போர்ட்ரெய்ட் மெஹந்தி!! (மகளிர் பக்கம்)
மணப்பெண்களின் இப்போதைய டிரெண்ட் போர்ட்ரெய்ட் மெஹந்தி. மணமகள் மற்றும் மணமகனின் புகைப்படங்களை மொபைலில் அனுப்பிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் கைகளைக் காட்டினால் போதும். உள்ளங்கைகளில் இருவரின் உருவத்தையும் அப்படியே மெஹந்தியில் கொண்டு வந்துவிடுவேன் எனப் பேசத் தொடங்கினார் குஜராத்தி மெஹந்திக் கலைஞரான தேஜல் தாவே.
வடநாட்டினர் மெஹந்தி நிகழ்வில், மணமகள் கைகளில் மெஹந்தி இட்டு கலர் நன்றாக வந்தால்தான், வரப்போகும் கணவர் மணப்பெண்ணை விரும்புகிறார் என அர்த்தமாம். மெஹந்தி கூடுதல் டார்க்கா வந்தால் கணவர் பெண்ணை டீப்பாக லவ் பண்ணுகிறார் என்பார்கள் என்றார் சிரித்தவாறே.மார்வாடி மற்றும் குஜராத்தி இன மக்கள்தான் நிறைய மெஹந்தி நிகழ்ச்சி பண்ணுவார்கள்.
மார்வாடிகளில் மணமகனும் கட்டாயம் மெஹந்தி இட்டுக் கொள்ள வேண்டும். மெஹந்தி நிகழ்ச்சி வடநாட்டவர்களின் கலாச்சாரம் என்றாலும், தமிழ்நாட்டவர்களும் செய்வதில் தப்பில்லை. இது ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிதானே என்றவர், மெஹந்தி இடுதல் திருமணங்களில் முக்கிய நிகழ்வு என்பதையும் தாண்டி வருமானம் தரும் தொழிலாகவும் மாறிவிட்டது என்கிறார் மேலும்.
முன்பெல்லாம் மணப் பெண்கள் தங்கள் கைகளில் விநாயகர் உருவம், டிரம்ஸ் அண்ட் பப்பட், செனாய் வாசிப்பது, ஸ்வஸ்திக், கலசம், டோலியில் பெண் வருவது, மணமக்கள் உருவங்கள் என தீம் மெகந்தியாக விரும்பி போட்டுக்கொள்வார்கள். ஆனால் இன்றைய ட்ரெண்ட் போர்ட்ரெய்ட் மெஹந்தி. இதனை முதன் முதலில் நான்தான் சென்னையில் அறிமுகப்படுத்தினேன்.
திருமணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு உங்கள் புகைப்படத்தை என் கை பேசிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது. புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் உங்கள் முகம் அப்படியே உங்கள் உள்ளங் கைகளில் மெஹந்தியில் வந்துவிடும். இதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டுமே. நீங்கள் அனுப்பும் உங்கள் புகைப்படம் மொபைல் செயலிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படாத ஒரிஜினல் புகைப்படமாக இருக்க வேண்டும்.
மணப் பெண்களைத் தாண்டி கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில் பிரபாஸ்-அனுஷ்கா, விஜய்-த்ரிஷா படங்களை விரும்பி மெஹந்தியாகப் போட்டுக்கொள்கிறார்கள். மேலும் மாணவர்களுக்கும் போர்ட்ரெய்ட் மெஹந்தி போடுவதை நான் கற்றுத் தருகிறேன். இதற்கென சிறப்பு வகுப்புகளும் என்னிடத்தில் உண்டு.
மணமக்கள் உருவங்களை போர்ட்ரெய்ட் செய்து மெஹந்தியில் கொண்டுவர மட்டுமே ஒன்றரை மணி நேரம் எடுக்கும். அதைத்தாண்டி மற்ற டிசைன்களையும் போட தனியாக 2 மணி நேரம் தேவைப்படும். கை முழுவதும் போடும் தீம் டிசைன்கள் சிலவற்றிற்கு 10 மணி நேரங்கள் கூட எடுக்கும் என்கிறார்.
இதுவும் ஒரு கலை வடிவம்தான். ஆனால் மணமகளுக்கு இதற்கு தேவை பொறுமை.. பொறுமை..பொறுமை எனச் சிரித்தவர், கோனில் மருதாணிக் கலவையை வைத்து விரல்களில் கொடுக்கும் அழுத்தத்தில்தான் இந்தக் கலையின் நுணுக்கம் வெளிப்படும் என்கிறார் மணமகனுக்கு தான் போட்ட போர்ட்ரெய்ட் மெஹந்தி புகைப்படங்களை காட்டியவாறு.
போர்ட்ரெய்ட் மெஹந்தி டிசைன்கள்
6 ஆயிரத்தில் தொடங்கி, விரும்பும் டிசைன்கள் மற்றும் எடுத்துக்கொள்ளும் நேரத்தை வைத்து 21 ஆயிரம் வரை ஆகும். 10 நாட்கள் வரை அப்படியே அழியாமல் இருக்கும்.
தேஜல் தாவே,மெஹந்திக் கலைஞர்
எனது சொந்த ஊர் குஜராத் மாநிலம். ஆனால் நான் பிறந்து வளர்ந்து படித்தது மும்பையில். கடந்த 15 ஆண்டுகளைக் கடந்து மெஹந்திக் கலைஞராக வலம் வருகிறேன். ஒரு மெஹந்திக் கலைஞராய் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு பயணித்து, பல்வேறு மொழி பேசும் மக்களோடும் பழகியதில், பெண்களுக்கு பாதுகாப்பான ஊர் என்றால் அது சென்னைதான். எனக்கு இந்த ஊரை ரொம்பவே பிடிக்கும்.
சின்ன வயதில் இருந்தே ஆர்வத்தோடு எதையாவது வரைந்து கொண்டே இருப்பேன். 7ம் வகுப்பு படிக்கும்போது மெஹந்தி ஆர்ட் மீது ஆர்வம் திரும்ப, என் இரு கரங்களையும் மெஹந்தியால் மாற்றி மாற்றி டிசைன் பண்ணிக் கொண்டே இருப்பேன். என் 12 வயதில் நான் வரைந்த டிசைன்களை புகைப்படம் எடுத்து அழகு நிலையங்களில் காண்பித்து அப்போதே பாக்கெட் மணிக்காக மெஹந்தி ஆர்டர் எடுக்கத் துவங்கினேன். அப்போதைய என் மெஹந்தி வருமானம் 1000ல் தொடங்கியது.
மிகவும் கிரியேட்டிவிட்டியுடன் ஆர்வமாக நான் செயல்படுவதைப் பார்த்த நண்பர்களும், உறவினர்களும் என்னையே மெஹந்தி நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து அழைக்கத் தொடங்கினார்கள். திருமணத்திற்கு முன் மும்பையில் இருந்தபோது, வடநாட்டு சினிமா பிரபலங்களின் உறவினர் இல்லத் திருமணங்களிலும் மெஹந்தி போட ஆரம்பித்தேன். பிறகு எனக்கும் திருமணம் முடிந்து சென்னைக்கு வந்துவிட்டேன்.
என் குழந்தைகள் வளர்ந்ததும், மீண்டும் இங்குள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலமாக, மெஹந்தி ஆர்ட் தொழிலில் தமிழகத்திலும் கால் பதித்தேன். என் திறமையை பார்த்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வரத் தொடங்கினார்கள். மெஹந்திக்காகவே லண்டன், துபாய் நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைத்தது.முகூர்த்த மாதங்களில் மட்டுமே இதில் கிடைக்கும் வருமானம் 50 ஆயிரங்களைத் தாண்டும். சாதாரண மாதம் என்றால் 20 முதல் 25 ஆயிரங்களைத் தொடும்.
டிப்ஸ்
மருதாணி இயற்கையிலே குளிர்ச்சி நிறைந்தது. முதல் நாள் வாக்சின் அல்லது ப்ளீசிங் போன்றவற்றை செய்யும்போது, குளிர்ச்சியுடன் கெமிக்கலும் இணைய, சில நேரங்களில் கெமிக்கல் ரியாக்சனை உண்டாக்கும். எனவே திருமணத்திற்கு பத்து தினங்களுக்கு முன்பே வேக்சின் செய்வதே மணமகளுக்கு நல்லது.