மாற்றுத் திறனாளிகளை அரசியல்படுத்தவே டிசம்பர்-3 இயக்கம்!! (மகளிர் பக்கம்)
தமிழகம் முழுக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து, அனைத்துவிதமான உடல் சவால்களை எதிர்கொள்பவர்களின் உரிமைகளை சட்டப்பூர்வமாக பெற்றுத் தருபவர் டிசம்பர்-3 இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் தீபக்நாதன். ‘‘மாற்றுத் திறனாளிகள் கருணை அடிப்படையில் எதையும் கேட்கக் கூடாது என்கிற சிந்தனை எனக்கு இருந்தாலும், இந்த வாழ்வின் மீது சமூகம் கொடுத்த பதட்டத்தின் காரணமாய் கருணை அடிப்படையில் அரசு வேலை கேட்டு நின்றவன் நான்’’ என பேச ஆரம்பித்த தீபக்நாதன், சென்னை லயோலா கல்லூரியின் சமூக பணித்துறை (Social Work Dept) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். டிசம்பர்-3 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் என்பதை பலரிடம் கொண்டு சேர்த்திருப்பதே நாங்கள் செய்திருக்கும் மிகப் பெரிய விஷயம். மீண்டும் மீண்டும் இதை மக்களுக்கு நினைவூட்டி, உரிமைசார் பிரச்சனையோடு மாற்றுத்
திறனாளிகளை வழிநடத்தி கொண்டு செல்வதற்காகவே டிசம்பர்-3 இயக்கத்தை கொண்டு வந்தோம் என்கிற தீபக்நாதன் சமூகமும் இதற்கு உடன் நிற்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.எந்த ஒரு சட்டமும் நடைமுறைக்கு வர நாம் அது குறித்து அதிகம் பேச வேண்டி இருக்கிறது. பேசுகின்ற பார்வை இங்கு குறைவாக இருப்பதால் எதிர்த்து கேள்வி கேட்டு, நாங்கள் பேச ஆரம்பித்த பிறகே, மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்திப் பேசினால், அவர்கள் மாண்பைக் குறைக்கும் வகையில் திரைப்படங்களில் இழிவாகக் காட்டினால், போராட்டக்களத்திற்கு அவர்களும் வருவார்கள் என்கிற விழிப்புணர்வே தமிழகத்தில் வந்திருக்கிறது. இதில் பல்வேறு மாற்றுத்திறனாளி இயக்கங்களின் முன்னெடுப்பும் பங்களிப்பும் மிக முக்கியமானது என்றவர், இந்த மாதிரியான கருத்தியல்களை முன்னெடுக்கத்தான் டிசம்பர்-3 இயக்கத்தை உருவாக்கினேன் என்கிறார்.
கேட்கின்ற இடத்தில் இருந்து கொடுக்கிற இடத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நகர வேண்டும். அப்படியென்றால் அவர்களுக்கு அரசியல் புரிதல் வரவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பு கீழிருந்து எல்லா மட்டத்திலும் வர வேண்டும். கடை நிலையில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளில் ஆரம்பித்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டில் அரசியல் படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளை டிசம்பர்-3 இயக்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
ஓராண்டிற்கு முன் தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெவ்வேறு விதமான உடல் சவால் பிரச்சனைகளை கொண்ட 48 மாற்றுத்திறனாளி நண்பர்களை டிசம்பர்-3 இயக்கம் தேர்தலில் நிற்க வைத்தது. அதில் ஒன்பது வாக்காளர்கள் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வாகி, தங்களின் தலைவர்களாக மக்கள் ஏற்றுக்கொண்டு, இன்று மக்கள் பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர். இதுவொரு சத்தமில்லாத மாற்றம். புரட்சி என்றே சொல்வேன் என்கிற பேராசிரியர் தீபக்நாதன் தான் பணியாற்றும் லயோலா கல்லூரியின் முன்னாள் எம்.எஸ்.டபிள்யூ மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் படித்த கல்லூரியிலேயே உதவிப் பேராசிரியராய் சமூகப் பணி துறையில் பணியாற்றி வருகிறார். அவர் குறித்து விரிவாகக்
கேட்டபோது..?
பிறந்த ஒன்பது மாதத்தில் போலியோவால் நான் பாதிக்கப்பட்டேன். பள்ளி படிப்பை முடித்ததும் தூத்துக்குடி வ.ஊ.சி கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து, பிறகு சென்னை லயோலா கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யூ படிப்பில் முதுகலை படிப்பையும் முடித்தேன். எனது திறமையை பார்த்த நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் ஈ.எஸ். கிருஷ்ணமூர்த்தி முன்னெடுப்பால், முழு உதவித்தொகையுடன் (scholarship) லண்டனின் மதிப்பு மிக்க கல்லூரிகளில் ஒன்றான கிங்ஸ் கல்லூரியில் மனோதத்துவப் முடிப்பில் முதுகலை பட்டம் முடித்தேன்.
தினமும் சென்ட்ரல் லண்டனில் இருந்து இரண்டு பேருந்துகளை பிடித்து கல்லூரிக்குச் செல்ல வேண்டும். லண்டனில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேருந்து பராமரிப்புப் பணிகள் நடைபெறும். நான் கல்லூரி செல்லும் வழியில் இயங்கும் பேருந்துகளுக்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நீங்கள் பயணிக்கும் வழித்தடப் பேருந்து பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்களுக்கு இயங்காது. நீங்கள் பெர்ஷன் வித் டிசெபிளிட்டி என்பதால், உங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய எதுவும் உதவ வேண்டுமா? எனக் கேட்டு லண்டன் மேயரிடம் இருந்து எனக்கு கடிதம் வருகிறது. அந்த அளவிற்கு மக்கள் மீது கவனம் வைக்கும் அரசாக செயல்படுகிறது என்பதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறேன் என்றவர், அதேபோல் நான் படித்த கிங்ஸ் கல்லூரியிலும் ஒரு முறை லிஃப்ட் மெயின்டெனன்ஸ் பணி நடைபெற்றது.
அப்போது கல்லூரி முதல்வரிடமிருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் அருகில் உள்ள வேறொரு லிஃப்ட் பயன்பாட்டுக்கான மாற்று வழியினைக் குறிப்பிட்டு, உங்களை வழிநடத்த அதற்கென உதவியாளர் ஒருவர் வருவார் எனக் குறிப்பிட்டிருந்தார். நான் லண்டனில் படித்த காலத்திலேயே, சுற்றுலாத்தளங்கள், ரயில் நிலையங்கள், பொதுக் கழிப்பறைகள் என அனைத்துமே டிசெபிளிட்டி பிரெண்ட்லியாக இருந்தது. லண்டனின் இதயமான வெஸ்ட்மினிஸ்டர் அபே என்கிற பார்லிமென்ட் ஏரியா, பார்லி ஏபிள்(ParliAble) என இணைய பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.
லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து விஷயங்களையும் மிகமிகப் பிரமாதமாகப் பார்த்தாலும், படிப்பை முடித்ததும் அங்கேயே செட்டிலாகும் எண்ணம் எனக்கு வரவில்லை. காரணம், நமது ஊருக்கு சென்று இதையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமே எனக்கு அப்போது இருந்தது. ‘எதையாவது செய்யணும்னா முதலில் தொடங்கிப்பாரென’ என் நண்பன் சொன்னதும் ஞாபகத்தில் இருந்தது. இந்தியா திரும்பியதும் பொதுவாழ்க்கையில் இறங்கி, 2007ல் மாற்றுத்திறனாளிகளுக்கான என்னுடைய முதல் உரிமைக் குரலை எழுப்பினேன். 2009 வரை பல்வேறு மாற்றுத்திறனாளி போராட்டங்களில் பங்கேற்று பல்வேறு வழக்குகளை தொடர்ச்சியாக சந்தித்தேன்.
ஒன்று மறுக்கப்படும்போது அதை கேட்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம் எனப் புரிந்தது. இதனை தொடர்ந்தே டிசம்பர்-3 இயக்கத்தை நண்பர்களின் ஆலோசனையில் தொடங்கினேன். எங்களின் இந்த இயக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைக் குரல். இல்லாதவர்களைப்போல கொடுப்பார் முன் நிற்பதையும், ஐயோ பாவம் என இந்த சமூகம் இரக்கப் பார்வை வீசுவதையும் தடுத்து, சக மனிதனாக அவனுக்கான உரிமைகளை பேச நினைத்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு சில மாண்புகள்(values) இருக்கிறது.
தனிப்பட்ட உணர்வுகள் இருக்கிறது. சில கருத்தியல்கள் இருக்கிறது. அரசியல் சிந்தனைகள் இருக்கிறது. இந்தக் கருத்துகளை வலியுறுத்தி, உரிமைசார் பார்வையை பேசுவதற்கே டிசம்பர்-3 இயக்கம். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகளை மட்டுமே பேசும் கண்ணோட்டத்தையும் மாற்றி, நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளிலுமே அவர்களுக்கும் பார்வை இருக்கிறது. உணர்வு இருக்கிறது. பங்கீடு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி, வெகுஜன மக்கள் பிரச்சனைகளிலும் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறோம் என்றவாறு தனது அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தி விடை கொடுத்தார்.
மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன் படிக்கை…
ஐ.நா பேரவை 1981ம் ஆண்டை மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆண்டாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 1981 முதல் 1991 வரையிலான பத்தாண்டுகளை Decade for disabled என மாற்றுத்திறனாளிகளை சிறப்பிக்கும் ஆண்டாய் அறிவித்தது. இந்த நிலையில் டிசம்பர்-3 தினத்தை மாற்றுத்திறனாளிகள் உரிமை தினமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. 2004ல் மெக்சிகோ நாடு மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக உரிமை சாசனம் தேவை என்கிற முக்கியமான சட்ட முன்வடிவை ஐ.நா. பொதுமன்றத்தில் கொண்டு வந்து உறுப்பு நாடுகள் முன் வைத்தது.
இதை வரையறை செய்து மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக, மாற்றுத் திறனாளிகள் அமர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்காக இயற்றிய சாசனம்தான் 2007 ஐ.நா.வின் மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கை. 20 நாடுகள் கையெழுத்திட்டதும் இது அமலுக்கு வரும். அதன்பிறகே அவர்கள் நாட்டில் இது சட்டமாகும். இதை அந்த நாட்டினுடைய தலைமை ஏற்கும். இந்த உரிமை உடன்படிக்கையினை நம் இந்தியா 2007ல் ஏற்றுக்கொண்டது.
அல்போன்ஸ் ரெத்னாபேராசிரியர் தீபக்நாதனின் இணையர் எங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது. 2010ல் நான் அவரை சந்தித்தேன். இருவருமே லயோலா கல்லூரி மாணவர்கள்தான் என்றாலும் கல்லூரியில் எங்கள் சந்திப்பு நிகழவில்லை. ஏனெனில் நாங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் மாணவர்களாக இருந்தவர்கள். ஆனால், பொதுநிகழ்ச்சிகளில் அவரை நான் தூரத்தில் பார்த்திருக்கிறேன். இந்த நிலையில் அவர் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு மானிட்டரிங் அலுவலகராக நான் செல்ல வேண்டியிருந்தது.
அப்போதுதான் அவரோடு நட்பு ஏற்பட்டது. இரண்டே ஆண்டில் இருவருக்கும் நல்ல புரிதல் உருவானது. அவரை எனக்குப் பிடித்திருந்தாலும் நான் அவரிடத்தில் வெளிப்படுத்தவில்லை. காரணம், எனது அன்பை அனுதாபப் பார்வையாய் அவர் எடுத்துவிடக்கூடாது என்று நினைத்தேன். சிறிது நாளில் அதே எண்ணத்தில் அவர் நேரடியாகவே என்னிடம் பேசினார். இருவரிடமும் ஒரு முதிர்ச்சி இருந்தது. அந்த முதிர்ச்சியோடு எங்கள் திருமணத்தை கொண்டு சென்றோம்.
இருவருமே வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். அதையும் தாண்டி எங்களின் சாதியப் படிநிலை, அவர் மாற்றுத்திறனாளி, இதையெல்லாம் குடும்பத்தினருக்கு எப்படி புரிய வைக்கப் போகிறோம் என்கிற குழம்பம் எனக்கிருந்தது. காரணம், என்னுடையது கூட்டுக் குடும்பம். அவரிடத்தில் கொஞ்சம் இடைவெளி கேட்டேன். அந்த இடைவெளியில் என் குடும்பத்தினரிடம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் குறித்துப் பேசி புரிய வைத்தேன். 2 ஆண்டுக்குப் பிறகே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. நான் பெரியாரிய சிந்தனைகள் கொண்ட ஒரு பெண். இருவருமாக இணைந்து திடலுக்குச் செல்வோம். அம்பேத்கர், பெரியார் குறித்தெல்லாம் தேடித்தேடி அறிவைச் சேர்த்தோம்.
2014ல் நான் படித்த லயோலா கல்லூரியிலே அவுட்ரிச் டிபார்ட்மென்ட்டில் ஆசிரியராக வேலையில் சேர்ந்தேன். அவர் போராட்டக்களம், அமைப்பு என செயல்பட்டுக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவரும் முயற்சித்து இதே கல்லூரியில் சோஷியல் வொர்க் டிபார்ட்மென்ட் ஆசிரியராக பணிக்கு வந்தார். நான் அவரை சக மனிதராக.. ஒரு சிந்தனையாளராக.. அறிவில் சிறந்தவராக மட்டுமே பார்க்கிறேன். எந்த இடத்திலும் அவர் மாற்றுத்திறனாளியாக எனக்குத் தெரிந்ததே இல்லை. அவரின் டிசெபிள் எந்த இடத்திலும் எங்கள் வாழ்க்கை பயணத்தில் தடையாக இல்லை. எல்லா விஷயங்களிலும் இருவரும் இணைந்தே இணையராய் பயணிக்கிறோம்.
ஊடக அறம்
அமெரிக்கன் டிசெபிளிட்டி ஆக்ட் கொண்டு வந்ததில் அந்த நாட்டு ஊடகத்திற்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது. நமது நாட்டிலும் மாற்றுத்திறனாளிகள் எழும்பியபோதேல்லாம் அவர்களை கைதூக்கியது ஊடகங்கள்தான். இன்று ஊடகங்களின் அதிகரிப்பால் செய்திகளில் மூழ்கி ஞானத்தில் நாம் குறைந்திருக்கிறோம் என்றே தோணுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் அரசியல்…
மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பு என்பது ஐ.நா உடன்படிக்கை சரத்து 29ல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எல்லா அமைப்புகளிலும் அவர்கள் பங்கேற்பதற்கான முழு உரிமை இருக்கிறது. தேர்தலில் நிற்பதற்கும் வாக்களிப்பதற்குமான உரிமை இருக்கிறது என்பதை உறுதி செய்த அற்புதமான உடன்படிக்கை இது. இதை தழுவியே 2018ல் இந்தியாவில் முதல் அரசியல் மாநாடு பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் முன்னிலையில் முன்னெடுத்து நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய அரசியல் சாசனம் சரத்து 15 மற்றும் 16 மாற்றப்பட வேண்டும் என்பதை சென்னை பிரகடனமாக மாநாட்டில் வெளியிட்டார்கள். அதன் தொடர்ச்சிதான் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் நின்றது.