புத்தாண்டு கொண்டாட்டம்! 2023!! (மகளிர் பக்கம்)
Read Time:4 Minute, 47 Second
ஜனவரி 1… உலகம் முழுக்க கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை உள்ள ஒவ்வொரு நாட்களும் புது ஆண்டை வரவேற்பதற்காக திருவிழா போல் கொண்டாடுவார்கள். நாடு முழுக்க வண்ண விளக்குகள் என எங்கும் கோலாகலத்தினை பார்க்க முடியும்.
- ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் ஐரோப்பிய நாடான பிரான்சில் மக்களுக்கு ஆறு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆறாவது நாளில் ஸ்பெஷல் புத்தாண்டு கேக் வெட்டும் நிகழ்ச்சியோடு புத்தாண்டு நிறைவு பெறும். பிரெஞ்ச் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது ஊர்வலம்தான். ஆயிரக்கணக்கான பாடகர்களும், நடன கலைஞர்களும் அந்த ஊர்வலத்தில் உற்சாகமாக பங்கெடுப்பர்.
- ஆங்கில புத்தாண்டை விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடுகிறது ஐரோப்பிய நாடான பல்கோரியா. ஜனவரி 1ம் தேதி துவங்கி ஒரு வாரம் இசை விழா நடக்கும். ‘பனிக்கா’ என்ற பாரம்பரிய உணவை புத்தாண்டு சிறப்பாக தயாரிக்கின்றனர். புத்தாண்டு இரவில் பாரம்பரிய நடனம் ஆடும்போது பெண்களின் எதிர்காலம் பற்றிய ஜோதிடம் சொல்லும் வழக்கமும் பல பகுதிகளில் காணப்படுகிறது.
- அமெரிக்கா, நியூயார்க் நகரின் டைம்ஸ் கொயர் கட்டிடத்தின் மீது பெரிய பந்தை வைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்திருப்பர். புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு நிமிடம் முன்னதாக அந்த பந்தை கீழே விடுவர். பந்து கீழே இறங்கும் நேரம் புத்தாண்டுக்கான ‘கவுண்ட் டவுன்’ நேரமாக இருக்கும். பந்து தரையைத் தொட்டதும் கூடி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிப்பிடித்தும் முத்தமிட்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை உற்சாகமாக வெளிப்படுத்துவர்.
- கிழக்காசிய நாடான ஜப்பானில் புத்தாண்டு மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆண்டின் கடைசி நாள் இரவு உணவுக்குப் பின் புத்தாடை அணிந்து ஆலயம் செல்வர். அந்த நேரத்தில் கடவுள் வீட்டுக்கு வரவேற்கும் விதமாக உரிய ஏற்பாடுகளை செய்திருப்பர். அதாவது வீட்டு முகப்பில் மூங்கில் குருத்து மற்றும் இலைகளால் செய்த வளையம் ஒன்றை மாட்டி இருப்பர். புத்தாண்டில் உதயமாகும் சூரியனை ஆர்வத்துடன் வரவேற்று வணங்குவர்.
- இங்கிலாந்தில் புத்தாண்டில் வீட்டிற்கு வரும் முதல் ஆண் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்ற பழைய பாரம்பரியம் இன்று வரை நம்பப்படுகிறது. செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிக்கும் வழக்கம் இங்குள்ளது. இது கடந்த காலத்தின் வருத்தமான நிகழ்வுகளை எரித்து விடுமாம். புத்தாண்டை ஒட்டி சல்சா நடனம், இசை கச்சேரிகள் நடைபெறும். இசைக்கலைஞர்கள், நடன கலைஞர்கள், டிரம்ஸ் வாசிப்பவர்கள் என பலரும் கலந்து கொள்வதால் இந்த புத்தாண்டு ஊர்வலம் அனைவரையும் கவர்கிறது.
- ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு 12.00 மணிக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற வாசகம் வானில் தோன்றும். தொடர்ந்து வானில் வண்ணங்களின் கலவை காட்சியாக வரும். இது சக்தி வாய்ந்த லேசர் ஒளி வெள்ளத்தில் அமைக்கப்படுகிறது. இறுதியில் ஆஸ்திரேலிய தேசீய கீதம் பாடப்படும். இங்குள்ள சிட்னி நகர், ஆப்ரா ஹவுஸ் கலையரங்கில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் பிரசித்தி பெற்றது.