃபவுண்டேஷன் பொலிடிகல் அண்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் உதவிக்கு வரவே நாடக வேலைகளை தொடங்கினோம்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாடக கலைஞர்களை தேர்வு செய்தேன். இந்த நாடகத்தோட முக்கிய நோக்கம் தினசரி வேலை செய்யும் பெண்களின் மனதில் எழும் கேள்விகள், அவர்களின் மன சிக்கல்கள், உடல் ரீதியாக சந்திக்கும் பாலியல் பார்வைகள், காதல், வேலையிடங்களில் சந்திக்கும் சவால்கள் என அனைத்தையும் தொகுத்து நாடகமாக உருமாற்றினோம். நாங்க சந்தித்த இந்த ஆறு பெண்களைக் கொண்டு தான் ஒரு கதை அமைத்திருந்தேன்.
அவர்களைப் போல் என் நாடகத்தில் வரும் பெண்கள் அனைவரும் ஒரே வீட்ல வசிக்கிறார்கள். லஷ்மி என்ற கதாபாத்திரம் வேலை மற்றும் அழகான குடும்பம் என்று தன் வாழ்க்கையை வாழணும்னு விரும்புகிறாள். தன் கல்யாணத்திற்கான பணம் சேர்க்க உழைக்கிறார். சத்தியா என்ற கதாபாத்திரத்திற்கு காவலராக வேண்டும் என்ற கனவு. ஆனால் அது முடியாத காரணத்தால் வேறு வேலை பார்க்கிறார்.
நிறைய படிக்க வேண்டும் என்று விரும்பும் பெண் அபிநயா. வீட்டுச் சூழலால் வேலைக்கு வரும் அபிநயா பகுதி நேரத்தில் தன் கனவினை பூர்த்தி செய்கிறார். அம்பேத்கர் வழி போராளி கல்பனா. இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. அந்த ஒரு நாள் பிரியாணி செய்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் நான்கு பேருக்கும் தனிப்பட்ட பிரச்னை எழுகிறது. இந்த நேரத்தில் தான் இவங்க வேலை செய்யும் நிறுவனம் வேற இடத்திற்கு மாற்றப்படுகிறது. அதனால் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்தான் கதை.
வழக்கமான நாடகங்கள் போல் இல்லாமல் தனித்துவமா இந்த நாடகம் தெரிய வேண்டும் என்பதில் நான் ரொம்பவே கவனமா இருந்தேன். நான்கு பெண்கள் ஒன்றாக தங்கி இருந்தால், அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதைக் கூட யதார்த்தமாக வசனங்களில் பிரதிபலித்திருக்கேன். மேலும் ஒவ்வொரு பெண்ணின் கனவுகளை மையமாக கொண்டும் இந்த நாடகத்தை இயக்கி இருக்கேன். ெபண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை பிரச்சனை, பொருளாதார சிக்கல், வேலையிடம் போன்ற எல்லாவற்றை குறித்தும் பேசுகிறது. இந்த கதையின் மிகவும் முக்கியமானது, நான்கு பெண்களும் வேலைக்கு செல்பவர்கள். தங்களுக்கான பொருளாதார நிலையினை ஏற்படுத்திக் கொண்டவர்கள். பொருளாதார ரீதியா பெண்கள் இருக்கும் போது அவர்களுக்காக சுதந்திரம் கிடைச்சுரும்னு சொல்றாங்க. அப்படி இல்லை என்பதை இந்த நாடகம் வழியா நாங்க பேசி இருப்போம்.
முக்கியமாக பெண்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய பங்கு தான் அவர்களுக்காக செலவு செய்கிறார்கள். மற்றதை தங்களை சார்ந்துள்ளவர்களுக்காக கொடுக்கிறார்கள். மேலும் பகுத்தறிவு, படிப்பு, பொருளாதாரம் இவை மூன்றும் ஒரு பெண்ணுக்கு எப்படி உதவியா இருக்கு என்பதையும் காட்சிப்படுத்தியிருக்கோம். பெண்கள் தங்களுக்கான சுதந்திரத்தை சுவைத்த பிறகு மீண்டும் ஒரு கட்டுக்குள் அடைக்கப்படும் போது, அவர்களின் கனவுகள் காணாமல் போய்விடுமோ என்று பயப்படுறாங்க. இந்த பயத்தை சுற்றிதான் முழு நாடகத்தை இயக்கி இருக்கேன்.
யுடியூப் சேனல்களுக்கு மத்தியில் மேடையில் நாங்க இந்த நாடகத்தினை அரங்கேற்ற காரணம் ஒரு 10 பேருக்காவது எங்களின் வலுவான கருத்து சென்றடைய வேண்டும். ஆனால் எங்க நாடகத்தை 280 பேர் பார்க்க வந்தாங்க. அனைவரும் எங்க வீட்டிற்குள் நடப்பதை நேரடியாக பார்த்தது போல் இருந்தது என்றனர். இது அவர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இந்த கதையே உழைக்கும் பெண்களை குறித்து என்பதால், அனைத்து பெண்களிடமும் எங்க நாடகம் போய் சேரவேண்டும். ஒரு பெண்ணியம் சார்ந்த நாடகம் என்றால் அதில் ஆணாதிக்கத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது. எங்க நாடகத்தில் ஆண்களுக்கும் அப்பா, மகன், கணவன் போன்ற கதாபாத்திரம் உண்டு.
அவர்களின் மனநிலையில் பெண்களின் தினசரி வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறோம். இந்த நாடகத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் நூரம்மா என்ற திருநங்கை. இவர் ட்ரான்ஸ் கம்யூனிட்டி கிச்சன் ஒன்றை திருநங்கைகளுக்காக ஆரம்பித்து நடத்தி வருகிறார். அவரையும் எங்க கதையில் இணைத்திருக்கிறோம். இதுபோல் நாங்க நிஜத்தில் பார்க்கும் உழைக்கும் பெண்களின் கதையினையும் நாடகத்தில் அவ்வப்போது இணைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் பெண்களின் தினசரி வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை எங்களின் நாடகங்கள் மூலம் பிரதிபலிக்க முடியும்’’ என்ற சம்யுக்தா, தன் நாடகத்தினை பல ஊர்களில் அரங்கேற்ற இருப்பதாக தெரிவித்தார்.