உலகில் எங்கிருந்தாலும் துப்பறியலாம்!! (மகளிர் பக்கம்)
ஒரு விஷயத்தை துப்பறிந்து அதில் உள்ள உண்மையை கண்டறிவது என்பது ஒரு தனிப்பட்ட கலை. அதனை பெரும்பாலும் ஆண்கள் தான் செய்து வந்தனர். ஆனால் இந்த துறையில் இருபத்து ஐந்து வருடங்களாக தனக்கென்று ஒரு பாதையினை அமைத்துள்ளார் கீதா. இவர் சென்னையில் ‘ஆல்பா டிடெக்டிவ் சர்வீஸ்’ என்ற பெயரில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். தன் நிறுவனம் மூலம் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் குழம்பி தவிப்பவர்களின் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். யாருக்கும் எதற்கும் அஞ்சாத துணிச்சலான பெண்ணாக திகழ்ந்து வரும் கீதா, தான் சந்தித்த சுவையான, பரபரப்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
* துப்பறியும் துறை மேல் ஆர்வம் ஏற்படக் காரணம்?
நான் பிறந்தது திருநெல்வேலி. தூத்துக்குடியில் இளங்கலையில் ஹோம் சயின்ஸ் துறையில் பட்டம் பெற்றேன். அதன் பிறகு எனக்கு திருமணமானது. கல்யாணத்திற்கு பிறகு தான் முதுகலையில் சோஷியாலஜி சார்ந்த பட்டப்படிப்பு படிச்சேன். நான் சிறுவயது முதலே எந்த விஷயத்திற்கும் பயப்படமாட்டேன். செய்து தான் பார்க்கலாமே. அதனால் என்ன தெரிந்து கொள்ள முடியும்னு ஆர்வம் எனக்குண்டு. மேலும் எனக்கு ஒரு விஷயத்தை துப்பறிவதிலும் ஆர்வம் அதிகம். அதனால் படிப்பை முடித்த கையோட அது சார்ந்த துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. திருமணமாகி சென்னைக்கு வந்ததும், பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் என் அடிமனதில் உள்ள துப்பறியும் தாகத்திற்கு ஏற்ற வேலைக் கிடைக்குமான்னு தேடிக் கொண்டு இருந்தேன்.
நாம் ஒரு விஷயத்தைப் பற்றிய சிந்தனையில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தால் அது சார்ந்த விஷயம் தன்னால் நடக்கும் என்பதில் என் வாழ்க்கையில் நடந்த அந்த நிகழ்ச்சியே உதாரணம். நான் பள்ளியில் ஆசிரியர் வேலைப் பார்ப்பதால், வீட்டிலும் டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தேன். என்னிடம் டியூஷன் படித்த ஒரு மாணவியின் அம்மாவிற்கு, அவரின் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டார்.
அது குறித்து தெரிந்து கொள்ள அவர் என்னுடைய உதவியை நாடினார். நானும் அவருக்கு உதவ சம்மதித்தேன். காரணம் இந்த ஒரு வாய்ப்புக்காகத் தான் நான் பல நாள் காத்திருந்தேன். நானும் காவல் துறை உதவியுடன் உண்மை என்ன என்று கண்டறிந்து அந்த அம்மாவிற்கு வெளிப்படுத்தினேன். அந்த சமயத்தில் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரி விஜயகுமார் மற்றும் திலகவதி ஐ.பி.எஸ் அவர்களின் நட்பு எனக்கு கிடைத்தது.
என்னுடைய துப்பறியும் திறமையை கண்டு, அவர்கள் என்னை மேலும் ஊக்குவித்தனர். ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருந்த துப்பறியும் சிங்கம் அந்த நிகழ்விற்கு பிறகு எழுந்து கொண்டது. என் கணவரிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் சம்மதிக்க. எனக்கான ஒரு குழு அமைத்து 25 வருடங்களுக்கு முன் இந்த நிறுவனத்தை துவங்கினேன். இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களை துப்பறிந்து அதில் உள்ள உண்மையை காவல் துறையினருக்கு கண்டுபிடித்து தந்து பாராட்டும் பெற்றிருக்கேன்.
* உங்கள் நிறுவனத்தின் பணி?
திருமணத்திற்கு முன் மணமகன் பற்றியோ, மணமகள் பற்றியோ அவர்கள் குடும்பத்தினர் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். பையனுக்கு தவறான பழக்க வழக்கம் உள்ளதா, அவர்கள் கொடுத்திருக்கும் தகவல் உண்மையான்னு எங்களிடம் கண்டறிய சொல்லி வருவாங்க. ஆண், பெண் அவர்களின் புகைப்படம் மற்றும் விலாசம் தெரிந்தால் போதும். எங்க குழுவில் உள்ளவர்கள் அவர்களை பின்தொடர்ந்து அவர்களைப் பற்றிய முழு விவரங்களை கண்டறிவர். இதில் முக்கியமாக அந்த ஆணிற்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ… நாங்க அவர்களை பற்றிய செய்தியினை சேகரிக்கிறோம் என்பதை தெரியாத வண்ணம் துப்பறிவோம். தேவைப்பட்டால் புகைப்படமும் எடுப்போம்.
அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் ஆதாரப்பூர்வமாக கொடுப்போம். இன்றைய காலத்தில் கல்யாணம் செய்யும் முன்பு அவர்களைப் பற்றிய முழு விவரம் தெரிந்திருப்பது அவசியம். ஒரு சிலர் பகலில் ஒரு வேஷமும் இரவில் ஒரு வேஷமும் போடுவார்கள். அதை கண்டறிவது தான் எங்களின் முக்கிய திறமையே. எங்களின் செயலால் பலரின் வாழ்க்கையினை காப்பாற்றி இருக்கிறோம்.
ஒரு சிலர் திருமணத்திற்கு பிறகு தங்களின் கணவன் அல்லது மனைவி மீத சந்தேகப் படுவார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையில் பெரிய விரிசல் ஏற்படும். அதற்கான தீர்வினையும் அளித்து வருகிறோம். குடும்பம் சார்ந்து இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நாங்க சேவை செய்து வருகிறோம். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி பிடிக்காமல், அதன் எதிராளி அவர்களை தொழில் ரீதியாக அழிக்க திட்டமிடுவான். அந்த சமயத்தில் தங்கள் நிறுவனத்தின் சீக்ரெட் விஷயங்களை எதிராளிக்கு சொல்லும் அந்த கருப்பு ஆடு யார் என்பதையும் கண்டறிந்து கொடுத்து வருகிறோம். சில இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் உண்மை நிலை என்ன என்பதை கண்டறிய சொல்வார்கள்.
பெற்றோர்கள் தங்களின் டீன்ஏஜ் மகன் அல்லது மகளின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய சொல்லி கேட்பார்கள். கட்சித் தலைவர்கள் தங்களின் உண்மையான தொண்டன் குறித்து துப்பறிய சொல்வார்கள். கடத்தப்பட்டவர்களை கண்டறிவது. என பல விஷயங்களுக்கு நாங்க உதவி செய்து வருகிறோம். காவல் துறையை நாடிச் சென்றால் தங்களின் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்பதால் எங்களை நாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றபடி நாங்களும் செயல்பட்டு வருகிறோம். குடும்ப பிரச்னைகளில் ஆண், பெண்களின் தவறுகளை கண்டறிந்தால், அதற்கான கவுன்சலிங்கும் அளித்து அவர்களின் மனம் சிதைவு ஏற்படாமல் காப்பாற்றி இருக்கிறோம்.
* ஒரு பிராஜக்ட் முடிக்க எவ்வளவு காலமாகும்
அது அந்தந்த கேஸ்களை பொறுத்தே அமையும். உதாரணமாக மணமகள், மணமகனை சரிபார்க்க பத்து முதல் பதினைந்து நாட்களாகும். கணவன், மனைவி சந்தேகங்களுக்கு ஒரு மாதம் கூட ஆகும். வீட்டைவிட்டு ஓடியவர்கள், காணாமல் போனவர்கள், தொலைந்து போன குழந்தைகள், இளம்வயதினர், முதியோர்களை கண்டுபிடிக்க குறிப்பட்ட காலம் சொல்ல முடியாது. ஓரிரு நாட்களிலும் கண்டுபிடிக்கலாம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம். நாங்க தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இந்தியா முழுக்க செய்து வருகிறோம். வெளிநாடுகளிலும் எங்கள் சேவை கிடைக்க செய்திருக்கிறோம். தற்போது தொழில்நுட்ப வசதி இருப்பதால், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சாமர்த்தியமாக துப்பறிந்து கண்டறிய முடியும்.
* நீங்கள் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவம்?
முப்பது வயது இளம்பெண் ஒருவர். தனியாக வசித்து வந்தார். அவரை யாரோ கண்காணிப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு எங்களின் உதவியை நாடினார். நாங்கள் அவரை அவர் வீட்டில் சென்று பார்த்த போது, அவரின் வீட்டு ஜன்னல்களை எல்லாம் மூடி வைத்திருந்தார். அதேபோல் எலக்ட்ரானிக் சாதனங்களையும் துணிகள் கொண்டு மூடி மறைத்திருந்தார். நாங்கள் அவரின் வீட்டில் கேமராவினை பொருத்தி சோதனை செய்தோம். இரண்டே நாளில் அந்தப் பெண் இல்யூஷனால் பதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதாவது அவரே தன்னை யாரோ கண்காணிப்பது போன்று கற்பனை செய்து கொண்டு பயப்படுவதை கண்டறிந்தோம். பிறகு அவருக்கு ஒரு மனநல ஆலோசகர் மூலம் கவுன்சலிங் கொடுத்து சரி செய்தோம். அதேபோல் மற்றொரு சம்பவம்.
சென்னை அண்ணா நகரில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு நாள் தங்களின் பெண் பள்ளிக்கு செல்ல மறுப்பதாகவும், எவ்வளவு புரிய வைத்தும் அவள் அதை கேட்கவில்லை என்று கூறி எங்களை அழைத்தார்கள். எங்கள் டீம் சென்று ஆராய்ந்தபோது அந்தப் பெண் மீது தவறு இருந்ததை கண்டுபிடித்தோம். அந்த மாணவி பெற்றோர் ஊரில் இல்லாத போது தன்னுடன் படிக்கும் மாணவிகளை வீட்டிற்கு அழைத்து மதுபான விருந்து தந்திருக்கிறார். இதனை விரும்பாத அந்த மாணவிகள் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர். பிறகு அந்த மாணவிக்கு கவுன்சலிங் கொடுத்து திருத்தி அவளை வழக்கம்போல் பள்ளி சென்று வர செய்தோம்.இதுபோல் பலர் தங்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்று எங்களை அணுகுவார்கள்.
* மிரட்டல்கள் போன்ற பிரச்னைகளை சந்தித்துள்ளீர்களா?
நாங்கள் துப்பறிவதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படித்தான் எங்க குழுவிற்கு நாங்க பயிற்சி அளித்திருக்கிறோம். அப்படியே மிரட்டல் வந்தாலும், அதை எவ்வாறு வீரத்துடனும் விவேகத்துடனும் எதிர் கொள்ள வேண்டும் என்று நாங்க பயிற்சி எடுத்திருக்கிறோம்.
* எதிர்கால லட்சியம்?
இந்த சமுதாயம் பயன்பெற மனிதநேயம், நேர்மை, உண்மை, பிறருக்கு உதவும் வள்ளல் குணத்துடன் வாழ்வது மட்டுமில்லாமல், பிறரையும் வாழ வைப்பது தான் எங்களின் லட்சியம். தவறு எங்கிருந்தாலும் யார் செய்தாலும் அதை வெளிப்படுத்தி அவர்கள் திருந்தி வாழ்வதற்கான பணியினை மேலும் மேம்படுத்தி திட்டங்கள் தீட்டி வருகிறோம்.