கண்ணைக் கட்டிக் கொள்ளாதே-ஸ்வீட் எடு, கொண்டாடு!! (மருத்துவம்)
மிகவும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும் கண் மருத்துவர் அவர். காலை 7:00 மணிக்கே அவருடைய பணி நேரம் துவங்கிவிடும். தொடர்ச்சியாக மாலை 5 மணி வரை வேலை. பின் வேறு ஒரு மருத்துவமனையில் கன்சல்டேஷன், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தன்னுடைய பணி தொடர்பான சில ஆய்வுப் பணிகள் என்று எப்போதும் வேலையும் கையுமாகவே இருப்பார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அவரை சந்தித்தபோது, ”வேலையெல்லாம் ரொம்ப குறைச்சிட்டேன். 9 டூ 4 தான் வொர்க். ஞாயிறு முழுக்க ரெஸ்ட் தான். மூன்று மாசத்துக்கு ஒரு தடவை கண்டிப்பா டூர் போறேன்” என்றார் மலர்ச்சியுடன்.
”ஏன் இந்த திடீர் மாற்றம்?” என்று நான் கேட்டதற்கு, ”எனக்கு அடுத்தடுத்து ரெண்டு கண்ணிலும் CSR வந்தது. அதுக்கப்புறம் வேலைகளை எல்லாம் குறைச்சுக்கிட்டேன்” என்றார். CSR என்று கண் மருத்துவத்துறையில் சுருக்கமாக அழைக்கப்படும் Central serous retinopathy என்பது விழித்திரையில் ஏற்படும் ஒரு சிறிய பிரச்சனை. படபடப்பு, அமைதியின்மை, கவலை, ஓய்வின்மை போன்ற காரணங்களால் விழித்திரையின் அடுக்குகளுக்கு இடையே சிறிய நீர்க்கசிவு ஏற்படும். விழித்திரையின் பின்புறம் இருக்கும் எத்தனையோ ரத்த நாளங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து கொஞ்சம் நீர் கசிந்து விட, அது விழித்திரையின் மத்திய பகுதியில் சிறிய குட்டை போல் தேங்கி கொள்ளும்.
அதனால் பாதிக்கப்பட்டவர் பார்வையின் வட்டத்தில் நடுவில் புகை போல தெரிவதாகக் கூறுவார். நேர்கோடுகளைக் கண்டால் அவை சற்றே வளைந்திருப்பது போல் தோன்றும். பெரிய பொருட்களைப் பார்க்கும் போது அளவில் சற்று சிறியவை போல் தெரியலாம். மிகக் கூர்மையாகத் தன் பிரச்சனையை அவதானிக்கும் சிலர், ”பக்கத்துல இருக்குற பொருள் கொஞ்சம் தள்ளி இருக்கிற மாதிரி தெரியுது டாக்டர்” என்பார்கள். தூய வெண்மை நிறப் பொருளைப் பார்க்கையில் அது சற்று அழுக்கடைந்தது போன்றோ, லேசான பிரவுன் நேரத்தில் இருப்பது போன்றோ பாதிக்கப்பட்ட கண்ணின் வழியாகப் பார்க்கும் போது தோன்றும்.
விழித்திரையை நேரடியாகப் பரிசோதித்துப் பார்த்து மருத்துவர் அதனை உறுதிப் படுத்துவார். தூக்கமில்லாமல் இருந்தீர்களா? மனக்கவலை, வருத்தம் ஏதேனும் இருந்ததா? என்பது போன்ற கேள்விகள் இன்னும் தெளிவாக உறுதிப்படுத்திக் கொள்ள அவருக்கு உதவும். பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக ஓரிரு மாதங்களில் தானாகவே சரியாகிவிடக் கூடிய ஒன்று தான். நல்ல ஓய்வு, இசை, யோகாசனம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம். சிலருக்கு ஒரே கண்ணில் மீண்டும் இதே பிரச்சினை ஏற்படலாம். மேலே கூறிய கண் மருத்துவருக்கு ஏற்பட்டதைப் போல அரிதாக இரண்டு கண்களிலும் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும்.
மனம் சம்பந்தப்பட்ட காரணிகள் முதன்மையாக இருந்தாலும், ஸ்டீராய்டு பயன்பாடு, தன்னுடல் எதிர்ப்பு நோய்கள் (autoimmune disorders), உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றிலும் இந்தப் பிரச்சனை காணப்படலாம். 30 முதல் 50 வயது வரையிலான ஆண்களிடையே அதிகமாகக் காணப்படும் இந்த பிரச்சனை பெண்களுக்கும் வரக்கூடும். சராசரியாகப் பார்த்தால் பத்தாயிரம் ஆண்களில் ஒருவருக்கும், ஆறு லட்சம் பெண்களில் ஒருவருக்கும் இந்த நோய் ஏற்படும் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு Fundus fluorescein angiogram என்ற பரிசோதனை செய்யப்படும். அதன் மூலம் எந்த ரத்த நாளத்திலிருந்து கசிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, லேசர் சிகிச்சை மூலமாக அந்த ரத்தநாளத்தில் அடைப்பை ஏற்படுத்தி விட்டால் மீண்டும் கசிவு வருவதைத் தடுக்க முடியும். மீண்டும் மீண்டும் பாதிக்கப்படும் வெகு சிலருக்கே லேசர் பரிந்துரை செய்யப்படும். பெரும்பாலானவர்கள் சொட்டு மருந்துகள், மனப்பதட்டத்தைக் குறைக்கும் மிதமான தூக்க மருந்துகள் மூலமாகவே குணமடைந்து விடுவார்கள்.
என் கிளினிக்கிற்கு எதிர் வரிசையில் கடை வைத்திருக்கிறார் ஒரு இளைஞர். வயது 35க்குள் தான் இருக்கும். ஒரு இடத்தில் இருக்க மாட்டார். கடையைத் திறந்து வைத்துவிட்டு தெருவின் இந்த சாரிக்கும் அந்த சாரிக்கும் நடந்து கொண்டே இருப்பார். இவருக்கும் CSR பிரச்சனை வந்தது. அதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட முறை கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்று வந்தவர். வழக்கமாக இத்தகைய நோயாளிகளுக்கு மிதமான தூக்க மாத்திரைகளைக் கொடுப்பார்கள் என்றேனே, ஓரிருமுறை மட்டுமே மருத்துவரைப் பார்த்த அவர் பின் தானாகவே தூக்க மாத்திரையை மாதக்கணக்காக விழுங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தத் தூக்க மாத்திரைக்கு அடிமையாகவும் ஆகி விட்டார்.
இந்த நிலையை மாற்றுவதற்காகவும் நீர்க்கசிவைத் தடுப்பதற்காகவும் சிகிச்சை அளித்தோம். தற்சமயம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது, ”மேடம்! எனக்கு எப்படி இருக்குன்னு பாருங்க” என்று வந்து விடுகிறார். வருபவர் எப்பொழுதும் பதட்டத்துடனே வருகிறார். எத்தனை நோயாளிகள் இருந்தாலும் வரிசையைப் பொருட்படுத்தாமல் முந்திக்கொண்டு, ”எனக்கு சீக்கிரம் பார்த்து விடுங்க” என்பார் பரபரப்புடன். முழுதாகப் பரிசோதனை செய்து முடிக்கும் வரை காத்திருக்க மாட்டார்.
அவருக்குச் சென்ற மாதத்தில் ஒரு முறை இரண்டாவது கண்ணிலும் அதே பிரச்சனை ஏற்பட்டது. குடும்பத்தினரை வரவழைத்து, மனநல மருத்துவரையும் சந்தித்து பதட்டத்திற்கான சிகிச்சையை எடுங்கள் என்று கூறினேன். லேசர் சிகிச்சையும் அவருக்கு தேவைப்படக் கூடும். மனித உடலைத் தாக்கும் சோரியாஸிஸ், வாதநீர் போன்ற சிலவித நோய்களில், அந்த நோயைக் குறித்த கவலையே நோயின் தீவிரத்தை அதிகமாக்கிவிடும் என்பார்கள். அத்தகைய பிரச்சனைகளில் CSRம் ஒன்று. அதை இந்த இளைஞரின் குடும்பத்தினரிடம் வலியுறுத்தினேன்.
இன்னொரு பெரியவர். இவர் அரசு ஊழியராக பொறுப்பான பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது பணிக் காலத்தின் கடைசி சில மாதங்கள் மிகுந்த அழுத்தமுடையதாக அமைய, இவருக்கும் அந்த சமயத்தில் இந்தப் பிரச்சனை வந்தது. காரணிகள் குறித்து விளக்கமாகச் சொன்னவுடன் உடனடியாக ஒரு மாதம் விடுப்பு எடுத்தார். நடைப்பயிற்சி, புத்தகங்கள் என்று மனதை இலகுவாக வைத்துக் கொண்டார். அதன் பின் தவறாமல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனைக்கு வருகிறார்.
விழித்திரையில் நீர்க்கசிவு ஏற்பட்டதற்கான அறிகுறியே தற்போது இல்லை. பொதுவாகவே அமைதியான குணமுடைய நபர்களுக்கும் கூட வீட்டில் ஒரு மரணம் அல்லது உடல் நலத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அறுவை சிகிச்சையை எதிர்கொள்ள நேரிடும் சூழல்களில் இந்தப் பிரச்சனை வரக்கூடும். அத்தகைய சூழலில் நோய் குறித்து விளக்கிக் கூறினால் பலர் அதை ஏற்றுக் கொண்டு எளிதில் கடந்து வந்திருக்கிறார்கள்.
CSR பிரச்சனையால் அவதிப்பட்டு பின் குணமடைந்த இன்னொரு இளைஞரின் அப்பாவிற்கு பார்வையின் நடுவில் ஒரு படலம் தோன்றியிருக்கிறது. தனக்கு முன்பு மருத்துவர் கொடுத்த சொட்டு மருந்தையும் மிதமான தூக்க மாத்திரைகளையும் தந்தைக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அந்த இளைஞர். நாளுக்கு நாள் தந்தையின் அறிகுறி அதிகமாகிக் கொண்டே போனது. தாமதமாகவே மருத்துவமனைக்கு வந்தார். அப்போது தான் தெரிந்தது, தந்தைக்கு ஏற்பட்டிருந்தது வேறு பிரச்சனை என்பது. கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் காரணமாக அவரின் விழித்திரையில் வேறு விதமான, சற்று அடர்த்தி அதிகமான நீர் தேங்கி இருந்தது (Macular edema). தாமதமாக வந்ததால் முழுதாக பார்வை திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அவருக்குத் தொடங்கப்பட்டன.
இதே போன்றதொரு பிரச்சனையைக் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட சில நாட்களில் சில நோயாளிகள் சந்திப்பதுண்டு. Cystoid macular edema என்ற இந்த பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது. அறுவை சிகிச்சை, காயம் இவற்றின் போது ஏற்படும் வேறு விதமான எதிர்வினைகள் காரணமாக இது நிகழலாம். அழற்சியைக் குறைக்கக்கூடிய சொட்டு மருந்துகளை பயன்படுத்தினால் இதில் பெரும்பாலானவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெகு சிலருக்கு கண்களுக்குள் ஊசி மூலம் சில மருந்துகளை செலுத்த வேண்டியிருக்கலாம்.
பார்வை வட்டத்தில் நடுவில் புகை படிந்தது போல் நிழலாக ஏதோ தெரிகிறதா? உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது மனநலம் தொடர்பான பிரச்சினையாக இருப்பின், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வும் மன அமைதியும் பெறுவது மிக முக்கியம். இன்றைய துரித உலகில் இந்த பிரச்சனை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
எனவே பணிச்சுமைக்கு இடையில் வலிந்து ஓய்வுக்கான நேரத்தையும் ஒதுக்க வேண்டும். மனதை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். தேவையற்ற கவலைகளை ஒதுக்கி வாழ்க்கையை இனிப்புடன் கொண்டாடலாம். ஏனெனில் CSR பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவருக்கு அந்தப் பிரச்சனை மீண்டும் வரக்கூடும் என்கிறது புதிய புள்ளி விபரம் ஒன்று!