ஹார்ன் ஓகே ப்ளீஸ்..!! (மகளிர் பக்கம்)
சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், ஓவியக்கலைஞர்- தொழிலதிபர் – ஃபேஷன் டிசைனர் எனப் பன்முகத்திறமைகளை கொண்டவர். இரண்டு வயதிலிருந்தே வரையத் தொடங்கி, எட்டாவது பயிலும் போது தொழிலதிபராகும் கனவு அவருள் பிறந்தது. கலை + ஃபேஷன் என இரண்டிலுமே சிறப்பாகச் செயல்பட்டு, கலைக்காக ‘ஐஷார் தி ஸ்டோர்’ மற்றும் ஃபேஷனுக்காக ‘ராம்ருகி’ என்ற ஆன்லைன் ப்ராண்டுகளை 2019ல் தொடங்கியுள்ளார். இதற்கு முன், பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சியிடம் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘‘சேலைகள் எப்போதுமே நம் கலாச்சாரத்துடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுவதால், முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள் தவிர இளம் பெண்கள் சேலையை அன்றாடம் அணிய விரும்புவதில்லை. அதனால், நம் மார்டன் பெண்களுக்காகவே அலுவலகம், கேளிக்கை கொண்டாட்டங்கள், விழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அணியக் கூடிய தனித்துவமான டிசைனர் சேலைகளைத் தயாரித்துள்ளோம்.
இதை வெறும் உடையாக இல்லாமல் ஒரு கலைப் பொருளாக வாடிக்கையாளர்கள் கொண்டாடி பெருமை கொள்ள வேண்டும்” என்கிறார் ஐஸ்வர்யா. தற்போது ஒன்பது சேலைகளும், ஸ்கார்ஃப்களும் அறிமுகப்படுத்தி இருக்கும் ஐஸ்வர்யா, இதை Trucks of India என்கிற ‘தீம்’ அடிப்படையில் வடிவமைத்துள்ளார்.
‘‘கலையை வெறும் காட்சிப்பொருளாக இல்லாமல், அதை நம் வாழ்க்கை முறையோடு இணைப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்டு. டிரக் கலை வட இந்தியாவில் மிகவும் பிரபலமானவை. அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் சரக்கு லாரிகளே நம் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றன. பல லாரி ஓட்டுநர்கள், வீட்டைப் பிரிந்து பல மைல் தூரம் பயணிப்பது வழக்கம். பொதுவாகவே இவர்கள் பத்து மாதம் வரை நெடுஞ்சாலைகளில் தான் இருப்பார்கள். பல மாதங்கள் குடும்பத்தினரையும் வீட்டையும் பிரிந்து வாடும் மக்களுக்கு, சாலையில் துணையாக இருப்பது அவர்களது வாகனம் மட்டும்தான்.
இதனால், லாரி ஓட்டுநர்களுக்கு மன அமைதி தரும் வகையில், அவர்களது வாகனங்களை வண்ணமயமாக மாற்றும் முயற்சியில் பல கலைஞர்கள் இறங்கினர். இந்தியச் சாலைகளை வண்ணமயமான கலை-லாரிகள் அலங்கரித்து, உலகமே திரும்பிப் பார்க்கும் அளவு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ட்ரக் கலையில் ஓட்டுநர்களின் விருப்பப்படி பாலிவுட் படங்களில் தொடங்கி இஷ்ட தெய்வங்கள், குழந்தைகளின் பெயர்கள் என அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அனைத்துமே இடம்பெறுகிறது’’ என்ற அவர் ட்ரக் கலையையும், லாரி ஓட்டுநர்களின் உழைப்பையும் கௌரவப்படுத்தும் வகையில், ’ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ சேலைகளை உருவாக்கியுள்ளார்.
‘‘எனக்கு ஒரே நாளில் ட்ரெண்டாகி, அதே வேகத்தில் காலாவதியாகிப்போகும் ஃபேஷனில் நம்பிக்கை கிடையாது. நாம் அணியும் உடைகள் தனித்துவமாக இருப்பதுடன், அர்த்தமுள்ளதாகவும் இருந்து காலத்திற்கும் நீடிக்க வேண்டும்” என்கிறார். இதுதவிர, பாலின நிலைப்பாடுகளைத் தாண்டிய டி-ஷர்ட்டுகள், பேன்டுகளையும் ‘லிமிடெட் எடிஷன்’ ஆடைகளாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஐஸ்வர்யா தயாரிக்கும் ஆடைகள் அனைத்துமே இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றன. அவர் பயன்படுத்தும் துணியில் தொடங்கி, அதனுடன் சேர்க்கும் வண்ணச் சாயங்கள் வரை அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார். உடைகளை பேக்கிங் செய்ய நெகிழியைத் தவிர்த்து, செலோ டேப், ப்ளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக காட்டன் ரிப்பன்களையும், பேப்பரையும் பயன்படுத்துகின்றார்.
மறுசுழற்சி – மறுபயன்பாடு போன்ற பழக்கங்களை ஊக்குவிக்க, ஆடைகள் தயாரிக்கும் போது மிச்சமாகும் துணிகளை கொண்டு, டிசைனர் காதணிகள், ப்ரேஸ்லெட்டுகளையும் தயாரிக்கிறார். இந்த அணிகலன்கள் மிகக்குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதனால், தனித்துவமான கலெக்ஷனை விரும்புபவர்கள் மத்தியில் இந்த அணிகலன்கள் பிரபலம்.
ஐஷார் தி ஸ்டோர் முழுமையாக ஐஸ்வர்யாவின் ஓவியங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் பொருட்களை கொண்டது. அதில் துணிகள், நோட் புக்குகள், டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்கள், கடிதங்கள், சுவர் ஓவியங்கள் போன்ற பல பொருட்களை உருவாக்குகிறார்கள். 2021 சிறப்பு நாட்குறிப்புகளும் ப்ளானர்களும் இப்போது வேகமாக விற்பனையாகி வருகின்றன.
இந்த ப்ளானர்களில், நம் இலக்குகளை திட்டமிடுவதற்கும், பழக்க வழக்கங்களை கவனிப்பதற்கும், மாதவிடாய் நாட்களைக் குறிக்கும் படி அதன் பக்கங்கள் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் 100+ ஸ்டிக்கர்களுடன் இந்த 2021 வருடத்தை அழகாகவும், மறக்க முடியாததாகவும் மாற்ற இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்படும் ஐஸ்வர்யாவின் ஓவியங்களும் – ஆடைகளும், சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிக பட்டாளத்தை அவருக்குத் தந்துள்ளது. சமூக வலைத்தளத்தின் உதவியால் தொடர்ந்து தன் ப்ராண்டை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களையும் உருவாக்கி வருகிறார்.
தனது ஆடைத் தயாரிப்பு தொழில் மூலம் பல கைவினைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் மாத வருமானமும் அமைத்துத் தரும் நோக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இன்று பல இளம் கலைஞர்கள், கலை மூலமாக அடக்குமுறைகளுக்கு எதிரான குரல்களை பதிவுசெய்து வருகின்றனர். அதே போல இவரும் தனது கலையின் வழியாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளையும், அவர்கள் உடல் மீது நடத்தப்படும் அரசியலை எதிர்த்தும், கறுப்பின மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளித்தும், பல வலுவான பதிவுகளை முன்வைத்துள்ளார்.