குதிரை ஏற்றத்தில் தங்கம் வென்ற சென்னை சிறுமி! (மகளிர் பக்கம்)
15 வயதாகும் சமன்னா ஈவேரா, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பெங்களூரில் நடந்த 2022ம் ஆண்டு குதிரை ஏற்றம் போட்டியில் 73.225 புள்ளிகள் எடுத்து தென் இந்தியா பிரிவில் முதல் இடத்தை பிடித்தார். இந்த மதிப்பெண், மற்ற பிரிவு போட்டிகளை விட அதிகம். ஒட்டுமொத்த இந்தியாவிலேயே முதல் இடத்தை சமன்னா பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெஸ்ஸாச் (dressage) எனும் போட்டியில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்குள், சவாரி செய்பவர் குதிரையை நேர்த்தியாக இயக்க வேண்டும். இந்த போட்டியில் சவாரி செய்பவருக்கும்,
குதிரைக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும். சவாரி செய்பவரின் உடல் மொழி, குதிரை மீது அவருடைய கால்கள் எப்படி பொருந்தி இருக்கிறது, அவர் குதிரையை தன் கட்டுப்பாட்டில் எப்படி வைத்திருக்கிறார் என்பதை பொருத்து சவாரி செய்பவருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதே போல, குதிரை எப்படி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, எப்படி தலையை சாய்க்கிறது, பயிற்சியாளருடன் சேர்ந்து எப்படி இயங்குகிறது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
நாவலூர், ஓ.எம்.ஆரில் உள்ள சென்னை ஈக்கியுடேஷன் மையத்தில் தான் சமன்னா பயிற்சி பெற்று வருகிறார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த திறமையான குதிரையேற்ற பயிற்சியாளர் இசபெல் ஹாஸ்லெடர் சமன்னாவுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். சமன்னாவைக் குறித்து அவர் அம்மா பூர்ணிமா பேசும் போது, “என் மகளுக்கு இரண்டு வயது இருக்கும் போது கொடைக்கானலில் ஏரியைச் சுற்றிப் பார்க்க ஒரு குதிரையில் அழைத்துச் சென்றேன். அப்போது ஒரு பத்து வயது சிறுமி, அந்த ஏரிக் கரையில் மிகவும் வேகமாக குதிரை சவாரி செய்வதைப் பார்த்த சமன்னாவும் அதே போல போக வேண்டும் என்று அடம்பிடித்தாள். ஆனால் நாங்கள், அந்த சிறுமி குதிரை சவாரியில் பயிற்சி பெற்று இருப்பதால் அவ்வளவு வேகமாக செல்கிறார்.
பயிற்சி இல்லாமல் நாம் அவ்வளவு வேகமாக போகக் கூடாது என்று சொல்லிவிட்டோம். திரும்பி சென்னை வந்ததும், அந்த குதிரை சவாரி பற்றி மட்டும் தான் பேசுவாள். மூன்று வயது இருக்கும் போது, குதிரை பயிற்சியில் சேர வேண்டும் என்று அவளாகத்தான் சொன்னாள். அதனால், நாங்களும் அவளை மூன்று வயதில் இருந்தே குதிரைப் பயிற்சியில் சேர்த்து
விட்டோம்.
ஆனால் இதில் போட்டியில் பங்கு பெற்று ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் என்றுமே அவளை வற்புறுத்தியது கிடையாது. இதை அவள் பொழுதுப்போக்குக்காகவும், உடற் பயிற்சிக்காகவும் செய்தால் மட்டுமே போதும் என்று தான் நினைத்தோம். ஆனால் அங்கு குதிரைப் பயிற்சி செய்யும் மாணவர்கள் பலர் போட்டியில் கலந்து கொண்டு அடுத்தடுத்து பதக்கங்கள் வாங்குவதைப் பார்த்து, சமன்னாவும் போட்டியில் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினாள். அவள் விருப்பப்படி நாங்களும் அவளுக்கு ஆதரவாய் இருக்கிறோம். அதைத் தாண்டிய அவளுடைய பயிற்சியாளர் தான் சமன்னாவை முழுமையாக வழிகாட்டி தயார் செய்கிறார்.
பொதுவாக ஒரு கார் அல்லது பைக் ஓட்டும் போது அந்த வாகனம் முழுமையாக நம்முடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஆனால், குதிரை ஒரு உயிர் உள்ள பிராணி. அந்த குதிரை எப்போதும் நம் பேச்சை கேட்டு, நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் ஆரம்பத்தில் எங்களுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சமன்னாவுக்கு எப்போதுமே செல்லப்பிராணிகளை பிடிக்கும். அவள் எப்போதுமே தன் குதிரையை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கமாட்டாள். முதலில் அந்த குதிரையுடன் நட்பாக பழகி அவள் சொல்லுவதை அப்படியே செய்ய வைப்பாள்.
செச்ட்ஸ் ரிச்ட்ஜ் என்ற ஜெர்மன் குதிரையை என் மகளுக்கு வாங்கி கொடுத்தோம். அவள் தன் குதிரைக்கு சோல் மேட் என்று செல்லமாக பெயர் வைத்துள்ளாள். அந்த குதிரை, பயிற்சி பள்ளியில் இருக்கும் ஒரு பண்ணையில் இருக்கும். காலை ஒரு மணி நேரம் பயிற்சி என்றால், சமன்னா அதிகாலை ஐந்து மணிக்கே தயாராகி தன் குதிரையைப் பார்க்க போய்விடுவாள். அங்கே பயிற்சியை தாண்டி குதிரையை சுத்தம் செய்வது, அதனுடன் விளையாடுவது.
உணவளிப்பது, ஒன்றாக பாட்டு கேட்பது என பல மணி நேரம் அங்கே இருந்து காலையில் அங்கேயே குளித்தும் விட்டு நேராக பள்ளிக்கு சென்று விடுவாள். சமன்னா இதை எல்லாம் முறையாக ஒழுக்கத்தோடு கடைப்பிடித்ததன் மூலம், இந்த குதிரை சவாரி அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கும் புரிந்துள்ளது. அதனால் முடிந்தவரை அவளை நாங்கள் ஆதரித்து அவளுடைய கனவுகளுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறோம்” என்கிறார் சமன்னாவின் அம்மா, பூர்ணிமா.
குதிரையேற்றம் பிரீமியர் லீக் ஒவ்வொரு முறையும் ஜூன் மாதத்தில் தொடங்கி, ஆறு மாதங்களுக்கு நடைபெறும். இந்த ஆறு மாதங்களில் நடக்கும் போட்டியின் மதிப்பெண்களின் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் கிராண்ட் சாம்பியன்ஷிப் தீர்மாணிக்கப்படும். இதில் சமன்னா தொடர்ச்சியாக ஆறு மாதங்களும் தங்கப்பதக்கத்தை வென்று, இந்த ஆண்டுக்கான கிராண்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். அடுத்ததாக போபாலில் ஜூனியர் நேஷனல்ஸ் போட்டிக்கு சமன்னா தகுதி பெற்றுள்ளார். தொடர்ந்து அடுத்தக்கட்ட போட்டிகளிலும் தமிழ்நாட்டின் சார்பாகவும், இந்தியாவின் சார்பாகவும் பங்கு பெற தயாராகி வரும் சமன்னா, குதிரை சவாரியைத் தாண்டி, பரதநாட்டியமும் முறையாக கற்றுக்கொண்டு அரங்கேற்றத்தை முடித்து இருக்கிறாள்.