அம்முக்குட்டி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 52 Second

புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களை க்யூட் அம்முக்குட்டி ஓவியங்களாக வரைந்து, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்
ஓவியர் சுதா பத்மநாபன். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவேற்றி வரும் ஓவியங்களுக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். அவரிடம் அம்முக்குட்டி ஓவியங்கள் பற்றிப் பேசினோம். அரசாங்க வேலையை விட்டு, பெரிய தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிந்து, இப்போது முழு நேர கலைஞராக இருக்கிறார் சுதா. இவரது சொந்த ஊர் வேலூர்.

‘‘என் உடைகளில் தொடங்கி, நான் வசிக்கும் வீடு வரை அனைத்துமே பாரம்பரியத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்று விரும்புபவள் நான். அதனால் என் ஓவியங்களும் பாரம்பரியத்தின் அடிப்படைகளைக் கொண்டு அதன் பிரதிபலிப்புகளாகவே இருக்கும். நான் அப்படியே என் தாத்தா மாதிரி என குடும்பத்தினர் சொல்வார்கள். என் தாத்தாவை நான் பார்த்தது கிடையாது. அவர் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். அவரும் நன்றாக வரைவார் என கூறுவார்கள். ஒருவேளை அவரிடமிருந்து இந்த ஓவியங்கள் மீதான ஆர்வம் தோன்றி இருக்கலாம்.

லாக்டவுன் நேரத்தில்தான் அம்முக்குட்டி ஓவியங்களை உருவாக்கினேன். இந்த அம்முக்குட்டி என் சிந்தனைகள், ஆசைகளின் உருவமை என்று கூறலாம். நான் என்னவாக இருக்க விரும்புகிறேனோ அதன் வெளிப்பாடுதான் அம்முக்குட்டி. என்னால் செய்ய முடியாததைக் கூட அவளால் செய்ய முடியும். அம்முக்குட்டியால் ஒரே சமயத்தில் பரதநாட்டிய கலைஞராகவும், மருத்துவராகவும், ஏன் பைலட்டாக கூட இருக்க முடியும்.

அம்முக்குட்டிக்கு நீளமான முடி, பெரிய ஜிமிக்கி கம்மல், குட்டி மூக்கு, கண்மை இட்ட பெரிய கண்கள் இருக்கும். எனக்கு நீளமான முடி பிடிக்கும். ஆனால் அதற்கான பொறுமையும் நேரமும் என்னிடம் கிடையாது.எனவே அம்முக்குட்டிக்கு பாதம் வரை பெரிய முடியை வரைந்திருப்பேன். எனக்கு பரதநாட்டியம் ரொம்ப பிடிக்கும். அதுபோல் உடை அணிந்து கொள்ளவும் பிடிக்கும். ஆனால் அதை கற்றுக் கொள்ளும் சூழ்நிலை அமையவில்லை.

அதனால் அம்முக்குட்டியை பரதநாட்டியம் ஆடுவது போன்று பல ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். அதைப் பார்க்கும் போதெல்லாம் நானே நடனமாடுவது ஆடுவது போன்ற உணர்ச்சி ஏற்படும். அது எனக்கு ஒருவகையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. எனக்குக் கலையில் எப்போதுமே ஆர்வம் உண்டு. சிறுவயதிலிருந்தே வண்ணங்களுடன் விளையாடிக் கொண்டே இருப்பேன், அந்த பழக்கும் இப்போதும் தொடர்கிறது. ஒரு துண்டு பேப்பர் கிடைத்தாலும் அதில் எதையாவது வரைந்து கொண்டு இருப்பேன்.

பிரகாசமான நிறங்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதனால் அம்முக்குட்டி எப்போதுமே பளீச் என பல வண்ணங்களில் கண்களுக்கு இனிமையாக காட்சியளிப்பாள். ரவிவர்மாவின் ஓவியங்களை அம்முக்குட்டியை வைத்து வரைய ஆரம்பித்தேன். அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அவரது ஓவியங்கள் கொஞ்சம் இருண்ட பின்னணியில் இருக்கும். ஆனால் நான் என் பாணியில் அதில் வண்ணங்களும், வெளிச்சமும் சேர்த்து வரைந்தேன்.
மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்திலுமே வரைவேன். மரக் கரண்டிகள், காய்களை நறுக்கும் சாப்பிங் போர்டுகள், தட்டுகள், பாட்டில்கள் என அனைத்திலுமே வரைவேன். பழைய பொருட்கள் எதுவுமே தூக்கி வீச மாட்டேன்.

முடிந்தவரையில் அந்த பழைய பொருட்களை மறுபயன்பாடு செய்யவோ அல்லது வீட்டு அலங்காரப் பொருளாக மாற்றவோதான் முயற்சி செய்வேன். அடுத்ததாக நேம்-போர்டுகள் எனப்படும் பெயர் பலகைகள் வரைய ஆரம்பித்தேன். ஒரு மரப்பலகையில் வீட்டில் வசிப்பவரின் பெயரை அழகாக எழுதி அதில் ஓவியங்களும் வண்ணங்களும் சேர்த்து கொடுப்பேன். நண்பர்கள் இதை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். நண்பர்கள் மூலம்சில வாடிக்கையாளர்களும் கிடைத்தனர் அப்படித்தான் இந்த அம்முக்குட்டி பிசினஸ் தொடங்கியது.

எனக்கு பழமையான தமிழ் வீடுகளின் வாசற்கால்கள் பிடிக்கும். ஒரு வீட்டிற்குள் செல்வதற்கு முன், நாம் பார்க்கும் முதல் விஷயம் வாசற்கால்கள்தான். இன்றும் கிராமங்களில் பல வீடுகளின் நுழைவுவாயல்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள், ஊரில் இருக்கும் பாட்டி வீடு மாதிரியே வேண்டும் என கேட்பார்கள். அவர்களுக்கு அதே போல செய்து கொடுப்பேன். சென்னையை குறிப்பாகத் தமிழை பிரதிபலிக்கும் முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களையும் வரைந்துள்ளேன். அடுத்து நான் செய்த மினியேச்சர் பரிசுப் பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு இன்ச் முதல் இரண்டு அடி அளவு ஓவியங்களைக் கூட என்னால் வரைய முடியும். நான் எப்போதுமே தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள். அதனால் என் ஓவியங்கள் அனைத்துமே அம்முக்குட்டி பாணியில் தனித்துவமாக இருக்கும். சமீபத்தில் நான் வரைந்த பாரதியார்- செல்லம்மா ஓவியம் கூட அம்முக்குட்டி தோற்றத்தில்தான் இருக்கும். இப்போது வாடிக்கையாளர்களும், அவர்களது புகைப்படத்தை அனுப்பி அதை அம்முக்குட்டி பாணியில் வரைந்து கொடுக்க சொல்வார்கள். நவராத்திரி சமயத்திலும் அம்முக்குட்டியை வைத்து ஒன்பது கடவுள்களையும் வரைந்திருந்தேன். அதுவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2019ல் ஆரம்பித்திருந்தாலும் அனைவரையும் போல ஊரடங்கு சமயத்தில்தான் அதில் ஆக்டிவாக இருக்க முடிந்தது. ஒரு வாடிக்கையாளர் என்னிடம் ஒரு ஓவியத்தை வரையச் சொல்லி கேட்கும் போது அவரிடம் அதிக நேரம் பேசுவேன். அவருக்கு என்ன பிடிக்கும் எந்த மாதிரியான ஓவியத்தை எதிர்பார்க்கிறார் என்று அனைத்து விவரங்களையும் சேகரித்த பின்னர்தான் வரையவே ஆரம்பிப்பேன். அப்போதுதான் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு மன நிறைவுடன் ஒரு ஓவியத்தை வரைந்து கொடுக்க முடியும்.

எனது ஓவியத்தில், மனநிறைவு கிடைக்கும் வரை எவ்வளவு நாட்களானாலும் அதை பொறுமையாக செய்வேன். நான் ஓவியங்கள் வரையும் போது அதை எவ்வளவு சந்தோஷமாக வரைகிறேனோ அது அவ்வளவு அழகாகவும் அதே மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்லும் என்பதும் என்னுடைய நம்பிக்கை. அதனால் எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு மனதை நிதானப்படுத்தி தான் வரைய ஆரம்பிப்பேன். ஒரு ஓவியத்தை வரைய ஆரம்பித்துவிட்டால் இரவு பகல் பார்க்காமல் யாரிடமும் பேசாமல் சாப்பிடாமல் கூட பல மணி நேரம் உட்கார்ந்து வரைவேன். சில சமயம் திடீரென இரவு மூன்று மணிக்கு எழுந்து வரைய ஆரம்பித்து விடுவேன்.

எனக்கு தஞ்சாவூர் ஓவியங்கள் ரொம்ப பிடிக்கும்.நம் பாரம்பரியத்துடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களுமே என் மனதுக்கு நெருக்கமானவை தான். அதேபோல பத்மபூஷன் விருது பெற்று இந்திய ஓவியங்களை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்ற ஓவியர் ஜெமினி ராய் அவர்களது ஓவியங்களும் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் தான். எதிர்காலத்தில் அம்முக்குட்டி மூலம் வரலாற்று சிறப்புமிக்க கலைகள், கலாச்சாரங்கள் மற்றும் பல பழக்கவழக்கங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று கூறும் சுதா, இப்போது உலகம் முழுக்க தனது ஓவியங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வருகிறார். தான் போக கூட நினைக்காத இடங்களுக்கெல்லாம் அம்முக்குட்டி போவது சந்தோஷமாக இருப்பதாக கூறி முடிக்கிறார் சுதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருநங்கை புகைப்படக் கலைஞர்!! (மகளிர் பக்கம்)
Next post 30 வயது பெண்ணா…நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்! (மருத்துவம்)