திருமண நகைகளை வடிவமைக்கும் தாய்-மகள் ஜோடி! (மகளிர் பக்கம்)
சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் பார்வாரா கோட்டையில் நடந்த பாலிவுட் நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுஷல் திருமணம்தான் இந்தியா முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. திடீரென அறிவிக்கப்பட்ட இந்த திருமணத்தின் ஒவ்வொரு விவரத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். இன்னிலையில் கத்ரீனா – விக்கியின் சங்கீத், மெஹந்தி, ஹல்தி மற்றும் திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் கடந்த வாரம் முழுக்க சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தன. அவர்கள் அணிந்திருந்த உடைகளும், நகைகளும் பல பெண்களை கவர்ந்துள்ளது.
குறிப்பாக கத்ரீனா கைஃப், ஹல்தி நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஃப்லோரல் நகைகளும் நல்ல வரவேற்பை பெற்றது. இங்கு தென் மாநிலங்களில் திருமணமாகப் போகும் மணமக்களுக்கு நலங்கு நிகழ்ச்சி செய்வது போல, இந்தியாவின் வட மாநிலங்களில் ஹல்தி நிகழ்ச்சிகள் விமரிசையாக கொண்டாடப்படும். அந்த ஹல்தி கொண்டாட்டத்தில் மணப்பெண்கள் பூக்களாலான நகைகளை அணிவது வழக்கம். இப்போது அந்த பழக்கம் நம் தமிழகத்திலும் மெதுவாக வழக்கமாகி வருகிறது. நலங்கு நிகழ்ச்சியில், தமிழ் பெண்களும் இப்போது மலர் நகைகளை அணிய ஆரம்பித்துவிட்டனர்.
கத்ரீனா கைஃப் தனது ஹல்தி நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஃப்லோரல் நகைகளை வடிவமைத்தது மும்பையைச் சேர்ந்த ‘ஃப்லோரல் ஆர்ட் பை சிருஷ்டி’ எனும் நிறுவனமாகும். 19 ஆண்டுகளுக்கு முன் கவிதா கபூர் ஆரம்பித்த இந்த நிறுவனத்தில், அவருடைய மகள் சிருஷ்டி கபூரும் சமீபத்தில் இணைந்து இப்போது இருவருமாக நடத்தி வருகின்றனர்.
கத்ரீனா கைஃப் உட்பட சோனம் கபூர், காஜல் அகர்வால் போன்ற பல நடிகைகளுக்கும் இந்த தாய்-மகள் காம்போதான் ஃப்லோரல் நகைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இது பற்றி விரிவாக பேசுகிறார் சிருஷ்டி, “ஆரம்பத்தில், பூ அலங்காரங்கள், வீட்டு அலங்காரங்கள் செய்து வந்தோம், இப்போது திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து பூ அலங்காரங்கள், ஆபரணங்களையும் முதன்மையாக செய்து வருகிறோம்.
என் அம்மா ஜப்பானில் புகழ் பெற்ற இகேபானா (IKEBANA) எனப்படும் மலர் அலங்கார கலையை முறையாக கற்றவர். இது ஜப்பானில் மிகவும் முக்கியமான கலைகளுள் ஒன்று. சிறு வயதிலிருந்தே அம்மாவை பார்த்து இதன் மீது எனக்கும் ஆர்வம் உண்டாகியது. இதனால் நானும் இகேபானா கலையை முறையாக பயின்றேன். இருவரும் சேர்ந்து எங்களுடைய நிறுவனத்தை இப்போது நடத்தி வருகிறோம்” என்கிறார்.
முதலில் பூங்கொத்தில் ஆரம்பித்து இப்போது மலர்களைக் கொண்டு அனைத்து விதமான அலங்காரங்கள், திருமண ஆபரணங்கள், பூ மாலை, தலைமுடி அலங்காரம், மலர் கொலுசு, மலர் குடை, பரிசுப் பொருட்கள் அலங்காரம் என சுபநிகழ்ச்சிகள் அனைத்திலும் தங்கள் மலர் கலையை புகட்டியுள்ளனர். இயற்கை மலர்களை கொண்டு உருவாக்கும் அலங்காரங்களை மும்பையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செய்து கொடுக்கின்றனர். மற்றபடி உலர்ந்த மலர்களைக் கொண்டு தயாரிக்கும் நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களை உலகம் முழுவதும் அனுப்பி வருகின்றனர்.
கத்ரீனா கைஃபின் திருமண நகைகளை உருவாக்கியது பற்றிப் பேசும் போது, “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த மலர் கலை தொழிலில் ஈடுபட்டு வருவதால் பல நட்சத்திரங்கள் எங்களுடைய ரெகுலர் வாடிக்கையாளர்தான். ஒரு நாள் ஸ்டைலிஸ்ட் அனிதா ஷ்ராஃப், ஒரு ஹல்தி நிகழ்ச்சிக்காக ஃப்லோரல் நகைகள் வேண்டும் எனக் கேட்டார். இது யாருடைய திருமணத்திற்காக எனச் சொல்லமுடியாது, ஆனால் திருமணம் முடிந்ததும் உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும் என்றார்.
எங்களுடைய குழுவும் உடனே அதற்கான வேலைகளில் இறங்கிப் பல டிசைன்கள் செய்து கொடுத்தோம். நாட்கள் நெருங்க நெருங்க, மீடியாவில் கத்ரீனா கைஃப் திருமணம் பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கசியத் தொடங்கி இருந்தது. நாங்கள் ஹல்தி நிகழ்ச்சிக்காக தயாரித்த நகைகளும், கத்ரீனாவின் ஹல்தி நிகழ்ச்சியின் தேதியும் ஒத்துப்போயிருந்தது. இருந்தாலும் கத்ரீனாவும் – விக்கியும் இன்ஸ்டாகிராமில் தங்கள் திருமண புகைப்படங்களை வெளியிட்டதும் தான் எங்களுடைய யூகிப்பு உண்மையானது. நான், என் அம்மா உட்பட எங்களுடைய மொத்த அணியும் சந்தோஷத்தில் திளைத்து விட்டோம்.
கத்ரீனாவிற்காக உலர்ந்த மலர்களாலான பெரிய ஜிமிக்கி கம்மல், கம்மலை இணைக்கும் சஹாரா ஸ்ட்ரிங்ஸ் எனப்படும் மாட்டல், மோதிரம் மற்றும் வளையலுடன் கலீரா எனப்படும் மலர்களாலான ஆபரணமும் வடிவமைத்தோம்.பல வருடங்களாக இதில் நானும் என் அம்மாவும் மிகுந்த உழைப்பை செலுத்தி இருக்கிறோம். நட்சத்திரங்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளையும் அதே உற்சாகத்துடனும் உழைப்புடனும் தான் அணுகுவோம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தங்கள் வீட்டில் நடக்கும் திருமணம்தான் பெரியது. அதனால் எங்களுக்கும் அந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே முக்கியம்தான். மார்டன் மணப்பெண்கள் முதல் பாரம்பரிய மணப்பெண் உட்பட அனைத்து விதமான உடைகளுக்கும், ஃபேஷனுக்கும் ஏற்ற புதுமையான டிசைன்களை உருவாக்குகிறோம்” என்கிறார் சிருஷ்டிமும்பையில் ஃப்லோரல் ஆர்ட் பை சிருஷ்டி ஸ்டுடியோ அமைந்திருக்கிறது. அங்கு மணப்பெண்கள் நேரடியாக சென்றும் நகைகளை வாங்கலாம் அல்லது ஆன்லைனிலும் ஆர்டர் கொடுக்கலாம். இகேபானா மலர் கலையை பயில, அதற்கு முறையான பயிற்சி பெற்று, ஆண்டு தோறும் நடக்கும் தேர்வில் வெற்றிபெற வேண்டும். இந்த பயிற்சி பல நிலைகளில் நடக்கும்.