தூக்கம் காக்கும் எளிய வழிகள்! (மருத்துவம்)

Read Time:11 Minute, 11 Second

உடல், மனம் இரண்டுக்கும் ஓய்வு தருவது தூக்கம். ஆனால், இன்று பலருக்கு மாத்திரைகளின் மூலம்தான் தூக்கம் வசமாகிறது. “மாத்திரைகளை நாடாமல் இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்க வழி இருக்கிறதா?’’ என்று பார்ப்போம். “இன்று மொபைல்போன் பலரது வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. டி.வி., கம்ப்யூட்டர், மொபைல் என எப்போதும் ஒளிவீசும் ஏதோவொரு திரையைப் பார்த்துக்கொண்டேயிருப்பதால், கண்களும் மூளையும் சோர்வடைகின்றன. அவை இயல்புக்குத் திரும்ப, குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். எனவே, தூங்கத் தயாராவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர், இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். மொபைல்போன் அருகிலிருந்தால் அடிக்கடி அதை எடுத்துப் பார்க்கத் தோன்றும். எனவே, அதைத் தொலைவில் வைத்துவிடுங்கள்.

படுக்கையறையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். படுக்கையில் உட்கார்ந்துகொண்டு ஆபீஸ் வேலைகளைச் செய்வதோ, டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடாது. அதோடு, தூக்கத்துக்குத் தயார்ப்படுத்தும் ‘ஸ்லீப் ஹைஜீன்’ நடவடிக்கைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும்.

அதென்ன ஸ்லீப் ஹைஜீன்?

1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையிலிருந்து எழுவதைபழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

2. தூங்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்.

3. இரவில் தயிர், முட்டை, இறைச்சி போன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

4. மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

5. மதியம் உறங்கும் பழக்கமுள்ளவர்கள், 20 நிமிடங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

6. மாலை 6 மணிக்கு மேல் உடற்பயிற்சி செய்யக் கூடாது; டீ, காபி, குளிர்பானங்களை அருந்தக் கூடாது. மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கும்.

7. மாலை நேர நடைப்பயிற்சி இரவில் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழிவகுக்கும். வெகு நேரம் தூக்கம் வரவில்லையென்றால், எழுந்து ஒரு குறுநடை நடந்துவிட்டு
வரலாம்.

8. படுக்கைக்குச் சென்ற பிறகு அடுத்த நாள் வேலை பற்றி யோசிக்கக் கூடாது. தீர்வே கிடைக்காத பிரச்னைகளைப் பற்றியும் யோசிக்கக் கூடாது.

9. நள்ளிரவில் கண்விழித்தால் இயல்பாக இருங்கள்.

10. மெல்லிசை அல்லது பாடல்களைக் கேட்பது தூக்கத்தை வரவழைக்கும்.11. இரவில் பசும்பால் அருந்துவதும், ஆப்பிள், வாழைப்பழம் இரண்டையும் கலந்து சாலட் செய்து சாப்பிடுவதும் நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும்.

12. படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்துவது நல்லது. நனைந்த, இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக் கூடாது.
தூக்கம் வரவழைக்கும் டெக்னிக்ஸ்!

புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது போன்ற பழக்கங்கள் தூக்கம் வரவழைக்க உதவும். ஆனால், அவை எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. தூக்கம் வரவழைக்க சில வழிமுறைகள் உள்ளன.

100 வரை எண்ணுங்கள்!

படுக்கை அறைக்குச் சென்றதும் 100-லிருந்து `99, 98, 97…’ என்று பின்னோக்கி எண்ண வேண்டும். இப்படி எண்ண ஆரம்பித்தால், முழு கவனமும் அதில் சென்றுவிடும். இதனால் மனம் ஒரு நிலைப்படுத்தப்பட்டு, சிறிது நேரத்தில் உங்களை மறந்து தூங்கிவிடுவீர்கள்.

தூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா!

`4 – 7 – 8’ என்ற மூச்சுப்பயிற்சி டெக்னிக் சில மேற்கத்திய நாடுகளில் பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `ஆண்ட்ரூ வீல்’ (Andrew Weil) என்ற விஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் எளிமையான வழி இது. ‘மூச்சுவிடுவதில் கவனம் செலுத்தினால், மன அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும்’ என்கிறார் அவர். அதாவது, `உள்மூச்சு மற்றும் வெளிமூச்சை விடும்போது மூளை, தன் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, அமைதியான நிலைக்குத் தானாகவே வந்துவிடும். இந்தப் பயிற்சியை தொடங்குவதற்கு முன்னர் வாய்வழியாக `வுஷ் வுஷ்ஷ்…’ என்னும் சத்தத்தை எழுப்பி, உங்கள் மூச்சை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.’

ஸ்டெப் 1

கண்களை மூடியபடி நான்கு விநாடிகளுக்கு மூச்சை நன்றாக உள்ளே இழுத்துவிட வேண்டும். விநாடிகளைக் கணக்கிட `1, 2, 3, 4…’ என்று மனதில் எண்ணிக்கொண்டு மூச்சை உள்ளே இழுக்கலாம்.

ஸ்டெப் 2

உள்ளே இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றை ஏழு விநாடிகள் உள்ளேயே நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும்.

ஸ்டெப் 3

எட்டு விநாடிகளுக்கு மூச்சுக்காற்றைச் சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை செய்ய வேண்டும். தொடர்ச்சியாகச் செய்யும்போது, உறக்கம் கண்களைத் தழுவும். அடுத்த மூன்று நிமிடங்களில் உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும்.

கவனம்: இந்த டெக்னிக்கை எல்லோராலும் பின்பற்ற முடியாது.

சைனஸ் இருப் பவர்கள், முதியவர்கள், நுரையீரல் தொடர்பான நோயாளிகள் இதைத் தவிர்க்கவும்.

ரிலாக்ஸ்
தூங்குவதற்காகப் படுக்கைக்குச் சென்றதும் கீழ்க்காணும் ஐந்து ஸ்டெப்களைப் பின்பற்ற வேண்டும்.

ஸ்டெப் 1

முகம் மேல்நோக்கி இருப்பதற்கு வசதியாகத் தலையணையை வைத்துக்கொண்டு, மல்லாந்து படுத்து, கண்களை மூட வேண்டும். வாய், தாடை, முகத்தசை என முகத்தின் அனைத்துப் பகுதிகளையும் அசைக்காமல் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 2

உடலின் இருபுறமும் கைகளை நேராக நீட்ட வேண்டும். உள்ளங்கை விரல்களை விரித்துவைக்க வேண்டும். இதனால் தோள்பட்டை, கைகள் ரிலாக்ஸ் ஆகும்.

ஸ்டெப் 3

நன்றாக மூச்சை இழுத்து மார்புப் பகுதியை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். பிறகு மூக்கில் தொடங்கி நுரையீரல் வரை காற்று உள்ளே சென்று வருவதை சில நிமிடங்கள் கவனிக்க வேண்டும்.

ஸ்டெப் 4

தொடைப்பகுதியிருந்து பாதம் வரை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இந்த நான்கு ஸ்டெப்களைச் செய்து முடிக்கும்போது, தலை முதல் கால் வரை ரிலாக்ஸாகியிருக்கும்.

ஸ்டெப் 5

அடுத்து மனதை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். சில நினைவுகளை மனதில் கொண்டுவரும்போது, எண்ணங்கள் சிதறாமல், மனம் அமைதியான நிலைக்கு வந்துவிடும். உதாரணமாக, அமைதியான ஏரி… அதில் மிதக்கும் படகில் நீங்கள் மட்டுமே இருப்பதுபோல நினைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்களைச் சுற்றிலும் எதுவும் இல்லாமல் திறந்தவெளியில் படுத்திருப்பதுபோல, வானத்தில் நிலா, நட்சத்திரங்கள் இருப்பதுபோலக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

உயரமான மலையிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி அல்லது இயற்கை எழில் நிறைந்த சூழல் என எதை நினைத்தால் உங்கள் மனம் ரிலாக்ஸ் ஆகுமோ அதைக் கற்பனையாக நினைத்துக்கொள்ளலாம். இவற்றைச் செய்தும் மனம் ரிலாக்ஸ் ஆகவில்லையென்றால், ‘யோசிக்காதே, யோசிக்காதே…’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்.

இந்த டெக்னிக்குகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றினால், அன்றைய நாளின் பிரச்னைகள் மறந்துபோயிருக்கும். ஆரம்பத்தில் இந்த டெக்னிக்குகள் வேலை செய்யாததுபோலத் தோன்றினாலும், மூளைக்கு இது ஒரு பயிற்சியாக மாறி தூக்கத்துக்கு உதவும்.

குறட்டை, தூக்கத்தில் நடப்பது, வாய்வழியாக மூச்சுவிடுவது போன்ற குறைபாடுகளுக்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். இன்சோம்னியா (Insomnia) போன்ற தீவிரமான தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே-ஸ்வீட் எடு, கொண்டாடு!! (மருத்துவம்)
Next post உணவாலும் உறவு சிறக்கும்! (அவ்வப்போது கிளாமர்)