அனைவருக்கும் விளையாட்டு சமம்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 48 Second

அமெரிக்காவில் சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் கூட பல ஆண்டு காலம் இனவெறி மற்றும் நிறவெறி ஒழிந்தபாடில்லை. இந்த கொடுமைகளுக்கு எதிராக பல சட்டங்கள் வந்தாலும் இன்றும் இனவெறி தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டுதான் வருகிறது. அதற்கு சான்று கடந்த ஆண்டு ஜார்ஜ் ஃபளாய்ட் என்ற கறுப்பினத்தவரை காவல்துறை கொலை செய்த சம்பவம். இப்படிப்பட்ட இனவெறி நிறைந்த அமெரிக்க சமூகத்தில் ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்க வீராங்கனை ஒருவர் நீச்சல் விளையாட்டில் சாதித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியைச் சேர்ந்தவர் லீயா நீயல். சிறு வயது முதலே நீச்சலில் ஆர்வம் கொண்டவர், அதை தனது விளையாட்டாக மாற்ற முற்பட்டுள்ளார். இதற்காக மன்ஹட்டான் பகுதியிலுள்ள நீச்சல் கிளப் ஒன்றில் தனது நீச்சல் பயிற்சியை தொடங்கியுள்ளார். அங்கு அனைத்து போட்டிகளிலும் வெள்ளை நிற அமெரிக்கர்களே அதிகம் இருந்துள்ளனர். எனினும் இதை பொருட்படுத்தாமல் தன்னுடைய நீச்சலில் மட்டும் கவனம் செலுத்தியதன் விளைவு, 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

அந்த ஒலிம்பிக் தொடரில் 4100 ரிலே நீச்சல் போட்டியில் அமெரிக்க அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியில் இவர் இடம் பெற்று இருந்தார். அதன் பின் மீண்டும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரிலும் 4100 ரிலே நீச்சல் பிரிவில் அமெரிக்க அணியில் இடம்பிடித்தார். அப்போதும் அந்த அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன் மூலம் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் இடம்பிடித்த ஆப்பிரிக்க-அமெரிக்க வீராங்கனை என்ற சாதனையும் படைத்தார்.

ஒலிம்பிக் போட்டிகள் தவிர 2015 அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் நீயல், சைமேன், நடாலி ஹிண்டா ஆகிய மூவரும் முதல் 3 இடங்களைப் பிடித்து அசத்தினர். இந்த மூன்று வீராங்கனைகளும் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். 2020ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃபளாய்ட் கொலை சம்பவத்திற்கு சக ஒலிம்பிக் வீராங்கனை ஜேக்கப் பேப்லே உடன் சேர்ந்து ‘மாற்றத்திற்கான நீச்சல் வீராங்கனைகள்’என்ற அமைப்பை தொடங்கினார்.

அதன் மூலம் நிதி திரட்டி அனைத்து வகையான மக்களும் நீச்சல் போட்டிகளில் களமிறங்க உதவ ஆரம்பித்தனர். அமெரிக்காவில் இன்றும் சிறுபான்மையினராக கருதப்படும் கறுப்பின குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சியைத் தொடங்கினார். 2020ஆம் ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக அவர் நியூயார்க்கில் இருந்து கொண்டே இந்த வேலைகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க அணியின் தேர்வு நடைபெற்றுள்ளது.

இந்த சூழலில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 26 வயதான வீராங்கனை மூன்றாவது ஒலிம்பிக் வாய்ப்புக்கு முன்பாக ஓய்வை அறிவித்தது பலருக்கு அதிர்ச்சிதான், எனினும் தன்னுடைய ஓய்வு குறித்து நல்லா யோசித்துதான் முடிவு எடுத்துள்ளதாக நீயல் தெரிவித்துள்ளார். அவருடைய இலக்கு அனைத்து வகை மக்களையும் நீச்சல் விளையாட்டுக்கு கொண்டு வருவதோடு, இளம் வீரர், வீராங்கனைகளுக்கு தன்னுடைய அனுபவம் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்! (அவ்வப்போது கிளாமர்)
Next post சிறகு முளைத்தது வானம் விரிந்தது! (மகளிர் பக்கம்)