அந்த நாட்களின் அவஸ்தையை தவிர்க்க…!! (மகளிர் பக்கம்)
எப்பேர்ப்பட்ட சுறுசுறுப்பான பெண்ணையும் உடலளவிலும் மனத்தளவிலும் ஆட்டிப்படைக்கிற அவதிகள் மாதவிலக்கு நாட்களில் சொல்லி மாளாதவை. சின்னச்சின்ன விஷயங்களின் மூலம் அந்த அவதிகளில் இருந்து விடுபட முடியும். சில சிம்பிள் டிப்ஸ் இங்கே..
நிறைய தண்ணீர் குடியுங்கள்
மாதவிடாய் நெருங்கும் நாட்களிலும் சரி, மாதவிடாய் வந்த பிறகும் சரி வழக்கத்தைவிட அதிகம் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் உடல் வறண்டு போகாமல் காப்பதுடன், மாதவிடாய் நாட்களின் வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றின் தீவிரத்தைக் குறைக்கும். வெறும் தண்ணீர் குடிக்கப் பிடிக்காவிட்டால் உப்பு சேர்க்காமல் எலுமிச்சை மற்றும் புதினா கலந்து குடிக்கலாம்.
உணவில் கவனம் செலுத்துங்கள்
பீட்சா, பர்கர், வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிருங்கள். கொழுப்பு குறைவான, அதிக நார்ச்சத்து நிறைந்த, முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்களை இந்த நாட்களில் அதிகம் சாப்பிடுங்கள். வைட்டமின் இ, பி1, பி6, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை அதிகமுள்ள உணவுகளைத் தெரிந்துகொண்டு சாப்பிடுவது மாதவிலக்கு நாட்களில் ஏற்படுகிற உடல் வலி, தசைப்பிடிப்பு மற்றும் உடல் வீக்கம் போன்றவற்றுக்குக் காரணமான ஹார்மோன்களின் இயக்கத்தை சீராக்கும்.
காபிக்கு குட்பை
மாதவிலக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் காபி குடிப்பதை நிறுத்துங்கள். அதிலுள்ள கஃபைன், தசைப்பிடிப்பு உள்ளிட்ட அந்த நாள் அவதிகளை அதிகமாக்கும். கூடவே சோடா, எனர்ஜி ட்ரிங்க், டீ மற்றும் கோகோ பானங்களையும் தவிர்க்கவும். அசவுகரியங்கள் ஏதுமின்றி அந்த நாட்களைக் கடக்க நினைத்தால் காலையில் ஏதேனும் பழம் அல்லது காய்கறிகளில் செய்த ஸ்மூத்தி எடுத்துக்கொள்ளலாம்.
ஒத்தடம் கொடுங்கள்
மாதவிலக்கு நாட்களில் ஏற்படுகிற உடல் வலியைக் குறைக்க வெந்நீர் ஒத்தடம் பெரிதும் உதவும். உபயோகித்ததும் தூக்கி எறியக்கூடிய டிஸ்போசபிள் ஹீட் ராப்புகள் இப்போது சில மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கியும் உபயோகிக்கலாம்.
நன்றாகத் தூங்குங்கள்
மாதவிலக்கு நாட்களில் பல பெண்களுக்கு தூக்கம் என்பது பெரும் பிரச்னை. வலிகளை சகித்துக்கொண்டு தூங்குவது என்பது சாத்தியமே இல்லை என நினைப்பார்கள். இரவு படுக்கும் முன்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்துவிட்டு, தலையணை ஓரங்களில் லேவண்டர் ஆயில் ஒரு சொட்டு விட்டுக் கொண்டு தூங்க ஆரம்பித்தால் சுகமான நித்திரை நிச்சயம்.
நிதானமாகக் குளியுங்கள்
மற்ற நாட்களில் அரக்கப்பரக்கக் குளிக்கிறவராக இருந்தாலும் மாதவிலக்கு நாட்களில் அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். பாத் டப் இருந்தால் அதில் அரைமணி நேரம் செலவழித்து நிதானமாக மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்தபடிக் குளிக்கலாம். டென்ஷன்களை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு ஷவரின் கீழே உங்களை மறந்து நிதானமாக ஒரு குளியல் போடுங்கள். அதுவும்கூட மாதவிலக்கு நாட்களின் உடல் அசதிகளைப் போக்கும்.
மருத்துவரைப் பாருங்கள்
மேலே சொன்ன எந்த வழிக்கும் உங்கள் அவதிகள் அடங்கவில்லையா? அப்படியானால் அது வேறு ஏதேனும் பிரச்னைகளின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். தொடர்ந்து இரண்டு, மூன்று மாதவிலக்குகளின் போது அதே பிரச்னைகளை உணர்ந்தீர்கள் என்றால் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.