ஒலிம்பிக்ல இந்தியாவுக்காக ஓடணும்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 42 Second

தடகள வீராங்கனை தனலெட்சுமி

23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலெட்சுமி. இந்தியாவுக்காக ஒலிம்பிக்ல ஓடணும், சர்வதேசப் போட்டிகளிலும் தொடர் பதக்கங்களை அள்ள வேண்டும் என முகமெல்லாம் புன்னகைக்கிறார்.

24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் மார்ச் 15ல் தொடங்கி 19ல் முடிவுக்கு வந்தது. தமிழகம் சார்பில் 100 மீட்டர் பந்தய தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து, இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான டூட்டி சந்த் மற்றும் ஹிமா தாஸை பின்னுக்குத் தள்ளி அவர்களின் சாதனைகளை முறியடித்ததோடு, 200 மீட்டர் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் சாதனையையும் முறியடித்து  வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் தனலெட்சுமி.

வறுமையை பின்னுக்குத் தள்ளி, பந்தய கோட்டை முந்திய நொடியின் வெற்றியை உணர்ந்த தனலெட்சுமி, தனது ஷூக்களை கழற்றி கரங்களில் ஏந்தி மைதானத்தில் குனிந்து  அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திய புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலானது.  வெற்றி புன்னகையுடன் திருச்சியில் கால்பதித்த செல்ல மகளை, ரயில் நிலையத்திலே கட்டியணைத்து முத்த மழையில் நனைத்தார் அவரின் தாய். சக வீரர், வீராங்கனைகளும், பூங்கொத்துகளோடும்  மாலைகளோடும் அவரை வரவேற்று  கரகோஷங்களை எழுப்பி  வாழ்த்து மழையில் நனைத்தனர். தனலெட்சுமியிடம் பேசியபோது…

‘‘என் வாழ்வின் நெகிழ்ச்சியான தருணம் என்றால் 2018ல் தேசிய அளவில் நடந்த போட்டியில் 200 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதுதான். அந்த வெற்றியே மிகப் பெரும் உந்துதலாக அமைந்தது’’ என்கிறார் நினைவுகளைப் பின்னோக்கி  அசை போட்டவராய். ‘‘எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் குண்டூர்.  பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து வந்தேன். இந்நிலையில் எனது குடும்பம் தந்தையை இழந்து வறுமையில் தத்தளித்தது.

எனது அம்மா மொத்த குடும்பச் சுமையை தனது தோள்களில் சுமந்து, வயல்வெளிகளில் கூலி வேலை செய்து எங்களைக் காப்பாற்றி வந்தார். ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்க பத்தாயிரம் வரைத் தேவைப்பட்டது. ஓடத் தேவைப்படும் உடைகளையும், சத்தான உணவுகளை வாங்கித்தர அம்மாவிடத்தில் போதிய வருமானம் இல்லை. என் நிலைமையை அறிந்த  பயிற்சியாளர் மணிகண்டன், எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்து, நான் வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கான பயிற்சிகளையும் வழங்கினார்.

அவர் கொடுத்த ஊக்கத்தால், கொரோனா நோய் தொற்று காலத்திலும், விடாமல் அதிகாலையே எழுந்து, வீட்டுக்கு அருகாமையில் உள்ள தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் விடாமல் ஓட ஆரம்பித்தேன். முறையான பயிற்சிகளையும் எடுத்து வந்தேன். அப்பா இல்லாத குடும்பத்தில், ஒரு பெண்ணாய் நான் விளையாட்டு உடைகளோடு தினமும் ஓடுவதையும், பயிற்சியில் ஈடுபடுவதையும் கவனித்து வந்த எனது ஊர் மக்களும், உறவினர்களும் என் வளர்ச்சிக்கு பல்வேறு விதங்களில் முட்டுக்கட்டைகளை போட்டார். அவற்றை நான் ஒருபோதும் என் காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை.

எப்போதும் என் கண்களுக்கு புலப்பட்டதெல்லாம் வெற்றிக் கோட்டை எட்டுவது மட்டுமே. அதை மட்டுமே இலக்காய் கொண்டு என்னை செதுக்க ஆரம்பித்தேன். வலுப்பெற்றது என் மனம் மட்டுமல்ல, பந்தய தூரத்தை கடக்கும் என் கால்களும் சேர்த்துத்தான்’’ என்கிறார் மீடியாக்களின் வெளிச்சப் பாதையில் நனைந்து. ‘‘2019 ஃபெடரேஷன் கோப்பை போட்டியிலும் எனக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது. அப்போது டூட்டி சந்த் தங்கப் பதக்கம் பெற்றார். அடுத்த ஆண்டு டூட்டி சந்தைவிட வேகமா ஓட வேண்டும் என்கிற வைராக்கியத்தை மட்டுமே மனசுக்குள் ஏற்றினேன்.

ஆனால் 23 ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷாவின் சாதனையை முறியடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. பந்தய தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்த நொடி இப்போதும் கனவு மாதிரியே தெரிகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் இப்போதைக்கு நான் தேர்வாகவில்லை. இதோ மீண்டும் என் லட்சியத்தை கூராக்கி இன்னும் இன்னும் கூடுதலாக வேகமெடுக்கத் தொடங்கியிருக்கேன். கண்டிப்பாக இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் விளையாடுவேன்…’’  தீர்க்கமாக சொல்லி நம்மிடம் விடை கொடுத்தார் இந்த வேகப் புயல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சுவாசக் குழாயில் வெளிப்பொருள்கள் சிக்கிக்கொண்டதா!! (மருத்துவம்)
Next post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)