குழந்தை பாதுகாப்பு அம்சங்கள்!!! (மருத்துவம்)
வீட்டில் உள்ள அலமாரிகள் மற்றும் கதவுகளை திறக்காத வகையில் லாக் செய்வது அவசியம். இதன் மூலம் அலமாரி போன்றவற்றில் உள்ள அபாயகரமான பொருட்களை எடுப்பதை தவிர்க்க முடியும். மின்சார சுவிட்சுகள் அல்லது பிளக் பாயிண்ட்டுகள் ஆகியவை உயரமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயரம் குறைந்த இடத்தில் கவர் பொருத்த வேண்டும். வீடுகளில் தற்போது கொசு அடிப்பதற்காக பயன்படுத்தும் பேட்டுகளை பெற்றோர்கள் ஆங்காங்கே வைத்துவிடுகின்றனர். இதை குழந்தைகள் விளையாடுவதற்காக எடுத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தால் அதில் உள்ள சார்ஜ் செய்யப்பட்டுள்ள மின்சாரம் குழந்தையை தாக்க வாய்ப்பு உள்ளது.
வீட்டின் உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மெதுவாக நடந்தோ அல்லது தவழ்ந்தோ மெயின் கதவை தாண்டி போர்டிகோ அல்லது சிட்அவுட்டிற்கு செல்ல நேரிடும். எனவே இதை தடுக்க சேப்டி கேட்டிங் எனப்படும் வாயிற்கதவு மிகவும் அவசியம். குழந்தை விளையாடும் இடங்களில் எந்த பொருளும் கீழே இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் சாப்பிடும் பொருட்களை பிளாஸ்டிக் கப் அல்லது பிளேட்டுகளில் போட்டு தான் கொடுக்க வேண்டும். தரையில் வைக்கும் போது அந்த குழந்தைகள் உடனடியாக வாயிற்கு கொண்டு சென்று விடும்.
பர்னிச்சர்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். குறிப்பாக டைனிங் ஹாலில் உள்ள நாற்காலிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏனெனில் நாற்காலிகளை குழந்தைகள் இழுக்க நேரிடும். அவ்வாறு இழுக்கும் போது அது குழந்தைகள் மேல் விழுந்து ஆபத்தை உருவாக்கும். இதை போல ஒரு சில திரைசீலைகளில் அதன் கயிறுகள் அடிநிலையில் இருக்கும். அந்த கயிறுகளை பிடித்து குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் போது கழுத்துடன் இறுக்கும் நிலை கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சமையல் அறையில் குழந்தையை விளையாட அனுமதிக்க கூடாது. ஏனெனில் சமையல் அறையில் கூர்மையான கத்தி, தீ குச்சிகள், பிரிஜ், மிக்ஸி, கிரைண்டர், சிலிண்டர் போன்ற ஏராளமான பாதுகாப்பற்ற அம்சங்கள் உள்ளதால் குழந்தை விளையாட அனுமதிக்காமல் இருப்பது சிறந்தது.
தற்போது, பெரும்பாலான வீடுகளில் உள்ள படுக்கை அறைகளில் அட்டாச் பாத்ரூம்கள் உள்ளன. படுக்கை அறையில் தானே குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அந்த குழந்தை மெதுவாக பாத்ரூம் உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் இயற்கையாகவே குழந்தைளுக்கு தண்ணீரில் விளையாடுவது என்றால் கொள்ளை பிரியம். ஆனால், பாத்ரூமில் குழந்தைகள் விளையாட எந்த வகையிலும் பாதுகாப்பான சூழ்நிலை கிடையாது. எனவே பெட்ரூமில் குழந்தை விளையாடும் போது பாத்ரூம் பூட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். லாக்கிங் சிஸ்டம் உள்ள அறைகளில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க கூடாது. இதேபோல குழந்தையை பெட்ரூமில் கட்டிலில் தூங்க வைத்துவிட்டு பெண்கள் வீட்டுவேலைகளை கவனிப்பது உண்டு.
ஒரு சில குழந்தைகள் தூங்கி எழுந்து அழ ஆரம்பிக்கும். ஒரு சில குழந்தைகள் திடீரென்று எழுந்து கட்டிலில் இருந்து இறங்க முயற்சிக்கும். அல்லது தூக்கத்தில் உருண்டு படுக்கும்போது தவறி கீழே விழ நேரிடும். எனவே தரையில் படுக்க வைப்பது சிறந்தது. முடிந்த வரை தொட்டிலில் படுக்க வைப்பது தான் சிறந்ததாகும். இதே போல குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கும் பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஓரளவு அடிப்படை விஷயங்களை செய்து விட்டாலே போதும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு. நமக்கும் நிம்மதி.