கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 55 Second

பிராணிகள் வளர்ப்பவருக்கு அதன் மொழி நன்கு புரியும் என்பார்கள். உதாரணத்திற்கு, யானைப்பாகர் சொல்லுவதையெல்லாம் யானை நன்கு புரிந்துகொண்டு செய்துகாட்டும். குரங்கு வைத்துக்கொண்டு விளையாட்டு சொல்லித்தந்து, அதன்மூலம் வித்தைகள் காட்டி அசத்துபவர்களும் உண்டு. பிராணிகள் மொழியோடு கற்றுத்தருவது அந்தந்த ‘பிராணி வளர்ப்பு’ பற்றி அறிந்தவர்களுக்குத்தான் ்புரியும். அதுபோல், பிள்ளைகளின் குறும்புத்தனமும், செய்யும் விஷமத்தனங்களும் குறிப்பிட்ட வயதில் அவர்களைச் சார்ந்துள்ள குழந்தைகள் கூட்டத்திற்குத்தான் நன்கு புரியும்.

முகத்தைப் பார்த்து அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தை எடை போட முடியாது. சுறுசுறுப்புடன் காணப்படும் சிலர், மனதளவில் மென்மையாக இருக்கலாம். சாது-வெகுளி என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருப்போம். சப்தமில்லாமல் பெரிய காரியங்களை நடத்துவதுகூட, அவர்களாக இருக்கலாம். பள்ளி வயதில், அதே வயதையொத்த பிள்ளைகளைத்தவிர, யாராலும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ள முடியாது. அவர்களுக்குள் நடை
பெறும் சைகை பாஷைகளை பெற்றோரும் காண இயலாது.

கற்பிப்பவரும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலாது. ஒரு சில விஷயங்களை பிடிக்காமல், அதிலிருந்து தப்பிக்க நினைத்து சிலவிதமான செயல்களைச் செய்வர். அப்பொழுது அப்படியெல்லாம் செய்து, சில விஷயங்களிலிருந்து என்பது அவர்களுக்கு ஒரு ‘த்ரில்’ தரும் விஷயமாகும். படிக்கும் காலத்தில் தனக்கேற்பட்ட சில நிகழ்வுகளை மாணவர்கள், வாழ்க்கையில் பெரிய ஆளாகும்பொழுது நினைத்து வெட்கப்படுவார்கள். சிலர் வேதனைப்படுவார்கள். தனக்கும் ஒரு குடும்பம் அமையும்பொழுது, தன் பிள்ளைகளிடம் பெருமையானவற்றை சொல்லிக்கொள் வார்களே தவிர, தன் குறும்புகளை வெளிக்கொணர மாட்டார்கள்.

கற்பிப்பவர் தன் அனுபவங்களை, பிள்ளைகளிடம் உளவியல் ரீதியாக கண்டு அனுபவித்தாலும், அவர்களையே தான் செய்துள்ள திருவிளையாடல்களை கூறச் சொல்லும்பொழுது, அதன் நம்பகத்தன்மை அதிகமாகிறது. சில ஆசிரியர்கள், காலை உணவு சாப்பிடாமல், பிள்ளைகளுக்கும் சேர்த்து எடுத்து வந்து பகிர்ந்து சாப்பிடுவதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய உணவளித்த பெருந்தன்மையோரை, அவர்கள் மறப்பதில்லை. எப்பொழுதும் ‘கறி’ உணவு சாப்பிடும் சில பிள்ளைகள் ‘பூரி மசாலா’வையும், கேசரியையும் செய்து தரச்சொல்லி விருப்பத்தோடு என்னிடம் சாப்பிட்டது இன்றும் நினைவில் உள்ளது. ‘பழைய மாணவர் கூட்டம்’ நடைபெறும்பொழுதெல்லாம் அவர்கள் கூறாமல் இருப்பதில்லை. இந்த இடத்தில் இரண்டாவது பெற்றோர் நாம்தான் என்று நினைக்கையில் பெருமிதம் மேலிடுகிறது. தாய், தந்தைக்கு அடுத்து, அவர்கள் மனம் திறந்து கேட்கிறார்களென்றால், ‘குரு’ என்ற ‘பக்தியை’விட ‘பெற்றோர் போல்’ என்கிற பாசம் மேலிடுகிறது.

முழு ஆண்டுத்தேர்வுக்கு முன் மாதிரித்தேர்வு நடைபெறுவதுண்டு. தேர்வு ஜுரம் என்பது அனைத்துப் பிள்ளைகளுக்குமே வருவது என்பது சகஜம்தான். குறிப்பிட்டுச் சொல்வதானால் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மூன்று மாதிரித் தேர்வுகள்கூட நடக்கும். அதுவரை சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்த பெற்றோர்களும் நிறைய ஆர்வம் காட்டி சிரத்தையுடன் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். சில வீடுகளில் பெற்றோர் சில மாதங்கள்கூட விடுப்பு எடுத்து கவனிப்பதும் நடைபெறுவதுண்டு. அதைப் பார்க்கும்பொழுது, சில பிள்ளைகள் அவர்களுக்காவது, நன்கு எழுதி மதிப்பெண் எடுக்க நினைப்பர்.

எல்லா அழுத்தங்களும் ஒன்று சேர, சில சமயங்களில் பிள்ளைகள் ஏதாவது தவறு இழைத்து விடுவர். எதையும் வேண்டுமென்று செய்ய நினைப்பதில்லை. சந்தர்ப்பங்கள் அவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பை எதிர்கொள்ளும் சமயம் சிறு சிறு குறைகள் ஏற்பட வாய்ப்புண்டாகும். அது பெரிய பிழை, தவறு என்றெல்லாம் சொல்வதைவிட, அந்த சமயத்தில் அவர்களைத் தூண்டும் சிறிய குறை எனலாம். மாதிரித் தேர்வில், சைகை மூலம் பேசிய இரு பிள்ளைகளை ஒரு வகுப்பாசிரியர் கண்டித்திருக்கிறார்.

தனியே கூப்பிட்டுத்தான். மற்றவர் எதிரில் கிடையாது. இருப்பினும் இருபிள்ளைகளும் தன்னை ஒரு குற்றவாளி போன்று நினைத்துக்கொண்டு, மறுநாள் முதல் யாருடனும் பேசாமல் அமைதியானார்கள். குறிப்பாக, குறிப்பிட்ட ஆசிரியை ஒரு பக்கம் வந்தால், இவர்கள் மறுபக்கம் வேகமாக நடந்துவிடுவர். ஒருசில நாட்கள் கழித்து, ஒருசமயம் அந்த ஆசிரியரும் அதே பிள்ளைகளும் ஒரு பேருந்தில் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர்.

ஆசிரியர் சாதாரணமாக, பிள்ளைகளிடம் இறுதித்தேர்வுக்கு எப்படியெல்லாம் தயார் செய்கிறார்கள் என்று கேட்க, அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்ததாம். ஆசிரியர் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்த, பிள்ளைகள் தன் பழைய நிகழ்வை நினைவூட்டி, மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். அப்பொழுது அந்நிகழ்வு ஆசிரியருக்கு ஆச்சரியம் தந்ததாம்.

காரணம், அவர் அந்நிகழ்வை அன்றே மறந்துவிட்டாராம். ஒரு தாய் பிள்ளைகளை நல்வழிப்படுத்த, அவ்வப்பொழுது குறைகளை சுட்டிக்காட்டி திருத்துவதுண்டு. அதைத்தான், தானும் செய்ததாகவும், அதன்பின் அதை முழுவதும் மனதிலிருந்து அகற்றி விட்டதாகவும் கூறியிருக்கிறார். அப்படியிருக்கையில், பிள்ளைகள் ஏன் இவ்வளவு நாட்கள் மனதில் வைத்துக்கொண்டு, தன்னையே வருத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிய வைத்திருக்கிறார்.

இதுதான் கற்பிப்பவருக்கும் கற்கும் பிள்ளைகளுக்குமான ‘பந்தம்’ என்பது. பிள்ளைகள் இறுதியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதுடன், தேர்வு எழுதும் முக்கியத்துவத்தை விளக்கிய ஆசிரியருக்கும் மனமாற நன்றிகளைக் கூறியுள்ளனர். அவர்கள் மனதில் அந்த ஆசிரியர் உயர்ந்த இடத்தையும், நல்மதிப்பையும் பெற்றார்.

இவையெல்லாம் குறைகள் என்று சொல்லவே கூடாது. இவையனைத்தும் நிறைந்திருப்பதுதான் பிள்ளைகளின் பள்ளி வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். அனைத்தையும் யோசித்து ஒரு தப்புகூட ஏற்படாமல் செயல்களைச் செய்ய வேண்டுமென்றால், அவர்கள் பள்ளிச்சிறுவர்களாக இருக்க முடியாது. அவர்களின் சிறுபிள்ளைத்தனமும், குறும்புமிக்க சுவாரசியமான விஷயங்களும்தான் நம்மை சிரிப்புலகிற்கு எடுத்துச்செல்லும்.

இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் தேர்வு சமயத்தில் உதவிக் கொள்வதாக பேச்சு நடந்ததாம். முதல் பையன் இரண்டாவது சிறுவனுக்கு சைகை முயற்சி செய்ய, ஆசிரியர் மிகவும் கவனத்துடன், கண்டிப்பாகவும் செயல்பட்டிருக்கிறார். பின்னர், முதல் சிறுவன் வயிறு வலியால் துடித்திருக்கிறான். ஆசிரியர் ஓய்வுக்காக அவனை ஓய்வு அறைக்கு அனுப்பியிருக்கிறார்.

சிறிது நேரம் ஓய்வெடுத்தபின், அவன் தேர்வு எழுத மீண்டும் வந்துவிட்டானாம். மீண்டும் சிறிது நேரம் சென்றபின் இரண்டாவது சிறுவன் ‘ரெஸ்ட்’ ரூம் போக வேண்டுமென கேட்டிருக்கிறான். கேட்ட தோரணையில் ஆசிரியர் பாவப்பட்டு அனுப்பியிருந்தாராம். சிறிது நேரத்தில் அவன் உற்சாகத்தோடு திரும்பி வந்திருக்கிறான். தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் அவர்களை தனித்தனியே அழைத்துப்பேசினார்.

முதல் மாணவனிடம், இனி தேர்வு நேரத்தில் உடல்நலம் பாதிக்கும்படி வைத்துக்கொள்ளக்கூடாது, சரியான நேரத்துக்கு உணவருந்த வேண்டும், உடலுக்கு ஒப்பாதவற்றை சாப்பிடக்கூடாது, மிகவும் அக்கறையோடு இருக்க வேண்டும் என்கிற அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். இரண்டாம் மாணவனிடம், இனி தேர்வு அறைக்கு வரும் முன்பே ‘ரெஸ்ட் ரூம்’ சென்றுவிட்டு வரவேண்டும். இல்லையெனில் முழு ஆண்டு அரசுத்தேர்வுக்கு இன்னல்களாக அமையும் என்றெல்லாம் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

பிள்ளைகள் என்ன செய்ய நினைத்தார்கள் என்றெல்லாம் ஆசிரியர் ஆராய விரும்பவில்லை. இனி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டும் சொல்லியிருக்கிறார். இதுதான் பக்குவமான அணுகுமுறை என்பது அவரின் கடமையை திறம்படச் செய்துள்ளார். எந்தவித கண்டிப்பும், குரலில் கோபமும் இல்லாமல் பிள்ளைகளுக்கு தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் வகுப்பில் எல்லோருக்கும் முன்பாக, இதுபற்றி ஆராய்ச்சிக் கேள்விகளை கேட்டிருந்தாலோ, கண்டித்திருந்தாலோ, நிலைமை வேறு மாதிரியாக மாறியிருக்கலாம். அதனால்தான், கற்பிப்பவர் ஒரு சில விஷயங்களைத் தெரிந்தும் தெரியாமல் காட்டிக்கொள்ள வேண்டியுள்ளது. அறிந்தும் அறியாததுபோல் இருக்க வேண்டி வரலாம். ஒருசில நேரிடையான வாக்குவாதங்கள், விசாரணைகள் இளம் பிள்ளைகளின் மனதை உளவியல் ரீதியாக மாற்றலாம்.

அதனால்தான் அவர்களை நம் பிள்ளைகள் என்று கூறுகிறோம். நம் பிள்ளைகளையே பிறர் எதிரில் மனம் நோக பேசாதிருத்தல்தான் நல்லது. பேசுவது சுலபம். ஆனால் அது பிள்ளைகள் மனதை எவ்வளவு தூரம் பாதிக்கும் என யோசித்துப் பார்த்து செய்வதுதான் நன்மை தரும். அதனால்தான் பயிற்சிப் படிப்பில், மனநிலை பற்றியும் பாடங்கள் தரப்படுகின்றன.

ஒரு சிறுவன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டான். கல்லூரியில் பல்வேறு மாநிலத்திலிருந்து வரும் பிள்ளைகளுடன் அவன் நட்புத் தொடர்கிறது. நண்பர்கள் கூட்டம் தங்களுக்குள் சிலவிதமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். கெடுதல் தரும் விஷயங்கள் எதுவுமில்லை. கொஞ்சம் தலைமுடி வெட்டலை ஆடம்பரமாக வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

ஒரேபோல் நண்பர் கூட்டம், ஒரே மாதிரி சிகையலங்காரம் செய்துகொள்கிறார்கள். பலருக்கும் அது பிடித்துப் போகிறது. சிலருக்கு அது பிடிக்கவில்லை. இருந்தாலும், இது அவரவர் கருத்து என்று நினைப்பதுதான் நாகரீகம். அப்படியிருக்கையில், ஒருவன் மனதளவில் வருத்தப்பட்டு நொந்து விடுகிறான். காரணம், அவனின் குடும்பத்தினர் ஆள் ஆளுக்கு அவனை வெறுப்பேற்றினர். அதுவும் அப்பா, அம்மாகூட எதுவும் கூறவில்லை. உறவினர்கள் ஒவ்வொருவரும்தான் அறிவுரை கூறுவதாக நினைத்து, அவன் மனதை கஷ்டப்படுத்தியுள்ளனர்.

உண்மையில் சொல்லப்போனால், அவனுக்கே அது பிடிக்கவில்லைபோல் தோன்றியது. நண்பர்களின் கட்டாயப்படுத்தலால், தான் இப்படி தோற்றம் அளிப்பதாகவும், சில நாட்களில் மாற்றி விடுவதாகவும், தன் தாயிடம் கூறியிருக்கிறான். தாய் தன் மகனைப் புரிந்துகொண்டுவிட்டதால், ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

மேலும் சிறிய விஷயங்களில் கட்டுப்பாடுகள் விதித்தால் பிள்ளைகளுக்கு மனக்கசப்புதான் ஏற்படும். இத்தகைய சிறிய விஷயங்கள் அவர்களை எந்தவிதத்திலும் தீயவர்களாக மாற்ற முடியாது. தீய பழக்கங்கள் என்பது வேறு. சில ஆடம்பர மாற்றங்கள் என்பது வேறு. தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடுவது சரியல்ல. சிறிய விஷயங்களை வெளிப்படையாக விட்டுக்கொடுக்கும்பொழுது, அவர்களும் உண்மையில் நேர்மையுடன்தான் நடந்துகொள்வர்.

அநாவசியமாக பலர் கூடியிருக்கும் சபையில், பிள்ளைகளை அறிவுரை கூறுவதாக நினைத்து, கேலி-கிண்டல் செய்தால் அவர்களுக்கு அது சுயகௌரவத்தை பாதிக்கலாம். மேேல சொன்ன பையன் உறவுகளை மதித்து விளையாட்டாக எடுத்துக்கொண்டுள்ளான். அதுவே ரொம்ப ஆழமாக சிந்திப்பவன், பல இடங்களில் தான் அவமானப்படுத்தப்படுவதாக நினைப்பவன் வேறு மாதிரி யோசிக்க நினைப்பான். எனவே கட்டுப்பாடுகள் என்பது அவசியம்தான்.

அது அன்புடன் பிணைந்த கோரிக்கையாக இருக்கலாம். உண்மையைச் சொல்லும்பொழுது, ஆறுதலுடன் கலந்த மன்னிப்பு வழங்குதலும் அவசியம். எதையுமே ஆமோதிக்க ஆரம்பித்தால், நாளடைவில் உண்மை மறைய வாய்ப்பு ஏற்படும். மற்றொருவர் மன ஓட்டத்திற்கு நாம் தரும் வார்த்தைகள், புண்ணிற்கு மருந்து போடுவதாகத்தான் இருத்தல் அவசியம்.

பெரும்பாலும் பிள்ளைகளுடன் ஒன்றிப்பழகும் கற்பிப்பவர்களும், பெற்றோர்களும் இவற்றையெல்லாம் புரிந்துதான் நடப்பார்கள். தவறு என்பது சிறிய விஷயம். அதற்கு மருந்து அன்புதான். தவறு குற்றமாக மாறும்பொழுது அதன் பின்னணியை ஆராய்ந்தால் போதும்! அப்படி வழிநடத்துபவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்களை பிள்ளைகள் ‘பைலட்’ ஆனால் என்ன? அமைச்சரானால் என்ன? மறக்க மாட்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஏஞ்சலின் எழுத்தோவியம்!! (மகளிர் பக்கம்)
Next post ஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை? (அவ்வப்போது கிளாமர்)