பட்ஜெட்டில் அடங்கும் க்யூரேடெட் உடைகள்!!! (மகளிர் பக்கம்)
‘‘இது என்னுடைய கனவு பிராஜக்ட். இங்கிருக்கும் ஒவ்வொரு உடையையும் மிகவும் கவனமாக நெசவாளர்களிடம் சொல்லி வடிவமைச்சிருக்கேன். அதில் ஒரு உடை எனக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் திருப்பி கொடுக்க தயங்கமாட்டேன்’’ என்கிறார் ஷில்பா. இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஆர்ட் அண்ட் அடயர்’ என்ற பெயரில் எல்லா நிகழ்வுக்குமான உடைகளை வடிவமைத்து வருகிறார்.
‘‘நான் அடிப்படையில் ஒரு ஆர்டிஸ்ட். அதாவது பெயின்டிங் செய்து கலைப் பொருட்களை விற்பனை செய்து வந்தேன். அதை பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தும் வந்தேன். அந்த சமயத்தில் பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் நான் அணியும் உடையினைப் பார்த்து அதேபோல் வேண்டும் என்று கேட்பார்கள். எங்க குடும்பம் ஜவுளித் துறை சார்ந்த தொழில் செய்து வந்தார்கள். தாத்தாவைத் தொடர்ந்து அப்பாவும் அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதனால் அப்பா எனக்காக பிரத்யேகமாக உடைகளை வடிவமைத்து தருவார்.
நான் அப்பாவிடம் இது குறித்து சொன்ன போது… ‘‘நீ ஏன் வாங்கித்தர வேண்டும்… அவர்கள் விரும்புவதை வடிவமைத்து தரலாமே’’ன்னு சொன்னார். என்னுள் இருக்கும் ஃபேஷன் திறமைக்கு தூண்டில் போட்டவர் அப்பா தான். வீட்டிலேயே சிறிய அளவில் துணிகளை வாங்கி விற்க ஆரம்பிச்சேன். மேலும் பல கண்காட்சியில் எல்லாம் பங்கு பெற்றேன். புடவை முதல் சல்வார், சுடிதார் என அனைத்தும் விற்பனை செய்தேன். பலருக்கு என்னுடைய பிராண்ட் பிடிக்க ஆரம்பித்ததால், ‘ஆர்ட் அண்ட் அடயர்’ என்ற பெயரில் சென்னை அண்ணாநகரில் சிறிய அளவில் கடை ஒன்றை திறந்தேன்.
முதலில் புடவை மற்றும் பேப்ரிக் மட்டுமே விற்பனை செய்து வந்தேன். ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த டிசைன்களில் உடைகளை வடிவமைக்க சொல்லி கேட்பார்கள். அவர்களுக்கு எங்களிடம் இருக்கும் பேப்ரிக் கொண்டு தனிப்பட்ட முறையில் வடிவமைத்தும் கொடுத்து வந்தேன். அந்த சமயத்தில் தான் சாந்தினியின் அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவங்க சிறந்த ஸ்டைலிஸ்ட். அதன் பிறகு நானும் சாந்தினியும் சேர்ந்து செயல்பட ஆரம்பிச்சோம். உடைகளில் ஒரு புது லுக்கினை கொடுக்க நினைச்சோம். ஒவ்வொரு உடையினையும் ெநசவாளர்களுடன் இணைந்து க்யூரேட் செய்தோம்.
அதாவது… ஒவ்வொரு உடையையும் தனித்துவமாக வடிவமைக்க ஆரம்பிச்சோம். புடவை, சுடிதார், சல்வார் சூட்ஸ், வெஸ்டர்ன் உடைகள், எம்பிராய்டரி என எங்க கடையில் உள்ள எல்லா உடைகளும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது. இதில் புடவைக்கு மட்டும் நான் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ஏன் பிடிக்கவில்லைன்னு பார்க்கணும்.
அவர்களை திருப்தியடைய செய்யணும். பட்ஜெட் ஃபிரண்ட்லியாக இருப்பது தான் எங்களின் ஸ்பெஷாலிட்டியே. எல்லாராலும் லட்ச ரூபாய் கொடுத்து லெஹங்கா வாங்க முடியாது. அவர்களின் பட்ஜெட் பத்தாயிரமாக இருக்கும். அதற்கு ஏற்ப வடிவமைத்து தருகிறோம். விலை குறைவு என்பதால் துணியின் தரத்தில் நாங்க எந்த வித காம்பிரமைசும் செய்வதில்லை’’ என்றவர் கடந்த ஒன்பது வருடமாக நெசவாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
‘‘நான் இந்த துறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை எங்களுக்கான நெசவாளர்கள் உள்ளனர். நானும் சாந்தினியும் எங்களின் டிசைன்கள் மற்றும் நிற காம்பினேஷன்கள் குறித்து அவர்களுக்கு தெரிவிப்போம். அதை அவர்கள் டிசைன் செய்து கொடுப்பார்கள். அதனால் தான் இங்குள்ள ஒவ்வொரு உடைகளும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இங்குள்ள 100 புடவைகளும் ஒவ்வொரு டிசைன்களில் வடிவமைக்கப்பட்டு இருப்பது தான் எங்களின் ஸ்பெஷாலிட்டி. பட்டு முதல் ஆர்கென்சா, ஃபேன்சி புடவைகள், ஹாண்ட்லூம் புடவைகள் என பல டிசைன்கள் இருந்தாலும், இங்குள்ள டிசைன்களை வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது. அதில் நானும் சாந்தினியும் ரொம்பவே உறுதியா இருக்கிறோம்.
ஃபேஷன் என்பது மாறி வரும் தளம். இந்த வருடம் பேன்சி புடவைகள் பிரபலமாக இருக்கும். அடுத்த வருடம் பட்டின் மேல் கவனம் திரும்பும். அதே சமயம் ஒரு சில உடைகள் எவர்கிரீன் உடைகளாக இருக்கும். ஆர்கென்சா புடைவைகள். இந்த துணிக்கு பெரும்பாலான பெண்கள் இன்றும் அடிமைன்னு சொல்லலாம். டிரண்டிங்கே இல்லாத நாட்களில் கூட ஆர்கென்சா இருக்கான்னு பல வாடிக்கையாளர்கள் என்னிடம் கேட்டுள்ளனர். ஃபேஷன் எல்லாருக்குமானது என்றாலும், எல்லாருக்கும் அது குறித்து தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒரு சிலர் எங்களிடம் எனக்கு எது நல்லா இருக்கும்ன்னே தெரியலன்னு சொல்வாங்க. அவங்களுக்கு சாந்தினி ஒரு ஸ்டைலினை வடிவமைத்து தருவார். அதில் ஒரு சிலர் இது போன்ற மார்டர்ன் உடையினை அணிந்து பழகி இருந்திருக்க மாட்டாங்க. டிரை செய்து பாருங்கன்னு சொன்ன பிறகு தான் அவங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். எல்லாவற்றையும் விட இது அவர்களுக்கான இடம் என்ற உணர்வினை அளிக்கிறோம். அப்போது தான் அவர்களால் ஃபேஷனை சுவைத்து பார்க்க முடியும்’’ என்றார் ஷில்பா.