கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 40 Second

பிள்ளைகள் அதிகபட்சம் சேர்ந்து பழகுவதும், அடித்தளம் அமைத்துக் கொள்ளுதலும் பள்ளிப்பருவத்தில்தான். மூன்று வயது மழலைப் பருவத்திலிருந்து வாலிப நிலை வரை கல்வி கற்குமிடம் பள்ளிதான். பள்ளியைக் கடந்து, அவ்வளவு நீண்ட பயணம் அமைவது மிகக் கடினம். எனவேதான் பள்ளி நண்பர்கள் என சொல்லப்படுபவர்கள் உறவுகள் போன்று அமைந்து விடுவர். பிள்ளைகளுக்குள் ஏற்படும் நட்பு அவர்களுக்குள் மட்டும் அமைந்து விடுவதில்லை. நண்பர்களின் பெற்றோர், அவர்களின் உறவுகள் என அனைவரையுமே உறவு முறை சொல்லியே அழைப்பார்கள்.

அந்த சமயம் விளையாட்டாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்வது, பொய் சொல்வது, பொருட்களை ஒளித்து வைப்பது, தீனிப்பண்டங்களை எடுத்து சாப்பிடுவது, விளையாட்டிற்காக ஒருவர் மற்றொருவர் மேல் பழி சுமத்துவது இவை அனைத்துமே அவர்களைப் பொறுத்தவரை மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களாக அமையும். ஒருவிதமான விளையாட்டு என்றுகூட சொல்லலாம். பெரும்பாலும் கற்பிப்பவர் இவற்றை அறிந்தும், புரிந்தும் வைத்திருப்பார்கள். சிறு விஷயங்களில் கண்டுகொள்ள மாட்டார்கள். சமயங்களில் யாருக்காவது பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், தலையீடுகள் அவசியம் தேவைப்படும்.

பிள்ளைகள் அடித்துக்கொள்வதும், பின்னர் சேர்ந்துகொள்வதும் நியதி. சிறிய விஷயங்களில் தலையிடுவதும், பிறரைப்பற்றி அவர்கள் மனதில் தப்பான அபிப்ராயத்தை விதைப்பதும் நல்லதொரு செயல் என்று கருத முடியாது. இதை அறிந்த பெற்றோரும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனாலும் வளரும் பருவத்தில் அவர்கள் நடவடிக்கைகள் கவனிக்கப்படக்கூடியதும்தான். ‘ஐந்தில் அமையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்களே! ஆனாலும் எப்படி கையாளப்படவேண்டுமோ அப்படித்தான் அணுக வேண்டும். நண்பர்களாயிருந்து அடிதடி ரகளையில் முடிந்து, விபரீதமான எத்தனையோ நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். எல்லாமே சுமுகமாக முடிவதில்லை. பள்ளியை விட்டு நீக்கும் அளவுக்குக்கூட பிரச்னைகள் தலை தூக்குவதும் உண்டு.

ஒருமுறை இரு மாணவர்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காக, பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள். இருவரும் தன்னுடைய கருத்துதான் சரி என்ற அளவில் வாக்குவாதம் நடத்த, பேச்சுவார்த்தை முற்றி பின் கைகலப்பாகி விட்டதாம். ஒருமுறையுடன் முடியாமல், இடைவேளையின்போதும் தொடர்ந்திருக்கிறார்கள். மைதானத்திற்குப்பின்னால், மரத்தடியில் சண்டை போட்டுக்கொண்டிருந்த இவர்களை வேறு வகுப்பு மாணவன் ஒருவன் பார்த்திருக்கிறான். நேரே சென்று உடற்பயிற்சி ஆசிரியரை அழைத்துவர, அவரும் வியப்படைந்து இருவரையும் தலைமையாசிரியரிடம் அழைத்துச்சென்று நடந்ததைக் கூறியுள்ளார். கை, கால்களில் இருவருக்கும் கீறல்கள் இருப்பதைப் பார்த்த தலைமையாசிரியை இருவரையும் தன் அறையில் உட்கார வைத்துள்ளார்.

பின் இருவர் பெற்றோருக்கும், தொலைபேசி மூலம் விஷயத்தைக் கூறியதுடன் நேரில் வரச்சொல்லியிருக்கிறார். தலைமையாசிரியர், கண்டிப்புடன் பேசி பள்ளியிலிருந்து விலக்கி விடுவதாகக் கூறியிருக்கிறார். பின் பிள்ளைகள் மன்னிப்பு கேட்க, பெற்றோர் வருத்தம் தெரிவிக்க விஷயம் முடிவுக்கு வந்தது. விளையாட்டாக அவர்கள் ஆரம்பித்த விளையாட்டு விஷயம்தான் வினையில் முடிந்ததாம். ஒரு சில நாட்களில், இந்த சம்பவமே நடந்ததாக காட்டிக்
கொள்ளாமல் அவர்கள் மீண்டும் நட்பாகப் பழகத் தொடங்கி விட்டனராம். இன்று அவர்கள் வேலையில் இருந்தபோதும், இந்நிகழ்ச்சி மனதில் அழியாமல் இருப்பதாக அவர்களில் ஒருவன் சொன்னான்.

மற்றொரு விஷயம், சண்டையிட்ட இருவரும் இன்றும் உயிர் சிநேகிதர்களாகவும், அவர்கள் பெற்றோர்கள் குடும்ப நண்பர்களாகவும் இருக்கின்றனராம். வெவ்வேறு இடத்தில் வசித்தாலும், தினமும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்களாம். அறியாத வயதில் சண்டையிட்டுக் கொண்டதையும், அர்த்தமில்லாத கோபத்தையும் இப்பொழுது நினைத்து தனக்குத்தானே திருத்திக்கொள்கிறான். தெரியாமல் செய்யும் இத்தகைய செயல்கள் காணாமல் விடப்பட்டிருந்தால், இன்று அவர்கள் நெருங்கிய தோழர்களாக ஆகியிருப்பது கடினம். பிள்ளைகளுக்கு பாட விஷயங்கள் சரிவர புரியவில்லையென்றாலோ, பிடிக்காத பாடப்பகுதி என்றாலோ எப்படி வகுப்பை தவிர்க்கலாம், ஏதாவது வழியில் வகுப்பை விட்டுச் சென்றுவிடலாமா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அப்பொழுதுதான் திடீர் தலைவலியும், வயிறு வலியும் தோன்ற ஆரம்பிக்கும். ஆண்டு விழா, விளையாட்டு விழா போன்ற சமயங்களில் நிறைய ஒத்திகைகள் நடைபெறுவதுண்டு. அவற்றில் ஈடுபாடு இல்லாவிட்டால்கூட பரவாயில்லை, ஒத்திகை காரணத்தில் வகுப்பை தவிர்க்கலாம் என்பதற்காகவே சிலர் பங்கு பெறுவதுண்டு. அனைத்து ஒத்திகைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றால் வகுப்புகள் பாதிக்கப்படுமென்பதால் ஒவ்வொன்றாக நடைபெறுவதுமுண்டு. அதிலும் விளையாட்டுத் திருவிழா வந்துவிட்டால் போதும். நிறைய மாணவர் கள் ஒன்று சேர்ந்தால்தான் உருவ அமைப்பில் யோகாப்யாசங்களை வடிவமைக்க முடியும். சிறிது நேரம் செய்தவுடன் சிலர் தண்ணீர் குடிக்கச் செல்வதுண்டு. சிலர் ‘பாத்ரூம்’ செல்வதாக ஓடுவதும் உண்டு. ‘மார்ச் பாஸ்ட்’ (March Fast) போன்றவற்றிற்குச் செய்யும் விதத்தை வைத்து ஆட்களை தேர்ந்தெடுப்பர்.

பின் அணிகளாக பயிற்சிகள் தரமுடியும். முக்கியமான பாட விஷயங்கள் முடிந்தபின், ஒவ்வொரு அணியாகச் சென்று மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.நம் மாணவி ஒருவருக்கு பெளதிக வகுப்பு என்றாலே பிடிக்காதாம். தூக்கம் வரும்போல தோன்றுமாம். ஒருநாள் அந்த சமயம் பார்த்து, வேறு அணியைச் சேர்ந்த மாணவர்களை பயிற்சிக்காக, அத்தலைவன் வந்து அழைத்தானாம். மாணவி அவர்கள் அணியில் கிடையாதாம். உண்மையில், அவள் அணியிலேயே அவள் தேர்ந்தெடுக்கப்படவில்லையாம். இது தெரிந்தும் வகுப்பை புறக்கணிப்பதற்காக மற்ற நண்பர்களுடன் அவளும் சென்று விட்டாளாம். அங்கே மற்றவர்கள் பயிற்சி செய்ய, நம் மாணவி சந்தோஷமாக ஓய்வெடுத்துக்கொண்டு விட்டு, வகுப்பு முடிந்தவுடன் களைப்பாக வருவதாகக் காட்டிக் கொண்டாளாம். இப்பொழுது, முனைவர் பட்டம் பெற்றபின் தன் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டாள்.

பள்ளிப்பிராயத்தில் தான் செய்த ஒரே பிழை பொய் என்று கூறி இன்றும் அதை நினைத்தால் வெட்கமாகவும், கேவலமாகவும் தெரிவதாக வருத்தப்பட்டாள்.
இதுதான் பள்ளி வாழ்க்கை. தெரியாமல் நிறைய விஷயங்களில் ஈடுபடுவோம். தவறு என்பது நமக்கே புரியும் காலம் வரும்பொழுது நினைத்து வெட்கப்படுவோம். இந்த விஷயத்தில் காலம்தான் நம்மை புரிதலில் ஈடுபடுத்துகிறது. கல்லூரி செல்லும்பொழுது எது தவறு-எது சரி என்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் கிடைத்து விடுகிறது. படிப்பில் சுட்டியாகத் திகழும் ஒருசிலரும் வீட்டுப்பாடம் செய்யாமல், ஆசிரியரால் வெளியே அனுப்பி வைக்கப்படுவதுண்டு. பாரபட்சம் வகுப்பில் காட்டக்கூடாது என்பதற்காக, என்றோ பாடம் எழுதாமல் வருபவரையும் மற்ற பிள்ளைகளுடன் சேர்த்து வகுப்பிற்கு வெளியே அனுப்பி வைப்பர். அங்கு அமர்ந்து முடிக்காத பாடத்தை முடித்துவிட்டு உள்ளே வந்துவிடலாம். ஒருமுறை, முதல் மதிப்பெண் எடுக்கும் ஒரு மாணவியும் வெளியே சென்றிருக்கிறாள்.

அவள் தோழிகள் ஒருவர்கூட வகுப்பில் காணப்பட வில்லையாம். தனக்கு மட்டும் ‘போர்’ அடித்ததால், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று சொல்லிவிட்டாளாம். வெளியே சென்றவுடன்தான் அவளுக்குப் புரிந்ததாம், அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது. எல்ேலாரும் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார்களாம். சந்தோஷமாக ஊமை பாஷையில் விளையாடிக் கொண்டிருந்தார்களாம். யாரேனும் ஆசிரியர் அந்தப்பக்கம் வந்தால், அனைவரும் தலைகுனிந்து எழுத ஆரம்பிப்பார்களாம். தண்டனை பெறுவதிலும் ஒரு ‘சுகம்’ என்பதோடு, அந்த மாதிரி குறும்புத்தனமான சந்தோஷங்கள் பள்ளி வாழ்க்கைக்குப் பின் தனக்கு அமையவேயில்லை என்று பள்ளி முடித்து பத்தாண்டுகள் கழித்து குறிப்பிடுகிறாள்.

பள்ளியில் படிக்கும்பொழுது, கல்லூரி வாழ்க்கையை கற்பனை செய்து கொண்டிருந்தாளாம். கல்லூரிக்குச் சென்றபின் படிப்பிலும், வெளியுலகத் தொடர்பிலும் அதிக அக்கறை தேவைப்பட்டதாகவும், பள்ளியில் அனுபவித்த ருசிகரமான சம்பவங்களை அரங்கேற்ற சந்தர்ப்பங்களைத் தேடினாலும் அமையவில்லை எனவும் ஆதங்கப்பட்டாள். பதினான்கு ஆண்டுகள் ஒரே குடும்பத்தில், உடன்பிறவா சகோதர, சகோதரிகளையும் பெற்று மகிழ்ச்சியான உலகத்தில் சிறகடித்துப் பறந்ததாகக்
கூறிக்கொண்டாள். பள்ளி பருவத்தில் நண்பர்கள்தான் அவர்கள் உலகம். சில நாட்கள் பெற்றோர்கள் வெளியூர் சென்றால்கூட, சமாளித்துக்கொள்வார்கள். ஆனால் நண்பர்களை அவர்களால் பிரிய முடியாது. விடுதியில் தங்கும் பிள்ளைகள் தங்களுக்குள் உடைகளை மாற்றிக்கொள்வதுண்டு. இயலாதவர்கள் பிறந்த நாட்களை குறையில்லாமல், வசதியுள்ள நண்பர்களே நடத்தி வைத்து, செலவையும் பங்கிட்டுக் கொள்வார்கள்.

அவர்கள் தேவையைப் புரிந்து வைத்துக்கொண்டு, அதற்கான பரிசையும் தந்து இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குவார்கள். இதுபோன்ற சுவையான சம்பவங்களை ரசிக்கும் தருணங்கள் நிறையவே கிடைத்தன. அதுவும், இந்த காலகட்டத்தில் நட்புகளே உறவுகள் ஆகிவிடுகின்றன. நாமெல்லாம் பள்ளிப்பருவத்தை இவ்வளவு சுகமானதாக கழிக்கவில்லையோ என்றுகூட தோணும். காரணம், அப்பொழுது நம் வீடுகளில் பிள்ளைகள் அதிகம். வீட்டிலும் தாத்தா-பாட்டி போன்ற உறவுகள் அதிகம் இருந்ததால், நம் கவனம் நிறைய உறவுகள் பக்கமும் இருந்தன. ஆனால் இப்பொழுது வீடுகளில் ஒ்ன்றிரண்டு பிள்ளைகள்தான். பெற்றோரும் வேலைக்குச்சென்று விடுவதால், நட்பு வட்டம் அவசியமாகிறது.

பள்ளி திருவிழாக்களுக்குக்கூட அவர்கள் ஒன்றுபோல் புத்தாடை வாங்கி அணிவார்கள். அதிலும் பள்ளி முடித்துச் செல்லும்பொழுது பிரிவுபசாரம் நடைபெறும். அப்பொழுது பெண்கள் மணப்பெண் போலவும், ஆண்கள் ‘சூட்’டிலும் கலக்குவதும் பார்க்கவே ஆசையாகயிருக்கும். அதுவரை என்றும் சீருடையில் பார்த்த நமக்கு பிள்ளைகளின் வளர்ச்சியும், தோற்றமும் கண்களுக்கு விருந்தாகும். தண்டனையிலும் சுகத்தை அனுபவிப்பது மாணவர்களால் மட்டுமே முடியும். மாணவி ஒருத்தி கேண்டீனில் கணக்கு வைத்துக்கொண்டிருந்தாளாம். வீட்டில் அம்மா, அப்பா இருவரும் ரொம்ப ‘பிஸி’ வேலையாம். அதனால் அவள் என்றுமே பள்ளிக்குச் சாப்பாடு எடுத்துவர மாட்டாளாம். தினமும் கேண்டீன் சாப்பாடுதானாம். என்றாவது கேண்டீன் விடுமுறை என்றால்கூட, அவளுக்கு மட்டும் சாப்பாடு அனுப்புவார்களாம்.

வினோதமான முறையில் குறும்புகள் ஆரம்பித்ததாம். திடீரென நிறைய பேர் குறிப்பிட்ட மாணவிக்கு நண்பர்களாக நெருங்கி விட்டார்களாம். கேண்டீன் ஆன்ட்டிக்கும் மாணவிக்கும் ரொம்ப நெருக்கமாம். எப்பொழுது என்ன தேவையோ ‘ஆன்ட்டி’யிடம் கேட்டு சாப்பிடுவது பழக்கமாம். ‘ஆன்ட்டி’யுடன் அவளின் நெருக்கத்தை புரிந்துகொண்ட நண்பர்கள், அவள் பெயரைச் சொல்லி கேண்டீனில் அவள் கணக்கில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்களாம். அடுத்த மாதம் அவள் கணக்கில் இரண்டு மடங்கு செலவு ஏற்பட்டதாம். மாணவியின் அம்மா ‘இவ்வளவு ரூபாய்க்கு சாப்பிட்டாயா?’ என்று கோபிக்க, பதில் தெரியாமல் மகள் முழிக்க, அம்மா வந்து கேண்டீனில் ஆன்ட்டி’யிடம் பேசியிருக்கிறார்.

‘ஆன்ட்டி’ கணக்கு நோட்டை நீட்டியிருக்கிறார். தேதி வாரியாக, யார் யார் மாணவி பெயரில் என்னென்ன வாங்கினார்கள் என்று தெரிய வந்தது. இப்பொழுது மாணவியின் தாய் கோபிக்கவில்லை. மாறாக, தன் பெண்ணிற்கு இவ்வளவு நண்பர்களா? என்று யோசித்தாராம். மேலும், சாப்பிடத்தானே கேட்டிருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியுடன் பணம் கட்டிவிட்டுச் சென்றாராம். இதுபோல் வகுப்பறைக்கு அப்பாற்பட்ட நிறைய விஷயங்களில், பிள்ளைகள் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் கூறும் காரணங்கள் இதுதான். ‘‘கே.ஜி.

முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாக பயணிக்கிறோம். கல்வி சம்பந்தப்பட்ட ‘பிக்னிக்’ பயணங்களில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறோம். இரண்டாவது பெற்றோராக இருந்து ஆசிரியர்கள் எங்களை செதுக்கி நல்லதொரு நாட்டின் ‘பிரஜை’யாக மாற்றுகிறார்கள். கண்டிப்புகள் கசப்பு மருந்தாக அவ்வப்பொழுது ஏற்பட்டாலும், நாளை நம்மை நேர்மையாக, ஒழுக்கமாக வாழ கற்றுத்தரும் தேன் கலந்த மருந்துதான். எவ்வளவோ பொறுமையுடன், நிதானத்துடன், அன்போடு பேசி அரவணைத்துக்கொள்ளும் மற்றொரு பெற்றோர்தான் அவர்கள்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒலிம்பிக்ல இந்தியாவுக்காக ஓடணும்!! (மகளிர் பக்கம்)
Next post நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!! (அவ்வப்போது கிளாமர்)