கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 17 Second

பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே மனப்பக்குவத்தை நாம்தான் கற்றுத்தர வேண்டும். பெரியவர்களைப் போல பிரச்னைகளை சமாளிப்பது, கஷ்டங்களை எதிர் கொள்வது என்பதெல்லாம் கிடையாது. அவர்களின் இளமைப்பருவத்தில் ஏற்படும் சிறிய ஏமாற்றங்களை மனதளவில் பாதிக்காதவாறு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் எதையும் சுலபமாக புரிந்து கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள். தொழில் நுட்பமும் அவர்களுக்கு உறுதுணையாக அமைந்து விட்டது. வாழ்க்கையின் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பாவிக்கும் தன்மை அமைந்துவிட்டால், எப்படிப்பட்ட சூழலையும் எதிர் கொள்ளலாம்.

உதாரணமாக, ஒரு செல்லப் பிள்ளை வீட்டில் எது கேட்டாலும் உடனே கிடைத்துவிடும் என்ற சூழலில் இருக்கலாம். பள்ளியில் பலதரப்பட்ட பிள்ளைகளுடன் பழகும் சூழலில் அங்குள்ள வசதிகளுக்கேற்றபடி தன்னை அமைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்து விட்டால், அவன் வாழ்க்கையில் எதையும் சுலபமாக எடுத்துக் கொண்டு எதையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வான்.

எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைத்தால், வளர வளர அது பலவிதமான சிரமங்களை எதிர் கொள்ள செய்யும். எல்லாப் பெற்றோருக்குமே தனது பிள்ளைகள் எப்பொழுதும் உயர்வுதான். பலருடன் ஒரு போட்டியில் கலந்து கொள்ள நேரும் பொழுது, வெற்றி தனக்குதான் என்கிற அழுத்தமான கருத்தை கைவிட வேண்டும். உண்மையான திறமையை யாராலும் முறியடிக்க முடியாது, அது எண்ணத்துடன் மட்டுமல்லாது, செயலிலும் பிரதிபலிக்க வேண்டும். தன்னம்பிக்கை நமக்கு அவசியம் தேவைதான். ஆனால், அதீத நம்பிக்கையுடன், அதற்கேற்ற உழைப்பைத் தராமல், முயற்சியும் எடுக்காமல் வெற்றியை மட்டும் எதிர்பார்ப்பது நல்லதல்ல.

சில பிள்ளைகள் எப்பொழுதும் அதிகமாகப் பேசுவார்கள். அவர்கள் பேச்சு தோரணையே தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் இருப்பார்கள். சில பிள்ளைகள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் கேட்கும் அனைத்திற்கும் சரியான விடை தந்து அசத்துவார்கள். அமைதி குணமோ, படபடவென்று பேசும் குணமோ அவர்கள் குடும்பத்திலிருந்தோ, வளரும் சூழலையோ பொறுத்து இருக்கலாம். பட்டிமன்றம் என்றாலோ, பேச்சுப் போட்டி என்றாலோ தான்தான் வெல்வோம் என்கிற அதீத நம்பிக்கையில் இருந்த பையன், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டான்.

அவன்மீது நம்பிக்கை கொண்ட ஆசிரியர்களும் அவன்தான் வெற்றியுடன் வருவான் என்று நினைத்தனர். முதல் சுற்று இரு அணிகளும் முடித்த நிலையில் நம்பிக்கை கொண்ட பையன் அணியே முன்னிலையில் இருந்தது. கடைசி சுற்றில், இறுதியில் வாதாடும் சமயம். அவன் வாய் தவறி உளறிவிட்டான். அது எதிர் அணி பிள்ளைகளுக்கு சாதகமாயிற்று. எதிர்பார்த்த வெற்றி கைமாறிப் போனதால், மிகவும் நொந்து சோர்வாகிப் போனான். அவனின் தவறு இதில் எதுவுமில்லை.

சந்தர்ப்பம் அவனுக்குக் கைதரவில்லை. இருப்பினும் அவன் மிகவும் வருந்தியதற்கு காரணம், அவன் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கை. நூறு சதவிகித நம்பிக்கை சமயங்களில் வெற்றி தராத போதுதான், ஏமாற்றங்களைத் தாங்க முடிவதில்லை. அதனால் ஒரு போட்டியில் சேரும் பொழுதே ‘வெற்றி-தோல்வி’ இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும். பல முறை தோற்றாலும் கூட, அது பின்னால் கிடைக்கப் போகும் வெற்றிக்கு அடையாளமாகவும், நல்ல ஒரு அனுபவத்தையும் கற்றுத்தரும். தொலைக்காட்சிகளில் நடைபெறும் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் கூட நடுவர்கள் சொல்லும் காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். “இன்றைய நாள் உனக்கு கைகொடுக்கவில்லை” என்பார்கள். அதுதான் நடைமுறையில் ஏற்படும் தீர்மானத்தின் முடிவாகும்.

எதையும் முயற்சி செய்வோம். வெற்றி பெறும் அளவுக்கு முயல்வோம். முதல் முறை வெற்றி கிடைக்காவிட்டால், மீண்டும் முயலுவோம். ஒவ்வொரு முறையும் தோற்கும் காரணம் தெரிந்து கொண்டு, அடுத்தடுத்த முயற்சிகளில் தவறுகளை அடியோடு போக்கிக் கொள்ளலாம். கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி நம்மைத் தேடிவரும். சில பிள்ளைகள், அவர்கள் மீது குறைகள் சொல்வதை விரும்பமாட்டார்கள். ஆனால் சொல்லும் பொழுது குறைகளையே நிறைவாக சொல்லும் பட்சத்தில் கண்டிப்பாக அவர்களுக்குள் நம்பிக்கை என்னும் விதையை விதைக்க இயலும். அவர்களிடம் காணப்படும் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறி, சிலவற்றை மட்டும் மாற்றிக் கொண்டால், வெற்றிக் கனி அவசியம் கிட்டும் என்பதை எடுத்துரைக்கலாம்.

ரொம்பவும் செல்லமாக வளர்க்கப்பட்ட ஒரு பெண்பிள்ளை, பள்ளியிலும் அனைவரிடமும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள். அப்படிச் செல்லமாகப் பேசி பழகினால்தான் அவளை எல்லோரும் விரும்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ‘ஏன் வீட்டுப் பாடம் செய்யவில்லை’ என்றால் ஒரு சிரிப்புதான் பதில். ‘ஏன் தேர்வுக்குப் படிக்கவில்லை’ என்று கேட்டாலும் சிரிப்புதான். அவளைப் பிள்ளைகள் நாளடைவில் கேலி செய்ய ஆரம்பித்தனர். பலப்பல பெயர்கள் சொல்லி கூப்பிட ஆரம்பித்தனர். அவள் அப்பொழுதும் தன் குணத்திலிருந்து மாறவில்லை. ஒரு நாள் ஆசிரியர் சிறிது நேரம் கழித்து வகுப்புக்குள் நுழைய நேர்ந்தது. வகுப்பறைக்குள் ஒரே கூச்சல்.

ஒரு பையன் சக மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான். ‘எப்பொழுதும் சிரிப்பவர்களுக்கு என்ன பெயர்?’ ஆசிரியர் மிகவும் அமைதியாக அடி எடுத்து வைத்தார். பதில் சொல்ல காத்திருந்த பையன்கள் வாயடைத்து நின்றனர். ஆசிரியர் எதுவும் கண்டு கொள்ளாதது மாதிரி பாடம் நடத்த ஆரம்பித்தார். மாலையில் குறிப்பிட்ட மாணவியை அழைத்து அறிவுரை வழங்கினார். எல்லா கேள்விகளுக்கும் கொஞ்சிப் பேசி சிரித்தால் மற்றவர்களுக்கு பேசும் பொருளாக அமைவது நல்லதல்ல.

வீட்டிற்குள் செல்லமாக இருக்கலாம். பொது இடத்தில் தைரியமும் தேவை. சிறு வயதில் மற்றவர் கேலி, கிண்டல் செய்வது தவறாகத் தெரியாமல் போகலாம். பெண்பிள்ளை வளர்ந்தவுடன், மற்றவர் பேசுவதற்கு அர்த்தம் தெரிய ஆரம்பித்து விட்டால், அவள் மனம் என்ன பாடுபடும்? ஒரு சந்தர்ப்பத்தில் மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும். ஆசிரியர் எடுத்துரைத்த பின் அவனின் செய்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.

பல வருடங்களுக்குப் பின் அவளை ஒரு கணக்காளராக சந்திக்க நேர்ந்த பொழுது, அவள் அதே இனியவளாகத்தான் தெரிந்தாள். தன் இளமைப் பருவத்தை புரட்டிப் பார்த்ததாகவும், அதன் மூலம் தான் நிறைய கற்றதாகவும் கூறினாள். எப்படி கற்பிப்பவர் என்னும் ஆசிரியர், வகுப்பறையில் நடத்தும் பொழுது நாற்பது பிள்ளைகளிடம் கண்டிப்பவராக நடந்து கொண்டு வகுப்பறைக்கு வெளியே ‘அம்மா’ போலவும் ‘தோழி’யாகவும் நடந்து கொள்கிறாரோ, அது போல் தானும் மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பதாகவும், கற்பித்த ஆசிரியையிடம் பாசம் தானே வருவதாகவும் கூறினாள்.

இதெல்லாம் நம் சாதனைகள் என்று நினைக்கும் பொழுது, ஆண்டுகள் கடந்தாலும் பெருமிதம் நமக்குள் எழத்தான் செய்கிறது. நாம் பிள்ளைகளைப் பற்றி புரிந்து வைப்பது போன்று அவர்களும் ஒவ்வொரு கற்பிப்பவரை பற்றியும் ஒரு ஆராய்ச்சியே நடத்தி விடுவார்கள் போலும்!நம் சுயநலத்திற்காக பல சாதனைகள் புரிந்து வெற்றி பெற்றாலும், இது போன்ற மாணவச் செல்வங்களை சமுதாயத்தில் தலை தூக்கி விடுவது என்பது பெரும் சவாலாகும். ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

சில பெற்றோர்கள் தங்கள் வேலை பளுவினாலோ, விடுமுறை கிடைக்காமலோ வீட்டிலிருந்து வேறு யாரையாவது அனுப்பி வைப்பது வழக்கம். சிலருக்கு வீட்டிலிருக்கும் தாத்தா- பாட்டிகள் கூட வருவதுண்டு. அதுபோல் ஒரு பெண் தன் உறவினருடன் பெருமையாக பேசினார். அவரும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார். எல்லா பெருமையும் தாய், தந்தையையே சேரும் என்றார். அவரும் ‘ஆம் எல்லாம் எங்கள் வளர்ப்பு’ என்று பெருமிதம் கொண்டார்.

அப்பொழுதுதான் தெரியவந்தது. அந்தப் பெண் மாணவியின் தந்தை அவர்தான், திருமணம் முடிந்து பதினெட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த பெண்ணாம். பாவம், அந்தப் பெண் கல்லூரி முடிப்பதற்குள் அவருக்கு மேலும் மூப்பு வந்து விடுமே! எவ்வளவு விதவிதமான குடும்ப சூழல்கள்! இவையெல்லாம் அவரவர் குடும்ப விஷயங்கள் என்றுதான் விட்டு விடுவோம். ஆனால் ஏதோ ஒரு சூழல் குறிப்பிட்ட பையனையோ, பெண்ணையோ சமயங்களில் பாதிக்கிறது என்று நினைக்கும் பொழுதுதான் அதன் பின்புலத்தை ஆராய வேண்டியுள்ளது. அதுபோல் மற்றொரு சிறுமி, பாவம் அவளின் தாய்-தந்தை பள்ளிக்கே வரமாட்டார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குழந்தையாம்.

அவளும் அப்பா-அம்மாவுடன் ஜாலியாக இருக்கமாட்டாள். அவர்களும் உற்சாகம் இல்லாமல் அவளை கவனம் செலுத்துவது போல் தோன்றும். எல்லோரையும் போல் அவள் ஓடியாடி அம்மாவுடன் விளையாடி, கதைபேச நினைப்பாள். அந்த சந்தர்ப்பம் கிடைக்காமல் ஏங்குவாள் போல் தோன்றும். ஆசிரியர் சொல்வதை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்படுவாள். விஷயத்தைப் புரிந்து படிக்கவும் வெகு நேரம் ஆகும். அவள் குடும்ப சூழல் பற்றி தெரிந்தவர்களுக்கு அவள் பின் தங்குவதன் காரணம் புரியும். திடீரென புதிதாக யாரேனும் அவளுக்குக் கற்பிக்க வந்தால் வித்தியாசமாக நடந்து கொள்கிறாளே என்று நினைப்பார்கள்.

அப்படி சில நேரங்களில் நடந்ததுமுண்டு. ஒரு நாள் முழுக்க சிறுமி அழுது கன்னம் வீங்கி ‘அப்பாடா’ என்றாகிவிட்டது. ஆறுதல் சொல்லி புரிய வைத்து, அரவணைத்து வழி நடத்தினோம். கடவுள் ஒவ்வொருவருக்கும் சில சிறப்பான அம்சங்களையோ, கடினமான சூழல்களையோ தந்திருக்கிறார். அவை எந்தெந்த மாதிரி என்பதை புரிந்து கொண்டோமானால் அதற்கேற்ற அன்புகலந்த போதனைகளால் சரிசெய்ய முடியும்.

எதிர்பார்த்து, சில விஷயங்கள் நடக்காதபோதுதான் பிள்ளைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நாமும் அவர்களை அப்படி ஒரு நிர்ப்பந்தத்தில் விடாமல் முன்னதாகவே ஆறுதல் தரும் விஷயத்தில் யோசித்து செயல்படலாம். நினைத்தது கிடைத்துவிட்டால் சந்தோஷம். கிடைக்காமல் போனால் வேறு எத்தனையோ விஷயங்களிலும் சாதிக்க முடியும் என்னும் மனதைரியத்தை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டும் எதிர்பார்த்தல்தான் வாழ்க்கை என்றில்லாமல், கிடைப்பதை அனுபவித்தலும் ஒரு சுகமான நிலைதான் என்பதை வலியுறுத்திக் கொண்டும் இருந்தாலே பிள்ளைகளுக்கு மனப் பக்குவம் வந்து விடும். மன வலிமை இழந்து தன் நோக்கம் நிறைவேறாமல் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இளம் பிள்ளைகளை நாம் இழந்திருக்கிறோம்.

அப்படி ஒரு நிலைமை என்றும் நடக்கக் கூடாது. பிள்ளைகள் சாதிக்கப் பிறந்தவர்கள். அதனால், அவர்களுக்கு வேண்டிய படிப்பினைகளையும், நீதி நெறி முறைகளையும் நன்கு உணர்த்தினோமா, உணர்த்துகிறோமா என்று நம்மை நாமே சோதித்துக் கொள்வதும் அவசியமாகிறது. வீடு, பள்ளி, சமூகம் இவை அனைத்தும்தான் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடிகிறது.எப்படியும் சாதித்தே ஆக வேண்டும் என்று மும்முரமாக உழைக்கும் சில பிள்ளைகள் முதல் முயற்சியில் சரிவர சாதிக்க முடியவில்லை என்றால் சில மாதங்கள் அல்லது அடுத்த ஆண்டு கூட முயற்சிக்கிறார்கள்.

நிறைய பிள்ளைகள் போட்டித் தேர்வுகளை நிறைய முறை விடாமுயற்சியாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். குடும்ப சூழலும், குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பும் இருந்தால் இவையனைத்தும் அவர்களுக்கு சாத்தியம்தான். சில குடும்பங்களில் வயது ஏறி விடுமே என்கிற ஆதங்கத்தில் வேறு ஏதேனும் படிப்பை தொடரச் செய்வார்கள். ஏதேனும் பிடித்துக் கொண்டே முயற்சியும் மேற்கொள்ளும் பொழுது, அவர்கள் நோக்கம் பூர்த்தியாவதுடன், நேரமும் வீணாவதில்லை.

எப்படியும் பணம் செலுத்தியாவது தன் நோக்கம் நிறைவேறும் என்று நினைக்கத் தொடங்கி விட்டால், அவனின் கடின உழைப்பிலும், முயற்சிகளிலும் ஊக்கம் குறைய ஆரம்பித்து விடும். ஒரு வயதான தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்த ஒரு சிறுவன், பல நாட்கள் சிறப்பு வகுப்பிற்குச் செல்லாமல் நண்பன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தானாம். சிறப்பு வகுப்பிற்குத் தர வேண்டிய மாதப் பணத்தையும் நண்பனுடன் ‘பார்ட்டி’ செய்திருந்தான். சில நாட்களாக சிறப்பு வகுப்பிற்கு ‘ஏன் வரவில்லை’ எனக் கேட்பதற்காக ஆசிரியை வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் பாட்டிக்கு விஷயம் தெரிந்த மறுகணமே, குடும்பத்தில் சலசலப்புகள் ஆரம்பித்ததாம்.

பெற்றோர் வெளியூரில் இருந்ததால், வேண்டிய பணம் அனுப்பித் தருவார்களாம். வயதானவர்கள் தினம் அவனுடன் பின் தொடர இயலவில்லை. அந்த வருடம் முடிந்தபின், பெற்றோர் இருப்பிடத்திலேயே அவனை சேர்த்து விட்டார்களாம். எங்கேயும் ஒரு சில இடங்களில்தான் இப்படி நிகழ வாய்ப்புண்டு. ‘பொதுவாக பிள்ளைகள் இப்படித்தான்’ என்று சொல்லிவிட முடியாது. அமெரி்க்காவில் இருக்கும் ஒருவரின் பிள்ளை இங்கு நாள் தவறாமல் ‘டியூஷன்’ வகுப்பு எடுத்துக் கொள்கிறான்.

ஆசிரியர் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட அவன் ஒரு நாளும் விடமாட்டானாம். எல்லாம் நம் இருப்பிடம், சூழல், வளர்ப்பு முறை இவற்றைப் பொறுத்தே கல்வி ஆர்வம் வளர்கிறது. எத்தனை கூலி வேலை செய்பவர்களின் குடும்பத்தில் பிள்ளைகள் பள்ளி முதல் மதிப்பெண் எடுத்து சாதிக்கிறார்கள்.எவ்வளவு வசதிகள் இருந்தாலும், அது பற்றி நினைக்காமல், படிப்பில் மட்டும் ஊக்கம் செலுத்தி பிள்ளைகளை சாதிக்கச் செய்வது என்பது தான் சிறந்த வழியாகும். நம் அந்தஸ்து, பெருமை, உயர்வு போன்றவற்றை ஓரம் கட்டி, கல்வியில் அனைவரும் சமம் என்ற உண்மையினை உணர்த்தினாலே மாணவ சமுதாயம் மேம்படும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பானையும் உடையக்கூடாது ரிங்கும் கீழே விழக்கூடாது! (மகளிர் பக்கம்)
Next post வசம்பு வைத்தியம்! (மருத்துவம்)