மீன் வளர்ப்பு தரும் ஆனந்தம்! (மருத்துவம்)
நமது வீட்டில் மீன் வளர்ப்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் மகிழ்ச்சியைத் தருவது. வீட்டில் மீன்தொட்டியை வைத்துப் பராமரிப்பது, நம்மை சீரான மனநிலையில் வைத்துக்கொண்டு நமது செயல்திறனைக் கூட்ட உதவுகிறதாம். மீன்கள் உயிரோட்டத்தையும் நேர்மறையையும் குறிக்கின்றன. எனவே, தொட்டியில் நீந்தும் மீன் நேர்மறை உணர்வலைகளை வெளியிடுவதாக நம்பப்படுகிறது. மேலும், மீன்தொட்டிகள் வீட்டின் அழகையும் வசீகரத்தையும் கூட்டுவதுடன் அமைதி உணர்வையும் உருவாக்குகிறது. வண்ணமயமான மீன்கள் கண்ணாடித் தொட்டிகளில் நீந்துவது ஓர் அழகான காட்சியாகும். இது, அந்த இடத்தை உத்வேகம் ஊட்டுவதாக மாற்றுகிறது. எனவேதான், பல்வேறு கலாச்சாரங்களிலும் மீன் வளர்ப்பது நன்மை பயக்கும் ஒன்றாக கருதப்படுகிறது.
மீன் தொட்டி வைத்திருப்பதால் அமைதியான சூழல் உருவாகி, கவலையும் மன அழுத்தமும் குறையும். ஏனெனில், மீன்களை நாம் கவனிப்பதும் ஒரு வகையான சிகிச்சை முறையாக உள்ளது. மீன் தொட்டிகளைப் பார்ப்பதில் நேரத்தை செலவிடுபவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.மீன்கள் சுறுசுறுப்பு, வலிமை, வெற்றியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இரண்டு மீன்கள் இணையாக நீந்திச் செல்வது ஒற்றுமையைக் குறிப்பதாகும். மீன்தொட்டியை வீட்டில் வைப்பது மனநிலையை சீராக்குவதுடன் செல்வ செழிப்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
அந்தவகையில், நல்ல அதிர்ஷ்ட மீனை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பதன் மூலம் நேர்மறையான உணர்வலைகளுடன் கூடிய மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. மேலும், மீன்கள் கண்களை திறந்த நிலையிலேயே தூங்கும் தன்மை கொண்டவை. இதனால் என்றும் விழித்துக் கொண்டிருப்பதால் தீயசக்தியை நுழையவிடாது. தீய சக்தியை உடன் இழுத்து, தீமையை ஏற்றுக் கொண்டு வீட்டில் இருப்பவர்களை காப்பாற்றுகிறது என்றும் நம்பப்படுகிறது.
மீன்தொட்டியை பராமரிக்கும் முறை :
தொட்டியின் தண்ணீரை எப்போதும் முழுமையாக மாற்றக்கூடாது. ஒவ்வொரு வாரமும் 10-20 சதவீத அளவு தண்ணீரைத் தான் மாற்ற வேண்டும். தொட்டியில் வடிகட்டுதல் அமைப்பு நிறுவப்பட்டிருந்தால், 30-50 சதவீத தண்ணீரை மாற்ற ஒரு மாத காலம் கூட காத்திருக்கலாம். தண்ணீரில் உருவாகும் பாக்டீரியா மீன்களை உயிர் வாழச்செய்யும். அதனால் தண்ணீரை முழுமையாக மாற்றினால், அது மீன்களுக்கு ஆபத்தாய் போய்முடியும்.
வீட்டிற்குள் நுழையும்போது, இடது பக்கமாக மீன்தொட்டி இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு திசையில் மீன் தொட்டி வைத்தால் அன்பு அதிகரிக்கும். படுக்கையறை அல்லது சமையலறையில் மீன்தொட்டியை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது வீட்டில் குடியிருப்பாளர்களுக்கு தூக்கம் அல்லது உணவு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மீன் தொட்டியை தனியாக வைப்பதற்கு பதிலாக, வீட்டு வடிவமைப்பில் ஓர் அங்கமாக ஒருங்கிணைக்கலாம். அதாவது டைனிங் டேபிள் ஃபிஷ் டேங்க் அல்லது ஸ்டடி டேபிள் டேங்க், பில்ட்-இன் சுவர் அல்லது ஹோம் ஆபிஸ் டிவைடர், பில்லர் டேங்க், வாக் ஓவர் டேங்க், சுவர் டேங்க், போட்டோ ஃபிரேம் டேங்க் என வீட்டின் அங்கமாக மீன்தொட்டியை வடிவமைக்கலாம்.
மீன்களின் நிறம்:
சிவப்புநிற மீன்கள் வளமையையும், பச்சைநிற மீன்கள் வளர்ச்சியையும், மஞ்சள்நிற மீன்கள் செயல்திறனையும் வளர்க்கும். மீன்களை ஒற்றைப்படையாக வைக்க வேண்டும். 4 ஜோடிகளுடன் ஒரு கறுப்பு மீனையும் வளர்த்தால் அதிர்ஷ்டம் எனப்படும் மீன்தொட்டியில் கறுப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும். ஒருவேளை அந்த கறுப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம்.
வீட்டில் மீன்தொட்டி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
சுறுசுறுப்பாக இருக்கும் மீன்களைத் தேர்ந்தெடுத்து தொட்டியில் விடவும். இது ஆற்றலின் சீரான ஓட்டத்தை உறுதி செய்யும். மீன்கள் வீட்டின் நிதிநிலைமையை சரியாக வைத்து செல்வத்தை ஈர்க்கின்றன.
மீன் வளர்ப்பு ஒரு அமைதியான சூழ்நிலையை உங்கள் வீட்டில் உருவாக்கின்றது. மீன்தொட்டிகள் வெற்றி மற்றும் நல்லிணக்கத்திற்கு முக்கியமாக கருதப்படுகின்றன. மீன்கள் வாழ்வாதாரத்தையும் நேர்மறையையும் குறிக்கின்றன. எனவே, தொட்டியில் நகரும் ஒரு மீன் நேர்மறை அதிர்வுகளை வெளியிடும் என்று நம்பப்படுகிறது.வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என்றால், மீன்தொட்டியில் கண்டிப்பாக 9 மீன்களாவது இருக்க வேண்டும். 9 மீன்களுக்கு குறைவாக மீன் வளர்க்கக் கூடாது.