என் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்! (மகளிர் பக்கம்)
முன்பெல்லாம் கரகம் ஆடுபவர்கள் நுனிவிரல் மட்டும் தெரிய, கெரண்டை கால்வரை கண்டாங்கி சேலை கட்டி கரகம் ஆடினார்கள். சினிமா வந்த பிறகே கரகாட்டத்திற்கான ஆடை குறைக்கப்பட்டது. இதனால் பாரம்பரிய முறையை விடாமல் ஆடும் எங்களைப்போன்ற கரகாட்டக் கலைஞர்களை எல்லோரும் தவறாகப் பார்க்க ஆரம்பித்தார்கள் எனப் பேசத் தொடங்கிய தேன்மொழி ராஜேந்திரன் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்ற ‘கரகாட்டக் கலைஞர்’.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிபட்டி கிராமம் என்னுடையது. தஞ்சாவூருக்கு பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் நாங்கள். என் அக்காதான் முதலில் கரகம் கற்று அரங்கேற்றம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அவர் ஆட்டத்தை நிறுத்த, கலை விட்டுப்போய்விடக் கூடாது என அதை நான் கையில் எடுத்தேன்.
வறுமையில்தான் கரகம் ஆட வந்தேன். ஆரம்பத்தில் ஆட்டக்காரி என என்னை எல்லோரும் கேலி செய்வதைப் பார்த்து, வேண்டாம் என்றே ஒதுங்கினேன். ஆனால், என்னுடைய உடல் அசைவையும், நலினத்தையும் பார்த்தவர்கள் நான் ரொம்பவே சிறப்பாக ஆடுவதாகச் சொல்ல, இந்தக் கலையின் வரலாற்றை அறிந்தபின், என் அக்காவிடமே முறையாகக் கற்று அரங்கேற்றம் செய்தேன். பல இடங்களுக்குச் சென்று கரகாட்டக் கலையை மேடையேற்றும்போது, எனக்குள் ஏற்பட்ட கலைத்தாகம், இந்த ஆட்டத்தை மேலும் சிறப்பாக்க, இதற்குள் என்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டேன்.
என்னைப் பொறுத்தவரை இது தெய்வீகக் கலை. இந்தக் கலைக்கு உணர்வு உண்டு. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அரிதாரத்தைப் பூசி, காலில் சலங்கையை கட்டி, கரகத்தை தலையில் ஏற்றிவிட்டால் நான் என்னையே மறந்தே விடுவேன். கரகத்தில் அம்மன் கரகம், சக்தி கரகம், பூங் கரகம், கிளி கரகம், செடி கரகம், ஆட்டக் கரகம், அடுக்குக் கரகம், அக்னிக் கரகம், தீ பந்தக் கரகம் என பல உண்டு.
மதுரை கரகத்திற்கும், திருநெல்வேலி கரகத்திற்குமே ஆட்டத்தில் வித்தியாசங்கள் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய சுத்துக்கு விட்டே கரகம் ஆடவைப்பார்கள்.தவில் வாசிக்க வந்த என் கணவர் ராஜேந்திரனுக்கும் எனக்கும் காதல் மலர்ந்தது. ‘அவர் வாசிக்க நான் ஆட’ அந்த இடமே அமர்க்களப்பட்டுப் போகும் என கரகாட்டக்காரன் படத்தின் காட்சிகளை மீண்டும் நமக்கு நினைவூட்டினார் தேன்மொழி ராஜேந்திரன். இருவீட்டார் சம்மதத்தோடு எங்கள் திருமணம் முடிந்தது. எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகன் எம்.பில் முடித்து கல்லூரி ஆசிரியர். மகள் எம்.சி.ஏ படித்து திருமணம் முடித்துவிட்டோம்.
மற்றவர்கள் பார்வைக்கு இந்தக் கலை எப்படி வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால் எனக்கும் எனது கணவருக்கும் கலைதான் எங்கள் வாழ்க்கையே. இந்தக் கலைதான் எங்களை வாழ்க்கையிலும் இணைத்தது. எனக்குள் இருந்த கலையார்வத்தைப் பார்த்த எனது கணவர், நான் மேலே வருவதற்கு ரொம்பவே பக்கபலமாக இருந்து, நிறைய ஆலோசனைகளை வழங்கி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அவரின் ஆதரவில் கலையை வளர்த்து, மேலும் மேலும் என்னை மெருகேற்றத் தொடங்கினேன்.
அடவு மற்றும் தாளத்திற்கு ஏற்ப கரகம் ஆடும் முறைகளையும் என் கணவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார். நளினம், நவரசம், ஜதி ஏற்றுவதில் தொடங்கி, சம நடை, துரித நடை என தாம்பாலத்தில் ஒரு பாட்டு முழுமைக்கும் ஆடுவேன். இந்தக் கலையை நான் முழுமையாக உள்வாங்கி ஆடுகிறேன். அரிதாரத்தைக் கலைத்தால்தான் எனக்கு வருத்தமாக இருக்கும். ஒரு நாள் முழுவதும் ஆடச் சொன்னாலும் ஆடிக்கொண்டே இருப்பேன். நான் கரகம் ஆட வந்த துவக்க காலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே, கோயில் திருவிழாக்களில் வருடத்திற்கு 200 முதல் 500 வரை நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். அங்கே வாரத்தில் இரண்டு நாள் தவிர்த்து, எல்லா நாட்களும் கொடைவிழா என்ற ஒன்றை நடத்துவார்கள்.
திருநெல்வேலியில் ஆடும்போது மதுரை புகழ் கரகாட்டக் கலைஞர் லெட்சுமியுடன் ஜோடியாக நிறைய கோயில் விழாக்களில் ஆடியிருக்கிறேன். அவரிடமிருந்தே தாம்பாலத்தில் ஆடுவது, படிமேல் நின்று ஆடுவது, உருளைமேல் ஆடுவது, தலையில் கரகத்தோடு கைகளில் பாட்டில் சுழற்றுவது, பெஞ்சின் மேல் நின்று தாம்பாலத்தில் ஆடுவது, கரகத்துடன் சிலம்பம் சுற்றுவது, வளையம் சுற்றுவது, பூ பந்து ஆடுவது, கரகத்தில் தீச்சட்டி, கைகளில் தீ பந்தம் சுற்றுவது, எலுமிச்சை கோர்ப்பது, கண்களால் ஊசி எடுப்பது, தேங்காய் உடைப்பது, கரகத்தோடு வாயில் பணம் எடுப்பது, கரகத்தை தலையில் வைத்து சைக்கிளில் பேலன்ஸ் செய்வது, சோடா பாட்டில்களின் மேல் நின்று ஆடுவது என நிறைய கற்றுக் கொண்டேன்.
முன்பு சென்னையில் நடந்த சங்கமம் விழாவில் பரதத்தோடு, கரகத்தையும் இணைத்து மேடையேற்றி ஆடவைத்து எங்களையும் சிறப்பித்தார்கள். கலைஞர் ஐயா முதல்வராக இருந்தபோது, பாரம்பரியக் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் வாய்ப்பும், சம உரிமையும் வழங்கப்பட்டது. எங்களுக்கும் மரியாதையை கொடுத்து மேடையேற்றினார்கள். பல ஆயீரக் கணக்கான விஐபிகளுக்கு முன்பு நான், பரத நாட்டியக் கலைஞர்கள் அனிதா ரெத்தினம் மற்றும் சோபனா இவர்களோடு என் கரகாட்டத்தை மேடையில் அரங்கேற்றினேன்.
கலை பண்பாட்டுத்துறை மூலமாக நடைபெற்ற குற்றாலம் சாரல் விழாவிற்கு வந்த குன்னக்குடி ஐயா அவர்கள் என் கரகாட்ட திறமையை பார்த்து ஐயாயிரம் ரூபாய் பணத்தை பரிசாய் வழங்கி மனதார என்னைப் பாராட்டிவிட்டுச் சென்றார். அவர் பாராட்டிச் சென்ற ஒரு மாதத்தில், எனக்கு சிறந்த கரகாட்டக் கலைஞருக்கான கலைமாமணி விருதை அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அறிவித்தார்.
அந்த விருது விழாவில் பெரும்பாலும் சினிமா நடிகர்களே இடம் பெற்றார்கள். அதில் நான் மட்டுமே, பாரம்பரியக் கலை சார்ந்த கரகாட்டக் கலைக்கு, தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றேன். அன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாதது. கலைமாமணி விருது பெற்றவர்களை அரசு இதழில் வெளியிட்டபோது நான் விருது பெற்ற புகைப்படம் இதழின் நடுப்பக்கம் மிகவும் பிரமாண்டமாக வெளியானது.
முன்பெல்லாம் கலைமாமணி என்றால் விருதுக்கே ஒரு மதிப்பு இருக்கும். தரமான உண்மையான பாரம்பரியக் கலைஞர்களுக்கு விருது கொடுத்து கௌரவித்தார்கள். ஆனால் இன்று அந்த விருது மதிப்பிழந்துவிட்டது. காரணம் கலை குறித்து எதுவுமே தெரியாதவர்களுக்கெல்லாம் இப்போது விருது கிடைக்கிறது. அரசு உண்மையான கலைஞர்களையும், கலைக்காகவே வாழ்ந்து உயிர் விட்டவர்களையும் மரியாதைப்படுத்தவில்லை.முன்பு கரகாட்டத்தையும், எவ்வளவு நேரம் ஆடினாலும் விரசமின்றி கலைஞர்கள் ஆடுவார்கள்.
சினிமா மற்றும் சின்னத் திரையால் கரகாட்டத்திற்கான உடை குறைந்த பிறகு, உண்மையான பாரம்பரிய கலைஞர்கள் இதிலிருந்து விலகிவிட்டார்கள். தற்போது பாரம்பரிய கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் தமிழகத்தில் 8 பேர் மட்டுமே இருக்கிறார்கள். கரகாட்டக் கலையை ஏளனப்படுத்துபவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இப்போது சினிமாவுக்காக ஆடுவதெல்லாம் கரகாட்டமே கிடையாது. உண்மையான கரகாட்டக் கலையும், அதன் கலைஞர்களும் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் கலையின் உண்மையான வடிவம் அழிவை நோக்கி நகர்கிறது. இந்தக் கலை அழியக் கூடாது என்பதே எங்கள் ஆதங்கம்.
கலை சுடர்மணி ராஜேந்திரன், தவில் கலைஞர்
தஞ்சாவூர் நையாண்டி மேளம் என் சிறப்பு. 18 வயதில் தவிலை தூக்கி தோளில் போட்டேன். இதுவே எங்கள் பாரம்பரியத் தொழில். இதன் தோற்றுவாய் மதுரை, இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதைச் சார்ந்த வட்டாரங்கள். நாங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க 1965ல் தஞ்சைக்கு வந்தவர்கள். தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்த இடம். அதுவரை மராட்டியர்கள் பொய்க்கால் குதிரையின் கால்களில் கட்டையை கட்டி, குந்தாலம் எனப்படும் இரண்டு அரை வடிவ சட்டிகளை அடித்து ஆடுவார்கள். நாங்கள் வந்த பிறகே நையாண்டி மேளம் தஞ்சாவூரில் உருவானது. தலித் மக்கள் தஞ்சைக்கு வந்தபின், கரகாட்டக் கலை விரிவடையத் தொடங்கியது.
கலைகளின் துவக்கம் நாடகமே. விடியவிடிய நடக்கும் நாடகத்தில் நையாண்டி மேளத்தை, ராஜபாட்டை, கட்டபொம்மன், கிளிசங்கி, சோலைமலை, வள்ளி திருமணம், இராமச்சந்திரா, தெம்மாங்கு பாடல்களுக்கு வாசிப்போம். நாங்கள் ‘ராஜேந்திரன் நையாண்டி மேளம் கலைக் குழு’ என்ற ஒன்றை உருவாக்கி நிகழ்ச்சிகளை வழங்குவதோடு, எங்கள் கலைக் குழு மூலமாக கலை அழியாமல் காப்பாற்றும் விதமாக பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்று இருந்தாலும், நாட்டுப்புற கலையே என் தேர்வு. கர்நாடக இசையின் தாள அடவுகள் எனக்கு நன்றாக வரும். கரகத்தில் நாங்கள் கொடுப்பது பாரம்பரிய கரகாட்டப் பயிற்சி. என்னிடத்தில் பயிற்சிக்கு வருபவர்களை குறைந்தது 30 நிமிடமாவது அடவுக்கு ஆடவே ஊக்குவிப்பேன்.
பாரம்பரியக் கலைஞர்கள் யார் நையாண்டி மேளம் அடித்தாலும் எந்த இடத்திலும் ஆடிவிடுவார்கள். நையாண்டி மேளத்துடன், தவில், நாதஸ்வரம், பம்மை, தமுக்கு போன்ற இசைக் கருவிகளை வாசித்தே நாங்கள் கரகம் ஆட வைப்போம். பதிவு செய்து வைத்ததைப் போட்டு ஆட பழக்கப்படுத்துவதே இல்லை.