எனது குரலை வைத்தே பலர் என்னை அடையாளப் படுத்துகிறார்கள்! (மகளிர் பக்கம்)
நடிகை வினோதினி
“எங்கேயும் எப்போதும்” படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து மனதில் பசக்கென்று ஒட்டிக் கொண்டவர் நடிகை வினோதினி. “ஆண்டவன் கட்டளை” படத்தில் விஜய் சேதுபதியுடன் காமெடி கலந்த வக்கீல், கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் இறுதிக் காட்சி என நடித்தவர், “சூரரைப் போற்று” படத்தில் நடிகர் சூர்யாவுடன், ஏர்போர்ட் காட்சிகளில் அதகளம் செய்திருப்பார். கூத்துப்பட்டறையில் நடிப்பை பட்டை தீட்டிக் கொண்டவரிடத்தில், அவரின் நாடக ஆர்வம்.. சினிமாவில் நடிக்க வந்தது.. குடும்பம்.. சமூக வலைத்தளங்களில் அவரின் பங்களிப்பு குறித்தெல்லாம் பேசியபோது..
*உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
நான் படித்து வளர்ந்தது சென்னையில். எத்திராஜ் கல்லூரியில் படித்து, எம்பிஏ முடித்ததும், பெங்களூருவில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியில் இருந்தேன். நான் படித்த காலத்தில், மேடை எனக்கு பரிச்சயமான ஒன்றாக இருந்தது. எனது அம்மா அதே கல்லூரியின் தமிழாசிரியர்.கூடவே கல்லூரியில் தமிழ்துறை தலைவராகவும் இருந்தவர். அதனால் இலக்கிய ஆர்வம், நாடக ஆர்வம் எல்லாமும் அம்மாவுக்கு இருந்தது.
அம்மாவும் நாடகங்களை எழுதி கல்லூரி மாணவிகளை அதில் நடிக்க வைத்தவர்தான். இதுவே கல்லூரி காலங்களில் நானும் மேடையேற, பெற்றோரிடம் ஆதரவைப் பெற்றுத் தந்தது. நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தில் கூத்துப் பட்டறையில் என்னையும் இணைத்துக்கொண்டு, நடிப்பு பயிற்சி, மேடை நாடகங்கள் என பயணித்தேன். சினிமா அறிமுகம் கிடைத்த பிறகு, ஒரு படத்தில் இருந்து இன்னொரு படமென வாய்ப்புகள் தொடர ஆரம்பித்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன்.
*நடிப்பில் ஆர்வம் வந்தது எப்படி?
பள்ளிப் பருவத்தில் எனக்கிருந்த ஆசை மேடையில் நானும் இருக்கனும் என்பதே. மேடையில் இருக்கும்போது கைதட்டல் பெறுவது பிடித்தது. கல்லூரி நாட்களில் சபா நாடகங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. கல்லூரியில் படித்தபோது எல்லா கல்சுரல்ஸ் நிகழ்ச்சியிலும் இருப்பேன். இதில் அதிகம் என்னைக் கவர்ந்தது காமெடி நாடகங்கள்தான். ரியல் லைஃப்லையும் எனக்கு காமெடி சென்ஸ் உண்டு. க்ளவுன் ஆக்டிங் நிறையவே கொடுப்பேன். ஒரு தியேட்டர் குரூப் ஆரம்பித்து, அதில் அமெச்சூர் நாடகங்களை கொடுக்க வேண்டும் என்பதே அப்போதைய நோக்கமாக இருந்தது.
வேலை பார்த்துக் கொண்டே நடிப்புத் தேடலில் இருந்ததில், பல குழுக்களில் என்னை இணைத்து, பகுதி நேர நாடகங்களில் நடித்துவந்தேன். அப்போது தெருக்கூத்து, கிராமியக் கலைகள், சபா நாடகங்கள், அமெச்சூர் நாடகங்கள், நவீன நாடகங்கள் என பலவும் எனக்குத் தெரியவந்தது. நவீன நாடகத்தில் முருகபூபதி போன்ற தீவிர அரசியல் சிந்தனையோடு இயங்கும் ஆட்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிந்து கொண்டேன்.
அரசியல் நையாண்டிகளுடனும், நாடகத்தை நாடகத்திற்காகச் செய்யும் கூத்துப்பட்டறை போன்ற குழுக்களும் இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. நடிப்பை தீவிரமாகச் சொல்லித் தரும் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை இயக்கிய மேஜிக் லாண்டர்ன் நிறுவனம், கருணபிரசாத்தின் மூன்றாம் அரங்கு நாடகக் குழு, ஞானியின் பரிக்ஷா. சங்கரன் போன்றவர்களோடு அவர்களின் நாடகக் குழுக்களில் இணைந்து வேலை செய்தேன்.
*கூத்துப் பட்டறைக்குள் வந்தது எப்படி?
சில குழுக்களில் அரசியல் சிந்தனை இருக்கும். ஆனால் நடிப்புக்கான பயிற்சி இருக்காது. ஒருசில இடத்தில் நடிப்பு பயிற்சி இருக்கும். ஆனால் அரசியல் பார்வையின்றி
நாடகத்தை பொழுதுபோக்காக பார்ப்பார்கள். இது இரண்டும் சேர்ந்து அமைந்த இடமே கூத்துப்பட்டறை. 2006 முதல் 2010 வரை கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தேன். புதுடெல்லியில் உள்ள மினிஸ்ட்ரி ஆஃப் கல்ச்சர் ஸ்பான்சர் செய்யும் தியேட்டர் அரங்காக கூத்துப்பட்டறை இன்றும் இருக்கிறது. நான், கலைராணி, பசுபதி, குருசோமசுந்தரம், விஜய்சேதுபதி, விமல், விதார்த், ஜார்ஜ் போன்ற நடிகர்கள் கூத்துப்பட்டறையில் முறையாகப் பயிற்சி பெற்று சினிமா வாய்ப்பு கிடைத்ததால், சினிமாவிற்கு நடிகர்களை தயார் செய்யும் இடமாக தற்போது தோற்றம் தர ஆரம்பித்துள்ளது.
கூத்துப்பட்டறை முத்துசாமி ஐயாவுடன் முழு நேரமும் ரவுண்ட் த டேபிளாகத்தான் நாங்கள் இருப்போம். நிறைய விவாதங்களும், கலந்துரையாடல்களும் இருக்கும். அவரின் வழிகாட்டலில், அவரது நேரடிப் பார்வையில் முறையாய் பயிற்சி எடுத்து வெளியில் வந்தோம். அப்போது வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து நடிப்பு பயிற்சி கொடுத்தார்கள். உடல், மனம், குரல் மூன்றுக்குமான பயிற்சிகளுடன், முழுவதும் நடிகனாக வடிவமைக்கக்கூடிய பயிற்சி, கதையின் நுணுக்கங்கள், திருப்புமுனை, ரிதம், தாளம், நயம் புரிதல் போன்ற பயிற்சிகளும் இருந்தது. நடிப்பில் ஒரு மெத்தடாலஜி போல ஆதி, அந்தம், வேர் எல்லாமே அங்கிருந்தது. நான்கு பேரை பார்க்கும்போது, மேடையில் எப்படி நிற்பது, எப்படி இயங்குவது எனத் தெரியாமல் இருந்தவர்கள், பயிற்சிக்குப் பிறகு எப்படி கைதேர்ந்தவர்களாய் வெளியில் செல்கிறார்கள் என்பதை கண்கூடாய் இங்கு காணலாம்.
*நடிப்புக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்புக் கிடைத்ததா?
பதினேழு அல்லது பதினெட்டு வயது பெண்ணாய், கத்துக்குட்டியாய் நான் நடிப்பைக் கற்க வரவில்லை. எம்.பி.ஏ. முடித்து நான்கு ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, எனக்கான சேமிப்புகளோடு, என் விருப்பத்தில்தான் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்தேன். துவக்கத்தில் பெற்றோருக்கு விருப்பமில்லைதான். பயமிருந்தாலும், நீ நடிக்கப் போகக்கூடாதென என் கையை பிடித்திழுத்து வீட்டுக்குள் வைத்து பூட்டவில்லை. எனது குடும்பத்தை சேர்ந்தவர்களையும், என் நாடகங்களைப் பார்க்க அழைத்திருக்கிறேன்.
அம்மாவும் அப்பாவும் நேராகவே என் நாடகங்களையும், எனது நடிப்பையும் பார்த்திருக்கிறார்கள். வேறொரு தளத்தில் நின்று நான் இயங்குகிறேன். ஏதோ ஒன்றை செய்ய முயற்சிக்கிறேன் என்றும், இதற்காக நான் தீவிர பயிற்சி எடுக்கிறேன் என்பதையும் புரிந்து கொண்டார்கள்.
*குரலும், நடிப்பும் உங்களை வித்தியாசப்படுத்துதே?
நடிப்பில் குரல் பயிற்சி இருந்தாலும், இயல்பிலே நானும் என் குரலும் இப்படித்தான். எனக்கு வித்தியாசமாய் தெரியாத எனது குரல் மற்றவர்களுக்கு வித்தியாசமாய்த் தெரிந்தது. ஹாலில் டி.வி ஓடினாலும், நான்தான் இந்தக் காட்சியில் நடிக்கிறேன் என்பதை என் குரலை வைத்தே மக்கள் கண்டுபிடித்தார்கள். “எங்கேயும் எப்போதும்” படம் வெளியான பிறகே, என் குரல் தனித்துவமாய் இருப்பது எனக்கு தெரிய வந்தது. பொதுவெளியில் எனது குரலை வைத்தே பலர் என்னை அடையாளப்படுத்துகிறார்கள்.
*சினிமாவில் நடிக்க வந்தது குறித்து?
சினிமாவில் நடிக்க மஞ்சப்பைய தூக்கீட்டு வரும் அளவுக்கு எனக்கு ஆசைகள் வரவில்லை. “எங்கேயும் எப்போதும்” படம் வெளியாகி பனிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு முன்பே தேசிய விருது பெற்ற “காஞ்சிபுரம்” படத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை தமிழில் கிட்டதட்ட 45 படங்கள்வரை நடித்திருக்கிறேன். தற்போது 15 முதல் 20 படங்கள் திரைக்குவரத் தயாராக இருக்கிறது. மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களையும் சேர்த்தால் 23 படங்கள் வெளிவரத் தயாராக உள்ளது. இதில் நடிகர் யோகிபாபுவுடன் ஒரு படம், ஹிப்ஹாப் ஆதியுடன் ஒரு படம், ராமராஜன் சாரின் ரீ என்ட்ரி படம், நடிகை ஹன்சிகாவுடன் தமிழ், தெலுங்கு படங்கள், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நடிகராய் களமிறங்கும் படத்திலும் இருக்கிறேன்.
“பாவக்கதைகள்” வெப் சீரிஸ் நடிப்பைத் தொடர்ந்து இன்னும் பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறேன் என்றவர், நன்றாக நடிக்க தெரிந்த எனக்கு மிகச் சிறிய ரோல்களையே இயக்குநர்கள் ஏன் வைக்கிறார்கள்? என் வயதுக்கான கேரக்டர் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.
*அரசியல் கருத்துக்களை ரீல்ஸ், யு டியூப் வீடியோக்களாக வெளிப்படுத்துகிறீர்களே?
கட்சிகளில் நான் இயங்கவில்லை என்றாலும், இடதுசாரி சிந்தனைகள் எனக்கு உண்டு. நவீன நாடகங்கள், மேடை நாடகங்கள் என இயங்கியபோது, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட நபர்கள் அதில் இருந்தார்கள். அதன் வழியே எனக்கும் இந்த ஐடியாலஜி வந்தது. பண மதிப்பிழப்பிற்குப் பிறகான அரசியல் சூழலைக் கூர்ந்து கவனித்ததில், பணக்காரன் மேலும் பணக்காரனாவதும், ஏழை இன்னும் ஏழையாவதும் இங்கே தொடர்கிறது.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும், ஏழை எளிய மக்களும் வாழவே முடியாத நெருக்கடியில் இருக்கிறார்கள். இதுகுறித்து என் அப்பாவுடன் நான் எதேச்சையாகப் பேசிய விஷயங்களை, சின்னச்சின்ன வீடியோக்களாக, வினோதினி அன்அஃபீஸியல்ஸ் என்கிற யுடியூப் பக்கத்தில் பதிவேற்றத் தொடங்கினேன்.
எனக்கு யு-டியூப்பில் சம்பாதிக்கும் அவசியமில்லை. ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாவில் இல்லாதவர்களும் யு-டியூப் பார்க்கிறார்கள். அந்த மாதிரியான எளிய மக்களுக்காகவே, செய்தி அடிப்படையிலான கருத்தை, நேரம் கிடைக்கும்போது ரீல்ஸ் வீடியோக்களாகச் செய்து அப்லோட் செய்கிறேன். இதற்கு வருகிற எதிர்மறை கமென்ட்களை நான் பொருட்படுத்துவதில்லை.
*பொன்னியின் செல்வன் படத்தில் பிரபலங்களுடன் நடித்த அனுபவம் குறித்து?
விக்ரம் சார் சூரரைப்போற்று படத்தில் நடிகர் சூர்யாவுடன் நான் இணைந்து நடித்த கேரக்டரை நினைவு கூர்ந்து பாராட்டினார். சரத்குமார் சாரும் என்னை ஐஸ்வர்யாராய் மேடத்திடம் அறிமுகப்படுத்தி என் நடிப்பை புகழ்ந்தார்.இந்தப் படத்தில் படத்திற்கு மேக்கப் போடவே அதிக நேரம் எடுக்கும். அதன் பிறகு செட்டில் டயலாக் சொல்லி நடிப்பது ரொம்பவே சவாலாக இருந்தது. காரணம், மணி சார் ஃபெர்பெக்ஷனிஸ்ட். நம்முடைய சின்ன சின்ன அசைவுகளையும், ஐ பால் மூவ்மென்டுகளையும் நோட் செய்பவர். அவரின் இயக்கத்தில் அந்தப் படத்தில் நடித்தது பெரிய விஷயத்தை அக்சிவ் செய்த உணர்வையே எனக்குக் கொடுத்தது.