மலை ரயிலில் ஓர் இசைக் குயில்!! (மகளிர் பக்கம்)
‘ஊட்டி மலை ரயில்’ என்றதுமே நினைவுகளில் வருவது, ‘மூன்றாம் பிறை’ படத்தில் விஜியும்-சீனுவும் நமது உணர்வுகளைக் கலங்கடித்து அந்த சிக்கு… சிக்கு… வண்டியில் விஜி கடந்து சென்ற காட்சிதான். நீலகிரி மலை ரயிலின் பயணச்சீட்டுப் பரிசோதகர் வள்ளி. டிக்கெட் பரிசோதகர் என்றதுமே, கருப்புக் கோர்ட் அணிந்த ஒருவர் மிகவும் விரைப்பாக நம் அருகே வந்து, ‘டிக்கெட் டிக்கெட்’ எனக் கேட்டு.. நம் ஐ.டி. கார்டை சரிபார்த்து கடந்து போய்விடுவார் என நினைத்தால்… வெரி ஸாரி, பரிசோதகர் வள்ளி ரொம்பவே வித்தியாசமானவர்.
தனது பணிகளைத் தாண்டி, ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க… பயணிகளோடு ஒருவராய்… வழிகாட்டியாய்… எல்லாவற்றுக்கும் மேல், மலைக் குயிலாக மாறி.. பழைய பாடல்களை பாடி பயணிகளை மகிழ்விக்கிறார். ரயில் பூச்சியாய் மலை அரசியின் மீது ஊரும் ரயிலுக்குள்.. ‘யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடுதான் ஆட..’ என்னும் பாடல் வரிகள் காற்றில் தவழ்ந்துவர… அங்கே பயணச்சீட்டு பரிசோதகர் சீறுடையில் வள்ளி பயணிகள் நடுவே மிகவும் இனிமையாகப் பாட.. ‘நாமோ இயற்கையின் மடிக்குள் முழுமையாகப் புதைந்து..
சதைகளைத் துளைக்கும் குளிரை உள்வாங்கியபடி.. கண்ணா மூச்சி காட்டி கண் முன்னே தவழ்ந்து மறையும் பனி புகைக்குள்.. மலையரசியின் வளைவுகளையும்.. நெளிவுகளையும்.. இருண்ட மலைக் குகைகளையும்.. வெளிச்ச முகடுகளையும்.. பசுமையின் குளிர்ச்சியையும்.. நாசி துளைத்து சுர்ரென ஏறும் மூலிகை மணத்தையும்.. சலசலக்கும் அருவியையும்.. பச்சை கம்பளம் போர்த்தி பரந்து விரிந்த டீ எஸ்டேட்டுகளையும்.. நெடுநெடுவென வளர்ந்த ஓக் மரங்களையும்.. இறங்கி வரும் மேகக் கூட்டத்தையும்.. தென்படும் விலங்குகளையும்..
சரிவுகளில் நடைபோடும் மலைவாழ் மக்களையும் ரசித்து.. மலை ரயிலின் சிக்கு… சிக்கு… சத்தத்தை செவிகளில் கேட்டு.. உச்சி நோக்கி பயணித்தவர்களுக்கே தெரியும்’ உதகை மலைப் பயணத்தின் சுவை. மலை ரயில் டிக்கெட் பரிசோதகர் வள்ளியிடம் பேசியபோது… மேட்டுப்பாளையம் ஆரம்பித்து ஊட்டி வரை பயணிக்கும் 5 மணி நேர பயணத்திற்கு டிக்கெட் பரிசோதகராக (TDR) 2016ம் ஆண்டு பணிமாற்றம் பெற்று வந்தேன். பாலக்காட்டில் மிகவும் சாதாரண வேலையில் இணைந்து 1991ல் குன்னூருக்கு மாற்றலானேன். என் சொந்த ஊர் பாலக்காடு அருகே ஷோரனூர்.
அப்பாவிற்கு ரயில்வேயில் பணி. அவரின் உடல் நிலை சரியில்லாமல் போகவே, வாரிசு அடிப்படையில் எனக்கு 1985ல் பாலக்காடு ரயில் நிலையத்தில் க்ளாஸ்-4 ஊழியராக பணி நியமனம் கிடைத்தது. அப்போது நான் 9ம் வகுப்பு முடித்திருந்தேன். 20 வயதில் திருமணம் ஆனது. 1991ல் பணி உயர்வில், குன்னூருக்கு மாற்றல் செய்யப்பட்டேன். குன்னூரில் ரயில்வே டிராக் சரி பார்ப்பது, சிக்னல் இறக்குவது, லோடிங் அண்ட் லோடிங் வேலைகள் எனக்கு ஒதுக்கப்பட்டது. அது ரொம்பவே கஷ்டமான ஒரு சூழல்.
காரணம் தினமும் குன்னூரில் இருந்து ஹில்க்ரோ, கல்லார், லவ்டேல், கேத்தி, அரவங்காடு, வெலிங்டன் என ட்ராக் வழியாகவே நடப்பேன். ஹில்க்ரோ முழுக்க ஃபாரஸ்ட் ஏரியா. எந்த நேரத்திலும் விலங்குகள் நம்மைத் தாக்கலாம். குன்னூரில் இருந்து மரப்பாலம் இறங்கி 40 நிமிடம் டிராக் வழியாக நடந்தால், நடுவில் 5 பாலத்தையும் 3 தனலையும் கடக்க வேண்டும். பாலத்தில் நடக்கும்போது அதில் பிடிமானம் இருக்காது. தவறி விழுந்தால், நேராக கீழேதான் போக வேண்டும். தனல் இருட்டில் நம் கண்களுக்குப் புலப்படாமலே விலங்குகள் படுத்திருக்கும்.
யானை, கரடி, காட்டெருமை, பாம்பு என பல விலங்குகளையும் நேரில் பார்த்திருக்கிறேன். சில நேரம் அவை என்னைத் தாக்கவும் செய்திருக்கிறது. இருந்தாலும் எனக்கு பிடித்த இடம் ஹில்க்ரோ ரயில் நிலையம்தான். அதிகாலைக் குளிரில் பறவைகள் ஒலிகளை காதில் கேட்டு நடப்பதே ஒரு தனி சுகம்தானே என்கிறார் இயற்கையில் லயித்தவராய். தொடர்ந்து பணி உயர்வுக்காக டிடி தேர்வு எழுதி தேர்வானதில், கோவையில் 4 ஆண்டுகள் பணி செய்தேன். பிறகு டிடி இன்ஸ்பெக்டராக 2016ல் மீண்டும் மேட்டுப் பாளையத்திற்கு பணிமாற்றல் கிடைத்தது.
என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலை சார்ந்து வயலின், கீபோர்டு, தபலிஸ்ட், மிருதங்கம் என இயங்குபவர்கள். என் அப்பா, அண்ணன், அக்கா என அனைவருமே நன்றாகப் பாடுவார்கள். நானும் சின்ன வயதில் 3 வருடம் பாட்டு க்ளாஸ் சென்றேன். நிறைய மேடைகளில் பாடி விருதுகளை வாங்கியதோடு, கோயில் விழா, திருமண நிகழ்வு எனவும் பாட்டுப் பாடி பரிசுகளை வாங்கி இருக்கிறேன். ரயில்வே பணியில் இணைந்தபின் என் திறமை அப்படியே முடங்கியது. பாடுவதை இழக்க மனமின்றி, மீண்டும் மேட்டுப்பாளையம் டூ உதகை ரயில் பயணத்தில், சுற்றுலாப் பயணிகளுக்காக அவர்களின் விருப்பத்தில் பாடத் தொடங்கினேன்.
‘நீலகிரி மவுண்டன் ரயில்வே’ (NMR) எனப்படும் ஊட்டி மலை ரயில் ஒரு நாளைக்கு 8 முறை இயங்குகிறது. வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பயணிகள் வருவார்கள். பல்வேறு மொழி பேசுபவர்கள் கலந்து பயணிப்பார்கள். டிக்கெட் பரிசோதனை வேலைகள் முடிந்தபின் பயணிகளுக்காக நான் பாடத் தொடங்குவேன். இதோ கடந்த மூன்றரை ஆண்டுகளைக் கடந்து பாடி வருகிறேன்.
என் குரலை மட்டுமல்ல, கலகலப்பான என் பேச்சு.. பயணத்தில் அடுத்தடுத்து வரும் இடங்களை முன் கூட்டியே தெரிவிப்பது.. அந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்வது, எங்கு தனல் வரும், எங்கு பாலம் வரும், எங்கு அருவி வரும், எந்த இடம் புகைப்படம் எடுக்க சரியான வியூ பாயின்ட் என அனைத்தையும் தெரிவிப்பேன். என் அணுகுமுறை பயணிகளைக் கவரத் தொடங்கியது. சுற்றுலா வருபவர்கள் என்னோடும் சேர்ந்து புகைப்படங்களையும் எடுக்க விரும்பினார்கள். சிலர் உங்களை மாதிரி ஒரு ஜாலியான டிடியை நாங்கள் பார்த்ததில்லை.
உங்களுக்காகவே நாங்கள் மீண்டும் இந்த மலை பயணத்திற்கு வருவோம் என விடைபெறுவார்கள். பயணியாய் வந்து புகைப்படம் எடுத்தவர்களும், நான் பாடிய பாடல்களை பதிவு செய்து சென்றவர்களும், என்னைப் பற்றிய செய்தியினை சமூக வலைத் தளங்களில் வெளிப்படுத்த, இன்று இந்த மலை ரயிலால் ஊடகங்களின் வெளிச்சம் என் மீதும் பட்டு நான் பிரபலமானேன் என்கிறார் புன்னகைத்து.
பின்னணிப் பாடகி ஜானகி அம்மாதான் என் ஆல்டைம் பேவரைட் என்றவர், என் சின்ன வயதில் இருந்தே அவர் பாடல்களை நிறைய பாடி வருகிறேன். அவர் மாதிரியே பொட்டு வைப்பது, தலை பின்னுவது, உடை உடுத்துவது என இருப்பதால், ரயிலில் வந்த பயணி ஒருவர் உதவியில், ஜானகி அம்மாவிடமே தொலைபேசி வழியாகப் பேசினேன். அப்போது அவர் என்னைப் பற்றி முழுவதும் கேட்டு அறிந்து, எனக்காக இரண்டு பாடல்களைப் பாடி என்னை ரொம்பவே பரவசப்படுத்தி ஆசீர்வதித்தார்.
மற்றோர் பயணி, என்னைப் பற்றிய தகவலை பதிவு செய்து, மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க, எனக்கு சிறந்த ரயில்வே ஊழியருக்கான விருதும் கிடைத்தது என்கிறார் டெல்லி சென்று விருது பெற்றதை நினைவுகூர்ந்து. தொழில்நுட்பக் கோளாறால் பலமுறை ரயில் பாதி வழிகளில் நின்ற நிகழ்வுகளையும் அசைபோட்டவர், எனக்கு இந்த மலைப் பகுதியில் மூன்று வழிகள் நன்றாகத் தெரியும். நடுவழியில் ரயில் நின்ற நேரங்களில், பயணிகளை காட்டுப் பாதையில் வழி நடத்தி, சாலையைக் காண்பித்து அவர்களைப் பத்திரமாக பேருந்துகளில் ஏற்றி அனுப்பிய அனுபவங்களும் உண்டு.
அவற்றில் இரவு நேரங்களும் உண்டு என்கிறார் மலை அரசியின் திகில் அனுபவங்களை விவரித்து. எனக்கு மலையாளம், தமிழ், ஆங்கிலம், படுகர் மொழி என நான்கு மொழி பேசத் தெரியும். சிரித்த முகத்துடன் அன்பாகப் பேசி, பாட்டு பாடுவதை தவிர பயணிகளுக்கு நான் எதுவும் செய்ததில்லை. ஊட்டி போய் சேருவதற்குள் ரயிலில் இருக்கும் அத்தனை பயணிகளையும் நான் பேச வைத்துவிடுவேன். பலர் அவர்களின் விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து அவர்கள் ஊருக்கு என்னை அன்போடு அழைப்பார்கள்.
சிலர் அன்றைய மலைப் பயணத்தில் நான் இருக்கிறேனா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டே பயண தேதியை முடிவு செய்கிறார்கள் என்கிறார் மலை ரயில் கொடுத்த நினைவுகளில் மூழ்கியவாறு. வரும் 2022ல் பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதை நினைத்து ரொம்பவே தழுதழுத்தவர்… இந்த ரயில்… இந்த ரயில் நிலையம்… இந்த டிராக்… இந்த ரயில் கோச்சுகள்… இந்த ரயில் இஞ்சின் என மலை ரயில் தொடர்பான அனைத்தும் என் உணர்வோடு கலந்தது. இவற்றைப் பார்க்க பார்க்க நான் விடைபெறும் நாள் நெருங்குவதை நினைத்து எனக்கு ரொம்பவே வருத்தமாக உள்ளது என்கிறார் கண்கள் கலங்கி.
உதகை மலை ரயில் சுற்றுலாப் பயணிகளுக்கானது. எந்த சூழலிலும் இந்த ரயில் நிற்கக் கூடாது என்பதே என் விருப்பம் என்றவர், கொரோனா நோய் தொற்றில் உதகை மலை ரயில் ஓடாமல் நின்றதில் நான் ரொம்பவே மலை ரயிலை மிஸ் செய்தேன். உதகை வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாய் வழி நடத்தி, மலைப் பயணம் ரசனைக்குரியதாய் எப்போதும் அவர்களின் நினைவுகளில் நிற்க.. ரயில்வே நிர்வாகம் சரியான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைக்கிறார் இந்த மலைக் குயில்.
‘எங்கிருந்தோ ஆசைகள்… எண்ணத்திலே ஓசைகள்… என்னென்று சொல்லத் தெரியாமலே…’ என்ற அவரின் அழகிய குரல் மீண்டும் மலை முகடுகளில் பட்டு குளிர் காற்றில் கரைய… இந்த பாட்டுக்குயில் தன் பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளது என்பது நமக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது.