ங போல் வளை-யோகம் அறிவோம்!!! (மருத்துவம்)
எந்த கிளையில் அமர வேண்டும்?
நவீன உளவியல் மருத்துவத்தில், ஒருவர் எத்தனை நாட்கள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் என்ன என்கிற வரையறை மிகத் துல்லியமாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக, மனச்சோர்வு இருக்கும் ஒருவர் 12 மாதங்கள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குள் மீண்டு விட வேண்டும். அதன் பின்னர் கவுன்சிலிங் தெரப்பி எனப்படும் ஆலோசனை சிகிச்சை, வாழ்வியலில் சில மாற்றங்கள் என மாற்று முறைகளால் முற்றிலுமாக வெளி வர வேண்டும்.
இப்படித்தான் ஒரு மாற்று மருத்துவமும் இயங்க முடியும். யோக மரபிலும் ஒருவருடைய குணாம்சம், தன்னியல்பு, நாட்டம், குறிக்கோள் என்கிற பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டுதான், ஒரு சரியான பயிற்சி திட்டத்தையே வடிவமைக்க முடியும். ஆசனா, பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் மிகவும் அடிப்படையான ஒரு சாதகனுக்கு உகந்தவை. ஆனால், ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் கடந்துவிட்ட ஒருவருக்கு இவை போதுமானதாக அமையாது. அது ஒரு நிறைவை வழங்காமல் போகலாம்.
ஆகவே, யோக மரபின் மற்ற வடிவங்களை, வகைமைகளை, கிளைகளைத் தெரிந்துகொண்டு, சரியான ஆசிரியரின் உதவியுடன் தனக்கான அடுத்தகட்ட பாட திட்டத்தை ஒருவர் தயாரிக்க
வேண்டும். ஏனெனில், மற்ற மரபுகளைப் போலவே யோகத்திலும் பல கிளைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு கிளைகளும் அதிலிருந்து மேலும் சில கிளைகளுமாக விரிந்து பரவி ஒரு ஆலமரம் போல் நிற்கிறது.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனிதர்கள் என்பதால், இதில் எந்த கிளையில் நாம் அமர வேண்டும் என்பதும் எது நம்மை ஆசுவாசப்படுத்தும் என்பதும் தெரிந்துகொள்வது முக்கியம். முதல் கிளையான கர்ம யோகம் என்பது செயல் வழி யோகம் எனப்படுகிறது. அதாவது, தொடர்ந்து செயலூக்கம் மிக்க ஒருவர், தான் செய்யும் செயல் அனைத்தையும் யோகமாக, மாற்றிக்கொள்ள முடியும்.
அதன் வழியே செல்லும் நீண்ட பயணத்தின் மூலம் ‘தன்முனைப்பு’ அல்லது சுயநலமற்ற செயலாக ஒரு செயலை செய்யக்கூடிய மனிதராக மாறுவாரெனில் அது கர்ம யோகம் எனப்படுகிறது. அப்படியான துடிதுடிப்பான இயல்பும் செயலில் ஆர்வமும் உள்ள ஒருவர் யோகப் பயிற்சிகளான ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகளைச் சிறிதளவிலும், கர்ம யோகத்தைத் தீவிரமாகவும் பின்பற்றுவாரெனில், அவர் ஒரு முழுமையை தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்விலிருந்தே அடைந்துவிடுவார். அது ஒரு ஆன்ம விடுதலைக்கு நிகரான வாழ்வாக அமையும்.
இரண்டாவதாக, பக்தி யோகம் எனும் உயர்வான ஒன்றுடன் கசிந்துருகி, கனிந்து, ‘கரைந்து போதல்’. மிகவும் உணர்வுகரமான ஒருவர், அன்பாலும், நட்பாலும் தொடர்ந்து இந்த உலக இருப்புகள் அனைத்துடனும் தன்னைப் பிணைத்துக்கொள்ளக் கூடிய அல்லது நம்பிக்கையின் மூலம் தன் வாழ்க்கை முழுவதையும் கட்டியெழுப்பிக்கொள்ளும் ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை இது.
இந்த உலகியல் வாழ்வில் தான் பற்றிக்கொண்டிருக்கும் அனைத்திலிருந்தும் மேலெழுந்து அந்தப் பிடிப்பை உயர்வான ஒன்றுடன் இணைத்துக்கொள்தல். இவரை பக்தன் எனலாம். எனினும், மற்ற பயிற்சிகளைச் சிறிதளவில் செய்து உடலையும் மனதையும் இன்னும் சிறப்பாக வைத்துக்கொள்வதால், தன் உணர்வுசார் யோகத்தில் இன்னும் சிறப்பாகவே ஈடுபட முடியும்.
அடுத்ததாக ராஜ யோகம் எனப்படும், பல்வேறு யோக நுட்பங்களை உள்ளடக்கிய யோக முறை. இதில் தான் ஆசன பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள், தியானங்கள், லய யோகம், மந்திர யோகம், கிரியா யோகம் போன்ற பல உட்பிரிவுகள் உள்ளன. இந்த உலகியல் வாழ்வில் அடையக்கூடிய வெற்றிகள், கடக்க வேண்டிய துன்பங்கள், அமைய வேண்டிய ஆனந்த நிலை என அனைத்தையும் எய்த இந்த நூற்றாண்டிற்கான மிகச் சிறந்தப் பாடத்திட்டமாக ராஜயோகத்தை முன்வைக்கலாம். இதில் உடல், மனம், ஆழ்மனம், உணர்ச்சிகள் போன்ற பல அடுக்குகளுக்கான பயிற்சிகள் இருப்பதால், இதை முழுமையான பாடத்திட்டம் எனலாம். இதில் ஈடுபட்டுக்கொண்டே, மற்ற யோக முறைமைகளையும் ஒருவர் தொடரலாம்.
நான்காவதாக, ஒவ்வொன்றையும் பகுத்து ஆராயக்கூடிய, தர்க்க புத்தியால், அனைத்தையும் விளங்கிக்கொள்ளக்கூடிய, தனக்கென தனித்த சிந்தனை உடைய , கல்வியிலும் , கேள்வியாலும், தனக்கான ஒன்றைத் தேடக்கூடிய ஒருவர் செய்ய வேண்டிய யோகம் ஞான யோகம். முறையான, ஞானாசிரியர் ஒருவரின் துணையுடன் செல்ல வேண்டிய பாதை. இதில் ஸ்ரவணம், மனனம், ஸ்வத்யாயம் என கேட்டல், மனனம் செய்தல், சுய ஞானமாக/அறிதலாக மாற்றிக்கொள்ளுதல் எனப் பல்வேறு படிநிலைகள் மூலம் தன் தர்க்கத்தை யோகமாக மாற்றிக்கொள்ளுதல் அவசியம். இதைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர் மற்ற யோகங்களில் தியானம் என்பதைத் துணையாக வைத்துக்கொள்வது பலனளிக்கும்.
இப்படியாக நான்கு முக்கியமான கிளைகளும், அதில் சிலவற்றில் துணை பிரிவுகளும் இருப்பதால், நம் இயல்புக்குத் தக்க ஒன்றை மையக் கருவியாக வைத்துக்கொண்டு, மற்ற பிரிவுகளில் துணையாக ஒன்று அல்லது இரண்டைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வகையான தேர்வு நமக்கு நமது மையக் கருவியில் சலிப்பை உண்டாக்காமலும், நமது சாதனா எனப்படும் பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து செய்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
உதாரணமாக, நீங்கள் உணர்ச்சி மிக்க மனிதரெனில் நீங்கள் சரியாக ஒரு பக்தி யோகத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு உறுதுணையாக ராஜயோகத்தில் உள்ள ஹடயோக பயிற்சிகளையும் செய்துவரும்பட்சத்தில் ஆரோக்யமான உடல் மற்றும் மனதை கொண்டு அடையும் இறை தியானத்தின் மூலம் இன்னும் சிறப்பாக உங்கள் பாதையில் பயணிக்க முடியும்.
ஆக, இத்தனை கிளைகள் இருந்தாலும் ஒருவர் தான் எதில் சென்று அமர வேண்டும் என்பதைத் தன் ஆசிரியரின் துணையுடன் ஒரு சரியான பாடத் திட்டத்தை வரையறை செய்து வைத்துக்கொள்வது மட்டுமே நீண்ட காலத்தில் பலனளிக்கும். ஏனெனில், இதில் எத்தனை சதவிகிதம் எந்தப் பயிற்சியை இணைக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
திரிகோணாசனம்
இந்தப் பகுதியில் நாம் ‘திரிகோணாசனம்’ எனும் பயிற்சியின் முதல் நிலையைக் காணலாம். இந்தப் பயிற்சி உடலின் பக்கவாட்டுத் தசை மண்டலத்தை சீர்செய்வதிலும், நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனச்சோர்வுக்கு முன்னதாக நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சோர்வை நீக்கி, நாள் முழுவதும் செயலூக்கத்துடன் இயங்க வைக்கிறது. இடுப்புப் பகுதியிலுள்ள தேவையற்ற சதைகளை நீக்கவும் இப்பயிற்சி உதவும்.