அங்காடித் தெரு (எம்.சி. ரோடு)!!! (மகளிர் பக்கம்)
வண்ணாரப் பேட்டை எம்.சி.ரோடு பார்க்க பிரமிப்பாய்தான் இருக்கிறது. முன்பு தி.நகரில் பாண்டி பஜார் எப்படி இருந்ததோ அதே தோற்றத்தில் அதே களேபரத்தோடு இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாண்டிபஜார் இன்று இருந்த இடம் தெரியாமல் காணாமல் போக, அதே வடிவத்தை அப்படியே ஆக்கிரமித்திருக்கிறது எளிய மக்கள் வாழும் பகுதியான மணியக்காரர் சௌத்ரி எனப்படும் எம்.சி.ரோடு.
பண்டிகை நேரம் என்பதால், மனித நெரிசலில் எம்.சி. ரோடு பஜார் சாலைகள் பிதுங்கி வழிகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஜவுளிக் கடைகள். கூடவே நடைபாதை வியாபாரிகள். தெருவில் நின்று கூவிக்கூவி பொருட்களை விற்பவர்கள். வட மாநில இளைஞர்கள் விற்கும் பொருட் களென தி.நகரை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது.
வழியெங்கும் சாலைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைவிரித்துள்ளனர். நடந்து செல்லும் கஸ்டமர்களை அழைப்பதற்கென ஆட்கள் வழியெங்கும் நிற்கிறார்கள். நடக்கும்போது நம்மை இடைமறிக்கும் சிலர், “கம்மி விலைக்குத் தருகிறோம் வாங்கம்மா! வாங்கண்ணா! 3 டாப்ஸ் 500, 5 லெக்கின்ஸ் 400, சாரீஸ் 150 ரூபாயில் இருந்தே இருக்கு. வாங்க.. வாங்க..” என இடைமறிக்கின்றனர்.பெரிய ஷோரூம்களில் நாம் பார்த்த அதே மாடல் உடைகள், அதைவிடக் குறைந்த விலையில் இங்கு விலைப் பட்டியலோடு தொடங்குகிறது. குவாலிட்டியைப் பார்க்காமல் வாங்கினால் நான்கு ஐந்து வாஷ் வரை உழைக்கும் ரகங்கள் அவை.
”மேடம் சாரீஸ் பார்க்குறீங்களா? நம்ம கிட்ட எல்லா ரேட்டிலும் இருக்கு. எங்க கடை மொத்த குடவுன் மேடம். உள்ள வந்து பாருங்க. எல்லாமே ஹோல்சேல்ஸ் ரேட்தான். அள்ளீட்டுப் போங்க” என இடை மறிக்கிறார் ஒருவர். திரும்பிய இடமெங்கும் மொத்த விற்பனைக் கடைகளே அதிகம் தென்படுகிறது. கூடவே இன்ஸ்டென்டாக உடைகளைத் தைத்து தரும் டைலர்களும் இருக்கிறார்கள்.
முப்பத்தைந்து ஆயிரத்திற்கு மிகப் பெரிய ஷோ ரூம்களில் கிடைக்கும் உடை பத்து முதல் பனிரெண்டாயிரத்திற்கு இங்கு கிடைக்கும் என நம்மிடம் பேச ஆரம்பித்தவர், எம்.சி ரோட்டில் கடை வைத்திருக்கும் சாந்தி சாரீஸ் உரிமையாளரும் எழுத்தாளருமான லதா சரவணன்.‘‘இப்பவெல்லாம் திருமணங்கள் ஒப்பன் ஸ்பேஸுக்குள் வந்திருச்சு. வானம் மாதிரியான செட்டெப்.. கடல் மாதிரியான செட்டெப்.. கூடவே நட்சத்திரம்.. வானவில்லையும்.. அந்த இடத்திற்குள் கொண்டு வருகிறார்கள்.
மயில் மாதிரியே ஒரு தீம் கெட்டெப் பெண் வீட்டாருக்கு போடனுமா? திருமணத்தில் தீம் செட் எடுத்து செய்கிறவர்கள் ஃபேமலி கான்செப்ட் மெட்டீரியல்களை இங்கு வந்து மொத்தமாக வாங்கிச் சென்று அவர்களின் பொட்டிக்கில் வைத்து அவற்றை கிரியேட் செய்கிறார்கள். இதற்கென ஒரு தனி மார்க்கெட், தனி பிஸினஸ் இங்கு இயங்குகிறது. இந்த மாதிரியான தொழில்களில் ஆர்வம் இருக்கிறவர்கள் தேடித்தேடி மெட்டீரியல்களை இங்கு வந்து எடுக்கலாம். எம்.சி. ரோட்டில் பாதி மொத்த விற்பனைக் கடைகள்தான்.
பழைய முறையிலான திருமண சத்திரங்கள் மொத்தமாக அடிவாங்கிய நேரத்தில் அவைகள் ஜவுளிக்கடைகளாகவும், குடவுன்களாகவும் மாற ஆரம்பித்தது. குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், சுய உதவிக் குழுக்கள், கல்லூரி பெண்கள், ஈவென்ட் மேனேஜ்மென்ட் பெண்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மகளிர் அணிக்கான சீருடையென ஒரே மாதிரி சேலைகளை இங்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு, சேலைகளை சைக்கிள் அல்லது தலைசுமையாய் மூட்டையில் சுமந்து சென்று, மாதத் தவணையில் கொடுத்து, சேலைக்காரய்யா வர்றாரு.. புடவைக் காரம்மா வர்றாங்க.. இந்த மாதிரியான வார்த்தைகள் இன்று நகர வாழ்வில் வழக்கொழிந்துவிட்டாலும், கிராமங்கள், புறநகர் பகுதிகளில் இன்றும் அவையிருக்கிறது. அந்த மாதிரியான விற்பனையாளர்களுக்கு எம்.சி. ரோடு மிகப் பெரிய ஜவுளி மார்க்கெட்” என்ற லதா, சில்லரை வியாபாரமாகத் தொழில் செய்பவர்களுக்கு இந்த ஏரியா ரொம்பவே சூப்பர். 100 ரூபாய்க்கு வாங்கும் பொருளை அசால்டாக 150க்கு விற்கலாம். மொத்தமாகத் துணிகளை இங்கிருந்து கொள்முதல் செய்து, தங்கள் விருப்பத்திற்கு விலை நிர்ணயித்தும் விற்கிறார்கள்.
வீட்டில் இருந்த நிலையில் தொழில் செய்ய நினைக்கும் பெண்களுக்கு இது ஏற்ற பிஸினஸ். மகளிர் குழுக்கள், ஸ்கூல் டீச்சர்ஸ், சிங்கிள் பேரன்ட் பெண்கள், பத்து பனிரெண்டு படிப்பை முடித்து விரைவில் கல்யாணமான பெண்கள், கணவரின் வருமானம் குறைவாக உள்ள குடும்பத்துப பெண்கள், மாற்றுப் பாலினத்தவர், தவணை முறையில் துணிகளை விற்க நினைப்பவர்களுக்கும் இது நல்ல வருமானம் தரக் கூடிய தொழில்.
இவை தவிர்த்து பெண்களுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலும் இங்கு கொடி கட்டிப் பறக்கிறது. பெண்கள் அணியும் பாவாடை, நைட்டி, நைட் சூட் போன்ற உடைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான துணிகளை மொத்தம் மொத்தமாக வாங்கிவந்து, சொந்தமாக யூனிட் வைத்து கடைகளுக்கு தைத்துக் கொடுப்பவர்கள் இங்கு அதிகம். இதனை நம்பி வாழும் எளிய மக்கள் இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமாக இருக்கிறார்கள்.
எழுத்தாளர் லதா சரவணன், உரிமையாளர் சாந்தி சாரீஸ்.
நானும் எனது கணவர் சரவணனும் அங்காடித்தெரு படக் காதலர்கள் மாதிரி. எம்.சி. ரோட்டின் மிகப் பெரிய ஜவுளிக் கடையான வீராஸில் நான் பில்லிங் பிரிவிலும், அவர் சூப்பர்வைசராகவும் இருதோம். இருவரும் அங்குதான் பார்த்து காதலித்து கல்யாணம் செய்து கொண்டோம். என் கணவரின் கெரியர் ஸ்டாட் ஆனது இந்த எம்.சி. ரோடு பகுதியில்தான். 10ம் வகுப்புக்கு மேலே படிக்க வசதியின்றி டெக்ஸ்டைல் தொழிலுக்குள் நுழைந்தவர் அவர். 96ல் ஜவுளிக்கடை வேலைக்கு வந்து, இதிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும் கற்றுக் கொண்டார். அவரைப்போலவே வெறும் 750 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த வாழ்க்கை என்னுது. அப்பாவின் தொழில் நொடிக்கும்போது நான் +2 படிக்கிறேன். கல்லூரியில் படிக்க முடியாமலே வேலைக்குச் சென்றேன்.
மூட்டை தூக்கி துணி வியாபாரம் செய்த குடும்பம் அவருடையது. எங்கள் திருமணத்திற்குப் பிறகு 2000ல் அவரின் அனுபவத்தில், சின்னதாக சாந்தி சாரீஸ் என்கிற எங்கள் கடையினை தொடங்கினோம். 2004ல் கடையை கொஞ்சம் விரிவுப்படுத்தினோம். . குடும்ப உறுப்பினர்கள் அனைவரையுமே இந்தத் தொழிலுக்குள் கொண்டு வந்தோம். நேரம் காலம் பார்க்காமல், சாப்பாட்டை யோசிக்காமல், தூக்கத்தை கைவிட்டு, உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு. உழைப்புதான் இன்று நாங்கள் தேடிச் சேர்த்த இத்தனையும்.
காலை 11 மணிக்கு வந்தால் நடு இரவு 2 மணிக்கு வேலை முடித்து கிளம்பிய நாட்களெல்லாம் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் தொழில் விரிவடைந்தது என்றாலும் வளர்ச்சிக்கு நடுவில் சில சரிவுகளும் இருந்தது. எங்கள் கடையில் இன்று பெண்கள், ஆண்கள் என 350 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். சில கல்லூரி மாணவிகள் பார்ட் டைமாக வந்து வேலை செய்துவிட்டுச் செல்கிறார்கள். பண்டிகை காலங்களில் கூடுதலாக வேலை ஆட்களை எடுத்துக் கொள்வோம்.
12 வருடமாகவே நானும் அவரோடு இந்தத் தொழிலில் இருக்கிறேன். ஒருசில நுணுக்கங்களை அவரிடத்தில் கற்று, கடையின் நிர்வாகம், பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். பெண்களுக்கான சேலைகளை பெரும்பாலும் சூரத், அஹமதாபாத், கல்கத்தா, வாரணாசி, பெங்களுர், ஆந்திராவில் சிராலா, குண்டூர் பகுதிகளில் இருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்து வருகிறோம்.
அதேபோல் காக்ரா சோலி, லெகங்கா போன்ற ஜமிக்கி உடைகளை அஹமதாபாத், பாம்பே போன்ற ஊர்களில் இருந்து வரவழைக்கிறோம். மொத்தமாக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களின் விற்பனையாகாத சரக்குகளை ரிட்டெர்ன் எடுக்கும் வசதியும் எங்களிடத்தில் உண்டு. 10 நாட்கள்வரை அதற்கு நேரம் கொடுப்போம்.
நானும் எனது கணவரும் எங்கள் கடைக்குள் உரிமையாளர்களாய் நுழைவதில்லை. இன்றும் எங்களைத் தொழிலாளர்களாகவே நினைக்கிறோம். அதனால்தான் கடையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயமும் எங்களின் கவனத்திற்கு வருகிறது. அதற்கான நம்பிக்கையை ஊழியர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் நிறையவே சம்பாதித்து வைத்திருக்கிறோம்.