உனக்கு நீயே ஒளி ஆவாய்! (மருத்துவம்)
நிறைய பேர் தாழ்வுமான்பான்மையாகவே இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்களாக தோன்றுகிறது, எதையும் தைரியமாக எதிர்கொள்ள முடியவில்லை என கவுன்சீிலிங் எடுத்துக் கொள்வது தற்போது, அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். இந்நிலையில் இருந்து வெளியே வந்து எப்படி இயற்கையாகவே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது என பகிர்ந்து கொள்கிறார் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.தவறாக தோன்றுவதை செய்யாதீர்கள்!
உங்களுக்கு ஒரு விஷயம் தப்பு என்று தோன்றினால் , அதனால் உங்களுக்கு பிரச்னை வரும் என்று தோன்றினால் அதை எதற்காகவும், யாருக்காகவும் ஒருபோதும் செய்யாதீர்கள்.
சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லுங்கள். எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் அதை தெளிவாக சொல்லுங்கள். இதை சொல்லுவதனால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்காதீர்கள். நீங்கள் சொல்ல வேண்டியதை பொறுமையாகவும், தெளிவாகவும் சொல்லும்போது, என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை மற்றவர்கள் அழகாக புரிந்து கொள்வார்கள். சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டால் மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் விஷயமும் சரியாகிவிடும்.
அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள்
நீ நீயாக வாழ கற்றுக் கொள். சிலர் உன்னை விரும்புவார். சிலர் உன்னை வெறுப்பார் , கவலைப் படாதே. நம்மை சுற்றி இருப்பவர்களையும், நம்மை சார்ந்திருப்பவர்களையும் எப்போதும் எல்லா நேரத்திலுமே திருப்தி செய்து விட முடியாது. அதனால், உங்களுக்கு சரி என்று படுவதை தயங்காமல் செய்யுங்கள். மனதறிந்து யாருக்கும் கெடுதல் நினைக்காத எண்ணம் இருந்தால் போதும். உங்களுக்கானது உங்களிடம் வந்து சேரும். அடுத்தவர்களை குறைசொல்வதோ, அடுத்தவர்களை திருப்திபடுத்துவதாக நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்வதோ கூடாது.
உள்ளுணர்வுக்கு மதிப்பளியுங்கள்
உங்கள் உள்ளுணர்வு எது நல்லது என்று சொல்கிறதோ அதை செய்யுங்கள். உங்கள் மனசுக்கு சரியாக படவில்லை, இது சரியாக வராது என்று தோன்றினால் அதை ஒருபோதும் செய்யாதீர்கள். ஏனென்றால் உங்களது உள்ளுணர்வு ஒரு போதும் உங்களிடம் பொய் சொல்லாது. நல்லது, கெட்டது எது என்பதை நிச்சயம் உணர்த்தும்
தரகுறைவாகப் பேசாதீர்கள்
உங்களை நீங்களே தவறாக பேசுவதோ, குறைத்து மதிப்பிடுவதோ, தாழ்வாக பேசுவதோ கூடாது. கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவருமே ஒரு தனித்துவம் வாய்ந்தவர்கள்தான். எல்லோரிடமும் தனித்துவமான குணங்கள் நிச்சயம் இருக்கும். அதை உணராமல்தான் நிறையபேர் கஷ்டப்படுகிறார்கள். அதனால் உங்களைப்பற்றி நீங்களே தவறாக ஒருபோதும் பேசாதீர்கள். அப்படி பேசும்போது உங்களிடம் உள்ள பாஸிட்டிவ்வான விஷயங்களை நீங்களே மறைத்துவிடுகிறீர்கள்.
கனவுகளை தொலைக்காதீர்கள்
உங்களுக்கு என்று இருக்கும் குறிக்கோள்கள், கனவுகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். அதிலிருந்து எப்போதும் பின் வாங்காதீர்கள். இன்று இல்லை என்றாலும், நாளை அது நிச்சயம் நடக்கும் என்று நம்புங்கள். கனவுகளுக்கான முயற்சியை படிப்படியாக வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அது ஒருநாளில் நிறைவேறும்.
“நோ” சொல்லத் தயங்காதீர்கள்:
உங்களுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால், வேண்டாம், இது ஒத்துவராது என்று தோன்றினால் தயங்காமல் நோ சொல்லிவிடுங்கள். சொன்னால் என்ன நினைப்பார்களோ என்று தயங்கி அதில் சிக்கி கொண்டு வெளி வர முடியாமல் வருந்தாதீர்கள்.
“ஆம்” என்பதை தைரியமாகச் சொல்லுங்கள்
உங்களுக்கு பிடித்த விஷயங்களுக்காக ஆம் என்று சொல்ல ஒருபோதும் பயப்படாதீர்கள். தாழ்வு மானப்பான்மையாலோ அல்லது பயத்தாலோ யாருக்காகவும் வேண்டாம் என்று கூறாதீர்கள். உங்களை நோக்கி வரும் நல்ல வாய்ப்புகளை எதற்காகவும் தவற விடாதீர்கள்.
பாஸிட்டிவ்வான விஷயங்களை எண்ணுங்கள்
எப்போதும் சோர்ந்து போய் இருக்காமல் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மீது அனுதாபத்தையோ, பச்சாதாபத்தையோ எதிர்பார்க்காதீர்கள். எதுவாக இருந்தாலும், உங்களால் முடியும் என்று நம்புங்கள்.
முடியாத விஷயங்களைத் தவிர்த்துவிடுங்கள்
உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயமாக இருந்தால் அதை விட்டுவிடுங்கள், அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் சரி. போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு அடுத்து செய்ய வேண்டியதை பற்றி சிந்தியுங்கள். உதட்டளவில் சிரித்து பேசுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
அன்பு செலுத்துங்கள்
பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர், நண்பர்கள் என உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். அன்பு மட்டும் தான் நாம் செலுத்த செலுத்த நமக்கு நல்ல விஷயங்களை பெருக்கிக் கொண்டே இருக்கும்.நமது தாழ்வு மனப்பான்மையும், பயமும் நமது முன்னேற்றதையும் தடை செய்கின்றன. எனவே, மனதைரியம் கொடுத்து முன்னேறிச் செல்வதில் அக்கறையாய் இருங்கள். வெற்றி நிச்சயம்.