முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்! (மருத்துவம்)
முடி உதிர்வு என்றதும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. தலைமுடி உதிர்வால் பெண்களைப் போலவே, பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு முடியெல்லாம் கொட்டி தலையில் சொட்டை விழுந்துவிடுகிறது. இதனால் பல ஆண்கள் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த காரணத்தினால் பல இளைஞர்களுக்கு திருமணத்தில் கூட தடை ஏற்படுகிறது.
இவ்வாறு, தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன. அவை, அவர்களது வாழ்வியல் முறை, ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை போன்றவைகளாகும்.
மேலும், முடி உதிர்வினால் ஏற்படும் சொட்டையை மறைக்க பலரும் கடைகளில் விற்கப்படும் பலவித எண்ணெய்கள், மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். நவீன சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவை, பலருக்கு முடி உதிர்வை கட்டுப்படுத்தாமல், மேலும், அதிகப்படுத்தி விடுகிறது. எனவே, கண்ட மருந்து, எண்ணெய்களை நம்புவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களால் தலைமுடியைப் பராமரித்தால், இருக்கும் முடியையாவது பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், சில இயற்கை பொருட்களுக்கு சொட்டைத் தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சக்தி உள்ளது. எனவே முடியின் வளர்ச்சியை தூண்டி உதிர்வை தடுக்கும் சில இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம்:
நெல்லிக்காய்
நெல்லிக்காயை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் விடவும். எண்ணெய் குளிர்ந்ததும், கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இந்த நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், விரைவில் முடி உதிர்வு கட்டுப்பட்டு முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
வெங்காயம்
முடி உதிர்வுக்கு வெங்காயம் சிறந்த பலனைத் தரும். முடி உதிர்ந்து சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து அந்த விழுதைத் தடவி சிறிது நேரம் லேசான மசாஜ் செய்து வர, முடி உதிர்வு நன்கு கட்டுப்படும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வளர்ச்சிக்கு உதவும்.
முட்டை மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் கலந்து, வழுக்கையான இடத்தில் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, சொட்டையில் முடி வளர்வதைக் காணலாம்.
வெந்தயம்
முடி உதிர்வை கட்டுப்படுத்துவதில் வெந்தயம் சிறந்த பங்காற்றுகிறது. 2 தேக்கரண்டி வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து, தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். அதன் பின் தலையை லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்.
சீகைக்காய்
சிறிதளவு நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயை 2 லிட்டர் நீரில் போட்டு, பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, அரைமணி நேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
கடுகு எண்ணெய்
ஒரு கப் கடுகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு சூடேற்றி, அதில், ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலைகளை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் வழுக்கைத் தலையில் தடவி வந்தால், சில வாரங்களில் முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, சொட்டையான இடத்திலும் முடியின் வளர்ச்சியைக் காணலாம்.
ஷாம்பு
பெரும்பாலும் ஷாம்புவை தவிர்த்தாலே முடி உதிர்வை தவிர்த்துவிடலாம். சிகைக்காயை அரைத்து வைத்துக் கொண்டு, வாரத்திற்கு ஒரு நாள் எண்ணெய் தேய்த்து சீகைக்காய் தூள் பயன்படுத்தி தலைக்கு குளித்து வர முடி உதிர்வு கட்டுப்படும்.