அசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் கூடாதா? (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 27 Second

‘‘எனக்கு வீணையில் புண்ய ஸ்ரீவாஸ் மேம்தான் ரொம்பவே இன்ஸ்பிரேஷன். அவர் என்னை பாராட்டி வாழ்த்தும் சொல்லி இருக்கார். வீணை காயத்ரி மேம் ஸ்டைலும் ரொம்பப் பிடிக்கும்’’ எனப் பேசத் தொடங்கிய வீணை ஜெய சோனிகா ‘கலாம் கோல்டன் விருது 2019’ல் பெஸ்ட் வீணா ஆர்டிஸ்ட் விருதைப் பெற்றிருக்கிறார். ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் செய்யும்போது கர்நாடிக் பாடல்கள் மட்டுமின்றி சினிமாப் பாடல்களையும் வீணையில் மீட்டுகிறார். அவர் படிக்கும்
பள்ளியிலும் பெஸ்ட் பெர்பார்மர் விருது இவருக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து ஜெய சோனிகாவிடம் பேசியபோது…

‘‘ஸ்டிரிங் இன்ட்ஸ்ரூமென்ட்ல ரொம்ப டஃப்பான இன்ஸ்ட்ரூமென்ட் வீணைதான். மொத்தம் 7 ஸ்டிரிங்ஸ் வீணையில் இருக்கும். சில நேரம் ஸ்டிரிங்ஸ் விரலை அறுத்துவிடும். அவ்வளவு ஸ்ட்ராங்’’ என்றவர், திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு மாணவியாம். ‘‘அம்மா பேரு உஷா. அப்பா செல்வத் தமிழரசன். என்னோட 5 வயதில் சரஸ்வதி கையில் இருக்கும் வீணையைப் பார்த்து வீணை மீது காதலே வந்திருச்சு. என் அம்மாவிடம் எப்போதும் அது பற்றியே கேட்கத் தொடங்கி, ஒரு கட்டத்தில் வீணையை நேரில் பார்க்கும் ஆசையும் வந்தது’’ என்கிறார்.

‘‘மொத்தம் இதில் 8 கிரேடு. இப்போது நான் கிரேட் 5ல் இருக்கிறேன். வீணை வகுப்பில் எனக்கு இது 6வது வருடம். ராகம், தாளம், ஸ்வரம் என ஒவ்வொரு டாப்பிக்கிலும் உள்ளே போய்க் கொண்டே இருக்கும். வீணையின் தோற்றம் பார்க்கத்தான் பெரிது. கையில் எடுத்துவிட்டால் ரொம்பவே ஃபிரண்ட்லி என்று சிலாகித்தவர், வீணையை மடியில் வைத்து மீட்டும்போது வெயிட்டே தெரியாது. அப்போது கிடைக்கும் அழகே தனி. பார்க்க பரவசமாய் இருக்கும்’’ என்கிறார் ரசித்து. எனக்கு க்ளாசிக், சினி சாங் என இரண்டிலுமே ஆர்வம் உண்டு.

ஆல்பம் சாங்ஸ்களையும் வீணையில் கொண்டு வருகிறேன். ஒருசில நோட்ஸ்களை வீணையில் வாசிப்பது கடினம். விரலை சட்டுனு அறுக்கும். வயலினில் பேசுவதைக்கூட வாசிக்க முடியும். ஆனால் வீணையில் அது முடியாது. இடது கையால் ஸ்டிரிங்ஸ்களை மீட்டி ஸ்வரம் கொடுக்கும்போது வலது கை விரலில் ராகத்தை கொண்டு வரணும். நான் 3 மணி நேரம்கூட தொடர்ந்து மீட்டி இருக்கேன்’’ என்கிறார் இசை மீது இருக்கும் காதலோடு. அவரைத் தொடர்ந்து ஜெய சோனிகாவின் அம்மா உஷா நம்மிடம் பேசத் தொடங்கினார்..

‘‘எங்கள் குடும்பத்தில் இசை ஞானமெல்லாம் யாருக்குமே கிடையாது. இசை குறித்த விசயங்களும் யாருக்கும் தெரியாது. இவள் தான் எங்கள் குடும்பத்தில் இசைப் பயணத்தை தொடங்கிய முதல் பெண். தொலைக்காட்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்த நேரம் அது. அப்போது ஜெய சோனிகாவுக்கு 5 வயது. இவளை சூப்பர் சிங்கரா மாற்ற நினைத்து பாட்டு க்ளாஸ்ல சேர்த்து விட்டேன். ஆனால் அவளின் ஆர்வம் வீணை மீது இருந்தது. வீணையுடன் இருக்கும் சரஸ்வதி படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அது குறித்து விடாமல் என்னிடம் கேட்க ஆரம்பித்தாள். நானும் இது கடவுள் சரஸ்வதி. வீணை வாசிப்பாங்க. வீணையை மீட்டுனா இசை வரும் என சாதாரணமாகச் சொல்லி வைத்தேன்.

தொடர்ந்த நாட்களில் வீணை குறித்தே என்னிடம் அடிக்கடி பேசத் தொடங்கினாள். நாங்கள் வசிப்பதோ திருவள்ளூர் மாவட்டம். வீணை வகுப்பு எடுக்கும் ஆசிரியர் இந்தப் பகுதியில் கிடைப்பது அத்தனை எளிதாக இல்லை. தேடத் தொடங்கியதில், 10 கிலோ மீட்டர் தள்ளி வயதான ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு வீணை வகுப்பு எடுப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர் பெயர் குமார். வசதி இல்லாத குழந்தைளுக்கும் அவர் இலவசமாக வகுப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். குருதட்சணையாக நூறு ரூபாய்க்கு மேல் அவர் எங்களிடத்தில் வாங்கியதில்லை.

அவரை நாங்கள் சந்தித்தபோது சோனிகாவுக்கு 7 வயது. 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். சின்னக் குழந்தைகளை எப்போதுமே வீணை வகுப்பில் சேர்க்க மாட்டார்கள். காரணம், வீணையில் இருக்கும் ஸ்டிரிங்ஸ் மீட்டும்போது விரல்களை அறுக்கும். சோனிகா குழந்தையாக இருப்பதால் முதலில் மறுத்தவர், பத்து வயதிற்கு மேல் அழைத்து வரும்படிச் சொன்னார். அவரை சந்திக்கும்வரை எனது மகள் வீணையினை நேரில் பார்த்ததே இல்லை. வீணையை நேரில் பார்க்கவும், தொடவும் ஆசைப்படுகிறாள். உங்கள் வீணையை அவளுக்கு காட்ட முடியுமா எனக் கேட்டேன். அவரும் சரியென உள்ளே அழைத்துச் சென்று வீணையைக் காட்டினார்.

வீணையை பார்த்த நொடியில் அதன் அருகே சென்று அமர்ந்தவள் வீணையில் இருக்கும் ஸ்டிரிங்ஸ்களை ஆர்வமாக அவளாகவே மீட்டத் தொடங்கினாள். ஆசிரியர் சொல்லாமலே அவளாகவே முதலில் மீட்டிய ஸ்வரம் ‘ச’. அவள் கண்களில் இருந்த பரவசத்தையும், ஆர்வத்தையும் பார்த்த வீணை ஆசிரியர் அடுத்த நொடியே அவளை மாணவியாய் ஏற்றுக் கொண்ட நொடி எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. தொடர்ந்து ஒரு வருடம் அவரிடம் படித்தாள். பிறகு ஆப்ரகாம் லிங்கன் என்கிற ஆசிரியரிடத்தில் 6 ஆண்டுகளாகக் கற்று வருகிறாள்.

இசை ஒரு கடல். அதில் பயணிக்கத் தொடங்கினால் முடிவே கிடையாது. தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது அவளுக்கு 13 வயது. கர்நாடிக், திரை இசைப் பாடல்களையும் வீணையில் அழகாக மீட்டுகிறாள். சோஷியல் மீடியா வழியாக இவளின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. பல மேடைகளிலும் அவளுக்குத் தானாகவே வாய்ப்பு வந்தது. சில ஊடகங்களிலும் இவளின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு தானாக அமைந்தது.
சோனிகாவுக்கு இயல்பிலே இரக்க குணம் உண்டு.

ஒரு சில மாற்றுத் திறனாளி நண்பர்களும் அவளுக்கு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கான நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் தேடிச்சென்று வீணையை இசைத்து நிகழ்வை அலங்கரிக்கிறாள். வீணையில் தான் மிகப் பெரிய ஆளாக வர வேண்டும் என்பதே இப்போதைய அவள் கனவு, லட்சியம் எல்லாம். வீணையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இதில் அதிகம் இருக்கிறார்கள். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு எனப் புரியவில்லை. சில நேரம் கோயில் மாதிரியான இடங்களில் வாசிக்க நேரும்போது இந்த சிக்கல்களை பெரிதும் சந்திக்க நேர்கிறது. இசைக்கு ஏது பிரிவினை எனப் புன்னகைத்தவர்… அசைவம் சாப்பிட்டால்
வீணை மீட்டக் கூடாதா? என்கிற எதிர்கேள்வியோடு’’ முடித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களை மதித்தால் செல்வம் பெருகும்! (மகளிர் பக்கம்)
Next post சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! (மருத்துவம்)