‘மென்ஸ்ட்ருபீடியா’…மாற்றங்களின் கதை…!! (மகளிர் பக்கம்)
அந்தப் பெண்கள் விடுதியின் சமையலறைக்குள் மாதவிலக்கான பெண் ஒருத்தி வேண்டுமென்றே நுழைந்ததாகத் தகவல் வருகிறது விடுதியின் வார்டனுக்கு. விசாரித்தபோது அது யாரென்று தெரியவில்லை. விடுதியில் இருந்த 68 பெண்களையும் கழிவறைக்கு வரவழைத்து, உள்ளாடையை நீக்கி சோதனை செய்தாராம் பெண் வார்டன். ஏதோ ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வல்ல இது. கடந்த 2020 பிப்ரவரி குஜராத் மாநிலம் பூஜ் பகுதியின், பெண்கள் கல்லூரி விடுதியில் நிகழ்ந்த அவலக் கதை.
‘மாதவிடாய் தீண்டாமை’ என்கிற, பெண்கள் மீதான மனரீதியான இந்தத் தாக்குதல், குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்களிலும், கிராமங்களிலும், ஏன் உலகெங்கிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மாதவிலக்கின் போது கோவிலுக்கும், பொது இடங்களுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்படுவது.
தன் வீட்டு சமையலறைக்குள்ளேயே அனுமதி மறுக்கப்பட்டு, வீட்டுக்கு வெளியே அல்லது வீட்டின் ஒதுக்குப்புறமான இடத்தில் தனி பாயில் தனிமைப்படுத்தி, தனி பாத்திரங்களில் உணவு, நீர் என ஒதுக்கி வைப்பதுடன், இவற்றை பெண்ணை வைத்தே இன்னொரு பெண்ணுக்கு செய்ய வைப்பது வரையிலான கொடுமைகள் பெரும்பாலான வீடுகளில் இப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இயற்கை உபாதைகளில் ஒன்றான மாதவிடாய், சமூகத்தால் அசுத்தமான “தீட்டு” என அருவெறுப்புடன் பார்க்கப் படுவதால் கல்லூரி மாணவிகளை இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பதுடன், அவர்களின் கற்றல் ஆற்றல், செயல்திறன் அனைத்தையும் சரிபாதியாகக் குறைக்கிறது. இப்போதெல்லாம் பத்துப் பனிரெண்டு வயதிலேயே பூப்படையும் பள்ளி மாணவிகளின் நிலையை நினைக்கும்போதே மனம் பதைக்கிறதல்லவா..?
“இந்தியாவில் மட்டுமே வருடத்தில், 80 லட்சம் பெண்கள் பூப்படைகின்றனர். அதில் பாதியளவு பெண்களுக்கு, பூப்படைதல் பற்றியும், தங்களது உடலில் ஏற்படும் பருவ மாற்றங்கள் குறித்தும் புரிதல் இல்லை என்பதே நிதர்சனம். அதைவிடக் கொடுமை வருடத்தில் இருபது லட்சம் பெண்கள், பருவமடைந்தவுடன் பல்வேறு காரணங்களால் பள்ளிப்படிப்பை தொடர்வதில்லை. இதில் முக்கிய காரணங்களாய் இருப்பது சுகாதாரக் குறைபாடு. நாப்கின் உபயோகம் மற்றும் டிஸ்போசல் குறித்த விழிப்புணர்வின்மை பெரும் வேதனை” என்கிறார் இளம் தொழிலதிபர் அதிதி குப்தா.
“இயற்கையாக வெளிப்படும் இந்த ரத்தக்கசிவு, எந்தவொரு பெண்ணையும் பலவீனப்படுத்தாது, பாதிக்கவும் செய்யாது என்பதுடன், ஒரு பெண், தனது கனவை, இலக்கை நோக்கிச் செல்வதற்கு மாதவிடாய் எப்போதும் தடையாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்ற முனைப்புடன் ‘மென்ஸ்ட்ருபீடியாவை’ செயல்படுத்தி வருகிறார். யாரிந்த அதிதி குப்தா..? மென்ஸ்ட்ருபீடியா என்றால் என்ன..? மாதவிடாய் தீண்டாமைக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்..? என்பதைத்தான் பார்க்கப் போகிறோம் இப்போது.
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வாவில், சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அதிதி. பூப்படைந்தபோது அதிதியின் வயது பனிரெண்டு தான். தனது சகோதரனுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அதிதிக்கு அடிவயிற்றில் ஏதோ ஓர் அசௌகரியம் ஏற்பட, அம்மாவிடம் ஓடினார். அதிதி பூப்படைந்த விஷயம் தெரிந்தவுடன் அவரது தாய், இரண்டரை மக் அளவு பச்சைத் தண்ணீரில் குளிக்க வைத்து, அந்த ஈரத்துடன் ஒரு தனியறையில் உட்கார வைத்து, தனி பாத்திரத்தில் உணவையும் நீரையும் கொடுத்ததுடன், அவற்றையெல்லாம் அவரையே சுத்தப்படுத்தச் செய்தார். ஒதுக்கப்பட்டது மட்டுமின்றி, தான் உடுத்திய உடைகளைத் துவைக்கச் செய்தது, சகோதரர்களுடன் பேசக்கூடாது என்று கண்டித்தது எல்லாம் அதிதியை அதிரச் செய்தது.
தான் ஓடி விளையாடிய அந்த வீட்டுக்குள் திடீரென்று ஒதுக்கப்பட்டதும், தான் இளவரசி என்று நம்பிய அதே வீட்டில் ஒரே நாளில் தீண்டத்தகாதவளாய் மாறியதும், அதிலும் தனது பெற்றோர்களே அதற்குக் காரணமாக இருப்பதையும் கண்டு திகைத்து நின்றார் அதிதி. தொடர்ந்த நாட்களில் மாதவிடாய்க் காலங்களில் சமையலறை பூஜையறைக்குள் அனுமதி மறுப்பு, சகோதரன் தந்தையிடம் பேசக்கூடாது என்ற தடை, ஊறுகாய் கெட்டு விடும் என்று அந்த பாட்டிலை தொட்டதற்கு திட்டு என இந்தத் தீண்டாமைகள் தொடர நொறுங்கிப் போனார் அதிதி.
அனைத்திற்கும் மேலாக, நாப்கின்களை கடைகளில் வாங்கினால், குடும்ப மரியாதை குறைந்துவிடும் என்று மறுக்கப்பட்ட நிலையில், மாதவிலக்கில் துணியை மட்டுமே பயன்படுத்தச் சொல்லியும், அதைத் தானே துவைத்து மறைத்து வைக்க வலியுறுத்தப்பட்ட போதும் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானார் அதிதி.
தனது தோழியரிடம் பேசும்போது, இந்தக் கொடுமைகளை தான் மட்டும் அனுபவிக்கவில்லை, தனது வயதுள்ள பெரும்பான்மையான பெண்களும் அனுபவிக்கின்றனர் என்பது அதிதிக்குப் புரிந்தது. அறியாமையாலும், இயலாமையாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டாலும், அதிதி தனது பதினைந்தாவது வயதில் பாடப் புத்தகத்தில் மாதவிலக்கு பற்றி முழுமையாக அறிந்து கொண்டபோது, ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் இயற்கையான நிகழ்விற்கு ஏன் இத்தனைக் கொடுமைகள் என்ற கோபம் தான் வந்தது.
தொலைக்காட்சியில் சானிடரி நாப்கின்கள் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் போதெல்லாம், இவற்றைப் பெறுவது எப்படி..? பயன்படுத்துவது எப்படி..? என்று யோசித்துக் கொண்டே இருந்த அதிதி, தனது 15வது வயதில் ரகசியமாக வாங்கிய சானிடரி நாப்கின்களை முதன்முதலாகப் பயன்படுத்தியபோது தான் அதன் சௌகர்யங்களை உணர்ந்தார்.
வருடங்கள் உருள, அதிதி பொறியியல் படிப்பை முடித்து எம்பிஏ பயில அகமதாபாத்தின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனிங்கில் இணைய, அவரின் வாழ்க்கையும் திசையும் மாறியது. தன்னை நன்றாகப் புரிந்து, தன் கனவுகளை அங்கீகரிக்கும் நண்பனாக கல்லூரியில் இருந்த துகின் பால் தனக்கான சரியான வாழ்க்கைத்துணை என்று முடிவு செய்தபின், அதிதி தனது கனவுகளை நண்பனிடத்தில் பகிரத் துவங்கினார்.
தான் பூப்படைந்த வயதில் கிராமத்தில் நடந்தவற்றையெல்லாம் சொல்லி, தனது அம்மாவோ மற்ற பெண்களோ அதைப்பற்றி பேச மறுத்ததையும், மாதவிடாய் தொடர்பாக எத்தனையோ கேள்விகள், குழப்பங்கள், பயங்கள். பள்ளிப்பாடத்தில் கூட ஆசிரியைகள் அது குறித்த பாடங்களைத் தவிர்த்துவிட்டு அடுத்த பாடத்திற்குப் போகும் நிலை, இதற்கெல்லாம் நம்பகமான சரியான தகவல்கள் எங்கிருந்து கிடைக்கும் என்று குழம்பித் தவித்ததையும், இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயங்களே, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் தனது புராஜெக்ட்டா இருக்க முடிவு செய்திருப்பதை நண்பனிடம் பகிர்கிறார்.
அதிதியின் பொறுப் புணர்வையும், கவலைகளையும் புரிந்துகொண்ட துகின் பால், அதிதியோடு கைகோர்த்தார். மேற்படிப்பை முடித்த இருவரும் 2012ல், ‘பிங்கி’, ‘ஜியா’, ‘மீரா’ என்ற சிறுமிகளின் கற்பனை பாத்திரங்களை உருவாக்கி காமிக் கதைப்புத்தகம் ஒன்றை தயாரித்தனர். அதில் ‘ப்ரியா தீதி’ என்ற மருத்துவர் கதாபாத்திரம் மூலமாக, சிறுமிகள் மூவருக்கும் மாதவிடாப் குறித்தும், அதில் உள்ள மூட நம்பிக்கைகள், உண்மையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து புரிதலை ஏற்படுத்தும் கருத்துக்கள் அடங்கிய கதைகளையும், ஓவியங்களையும் காமிக்ஸ் வடிவில் உருவாக்கினர்.
இந்த முன்னெடுப்பை துவக்கத்தில் சிலர் எதிர்த்தாலும், அதை ஓரளவு அழகான புத்தகமாக மாற்றி தெரிந்தவர்களிடம் தந்தபோது, பெற்றோர், ஆசிரியர்கள், மாணவிகள் மகிழ்வுடன் அங்கீகரிக்க, ‘யுரேகா’ ‘என குதூகலித்தார் அதிதி. ஒருசில பொருளாதாரச் சிக்கலில், காமிக் புத்தகத்தை நினைத்த வடிவில் அச்சிட முடியவில்லை அவரால்.
தனது கனவைக் கைவிட விரும்பாதவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, கிடைத்த வருவாயை சேமித்து அடுத்த சில ஆண்டுகளிலேயே தன் கனவை மீட்டெடுக்கிறார். இம்முறை அதிதி அதற்கு ‘மென்ஸ்ட்ருபீடியா’ என்று பெயரிடுகிறார். தனது வருங்கால வாழ்க்கைத் துணைவனுடன் இணைந்து ‘மென்ஸ்ட்ருபீடியா’ கதைகளை ஆங்கிலம். ஹிந்தி தவிர்த்து பிராந்திய மொழிகள் நான்கில் மொழிபெயர்த்து வெளியிட்டதுடன், தன் நண்பர் ரஜாத் என்பவருடன் இணைந்து தனி இணையதளம் ஒன்றை உருவாக்கி, மாதவிடாய் குறித்த விளக்கங்கள், கேள்வி பதில்கள், பாடல்கள் என பதிவேற்றினார்.
தனது கனவு பயணத்திற்கு பொருளா தாரம் தடையாக இருக்கக் கூடாது என எண்ணியவர், ஏறத்தாழ 175 பங்கீட்டாளர்களின் நிதி உதவியுடன், ஐந்து லட்சம் பணத்தைத் திரட்டியதோடு, புத்தகங்களை அச்சிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சேர்த்ததுடன், சமூக வலைத் தளங்களிலும் ‘மென்ஸ்ட்ருபீடியா’ வை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பெற்றோரிடமும் ஆசிரியை களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற மென்ஸ்ட்ருபீடியா, பல பள்ளிகளின் பாடத்திட்டத்திலும் இடம்பெறத் துவங்கியது. இந்தியாவில் ஆறு ஆயிரத்திற்கும் மேலான பள்ளிகளில் மென்ஸ்ட்ருபீடியாவின் காமிக் புத்தகங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் உள்பட பதினாறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வலைத்தளங்களில் ‘மென்ஸ்ட்ருபீடியா’ மெல்லப் பரவ, அடுத்த கட்ட முயற்சியாக, பெண்கள் நல மருத்துவர்களுடன் இணைந்து, அறியாமையில், சுகாதாரம் இல்லாத விஷயங்களுக்குப் பழகிப்போன பெண்களுக்கு, அவையெல்லாம் பிற்காலத்தில் குழந்தைப் பிறப்பு விஷயத்தில் பெரும் பாதிப்புகளை தருவிக்கக்கூடும் என்ற புரிதலை ஏற்படுத்துகிறார். அத்துடன் மாதவிடாய் குறித்த சந்தேகங்களைப் போக்கிட, கிராமப்புற பள்ளிகளுக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் நேரிடையாக சென்று விளக்கமளிக்கவும் செய்கிறார் அதிதி..
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2014ம் ஆண்டு, சானிடரி நாப்கின்களை பெருமளவு தயாரிக்கும் ‘விஸ்பர்’ நிறுவனம் தொடங்கிய ‘டச் தி பிக்கிள்’ (ஊறுகாய் ஜாடியைத் தொடுங்கள்) இயக்கத்துடன் இணைந்தார் அதிதி. அதில் பங்கேற்ற விளையாட்டு மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வழியாக அதிதியின் கனவு நனவாக தொடங்கியது.
கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழாவில், ‘தி கோல்டன் லயன்’ விருதினை ‘டச் தி பிக்கிள்’ பெற்றிட, மென்ஸ்ட்ருபீடியா உலக கவனம் பெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பங்களாதேஷ், நேபாள், ஹங்கேரி, உருகுவே என இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
menstrupedia.com இணைய தளத்தை திறந்தால், உள்ளே கண்ணை நிறைக்கும் வண்ணமயமான காமிக்ஸில், 9 முதல் 11 வயது பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு என்றால் என்ன? அப்போது என்ன நிகழ்கிறது என மருத்துவர்களால் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் சுவாரஸ்யம் மிக்க படக்கதைகளால் விவரிக்கப்பட்டுள்ளன.
குறைந்தது ஐம்பது மில்லியன் பெண் குழந்தைகளுக்கு காமிக் புத்தகங்களை கொண்டு சேர்ப்பதை அடுத்த இலக்காக கொண்டு இயங்கும் அதிதி, பிசிஓடி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றிய விழிப்புணர்வு, பருவகால தடுப்பூசிகள் ஆகியன, தான் கடக்க வேண்டிய அடுத்த மைல்கற்கள் என்று புன்னகைக்கிறார்.
‘சிவப்பெனும் அழகு’ என்கிற இவர் இணைய வழிப் பேச்சு பாராட்டுகளைக் குவித்திட, ‘சங்கல்ப்’ விருது, ‘ரைசிங் சன்’ விருது, க்ளோபல் ஷேப்பர் விருது, ‘அண்டர் 30’ தொழில் முனைவோருக்கான விருது இவற்றுடன், இளம் பெண்களின் சுகாதார மேம்பாட்டிற்கான யுனிசெஃப் அழைப்பென தவிர்க்க முடியாத நபர்களில் ஒருவராய் நிற்கிறார் அதிதி.
தீட்டு என்பது சாபமோ, அசுத்தமோ அல்ல. வரவேற்க வேண்டிய இயற்கை அழைப்பென உலகம் சொல்லும் நாளுக்காய் காத்திருக்கிறார் அதிதி குப்தா. ஆம்..அடக்கப்படும் ஒவ்வொரு முறையும் பெண் தனக்காக எழுச்சியில், அவளை அறியாமலே மற்ற பெண்களுக்காகவும் எழுகிறாள்.. அதிதி போல..!